யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தில் புத்தர் சிலை அல்லது சிறிய அளவிலான விகாரை ஒன்றை அமைப்பதற்கு எடுக்கப்பட்ட முயற்சிகளால் அந்த வளாகம் காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளது.
வளாகத்தினுள் மத வழிபாட்டிடங்களை அமைப்பதற்கு இடஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்ற போதும், அவசர அவசரமாக இந்த விகாரை அமைப்பு முயற்சி திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டு குழப்பம் விளைவிப்பதற்கான பின்னணியிலேயே எடுக்கப்பட்டிருக்கின்றன என்று கருதுவதற்குப் போதுமான சான்றாதாரங்கள் இருப்பதாக வளாகத் தகவல்கள் கூறுகின்றன.
தமிழ், சிங்கள மக்கள் வாழும் எல்லைக் கிராமங்களில் இதுபோன்ற இன, மதப் பதற்றம் வெடிக்கும் சூழ்நிலை வளர்ந்து வருவது நல்லதல்ல, அனுமதிக்கவும் கூடாதது.
அண்மையில் மணலாற்றுப் பகுதியில் மகாவலி ‘எல் ’வலயத்தால் தமிழர் களின் காணிகள் அபகரிக்கப்படுவது மற்றும் சிங்களக் குடியேற்றங்கள் வேகமாகப் பரப்பப்படுவது குறித்த தனது கண்டனத்தை வடக்கு மாகாண சபை வெளிப்படுத்தியதுடன், அந்தப் பகுதிக்கு நேரில் சென்று பார்த்து வந்ததன் எதிர்வினையாகவும் இந்த விவகாரம் வெடித்திருக்கலாம்.
எல்லைக் கிராமங்களிலும் , நகரங்களிலும் , சிங்கள மேலாண்மை வாதத்தை நிலைநிறுத்துவதன் மூலம் தமது அரசியல் நலனைப் பேண விளையும் சக்திகள், இத்தகைய அசம்பாவிதங்களின் பின்னணியில் இருப்பதும் மறுக்கப்படக்கூடியதல்ல.
எனினும் அத்தகைய அரசியல் சக்திகளின் நோக்கங்களுக்கு படித்த, சுயமாகச் சிந்திக்கக்கூடிய, பரந்துபட்ட மனப்பான்மையைக் கொண்டியங்கவேண்டிய பல்கலைக்கழக மாணவர்கள் சிக்கிக் கொண்டிருப்பது பெரும் கவலையளிக்கும் விடயம்.
இங்கு வழிபாட்டிடங்களை அமைப்பது தவறென்று சொல்லிவிட முடியாது. தேவையும் அவசியமும் இருப்பின் உரிய தரப்பினருடன் பேசி தேவையான அனுமதியைப் பெற்றுச் செய்ய முடியும்.
அதைவிட்டு, குழப்பங்களையும், முரண்பாடுகளையும் ஏற்படுத்தும் விதத்தில் நடந்துகொள்வது தவறு.இத்தகையதொரு நிலை உருவாக அனுமதித்தமைக்கான முழுப் பொறுப்பையும் நல்லாட்சி அரசு என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட மைத்திரி – ரணில் கூட்டு அரசே பொறுப்பேற்க வேண்டும்.
இலங்கையை பல்லின, பல மத, பன்மொழி நாடாக வளர்த்தெடுப்பதில் இந்த அரசு கண்டிருக்கக்கூடிய தோல்வியே இன்று வவுனியாவில் இன முரண்பாட்டைத் தூண்டும் சக்தியாக வளர்ந்து நிற்கின்றது.
பன்மைத்துவம் கொண்ட நாடாக இலங்கையை மாற்றுவதற்கான உறுதியான தலைமைத்துவத்தை வழங்கியிருக்க வேண்டிய ஜனாதிபதியும் பிரதமரும், தமக்கிடையிலான கட்சி அரசியலுக்குள் மடிந்து போனதால் இங்கு புரையோடிப் போயுள்ள அடிப்படைவாதத்தைக் களைய முடியவில்லை.
இந்த அடிப்படைவாதப் போக்கை, தனது அரச இயந்திரத்திற்குள் இருந்து களைவதற்குக் கூட இந்த அரசு உளச்சுத்தியுடனான எந்தவித நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை என்பதே இத்தகைய பிரச்சினைகளுக்கு மீண்டும் மீண்டும் வழியை ஏற்படுத்திக் கொடுக்கின்றது.
புதிய அரசமைப்பை உருவாக்குவதற்கான கதையாடல்களில் கூட, இலங்கையின் பன்மைத்துவத்தை உறுதிப்படுத்துவதற்குப் பதில், பௌத்தத்துக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று குறிப்பிட விளைந்தனர் சிங்களத் தலைவர்கள்.
அவர்கள் அப்படி நடந்து கொள்கின்ற போது, வவுனியாவில் சிங்கள மாணவர்கள் ஏனைய மதங்களுக்கான வழிபாட்டிடங்களுக்காகக் காத்திராமல் பௌத்த வழிபாட்டிடத்தை அமைப்பதற்கு முயற்சி எடுக்காமல் இருந்தால் தான் ஆச்சரியப்பட வேண்டும்.
இப்போது, இந்தப் பிரச்சினையின் பின்னர் கூட ,இலங்கையின் தலைவர்கள் எவரும் இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கவும் இல்லை, சிங்கள மாணவர்களின் செயலுக்காக அவர்களைக் கண்டிக்கவும் இல்லை.
இது பல்லைக்கழக மாணவர்கள் சிலரின் வழமையான முரண்பாடு என்று ஒதுக்கி விட்டுப் போகக் கூடிய சிறு விடயமல்ல.
அரசியல் தலைவர்கள் மட்டுமல்ல, அரச இயந்திரமும் முழுமையாகச் சிங்கள, பௌத்த பேரினவாதத்திற்குள் அமிழ்ந்து போய்க் கிடக்கையில் இத்தகைய சம்பவங்கள் ஆச்சரியத்துக்குரியவை அல்ல.
இனப்பிரச்சினைக்கான தீர்வு ஒன்று மிக விரைவில் எட்டப்படாவிட்டால், இலங்கையின் எதிர்காலம் எப்படிப்பட்டதாக மாறும் என்பதற்கும், இங்குள்ள சிறுபான்மை மக்களான தமிழர்களும் முஸ்லிம்களும் எத்தகைய சவால்களை எதிர்கொள்ளப் போகிறார்கள் என்பதற்கும் கட்டியங்கூறிச் சென்றிருக்கிறது வவுனியாச் சம்பவம்.
ஆபத்தை உணர்ந்து விரைந்து செயலாற்ற வேண்டியது அரசின் கடமை.
http://www.tamilwin.com/politics/01/180962?ref=recommended1
Geen opmerkingen:
Een reactie posten