தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 17 april 2018

சிரியாவைத் தாக்கும் 13 நாடுகள் எவை? ஏன்?


சிரியாவில் நடக்கும் போரை பலர் 'மினி உலகப் போர்' அதாவது சிறிய அளவிலான உலகப் போர் என்றே கருதுகிறார்கள்.
சிரியாவில் ஏழு ஆண்டுகளாக சண்டை தொடர்கிறது. இந்த உள்நாட்டுப் போரில் 20 நாடுகள் ஏதாவது ஒரு வழியில் ஈடுபட்டிருக்கின்றன.
சிரியாவில் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருந்த டூமா நகரில் ரசாயன தாக்குதல்கள் நடந்ததாக சந்தேகங்கள் எழுப்பப்பட்டபின், அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும் எதிர்த் தாக்குதல் தொடுத்தன.
அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு பிரான்சும் பிரிட்டனும் ஆதரவு தெரிவிக்கின்றன. ஆனால் இந்த மூன்று நாடுகள் மட்டுமே சிரியா மீது அண்மை ஆண்டுகளில் தாக்குதல் நடத்தியது என்று கூறிவிடமுடியாது.
சிரியா மீது தாக்குதல் தொடுத்த நாடுகளின் நீண்ட பட்டியலை பார்க்கலாம்.



ரஷ்யா
சோவியத் ஒன்றிய சகாப்தத்தில் இருந்தே, ரஷ்யா சிரியாவுக்கு ஆதரவு வழங்கிவருகிறது.
சிரியாவின் மீதான ரஷ்யாவின் செல்வாக்கை தற்போதும் காணமுடிகிறது என்பதோடு, ஆயுதங்கள் மற்றும் பிற தளாவடங்களின் உதவியுடன் சிரியாவின் பஷர் அல்-ஆசாத் ஆட்சியை காப்பாற்றுவதாக விளாடிமிர் புதினின் அரசு வாக்குறுதி வழங்கியிருக்கிறது.
சிரியாவின் நிலத்தில் 2015 செப்டம்பர் மாதத்தில் ரஷ்யா காலை ஊன்றிய பிறகு, நிலைமைகள் அதிபர் பஷர் அல்-ஆசாதுக்கு சாதகமாக மாறின.

GOKHAN SAHIN

சிரியாவின் எதிரிகளை அடக்குவதோடு, ஐ.எஸ் தீவிரவாதக் குழுக்களின் புகலிடங்களிலும் குண்டுவீசி அவர்களுக்கும் சிம்மசொப்பனமாக திகழ்வதாக கூறுகிறது ரஷ்யா.
ஆனால் ரஷ்யாவின் கூற்றுக்களை கண்டனம் செய்யும் ஐக்கிய நாடுகள் சபையின் புலனாய்வு ஆணையம், ரஷ்யாவின் தாக்குதல்களில் பலியானவர்கள் பெரும்பாலும் பொதுமக்களே என்று விமர்சிக்கிறது.
அமெரிக்கா
சிரியாவில் உள்நாட்டு யுத்தம் தொடங்கியதில் இருந்து, அங்குள்ள கிளர்ச்சி அமைப்புக்களுக்கு அமெரிக்கா உதவி செய்கிறது.
சிரிய அரசு 2013ஆம் ஆண்டில் ரசாயனத் தாக்குதல்களை நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டது.
ஆனால் அப்போதைய அமெரிக்க அதிபர் பரக் ஒபாமா, சிரியாவிற்கு எதிராக எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை.

2014ல், வளைகுடா பிராந்தியத்தில் மேற்கத்திய நாடுகளும் அவற்றின் நட்பு நாடுகளும் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் பல நிலைகளில் 11,000க்கும் அதிகமான தாக்குதல்களைத் நடத்தின.
சிரியா நாட்டு பொதுமக்கள்மீது நடத்தப்பட்ட ரசாயன தாக்குதல்களுக்கு பிறகு, 2017இல் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சிரியா மீது ஏவுகணை தாக்குதல் நடத்த உத்தரவிட்டார்.
2018 ஏப்ரல் மாதத்தில், டூமா நகரில் ரசாயனத் தாக்குதல் நடத்தப்பட்டதான சந்தேகங்கள் எழுப்பப்பட்ட பிறகு, தக்க பதிலடி கொடுக்கப்படும் என டிரம்ப் சிரியாவுக்கு எச்சரிக்கை விடுத்தார். தாக்குதலும் தொடங்கிவிட்டது.

பிரிட்டன்
2015 ஆம் ஆண்டு முதல் சிரியாவில் ஐ.எஸ் அமைப்பின் மறைவிடங்கள் மீது பிரிட்டிஷ் விமானப் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன.
2013ஆம் ஆண்டில், டமாஸ்கஸின் கிழக்குப் பகுதியில் ரசாயனத் தாக்குதல் நடத்தப்பட்டதான சந்தேகங்கள் வலுத்தபோது, ஆசாத்தின் ராணுவ நிலைகளை தாக்குவது பற்றி பிரிட்டன் சிந்தித்தது.
ஆனால் தாக்குதல் நடத்துவது பற்றி பிரிட்டன் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் தீர்மானம் நிராகரிக்கப்பட்டது.
அண்மையில் டூமா நகரில் ரசாயன தாக்குதல் நடைபெற்றதான சந்தேகம் எழுந்தபோது, இந்த தவறுக்கான தண்டனையில் இருந்து சிரியா அரசு தப்பமுடியாது என்று பிரதமர் தெரீசா மே அறிவித்தார்.

REUTERS

பிரான்ஸ்
2013ஆம் ஆண்டு முதல் சிரியாவில் செயல்படும் கிளர்ச்சி அமைப்புக்களுக்கு பிரான்ஸ் ஆயுதங்களை வழங்கிவருகிறது என்பதோடு, 2015ஆம் ஆண்டு முதல் ஐ.எஸ் மறைவிடங்களில் விமான தாக்குதல்களிலும் பங்கேற்றுள்ளது.
சிரியாவுடன் வரலாற்று ரீதியான தொடர்புகளைக் கொண்டுள்ள பிரான்ஸ், சிரியாவின் உள்நாட்டுப் போர் தொடங்கியதில் இருந்து அதன் முடிவு பற்றி ஆழ்ந்த அக்கறை கொண்டுள்ளது.
சிரியா அதிபர் பஷர் அல்-ஆசாத்தின் அரசை பிரான்ஸ் ஆதரிக்கவில்லை.
2013ஆம் ஆண்டு சிரியாவின் ராணுவ தளங்களில் வான்வழி தாக்குதல்கள் நடத்துவது பற்றி பேச்சுகள் முன்னெடுக்கப்பட்டபோது, பிரான்ஸ் அரசு அதற்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்தது.
தற்போதைய பிரான்சு அதிபர் இமானுவேல் மக்ரோங்கும் சிரியா மீதான ராணுவ நடவடிக்கைக்கு ஆதரவளிக்கிறார்.

MOD

கனடா
சிரியாவில் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பினைத் தாக்கும் அமெரிக்கக் கூட்டணியில் கனடாவும் இடம் பெற்றுள்ளது.
2016இல் கனடாவில் ஜஸ்டின் ட்ரூடோவின் அரசு அமைந்தபோது, அமெரிக்க கூட்டணியின் நடவடிக்கைகளில் இருந்து கனடா வெளியேறியது.
சிரியா மீதான அமெரிக்கத் தாக்குதல்களில் கனடா பங்கெடுக்காது என்று ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்தார்.
ஆஸ்திரேலியா
இராக் மற்றும் சிரியாவில் ஐ.எஸ் அமைப்பின் நிலைகளின்மீது நடந்த தாக்குதலில் ஆஸ்திரேலியா பங்கெடுத்தது.
ஆஸ்திரேலியா பங்கெடுத்த தாக்குதல் ஒன்றில், 90 சிரியா வீரர்கள் தவறுதலாக கொல்லப்பட்டார்கள்.
ஐ.எஸ் தீவிரவாதிகள் என்று தவறாக கருதி அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தவறுக்கு பிரதமர் மால்கம் டர்ன்புல் மன்னிப்பு கோரினார்.

GETTY IMAGES

2014 செப்டம்பர் மாதத்தில், ஐ.எஸ் அமைப்புக்கு எதிராக ராணுவ நடவடிக்கைகளில் ஈடுபடலாம் என நெதர்லாந்து முடிவெடுத்தது.
2015 ஆம் ஆண்டு வரை அந்நாடு ஐ.எஸ் தீவிரவாதிகள் மீது நூற்றுக்கணக்கான விமான தாக்குதல்களை நடத்தியது. இந்தத் தாக்குதல்களில் F-16 ரக போர் விமானங்கள் பயன்படுத்தப்பட்டன.
சிரியாவில் தனது ராணுவம் இருப்பதற்கு நெதர்லாந்து ஒப்புக்கொண்டுள்ளது.
2016ஆம் ஆண்டு, சிரியாவிற்கும் இராக்கிற்கும் இடையில் ஐ.எஸ் அமைப்பு பயன்படுத்திவரும் போக்குவரத்து வழித்தடத்தின் மீதான தாக்குதலை துரிதப்படுத்த முடிவு செய்தது நெதர்லாந்து.
இரான், ரஷ்யா, துருக்கி ஆகிய மூன்று நாடுகளின் விருப்பங்களும் மாறுபட்டவைகளாக இருந்தபோதிலும், அதன் அதிபர்கள் ருஹானி, புதின், எர்துவான் ஆகியோர் பிராந்திய ஒருமைப்பாட்டுக்கு ஆதரவளிக்கின்றனர்.

GETTY IMAGES

இரான்
இரான் ஒரு ஷியா முஸ்லிம் நாடு என்பதால் சிரியாவின் மீது அதற்கு அதிக ஆர்வம் உள்ளது. சன்னி முஸ்லிம்களின் ஆதிக்கம் கொண்ட செளதி அரேபியாவின் செல்வாக்கு சிரியாவில் இல்லை.
பஷாரின் சிரியா ராணுவத்திற்கு உதவி செய்வதுடன் அதற்கு தேவையான உபகரணங்களையும், பொருளாதார உதவியையும் வழங்குகிறது இரான்.
அது மட்டுமல்ல, தனது நாட்டில் இருந்தே, சிரியாவில் செயல்படும் கிளர்ச்சி அமைப்புகளின் மீது ஏவுகணை தாக்குதல்களை நடத்தியிருக்கிறது இரான்.

EPA

துருக்கி
சிரியாவின் வடக்குப் பகுதியில் துருக்கி அரசு தனது இருப்பை அதிகரித்துள்ளது.
சிரியா அதிபர் ஆசாத்தின் ஆட்சியை துருக்கி எதிர்த்த நிலையிலும், ஐ.எஸ் தீவிரவாத அமைப்புக்கு எதிராகவும் துருக்கி செயல்படுகிறது.
ஆனால் சிரியாவில் உள்ள குர்து இனத்தினரை வலுப்படுத்த துருக்கி விரும்பவில்லை.
சிரியாவின் அஃப்ரீன் நகரில், YPG என்ற குர்து இன அமைப்புக்கு எதிராக தீவிரமான தாக்குதலை மேற்கொண்டுள்ள துருக்கி, சிரியாவின் வட பகுதியிலும் குண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளது.

AFP

செளதி அரேபியா
சிரியாவில் இரானின் செல்வாக்கை எதிர்க்கும் நாடுகளில் செளதி அரேபியா முதன்மையானது.
அதிபர் அல்-ஆசாத் அரசுக்கு எதிராக போராடும் பல கிளர்ச்சி அமைப்புக்களுக்கு செளதி அரேபியா பெரிய அளவிலான ராணுவ உதவிகளை வழங்குகிறது.
சிரியாவில் உள்ள கிளர்ச்சி அமைப்புக்களுக்கு மூலோபாய நுண்ணறிவு தகவல்களை வழங்கும் செளதி அரேபியா, கிளர்ச்சியாளர்களுக்கு தேவையான பிற உதவிகளையும் வழங்குகிறது.
2014 ஆம் ஆண்டில், அமெரிக்காவுடன் இணைந்து சிரியாவில் உள்ள ஐ.எஸ் தளங்களின்மீது எட்டு வான் தாக்குதல்களையும் செளதி அரேபியா மேற்கொண்டது.
சிரியாவில் நடைபெறும் ரசாயன தாக்குதல்களுக்கு பதிலளிக்கும் வகையில் அமெரிக்கா மற்றும் பிரான்சின் தாக்குதலுக்கு செளதி அரசு ஆதரவு அளிக்கிறது.

REUTERS

இஸ்ரேல்
சிரியாவில் நடைபெற்றுவரும் உள்நாட்டுப் போரில் தலையிடும் விதமாக, இஸ்ரேலிய போர் விமானம் சிரியாவின் வான் எல்லைக்குள் நுழைந்தது.
சிரியா விவகாரத்தில் இஸ்ரேல் நீண்டகாலமாக நடுநிலை வகித்த போதிலும், இரானின் செல்வாக்குக்கு எதிர்ப்புத் தெரிவிக்கிறது.
சிரியாவில் இரான் தலையிடுவது, லெபனானில் தனது பரம விரோதியான ஹெஜ்புல்லாவை வலுப்படுத்தும் என்று இஸ்ரேல் நம்புகிறது.
இரான் மற்றும் ஹெஜ்புல்லாவுடன் தொடர்புடைய வாகன அணிகள் செல்லும்போது நூற்றுக்கும் மேற்பட்ட தாக்குதல்களை இஸ்ரேல் நடத்தியிருக்கிறது.
இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில், சிரியாவின் ஏவுகணை எதிர்ப்பு அமைப்பு ஒரு இஸ்ரேலிய போர் விமானத்தை சுட்டுத் தள்ளியது.
சிரியாவின் 12 நிலைகளின் மீது பெரிய அளவிலான வான்வழித் தாக்குதல்களை இஸ்ரேல் நடத்தியிருக்கிறது.

AFP

பஹ்ரைன் மற்றும் ஜோர்டன
இந்த இரு மத்திய கிழக்கு நாடுகளும் சிரியா மீது தக்குதல் நடத்தியுள்ளன.
ஜோர்டன் அரசர் அப்துல்லாவை ஆட்சியில் இருந்து அகற்றுவதாக ஐ.எஸ் அமைப்பு வெளிப்படையாக எச்சரித்தபோது, சிரியாவில் விமானத் தாக்குதல்களில் இணைய முடிவு செய்தது ஜோர்டன்.
ஜோர்டானின் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் ஐ.எஸ் அமைப்பு ராக்கெட் தாக்குதல்களை நடத்தியிருக்கிறது.
2014இல், ஜோர்டான் நாட்டு விமானத்தை ஐ.எஸ் சுட்டு வீழ்த்தி, விமானியை கைது செய்தது. பிறகு அவர் உயிருடன் எரித்து கொல்லப்பட்டார்.
சிரியாவில் ஐ.எஸ் அமைப்புக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகளில் 2015ஆம் ஆண்டு பஹ்ரைன் இணைந்தது.

சிரியாவில் தலையிடும் பிற நாடுகள்
இந்த 13 நாடுகளைத் தவிர, ஜெர்மனி, நார்வே, லிபியா மற்றும் இராக் போன்ற நாடுகள் சிரியா மீதான ராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன.
உலகின் பிற எந்தவொரு நாட்டிலும் நிறுத்தியிருப்பதை விட சிரியாவில் மிக அதிக அளவிலான துருப்புகளை ஜெர்மனி நிறுத்தியுள்ளது. சிரியாவில் 1200 ஜெர்மனி துருப்புக்கள் உள்ளன.
சிரியா விவகாரத்தில் அமெரிக்க ஆதரவு நிலைப்பாட்டில் இருக்கும் மற்றொரு நாடு நார்வே. சிரியா கிளர்ச்சிப் பிரிவினருக்கு பயிற்சிகளையும் பிற உதவிகளையும் நார்வே வழங்குகிறது.
லிபியாவில் கர்னல் கடாஃபி வீழ்ந்த பிறகு, சிரியாவில் உள்ள கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக 2011ஆம் ஆண்டு லிபியா, சிரியாவிற்கு தனது துருப்புக்களை அனுப்பியது.
இராக் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பை எதிர்க்கிறது. அதோடு, சிரியா அதிபர் பஷர் அல்-ஆசாத்திற்கு ஆதரவளிக்கும் இரானின் விமானங்கள் தனது வான் வழியை பயன்படுத்த அனுமதித்தது. இது அமெரிக்காவின் விருப்பத்திற்கு எதிரான செயல் என்பது குறிப்பிடத்தக்கது.

GETTY IMAGES

- BBC - Tamil

Geen opmerkingen:

Een reactie posten