ஒட்டுமொத்த இலங்கையையும் அதிர்ச்சியடைய வைத்ததோடு, பொதுமக்களை பீதிக்குள்ளாக்கிய விடயமாக கண்டியில் இடம்பெற்ற முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்களும், கலவரங்களும் அமைந்தன.
குறித்த தாக்குதல்களுக்கு, பொதுஜன பெரமுனவினரே காரணம் என்ற வகையிலாக கருத்துகளையே அரசாங்கத் தரப்பில் வெளிப்படுத்தப்பட்டன.
அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சர் ராஜித சேனாரத்னவும் இதனை உறுதிப்படுத்தியிருந்தார்.
எனினும் குறித்த கலவரங்கள் பொலிஸார், இராணுவத்தின் மேற்பார்வையிலும், பாதுகாப்புடனும் இடம்பெற்றுள்ளது, அத்தோடு அரசாங்க தரப்பு உயர் மட்டங்கள் இதற்கு உதவி செய்துள்ளமைக்கான ஆதாரங்கள் வெளிவந்துள்ளன.
இது தொடர்பாக தற்போது சமூக வலைத்தளங்களில் காணொளி ஒன்று வேகமாக பரவி வருகின்றது. குறித்த காணொளியில் இராணுவமும், பொலிஸாரும் கலவரங்களுக்கும், தாக்குதல்களுக்கும் உதவி செய்துள்ளமை தெளிவாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் கலவரத்தில் ஈடுபட்ட நபர்களுடன் பொலிஸ் பாதுகாப்புடன் உயர் ரக கப் வாகனத்தில் வருகைத் தரும் அரசு தரப்பு முக்கியஸ்தர் ஒருவர் ஆலோசனைகளை வழங்கிச் செல்வதும் சி.சி.ரி.வி கேமராவில் தெளிவாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை, கண்டிக் கலவரத்திற்கு மஹிந்த ராஜபக்ஷ அணியினரே காரணம் என தற்போதைய அரசாங்க தரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றது. அத்துடன் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தொடர்புபட்டுள்ளதாகவும் விசாரணைகள் நடைபெற்று வருவதாகவுமே தெரிவிக்கப்பட்டு வருகின்றது.
தற்போது வெளிப்படுத்தப்பட்டுள்ள ஆதாரத்தின் அடிப்படையில் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. அதாவது அரசாங்கத்தின் தகவல்களின் படி பொதுஜன பெரமுனவே கலவரங்களுக்கு காரணம் என்றால்? தற்போது அதிகாரங்களை முற்றாக இழந்துள்ள மஹிந்த தரப்பிற்கு பொலிஸாரை கட்டுப்படுத்தும் அதிகாரங்கள் உள்ளதா? அல்லது அத்தகைய அதிகாரங்கள் அவருக்கு வழங்கப்பட்டதா? என்ற கேள்விகள் வலுப்பெற்றுள்ளன.
மற்றொரு பக்கம் கண்டி கலவரக்காலத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சராக பதவியில் இருந்தவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, கலவரத்தில் பிரதமரின் பங்கு என்ன என்ற கேள்வியும் எழுகின்றது. அதன்படி இந்த விடயத்தில் பிரதமர் தகுந்த பதிலைக் கூற வேண்டியதும் அவசியமாகும்.
பொலிஸார், மற்றும் இராணுவத்தின் உதவியுடன் கலவரங்கள் கட்டவிழ்த்துப்பட்டால் அவர்களை இயக்கியது அரசாங்கமா? என்ற கேள்வி எழுகின்றது.
அவ்வாறெனின் அரசாங்கமே ஒரு நாடகத்தை அரங்கேற்றி விட்டு அதை திசைதிருப்பி விட்டதா என்ற முக்கிய கேள்வியும் எழுவது யதார்த்தமே.
இலங்கையில் விடுதலைப்புலிகள் என்ற அமைப்பு உருவாகுவதற்கு இதுபோன்ற கலவரங்கள் நாட்டில் உருவாகியமையே காரணம்.
அந்த கசப்பான அனுபத்தை அறிந்திருந்த போதும் மீண்டும் அதே போன்ற செயற்பாடுகளுக்கு இடம்கொடுக்கப்படுவது எதிர்கால இலங்கையின் அழிவுக்கு வழிவகுக்கும் என்ற வகையிலும், பொறுப்பு வாய்ந்த அரசாங்கம் என்ற வகையிலும் சம்பந்தப்பட்டவர்களின் விபரங்களை வெளிப்படுத்த வேண்டியது கட்டாயத் தேவையாகும்.
http://www.jvpnews.com/srilanka/04/168803?ref=home-jvpnews
Geen opmerkingen:
Een reactie posten