சுவிட்சர்லாந்தின் பெர்ன் மாகாணத்தில் குடியிருக்கும் சிரியா அகதி குடும்பத்தை நாடுகடத்தும் முடிவுக்கு எதிராக கிராம மக்கள் ஒன்றிணைந்து போராட்டத்தில் குதித்துள்ளனர்.
பெர்ன் மாகாணத்தின் Hondrich கிராமத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் தனது இரண்டு பிள்ளைகளுடன் குடியிருந்து வருபவர் குறித்த பெண்மணி. சுவிட்சர்லாந்தில் வந்திறங்கியதும் குறித்த பெண்மணி புகலிடக் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஆனால் அவரது மனுவை நிராகரித்தது சுவிஸ் நிர்வாகம். தொடர்ந்து மீண்டும் அவர் மேல்முறையீடு செய்துள்ளார். அதில் வாழ்வாதார பிரச்சனை தொடர்பில் கடந்த 2015 ஆம் ஆண்டு சிரியாவில் இருந்து வெளியேறி ஐரோப்பாவின் வடப்பகுதியில் குடியிருக்கும் தமது முன்னாள் கணவருடன் இணைந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
அங்கே அவருக்கு அடைக்கலம் வழங்கப்பட்டதாகவும், ஆனால் தமது கணவரின் மோசமான நடவடிக்கையால் பெரிதும் துன்பம் அனுபவித்து வந்ததாகவும், ஒரு கட்டத்தில் கணவரின் துஷ்பிரயோகத்தில் இருந்து விடுபட எண்ணி, சுவிட்சர்லாந்தில் தங்கியிருக்கும் தமது குடும்ப உறுப்பினர்களுடன் இணைந்ததாகவும் அந்த மேல்முறையீட்டு மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை திரும்பப் பெற கோரியே Hondrich கிராம மக்கள் தற்போது கையெழுத்து வேட்டையில் இறங்கியுள்ளனர்.
குறித்த நீதிமன்ற தீர்ப்பில், புகார்தாரரின் குடும்பமானது பாதிப்பை அளிக்கக்கூடியதாக நீதிமன்றம் கருதவில்லை எனவும், முன்னர் மனுதாரருக்கு புகலிடம் அளித்த ஐரோப்பிய நாடே தற்போது இவருக்கு பொறுப்பேற்க வேண்டும் எனவும் தீர்ப்பு அளித்துள்ளது.
இந்த நிலையில் R.O. என மட்டும் தெரிவிக்கப்பட்டிருக்கும் குறித்த பெண்ணின் உறவினர் ஒருவர், தமது உறவினர் திறமைசாலி எனவும், அவர் சுவிஸ் நாட்டில் குடியிருந்து வேலை பார்க்கவே விரும்புகிறார் எனவும், சுவிஸ் அரசு அவரது கோரிக்கைக்கு பாராமுகம் காட்ட வேண்டாம் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் R.O.-ன் இரண்டு பிள்ளைகளும் தற்போது நல்லமுறையில் பாடசாலையில் சென்று வருவதாகவும், மிகவும் மகிழ்ச்சியுடன் இருப்பதாகவும், இந்த மகிழ்ச்சியை அவர்களை வெளியேற்றும் நடவடிக்கையால் அரசு சீர்குலைக்க வேண்டாம் எனவும், மருத்துவர் ஒருவரும், குறித்த பிள்ளைகளின் பாடசாலை நிர்வாகமும் கடிதம் வாயிலாக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
http://news.lankasri.com/swiss/03/178198?ref=ls_d_swiss
Geen opmerkingen:
Een reactie posten