ஜேர்மனி நாட்டில் புகலிடம் கோரி காத்திருக்கும் அகதிகள் அரசு ஏற்பாடு செய்துள்ள தொழிற்பயிற்சிக்கு செல்லாவிட்டால் அவர்கள் நாடுகடத்தப்படுவார்கள் என அந்நாட்டு அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ஜேர்மனியில் தஞ்சம் அடைந்துள்ள லட்சக்கணக்கான அகதிகளை ஒருங்கிணைக்க அரசு பல புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, ஜேர்மன் நிறுவனங்களில் அகதிகளுக்காக தொழிற்பயிற்சி(Job Training) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த தொழிற்பயிற்சியில் அகதிகள் அனைவரும் பங்கேற்க வேண்டும் எனவும் அரசு வலியுறுத்தி வருகிறது.
ஆனால், அண்மை காலங்களில் இப்பயிற்சியில் ஈடுபட்டு வந்த அகதிகள் வேலையை விட்டு விலகுவது அதிகரித்து வருவது அரசுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.
அகதிகள் பயிற்சியில் இருந்து வெளியேறுவதை தடுக்க தற்போது அரசு ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதில், ‘தொழிற்பயிற்சியில் இருந்து அகதிகள் வெளியேறினால், அவர்கள் உடனடியாக அவர்களின் தாய்நாடுகளுக்கு திருப்பி அனுப்பப்படுவார்கள் என்றும், இவ்வாறு வெளியேறும் அகதிகளை தடுக்க தவறிய நிறுவன முதலாளிகளுக்கு 30,000 யூரோ(49,22,270 இலங்கை ரூபாய்) அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், அரசின் இந்த அறிவிப்பிற்கு நிறுவனங்கள் மற்றும் தொழிலாளர் சங்க கூட்டமைப்புகள் கண்டனத்தை தெரிவித்து வருகின்றன.
தொழிற்பயிற்சியில் ஈடுபடாத அகதிகளை நாட்டை விட்டு வெளியேற்றுவது என்பது அரசின் அடக்குமுறையை தான் காட்டுகிறது. தொழிற்பயிற்சி நடைபெறும் இடங்களில் அகதிகளுக்கு போதிய வசதிகளும் தரமிக்க சேவைகளும் இல்லாத காரணத்தினால் தான் அவர்கள் வெளியேறுகிறார்கள்.
மேலும், அகதிகளுக்கு எதிரான இந்த முடிவினை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் தொழிலாளர் சங்க கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
Geen opmerkingen:
Een reactie posten