மயிரிழை என்று ஒரு சொற் பிரயோகம் உண்டு.. மிகமிக மெல்லிய இழையில் ஊசலாடும் நிலை என்பதற்கு அதுவே பொருந்தும்.
அப்படி ஒரு மிகமிக அபாயகரமான இக்கட்டு ஒன்று தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கு ஏற்பட்ட அந்த நாட்களின் வரலாற்றை மேலோட்டமாக மீளவும் பதிவு செய்வதன் மூலம் சரித்திரத்தின் ஒரு அபாயகர வளைவு ஒன்றை பார்க்கலாம்… பாடமும் படிக்கலாம்..
1982 மே மாதம் தொடங்கி யூன் நடுப்பகுதி வரைக்கும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஆணிவேரை அசைத்தபடி இருந்த ஒரு பிரச்சனை அது…
1982 மே மாதத்தின் 19ம் திகதி சென்னை பாண்டிபஜாரில் நடந்த ஒரு துப்பாக்கிசூடு சம்பந்தமாக தேசிய தலைவரும் மற்றும் சிலரும் தமிழ்நாடு காவல்துறையால் கைது செய்யப்படுகிறார்கள்…
மிக முக்கியமான ஒரு காலகட்டத்தில் நடந்த இந்த கைது அமைப்பின் போராளிகள் மத்தியில் பேரதிர்ச்சியை உண்டாக்கியது.
அதற்கு சிறிதுகாலம் முன்புதான் அமைப்பு பெரிய ஒரு பிளவை சந்தித்து மீண்டிருந்தது. வெறுமனே தத்துவங்களை வாசித்து உருப்போட்டு கொண்டிருந்த குழப்பவாதிகள் அமைப்பை விட்டு வெளியேற்றப்பட்டும் வெளியேறியும் சென்ற பின்னர் மீண்டும் அமைப்பை கட்டுக்கோப்புடன் அதே உறுதியுடன் மீளமைக்கும் செயற்பாடுகளில் தலைவர் ஈடுபட்டுக்கொண்டிருந்த வேளையில் ஏற்பட்ட இந்த கைது அந்த நேரம் பலத்த ஒரு மனஉறுதி உடைப்பை அமைப்புக்குள் உடனே கொடுத்தது…
இந்தியாவை பொறுத்தவரையிலும் தேசியத்தலைவரும் மற்றவர்களும் கைது செய்யப்பட்ட நிகழ்வை தனது பிராந்தி மேலாதிக்கத்துக்கும் சிங்கள தேசத்துடனான ஆழமான உறவுக்குமாக பாவிக்கும் எண்ணமே பரவலாக இருந்தது.
சிங்களதேசத்தை பொறுத்தவரையிலும் தமிழீழ தேசியத்தலைவர் கைது செய்யப்பட்டதில் அளவற்ற சந்தோசமும் அரசமரத்தின் கீழ் நிட்டையில் இருக்கும் புத்தபெருமானே தமக்கு வழங்கிய ஒரு அரிய சந்தர்ப்பமாகவே பார்த்தனர்.
ஏனென்றால் தொடர்ச்சியாக பல முனைகளில் தமிழரின் தாயகவிடுதலைப் போராட்டத்தை சிதைப்பதில் ஓரளவு வெற்றி கண்டுகொண்டிருந்த அந்த பொழுதில் தலைவரின் கைது என்பது விடுதலையின் உயிர்மூச்சையே இனி அழித்துவிடலாம் என்ற நம்பிக்கையையே சிங்கள தலைமைக்கு கொடுத்திருந்தது.
அரசியல் ரீதியாக என்று பார்த்தால், தமிழீழம் என்ற கோசத்துடன் வாக்கு கேட்டு வென்ற கூட்டணியினரும் அதன் தலைமையும் எதிர்க்கட்சி தலைவர் பதவியும் இன்னும் பிற அபிவிருத்தி பொறுப்புகளும் கிடைத்ததால் அடிபணிவு நிறைந்த இணக்க அரசியலையே முன்னெடுத்தனர் அப்போது..
தமிழர்தாயக இலட்சியப் போராட்டத்துக்கு மக்கள் மத்தியில் அதிகரித்து வந்த ஆதரவுதளத்தை சிதைக்கும் நோக்குடன் வடபகுதிக்கு அனுப்பபட்ட பிரிகேடியர் திஸ்ஸவீரதுங்கா ஓரளவுக்கு அந்த வேலையை தனது கொலை வெறியாட்டம் மூலம் செயற்படுத்தி இருந்ததும், அதன் பின்னர் 81ஏப்ரலில் தங்கத்துரை குட்டிமணி ஜெகன் உட்பட முக்கியமானவர்கள் சிங்களபடைகளால் பிடிக்கப்பட்டதும் சிங்கள பேரினவாதத்தின் மனஉறுதியை உச்சத்தில் வைத்திருந்த ஒரு பொழுதில் சென்னையில் தேசியதலைவர் கைது செய்யப்பட்டது மேலும் ஒரு பெரும் வெற்றியாகவே கருதப்பட்டது…
தலைவரையும் மற்றவர்களையும் உடனடியாக சிறீலங்காவுக்கு கொண்டுவரும் நடவடிக்கையில் ஜேஆரின் அரசு மிகதீவிரமாக ஒவ்வொரு நிமிடத்தையும் பயன்படுத்திய நேரமது.
ஜேஆர் ஜெயவர்த்தனாவின் நேரடி கண்காணிப்பில் காய்கள் நகர்த்தப்பட்டன. இதனை ஒரு அரசியல் ரீதியான பிரச்சனையாக அணுகி நாடுகடத்த கோரினால் தமிழ்நாட்டில் பலத்த எதிர்ப்பு தோன்றும் என்பதால் சிங்கள தேசத்தின் காவல்துறை மூலம் சட்டம் ஒழுங்கு பிரச்சனைக்காக நாடு கடத்த கோருவது போன்ற ஒரு பாவனையை சிங்கள தேசமும் இந்திய வல்லாதிக்க மத்திய அரசும் நாடகம் போட்டது.
சிறீலங்காவின் பிரதி பாதுகாப்பு செயலர் ரி பி வெரப்பிட்டியா தலைமையில் கூடிய கூட்டத்தில் சிறீலங்கா பொலிஸ்மாஅதிபர் ருத்ரா ராஜசிங்கம் தலைமையில் புலனாய்வு பொலிஸ் இயக்குநர் அமரசேன ராஜபக்ச போன்றோர் புதுடெல்லி சென்று பேச்சுவார்த்தை நடாத்தி தேசியதலைவரையும் மற்றவர்களையும் சிங்கள தேசத்துக்கு கொண்டுவருவது என்ற முடிவு எடுக்கப்பட்டது.
ருத்ரா ராஜசிங்கம் ஒரு தமிழராக இருந்தது இன்னும் கூடுதல் சாதகங்களை சிங்கள தேசத்து வழங்கும் என்று சிங்களம் தீர்மானித்தது.
அதே நேரம் மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி தனது தமிழ்நாட்டுத் தலைவரான எம். பி சுப்பிரமணியம் மூலம் ஒரு அறிக்கையை வெளியிடவைத்தது.
பிடிக்கப்பட்டு சிறைகளில் இருந்த தேசியத்தலைவர் உட்பட மற்றைவர்கள் அனைவரையும் உடனடியாக சிறீலங்காவுக்கு நாடுகடாத்த வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாட்டு தலைவர் எம்.பி.சுப்பிரமணியம் அறிக்கை விட்டிருந்தார்.
அவரது அறிக்கைக்கு தேசிய ஊடகங்களும் தமிழ்நாட்டு முன்ணணி பத்திரிகைகளும் அதிக முக்கியத்துவம் கொடுக்கும்படி வலியுறுத்தப்பட்டு அந்த அறிக்கை தினமும் வானொலிகளில் ஒலிபரப்பாகின.
எந்த நேரமும் ஏதும் நடக்கலாம் என்ற நிலையே காணப்பட்டது. அவ்வாறு சிறீலங்காவுக்கு தலைவர் நாடு கடத்தப்பட்டால் தமிழரின் தாயக விடுதலைப் போராட்டமானது மிகமிக பாரிய பின்னடைவை, ஆழமான சிதைவை எதிர்கொள்ள வேண்டிவரும்…
தலைவரின் கைது சம்பந்தமான செய்தியால் அதிர்ந்த போராளிகள் மிக வேகமாகவே தம்மை மீள சுதாகரித்து கொண்டனர்.
இயக்கத்துக்கே உரிய இடர் பொழுதில் எழும் பெரு வேகமும் ஓர்மமும் அப்போது ஏற்பட்டது..
அப்போது சீலன் எல்லாவற்றையும் ஒருங்கிணைக்க தொடங்குகின்றான்.தினமும் இரண்டுமுறை தமிழ்நாடடில் நின்றிருந்த எமது போராளிகளுக்கும் தமிழீழத்தில் நின்றிருந்த போராளிகளுக்கும் தொடர்பு தொலைபேசி மூலமாக யாழ் குளோபல் கொம்யுனிகேசன் ஊடாக நடக்கிறது.
என்ன என்ன செய்ய வேண்டும் என்பதில் ஒரு தெளிவு பிறக்கிறது. என்ன அங்கே நடக்கிறது என்பதும் என்னதான் இங்கே செயற்படுத்தப்படுகிறது என்பதும் தினமும் பரிமாறி கொள்ளப்படுகிறது.
தமிழீழமக்கள் சார்பாக தமிழக முதல்வரிடம் கடிதங்கள் மூலம் எந்தவொரு சந்தர்ப்பதிலும் நாடு கடத்தும் செயலுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டாம் என்று கோருவது என்று தீர்மானிக்கப்பட்டது.
தமிழீழமக்கள் மத்தியில் இருந்த கலைஅமைப்புகள், கல்விஅமைப்புகள், விளையாட்டு கழகங்கள், இளைஞர் அமைப்புகள், மத நிறுவன அமைப்புகள் என்று அனைத்திடமும் எமது போராளிகள் சென்று கடிதங்களை பெற்று தமிழகமுதல்வருக்கு அனுப்ப தொடங்கினார்கள்..
ஆனால் அது இப்போது சொல்வது போல மிக இலகுவாக இருந்திருக்கவில்லை….அப்போது தாயகத்தில் நின்றிருந்ததோ பதினெட்டுக்கும் குறைவான போராளிகளே..
அவர்கள் இரவுபகலாக ஒவ்வொரு அமைப்பையும் சந்தித்து அவர்களுக்கு புரியும்படி விளங்கப்படுத்தி கடிதம் வேண்டுவதற்குள் போதும் போதுமென்று ஆகிவிடும்
சிலவேளைகளில்.
தமிழர் தாயகத்தின் விடுதலைப்போராட்டத்தில் ஆழமான பங்களிப்பை அப்போது கொண்டிருந்த யாழ் பல்கலைகழக மாணவர் அமைப்பின் தலைமை பொறுப்பில் இருந்தவர்களும் ஏனைய மாணவர்களும் அந்த இக்கட்டான நேரத்தில் எமது விடுதலைப் போராட்டத்தை உயிர்ப்புடன் காக்க எம்முடன் நின்றது என்றும் நினைவில் கொள்ள தக்கது…
இங்கிருந்து தமிழக முதல்வருக்கு அனுப்பபடும் கடிதங்கங்கள் சரியாக முதல்வரின் நேரடி பார்வைக்கு போகின்றதா என்பதை உறுதி படுத்தும் வேளையில் பேபி அண்ணா அங்கே செயற்பட்டார்.
ஆனாலும் சிங்களதேசத்தின் நெருக்குதலும் டெல்லியை மையப்படுத்திய நகர்வுகளும் செறிவாக செறிவாக போராளிகள் மத்தியில் ஒரு வித பதட்டம் ஏற்பட்டது.
எல்லாவித முயற்சிகளையும் மீறி நாடுகடத்தப்பட்டு விட்டால் நிலைமை பேரழிவாக மாறிவிடும் என்பதால் சீலன் இன்னுமொரு முடிவை அறிவிக்கின்றான்…
எல்லாவித முயற்சிகளையும் எடுப்போம்.ஒருவேளை அவை பயனற்று போனால்,தலைவரை நாடு கடத்துவது என்று முடிவானால், சென்னையில் அந்த நேரம் உயரமான கட்டிடமாக விளங்கிய எல்ஐசியில் இருந்து பொன்னம்மான், சீலன், லாலா, புலேந்திரன் போன்றோர் ஒருவர் பின் ஒருவராக குதிப்பது என்று முடிவு செய்யப்பட்டது.
அதன் மூலம் தமிழக மக்களின் கவனத்தை ஈர்த்து ஒரு மக்கள் எழுச்சியை ஏற்படுத்தி தலைவரை நாடு கடத்துவதை தடுப்பது என்பதே அதன் நோக்கம். அப்படி குதிக்கும் போது தமிழக மக்களுக்கு அறைகூவல் விடுக்கும் பிரசுரங்களுக்கான தயாரிப்பு வேலைகள்கூட நடாத்தப்பட தொடங்கி விட்டிருந்தது.
இப்போது நினைத்தாலும்கூட மனது முழுதும் அந்த நாட்களை பற்றிய பெருமிதமே ஓங்குகின்றது.
தாயகத்தில் நின்றிருந்த பதினெட்டுக்கும் குறைவான போராளிகளும் தமிழகத்தில் நின்றிருந்த ஏழு போராளிகளுமாக ஒருங்கிணைந்து செயற்பட்டவிதமும் இருபத்திநாலுமணி நேரமும் ஓய்வின்றி அவர்கள் சூறாவளிபோல வேகமாக இயங்கிய முறைமையும் ஒரு வரலாற்று பதிவுதான்.
சாத்தியமான அனைத்து கதவுகளையும் திறக்க வேலைகளை செய்து நின்றார்கள். தங்களால் முடிந்தது இவ்வளவுதான் என்று ஓய்ந்துவிடாமல் தலைமுடி ஒன்றை கட்டி மலை ஒன்றை இழுப்பது போன்ற எத்தனத்தை செய்தார்கள்.
அதுவும் கையில் எந்தவொரு நிதி தேட்டமும் இல்லாமலேயே.. புத்தூர்,திருநெல்வேலி,நீர்வேலி வங்கி பணம் பறிக்கப்பட்டதன் பின்பான கசப்பான அனுபங்களால் மனது நொந்து போன தலைவர் இனி வங்கி பணப் பறிப்பு
எதிலுமே அமைப்பு ஈடுபடக்கூடாது என்று மிக கடுமையானஉத்தரவிட்டிருந்ததால் முழுக்க முழுக்க எமது அமைப்பு உறுப்பினர்களின் உடல் உழைப்பால் பெறப்பட்ட சிறிய தொகை நிதியை கொண்டே இத்தனை வேலையும் செய்யப்பட்டது. பண்டிதரின் வீட்டில் நடாத்தி வந்த சிறிய கோழிப்பண்ணை மூலமும், நிக்கலஸ் என்பவரின் பெயரில்
வாங்கப்பட்டிருந்த மீன்பிடிப் படகு மூலம் எமது போராளிகளால் பிடிக்கப்பட்ட மீன்களை விற்றதன் மூலமும் கிடைத்த பணத்தை வைத்தே அனைத்து நகர்வுகளும் மேற்கொள்ளப்பட்டன.
ஆனாலும் எந்தவொரு போராளியும் சலிப்பு,மனந்தளர்வு எதுவுமே அற்றவர்களாக மிக உயர்ந்த மனோ திடத்துடன் வேலை செய்தது ஒன்றை காட்டியது தமிழரின் தாயக விடுதலைப் போராட்டம் காப்பாற்றப்படுவது தமது கரங்களிலேயே இருக்கின்றது என்பதில் அவர்கள் அனைவரும் தெளிவாக இருந்தார்கள்.
இந்த நேரத்தில் காரிருளை கிழித்தபடி ஒரு சேதி வந்தது..1982 யூன் முதல் வாரத்தில் தமிழக முதல்வர் இந்த பிரச்சனையில் தமது நிலைப்பாடு எது என்பதை
அண்ணா திமுக செயற்குழு கூட்டத்தில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி அதன் ஊடாக மத்தியஅரசுக்கும் சிங்கள அரசுக்கும் தெரிவித்து விட்டிருந்தார். தமிழ்இளைஞர்களை இலங்கைஅரசிடம் ஒப்படைக்க கூடாது.
அது மட்டும் அல்லாமல் இந்த முடிவை தாமே பத்திரிகையாளர் மாநாட்டில் நேரடியாக தெரிவித்தார் எம் ஜி ராமச்சந்திரன் அந்த பத்திரிகையாளர் சந்திப்பில் ஒரு நிருபர்,
‘ சென்னையில் கைதான தமிழ்இளைஞர்களை சிறீலங்கா அரசு துரோகிகள் என்று வர்ணிக்கிறார்களே என்று எம் ஜி ராமந்சந்திரனிடம் கேட்டபோது ‘மகாத்மா காந்தியுடன் முரண்பட்டதற்காக சுபாஸ்சந்திரபோசையும் இப்படித்தான் சிலர் துரோகிகள் என்று சொன்னார்கள்.
ஆனால் நாம் அப்படி ஏற்றுக்கொண்டோமா ‘என்று தமிழகமுதல்வர் தெரிவித்ததும் போராளிகள் மத்தியில் மிகப்பெரும் நம்பிக்கையை கொடுத்திருந்தது..
தமிழக முதல்வர் எம்ஜிஆரின் இந்த தீர்மானம் சிங்களத்துக்கு பெரிய ஏமாற்றமாக இருந்தது. எந்தவொரு தேர்தலிலும் வெல்லமுடியாத சக்தியான எம்ஜிஆரை எதிர்த்து அரசியல் செய்வதை விரும்பாத மத்திய அரசு ஒருபோதும் எம்ஜிஆரின் இந்த முடிவுக்கு எதிராக நாடுகடத்தும் முடிவை எடுக்காது என்பது சிங்களத்துக்கு நன்கு தெரிந்துவிட்டிருந்தது.
இது மட்டும் அல்லாமல் எம்ஜி ராமச்சந்திரன் தமது அமைச்சரவையின் மூத்த அமைச்சரான ப உ சண்முகத்தை அனுப்பி தமிழ்நாட்டின் சர்வகட்சி மாநாட்டிலும் இதே முடிவை எடுக்க வைத்தார்.
ஏமாற்றங்களுடன் சிறீலங்கா குழு நாடு திரும்பியது.
இன்றைக்கு முப்பத்திநான்கு ஆண்டுகள் சரியாக ஓடிவிட்டன.ஆனாலும் அந்த நேரத்தில் அதிர்ச்சி, குழப்பம் என்பனவற்றில் இருந்து தம்மை மீள வெளி எடுத்து ஒருங்கிணைத்து முன்னரை விட பன்மடங்கு வேகத்துடன்,தீரத்துடன், ஓர்மத்துடன்,கூரிய
பார்வையுடன் செயற்பட்ட போராளிகளும்,அவர்களுக்கு துணை நின்ற பொதுமக்களும், ஒடுக்கப்பட் தமிழ் மக்களின் விடுதலையில் தனது ஆதரவை அன்றே தீர்மானமாக தெரிவித்து நின்ற தமிழகமுதல்வர் எம்ஜி ராமச்சந்திரனும் என்றும் வரலாற்றின் பதிவுகளுள் வாழ்வார்கள்.
Geen opmerkingen:
Een reactie posten