அவுஸ்திரேலியாவுக்குச் செல்லும் நோக்கத்துடன் 30க்கும் மேற்பட்ட அகதிகளுடன் சென்று கொண்டிருந்த படகு ஒன்று, இந்தோனேஷியாவுக்கு அருகில் செல்லும்போது பழுதடைந்ததால், அவர்கள் கரைக்கு வர அனுமதி கோரினர்.
முதலில் அனுமதி மறுக்கப்பட்ட அவர்கள் பிறகு அச்சே என்ற தீவில் இறங்கிக்கொள்ள அனுமதிக்கப்பட்டனர். இன்னும் அவர்கள் எத்தனை நாட்கள் அங்கிருக்க அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரியாத நிலையில், அவர்களில் பெரும்பாலானவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து தமிழோசையிடம் பேசிய ஈழ ஏதிலியர் மறுவாழ்வு அமைப்பின் நிறுவனர் சந்திரஹாசன், இதுவரை 21 பேர் அடையாளம் காணப்பட்டிருப்பதாகவும் அவர்களில் ஒரு பெண் இந்தியர் என்றும் கூறினார்.
அந்தப் பெண், இலங்கை அகதி ஒருவரைத் திருமணம் செய்துகொண்ட நிலையில், இந்தப் பயணத்தை அவர் மேற்கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.
இந்த அகதிகள் பெரும்பாலும் பவானிசாகர், விழுப்புரம், கும்மிடிப்பூண்டி ஆகிய முகாம்களைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரியவந்துள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பாக படகில் அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முயன்ற பல இலங்கை அகதிகள் காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
ஜூலை மாதத் தொடக்கத்தில் அவுஸ்திரேலியாவில் தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், அங்கு ஆட்சி மாற்றம் ஏற்படும் பட்சத்தில் அகதிகள் தொடர்பான கொள்கைகள் மாறலாம் என்று கூறி இலங்கை அகதிகளை முகவர்கள் ஏமாற்றுவதாக சந்திரஹாசன் கூறுகிறார்.
தற்போது தமிழகத்தில் 25,000 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 65,000 அகதிகள் முகாம்களில் உள்ளனர். இவர்களில் சுமார் 1700 பேர் நாடு திரும்ப விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் இவர்கள் தங்கள் வீடுகளில் உள்ள பொருட்களை எடுத்துச் செல்ல உதவும் வகையில் கப்பல் மூலம் அனுப்ப மத்திய - மாநில அரசுகள் உதவ வேண்டுமென்றும் சந்திரஹாசன் கூறுகிறார்.
இராமேஸ்வரத்திலிருந்து தலைமன்னாருக்கு மீண்டும் படகுப் போக்குவரத்தைத் தொடங்கினால், அவர்கள் ரயில் மூலமும் படகு மூலமும் தங்கள் தாய்நாட்டிற்குக் குறைந்த செலவில் செல்ல முடியும் என சந்திரஹாசன் தெரிவித்தார்.
- BBC
http://www.tamilwin.com/lifestyle/01/108610
Geen opmerkingen:
Een reactie posten