தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 20 juni 2016

“நாங்க வேற நாடையா நீங்க வேற நாடையா” இலங்கையில் தொடர்வது இனவாத ஆட்சியா?

யுத்தம் நிறைவடைந்து ஏழு ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும் இலங்கையில் இனவாத ஆட்சியே நடைபெறுகின்றது என்பதை சாலாவ ஆயுதக்களஞ்சியசாலை வெடிப்புக்கு பின்னரான செயற்பாடுகள் எடுத்துக்காட்டியுள்ளது.
நல்லாட்சி ஏற்பட்டுள்ளதாக கூறுகின்ற அரசாங்கம் இந்த நாட்டில் இனவாதத்திற்கும் இனவாதிகளுக்கும் இடமில்லை என்று கூறிக்கொண்டே யுத்த நிவாரணம் மற்றும் அபிவிருத்தி வேலைவாய்ப்பு போன்றவற்றில் இன்றும் இனவாத சிந்தனையுடன் செயற்பட்டு வருகின்றது.
சாலாவ ஆயுதக்களஞ்சியசாலை வெடிவிபத்தில் பாதிப்புக்கு உள்ளான இராணுவ கிராமத்தில் உள்ளவர்களுக்கு மூன்று மாதத்திற்குள் வீடுகள் கட்டித்தரப்படும் என்றும் அதுவரை ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா ஐம்பதாயிரம் தரப்படும் எனவும் இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளமையானது பாராட்டப்படவேண்டிய விடயம் என்பதுடன் அரசாங்கத்தின் இந்த முடிவானது அனைவராலும் வரவேற்கப்படவேண்டியது.
ஆனால் கடந்த 30 ஆண்டுகால யுத்தம் வன்னியில் நடைபெற்ற இறுதி யுத்தத்தில் பாதிக்கப்பட்ட வடகிழக்கு தமிழ் மக்களுக்கான நிவாரணங்களை வழங்குவதில் மட்டும் அரசாங்கம் ஏன் இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என தமிழ் மக்கள் தங்களது ஆதங்கங்களை வெளிப்படுத்தியுள்ளனர்.
தாங்கள் கடந்த 25 ஆண்டுகளாக வீடுகள் இன்றி தங்களது பிரதேசங்களுக்கு செல்ல முடியாது, மிகுந்த கஸ்டத்தின் மத்தியில் வாழ்ந்து வருவதாகவும் சாலாவ மக்களை பார்ப்பதை போன்று ஏன் எங்களை இலங்கை அரசாங்கம் பார்க்க தவறியுள்ளது எனவும் வலிவடக்கு மயிலிட்டு உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
வன்னியில் மேற்கொள்ளப்பட்ட இறுதி யுத்தத்தில் சாலாவ வெடிவிபத்தினால் ஏற்பட்ட சேதங்களைப்போல் பல மடங்கு சேதங்களை தமிழ் மக்கள் சந்தித்திருந்தார்கள் பல ஆயிரக்கணக்கான உயிர்களை இழந்திருந்தார்கள் இவ்வாறு பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட நிவாரண பணிகள் இன்னும் நிறைவடைந்ததாக தெரியவில்லை.
முப்பது வருட போராட்டத்தினால் ஏற்பட்ட அழிவுகளை முப்பது நாளில் முடிவுக்கு கொண்டுவர முடியாது என்ற தாரக மந்திரத்துடன் தொடர்கிறது வடகிழக்கு தமிழர்களுக்கான யுத்த நிவாரண புறக்கணிப்புக்கள்.
யுத்தத்தினால் இடம்பெயர்ந்து பாதிக்கப்பட்ட சம்பூர் தொடங்கி முள்ளிவாய்க்கால் வரை உள்ள தமிழர்களுக்கான அடிப்படைத்தேவைகள் இன்னும் முழுமையாக பூர்த்தி செய்யப்படவில்லை அங்குள்ள மக்களின் நாளாந்த வாழ்வாதாரம் கேள்விக்குள்ளாகியுள்ளது.
இருந்தும் சாலாவ வெடிவிபத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் மீது காட்டிய அக்கறையை வடகிழக்கில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு அழிவடைந்த மக்கள் மீது அரசாங்கம் காட்டத் தவறியது ஏன்? என்ற கேள்விகள் எழத்தொடங்கியுள்ளது.
இந்த நாட்டில் நல்லிணக்கம் ,அபிவிருந்தி என்றாலும் சரி வேலைவாய்ப்பு , யுத்த நிவாரணம் என்றாலும் சரி அனைத்திலும் மாற்றாந்தாய் மனப்பாங்குடனேயே அரசாங்கம் செயற்படுகிறது என்பதற்கு சாலாவ வெடி விபத்து நிவாரண பணிகள் ஒரு சாட்சியாகும்.
இலங்கையின் வடகிழக்கு பகுதிகளையும் தென்பகுதிகளையும் ஒப்பீட்டளவில் பார்ப்பவர்களுக்கு தெரியும் யுத்தம் வடகிழக்கு தமிழ் மக்களுக்கு எவ்வாறான பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளது என்று.
இந்த நாட்டில் உள்ள தமிழ் மக்களுக்கு பாரிய அழிவை ஏற்படுத்தியவர்களே இன்று அவர்களுக்கான நிவாரணங்களை செய்கின்ற பொறுப்பை வகிப்பதனாலேயே தமிழ் மக்களுக்கான மீள் நிவாரண பணிகள் ஏழு வருடங்கள் தாண்டியும் தொடர்ந்துகொண்டே செல்கின்றது.
இந்த நாட்டில் இன்று முன்னெடுக்கப்பட்டு வரும் நல்லிணக்க முயற்சிகள் அனைத்திற்கும் முற்றுமுழுதான தடையாக இருப்பது தென்னிலங்கை சமூகத்தின் இனவாத சிந்தனைகளே.
பல ஆண்டுகளாக சிங்கள மேலாதிக்க சிந்தனை கொண்ட தலைவர்களும் அவர்களது வாரிசுகளும் தமிழ் மக்களுக்கான உரிமைகளை வழங்குவதற்கு தடையாக இருந்துவருகின்றனர்.
கடந்த 30 ஆண்டுகால யுத்தம் இலங்கையில் உள்ள தமிழ் சிங்கள மக்கள் மத்தியில் நீண்ட இடைவெளியையும் நம்பிக்கையற்ற மனநிலையையும் ஏற்படுத்தியுள்ளது.
சிங்கள அரசாங்கங்களினால் அடக்குமுறைக்கு உள்ளான தமிழ் சமூகம் சிங்கள பௌத்த அரசாங்கங்கள் மீது நம்பிக்கை இழந்த பின்னரே தங்களது சுயநிர்ணய உரிமைக்கான ஆயுதப்போராட்டத்தை ஆரம்பித்திருந்தனர்.
இதில் பல ஆயுதக்குழுக்கள் ஈடுபட்டிருந்தாலும் அவை அனைத்தும் இலங்கை அரசாங்கத்தின் இராணுவத்திற்கு எதிராகவே போராடியிருந்தனர்.
இந்த நிலையில் சர்வதேச நாடுகள் எல்லாம் இணைந்து இலங்கை நாட்டை பிரிக்கக்கூடாது என்ற சிந்தாந்தத்தின் அடிப்படையில் ஒரே நாடு ஒரே தேசம் ஒரே மக்கள் என்பதை உருவாக்குவதற்காக தனது சுதந்திரத்திற்காக பறக்கநினைத்த தமிழ் புறாக்களின் சிறகுகளை உடைத்து அவற்றைக் கூண்டுக்குள் அடைத்துவைத்துக் கொண்டு இன்று நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளை சர்வதேசம் மேற்கொண்டு வருவது வேடிக்கையாகவே உள்ளது.
நல்லிணக்கம் என்பது இரண்டு சமூகங்களும் தங்களை சுதந்திர சமூகம் என்று கருதி யாருடைய அழுத்தங்களும் இல்லாது தங்களது சுயமான அக்கரையுடன் தனது நாட்டின் நலணுக்காக ஒன்றுபட்டு செயற்படுவதாக இருக்கவேண்டுமே தவிர நல்லிணக்கத்தை யாரும் வற்புறுத்தி திணிக்கமுடியாது என்பதை உலகம் புரிந்துகொள்ளவேண்டும்.
ஒரு புறம் இலங்கையை தமிழர் தேசம் சிங்கள தேசம் என்று இரண்டாக பிரித்து வைத்துக்கொண்டு இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கமுனையும் சர்வதேசம், மறுபுறம் இலங்கையுடன் இராஜதந்திர உறவுகளை பேணி தமிழர் பிரச்சினைகளை கிடப்பில்போடுவதற்கு காரணமாக இருக்கின்றது.
சர்வதேச நாடுகளின் இந்துசமுத்திர ஆதிக்கப்போட்டியின் அரசியலாக இலங்கைத் தமிழர்கள் மாற்றப்பட்டுள்ளார்கள் என்பது மட்டுமே உண்மை. அதன்விளைவுகளில் ஒன்றே இலங்கையில் ஏற்படுத்தப்பட்ட ஆட்சி மாற்றமாகும்.
இலங்கைத் தமிழர்களை தங்களது பிராந்திய அரசியலுக்காக பயன்படுத்தும் சர்வதேசம் நிச்சயம் அவர்களுக்கான சுயநிர்ணய உரிமைகளை உடனடியாக தரப்போவதில்லை என்பதுடன் தமிழர்களை இந்த பூமிப்பந்தில் தன்னிச்சையாக எழவிடாது தங்களது கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொண்டு பிராந்திய அரசியலை நடத்துவதற்கே முனைப்புக்காட்டி வருகின்றது.
ஆனால் என்னதான் சர்வதேச நாடுகள் இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தி நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்த முயற்சிசெய்தாலும் நாட்டில் உள்ள பெரும்பான்மை சிங்கள தேசியவாதம் தமிழர்களை இரண்டாம் தரப்பிரஜைகளாகவே நடத்த முற்படுகின்றனர்.
மகிந்தவின் ஆட்சியை போன்றே மைத்திரியின் ஆட்சியிலும் சமாதானம் நல்லிணக்கம் என்ற போர்வைக்குள் தமிழர்களுக்கு எதிரான எல்லாம் நடைபெற்று வருகின்றது.
"மகிந்தவும் மைத்திரியும் வேறு." " மைத்திரி ஆடசியில் தமிழர்கள் நிம்மதியாக வாழ்கிறார்கள். " " இன்று இலங்கையில் நல்லாட்சி நிலவுகிறது" "தமிழர்க்கு விரைவில் தீர்வு வரும்" எனப் பல கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுவரும் இக்காலகட்டத்தில்
ஆனால் இன்று நடைபெறுகின்ற மைத்திரி ஆட்சியும் ஏற்கனவே நடந்த மகிந்த ஆட்சியும் ஒன்றுதான் என தமிழ் மக்கள் கருதுகின்றனர் மோதகமும் கொழுக்கட்டையும் உருவத்தில் வேண்டுமானால் வேறாகலாம்.
ஒன்று கொன்று குவிக்கும் பேய். இன்னொன்று மெல்ல கொல்லும் பேய் "ஒய்யாரக் கொண்டையில் தாழம்பூவாம் உள்ளே இருப்பது ஈரும் பேனுமாம்." இதுவே இலங்கையில் தமிழர் சிக்கலின் உண்மையான நிலை.
விடுதலை போராட்டம் எந்த தேவைகளுக்காக எங்கள் மண்ணில் மலர்ந்ததோ அந்த காரணங்கள் எவையும் இன்னமும் பூர்த்தியாகவில்லை.
இன்னமும் சொன்னால், சிங்கள குடியேற்றங்கள் தமிழர் நிலங்களில் தொடர்கின்றன. இராணுவ ஆக்கிரமிப்பு விடுவிக்கப்படவில்லை. சிறைக்கு கைதிகள் விடுவிக்கப்படாதமை காணாமல் போனவர்கள் கண்டுபிடிக்கப் படாதமை காணாமல் போதல் படுகொலைகள் பாலியல் பலாத்காரம் போதை பழக்கங்கள் கலாச்சார சீரழிவுகள் நில அபகரிப்பு போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் அவலங்களிள் இருந்து மீளாத நிலை கைதுகள் களவுகள் வேலை வாய்ப்பில் தமிழர்க்கு பாகுபாடு சிங்கள மொழி திணிப்பு புத்தர் சிலைகள் தமிழர் நிலங்களை ஆக்கிரமித்தல் தமிழர் நிலங்கள் மீளக் கொடுக்கப்படாதமை என தமிழர் தேசம் மட்டும் இந்த நாட்டில் பிளவுபடுத்தி காட்டப்பட்டுள்ளது.
மேற்சொன்ன காரணங்கள் அனைத்தும் இல்லாது என்று தமிழர்கள் நிம்மதியாக வாழ்கின்றார்களோ அன்றுதான் இலங்கை ஆத்மாத்த ரீதியாக ஒரு நாடு என்ற நிலையை அடையும் இப்படியான நிலையில் இலங்கையில் நடப்பது நல்லாட்சி என நம்ப சொல்லுகிறார்கள்.

Geen opmerkingen:

Een reactie posten