பெற்றோர் ஏற்பாடு செய்திருந்த பெண்ணை திருமணம் செய்துக்கொள்ள இலங்கைக்கு திரும்பிய பிரித்தானிய தமிழர் ஒருவரை இலங்கை பொலிசார் கொடூரமாக சித்ரவதை செய்து சிறையில் அடைத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையில் உள்ள யாழ்ப்பாணத்தில் பிறந்தவர் வேலாயுதபிள்ளை ரேணுகாரூபன் என்ற 36 வயதான நபர்.
இவர் கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்னர் பிரித்தானியாவில் குடியேறி வசித்து வருவது மட்டுமில்லாமல், பிரித்தானிய குடியுரிமையும் பெற்ற தமிழர்.
இந்நிலையில், ரேணுகாரூபனின் குடும்பத்தினர் அவருக்கு இலங்கையில் தஜீபா விநாயகமூர்த்தி(27) என்ற ஒரு பெண்ணை திருமணம் செய்ய ஏற்பாடு செய்துள்ளனர்.
ரேணுகாரூபனுக்கும் தஜீபாவை பிடித்து விட இருவரும் அடிக்கடி தொலைபேசியில் தொடர்புக்கொண்டு பேசி வந்துள்ளனர்.
இருவரும் திருமணம் செய்துக்கொள்ள முடிவு செய்யப்பட்டதும், இலங்கையில் இருந்த பெற்றோர் யூன் 8ம் திகதி திருமணத்தை நடத்த ஏற்பாடு செய்திருந்தனர்.
புதிய மணவாழ்க்கையை தொடங்க ஆயிரம் கனவுகளுடன் ரேணுகாரூபன் தனது தாய்நாடான இலங்கைக்கு கடந்த யூன் 1ம் திகதி சென்றுள்ளார்.
திருமணம் முடிந்த பிறகு, திருமண பத்திரம் பெற்று மனைவியை அழைத்துக்கொண்டு எதிர்வரும் யூன் 23ம் திகதி பிரித்தானியா நாட்டிற்கு திரும்ப வேண்டும் என ரேணுகாரூபன் முடிவு செய்துள்ளார்.
ஆனால், ரேணுகாரூபன் இலங்கை மண்ணில் கால் வைத்ததும் பல அதிர்ச்சிகரமான சம்பவங்கள் நடந்துள்ளன.
யாழ்ப்பாணத்தை அடைந்த ரேணுகாரூபன் நேராக தனது வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது, இரண்டு நபர்கள் திடீரென மோட்டார் சைக்கிள்களில் வந்துள்ளனர்.
வாகனத்தை விட்டு இறங்கிய இருவரும் ரேணுகாரூபனை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதனை கண்ட தாயார் மற்றும் மூத்த சகோதரி பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
பின்னர், சில நிமிங்களுக்கு பிறகு ரேணுகாரூபனை கயிற்றால் கட்டியை அவர்கள் அவரை ஒரு வாகனத்தில் ஏற்றிக்கொண்டு அங்கிருந்து தலைமறைவாகியுள்ளனர்.
இந்த சம்பவத்திற்கு பிறகு, தாய் மற்றும் சகோதரி ரேணுகாரூபனை தீவிரமாக தேடி வந்துள்ளனர். ஆனால், அவர் எங்கு அழைத்துச் செல்லப்பட்டார்? எங்கு வைக்கப்பட்டுள்ளார் என்ற எந்த தகவலும் அவர்களுக்கு கிடைக்கவில்லை.
நம்பிக்கை இழக்காத அவர்கள் இறுதியாக ரேணுகாரூபனை கண்டுபிடித்துள்ளனர். ஆனால், மகனின் முகம், உடல் என பல இடங்களில் கொடூரமான காயங்கள் இருந்ததை கண்ட தாயார் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
ரேணுகாரூபனை பொலிசார் கொடூரமான சித்ரவதை செய்து தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளது தாயாருக்கு தெரியவந்துள்ளது.
உடனடியாக ஆண்டோன் புனிதயானகம் என்ற மனித உரிமைகள் குறித்து வாதாடம் வழக்கறிஞரை குடும்பத்தினர் ஏற்பாடு செய்தனர்.
மேலும், சிறையில் அடைக்கப்பட்ட ரேணுகாரூபன் மீது ‘பலரை தாக்கியதாக’ குற்றம் சாட்டப்பட்டு யாழ்ப்பாண நீதிமன்றத்திலும் பொலிசார் நிறுத்தியுள்ளனர்.
ஆனால், ரேணுகாரூபன் யாரை தாக்கினார்? எங்கு? எப்போது தாக்கினார் என்ற எந்த ஆதரங்களும் நீதிமன்றத்தில் சரியாக காட்டப்படவில்லை.
இது குறித்து வழக்கறிஞர் ஆண்டோன் பேசியபோது, ‘எனது கட்சிக்காரர் ரேணுகாரூபன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றம் அடிப்படை ஆதாரம் இல்லாதது.
ஏனெனில், ரேணுகாரூபன் தாக்கியதாக கூறப்படும் அந்த நபர் தற்போது இலங்கையில் இல்லை. இந்த வழக்கு தொடர்பாக அந்த நபர் நீதிமன்றத்திலும் ஆஜர் ஆகவில்லை. ஆனால், பொலிசார் திட்டமிட்டு ரேணுகாரூபன் மீது போலியான வழக்கை சுமத்தியுள்ளனர்.
எனது கட்சிக்காரருக்கு இந்த தாக்குதல் தொடர்பான குற்றத்தில் துளியும் தொடர்பு இல்லை என்பதற்கான உறுதியான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன” என வழக்கறிஞர் ஆண்டோன் தெரிவித்துள்ளார்.
ஆனால், ரேணுகாரூபன் எதற்காக கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பதற்கு அவரது குடும்பத்தினர் ஒரு விளக்கம் அளித்துள்ளனர்.
அதாவது, ரேணுகாரூபன் பிரித்தானியா நாட்டிற்கு செல்வதற்கு முன்னர் தமிழர்களின் உரிமைக்காக போராடி வந்த விடுதலைப் புலிகளின் இயக்கத்தில் சேர்ந்து போராடி வந்தது தான் காரணம்’ எனக் கூறியுள்ளனர்.
குடும்பத்தினர் கூறிய காரணம் உண்மை தான் என வெளியுறவு அலுவலக அதிகாரிகளும் உறுதிப்படுத்தியுள்ளனர். மேலும், சிறையில் உள்ள ரேணுகாரூபனுக்கு எந்த ஆபத்தும் ஏற்படாதவாறு பாதுகாப்பு அளிக்கவும் உதவி வருவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
திருமணத்திற்கு சென்ற தனது மூத்த சகோதரனை இலங்கை பொலிசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ள செய்தி கேட்டு அவரது சகோதரியான வேலாயுதப்பிள்ளை லலிதாரூபி(26) பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
லலிதாரூபி அகதி என்ற அந்தஸ்த்துடன் தற்போது லண்டன் நகரில் தான் வசித்து வருகிறார். சகோதரனின் கைது செய்தி கிடைத்ததும் அவரை விடுதலை செய்யவும், பிரித்தானியா நாட்டிற்கு திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அவர் தற்போது போராட்டங்களில் ஈடுப்பட்டு வருகிறார்.
இது குறித்து லலிதாரூபி பேசியபோது, ‘எனது சகோதரரின் கைது நடவடிக்கை எனக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒருவர் மீது குற்றம் சுமத்தி அவரை கைது செய்ய வேண்டும் என்றால், அவருக்கு பிடி ஆணை வழங்க வேண்டும்.
ஆனால், என்னுடைய சகோதரரை கைது செய்தபோது பிடி ஆணை எதுவும் வழங்காதது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ளார்.
என் மீது அவர் அளவுக்கடந்த அன்பு வைத்துள்ளார். லண்டனில் என்னை ஒரு தாய் போல் அவர் கவனித்து வந்துள்ளார். என் சகோதரனின் கைது செய்தி கேட்ட நாள் முதல் நான் கண்ணீர் விட்டு அழுதுக்கொண்டு தான் இருக்கிறேன். ஒரு நாள் கூட என்னால் நித்திரை கொள்ள முடியவில்லை.
எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. அண்ணனை பிரித்தானியா நாட்டிற்கு திரும்ப கொண்டு வரும் முயற்சிக்காக வெளியுறவு துறை அதிகாரிகள் முதல் உள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரை அனைவரையும் சந்தித்து கோரிக்கை வைத்துள்ளேன்.
என் சகோரர் சிறையில் இருக்கும் ஒவ்வொரு நாளும் அவருக்கு என்ன ஆபத்து நேர்ந்து விடுமோ என அச்சத்தில் உறைந்துள்ளேன். பிரித்தானிய நாட்டிற்கு அவர் திரும்பும் வரையில் என் முகத்தில் மகிழ்ச்சி இருக்காது’’ என லலிதாரூபி கண்ணீர் மல்க கூறியுள்ளார்.
வழக்கறிஞரான ஆண்டோன் பேசியபோது, ‘தற்போது ரேணுகாரூபனிற்கு மருத்துவமனையில் சிகிச்சை நடைபெற்று வருகிறது. ஆனால், மிகவும் அரிதாக நடைபெறக்கூடிய விடயம்.
பொலிசாரால் துன்புறத்தப்பட்ட ஒரு கைதியை அவர்கள் எளிதில் மருத்துவமனை சிகிச்சைக்கு அனுப்ப மாட்டார்கள். ஆனால், பிரித்தானிய வெளியுறவு துறை அலுவலகத்தின் நிர்பந்தம் மற்றும் பிரித்தானியாவில் ரேணுகாரூபனுக்கு பெருகி வரும் ஆதரவும் தான் தற்போது அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளது.
மருத்துவமனையில் உள்ள ரேணுகாரூபன் தப்பிவிடக்கூடாது என அவரை மருத்துவமனையில் உள்ள படுக்கையில் இரும்பு கம்பியால் கட்டிப்போட்டு அவரை எந்நேரமும் இரண்டு பேர் கண்காணித்து வருகின்றனர்.
இதுமட்டுமில்லாமல், ரேணுகாரூபனின் உடலில் உள்ள காயங்களை நான் புகைப்படங்களாக எடுத்து வைத்துள்ளேன்’’ என வழக்கறிஞர் ஆண்டோன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து இனப்படுகொலை தடுப்பு மற்றும் அரசு தரப்பு சர்வதேச மையத்தின் ஒருங்கிணைப்பாளரான அம்பி சீவரத்தினம் என்பவர் பேசியபோது, ‘ரேணுகாரூபனின் உடல் முழுவதும் துன்புறுத்திய காயங்கள் உள்ளன.
எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவில் ரேணுகாரூபனை இலங்கையில் இருந்து மீட்டு பிரித்தானியா கொண்டு செல்ல வேண்டும்.
இந்த சம்பவம் மூலம், பிரித்தானியா நாட்டிலிருந்து இலங்கை நாட்டிற்கு திரும்பும் ஒவ்வொரு தமிழரையும் சதிகாரனாகத்தான் இலங்கை அரசு பார்ப்பதாக தெரிகிறது’’ என குற்றம் சாட்டியுள்ளார்.
இலங்கையில் உள்ள பிரித்தானிய வெளியுறவு அலுவலக அதிகாரிகள் பேசியபோது, ‘கைது செய்யப்பட்டுள்ள பிரித்தானிய குடிமகனான ரேணுகாரூபனுக்கு தேவையான உதவிகளை செய்து வருகிறோம். ரேணுகாரூபன் வைக்கப்பட்டுள்ள பகுதியை சேர்ந்த அதிகாரிகளிடம் நாங்கள் நேரடியாக தொடர்பில் இருந்து, அவரது நலனில் அக்கறை செலுத்தி வருகிறோம்’’ என தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் தற்போது மனித உரிமைகள் எவ்வாறு காக்கப்படுகின்றன என்பது குறித்து அமெரிக்க உள்ளிட்ட மனித உரிமைகள் அமைப்புகள் கடந்த மாதம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், இலங்கைக்கு திரும்பும் தமிழர்கள் அதிகளவில் அச்சத்தில் உள்ளதாகவும், அவர்களை சித்ரவதை செய்து எதேச்சதிகாரமாக கைது செய்யும் நடவடிக்கைகள் அதிகரித்து வருவதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ரேணுகாரூபன் வசித்து வரும் லண்டனில் உள்ள Ealing North தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான ஸ்டீவ் பவுண்ட் என்பவரும் இந்த விவகாரத்தில் அக்கறை செலுத்தி வருகிறார்.
ரேணுகாரூபன் கைது தொடர்பாக வெளியுறவு அலுவலக அதிகாரிகளை அவர் தொடர்புக்கொண்டதாகவும், இந்த கைது குறித்து அவர்கள் விசாரணை நடத்தி வருவதாகவும் ஸ்டீவ் பவுண்ட் தெரிவித்துள்ளார்.
தமிழர்களுக்கான அனைத்துக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழுவை சேர்ந்த எம்.பி கரேத் தாமஸ் என்பவர் பேசியபோது, ‘’பிரித்தானியாவில் வசித்து வரும் தமிழர்கள் இலங்கைக்கு திரும்பும்போது அவர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் குறித்து எனக்கு அடிக்கடி புகார்கள் வருகின்றன.
ஆனால், இதுபோன்ற விவகாரங்களில் இலங்கை அரசாங்கத்தை எதிர்க்கொண்டு பிரித்தானிய அரசு முழு வீச்சுடன் செயல்படவில்லை என்பதே எனது குற்றச்சாட்டு’’ எனக் கூறியுள்ளார்.
புதிய மணவாழ்க்கை வாழ தாய்நாட்டிற்கு திரும்பிய பிரித்தானிய தமிழரை உடனடியாக விடுதலை செய்ய இரு நாட்டு அரசாங்கமும் முன் வரவேண்டும்.
ரேணுகாரூபனை விடுதலை செய்வதன் மூலம் தாய்நாட்டிற்கு திரும்பும் தமிழர்களின் பாதுகாப்பை இரு நாடுகளும் உறுதி செய்ய வேண்டும் என்பதே ரேணுகாரூபனின் விடுதலைக்காக போராடி வரும் தமிழர்களின் ஒருமித்த கோரிக்கையாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Geen opmerkingen:
Een reactie posten