பிரித்தானியாவில் வசித்து வரும் இலங்கை தமிழர் ஒருவர் தாய்நாடான இலங்கைக்கு தன்னை நாடுகடத்துவதை தடுக்குமாறு அரசாங்கத்திற்கு உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
கம்சன் சிவக்குமார்(22) என்ற பெயருடைய அவர் நாடாளுமன்ற உறுப்பினரான ஜுலியன் பிரேசியர் மற்றும் உள்துறை அலுவலக செயலாளர் ஆகியர்வர்களுக்கு எழுதிய கடிதத்தின் தமிழாக்கம்:
கடந்த 2012ம் ஆண்டில் தனக்கு 18 வயதாக இருந்தபோது ஒரு கடத்தல் கும்பல் என்னை பிரித்தானியாவிலிருந்து பிரான்ஸ் நாட்டிற்கு நாடு கடத்த முயன்றது.
இதற்காக, அவர்கள் என்னிடம் போலியான சில ஆவணங்களையும் அளித்து அவற்றை பயன்படுத்திக்கொள்ளுமாறு கூறினார்கள்.
ஆனால், போலியான ஆவணங்கள் வைத்திருந்த குற்றத்திற்காக பொலிசார் என்னை கைது செய்தனர். அப்போது தான் கடத்தல் கும்பல் என்ன திட்டம் தீட்டினார்கள் என எனக்கு தெரியவந்தது.
இது தொடர்பாக உடனடியாக பொலிசாரிடம் பேசினேன். நான் அளித்த தகவல்கள் மூலம் சர்வதேச அளவில் புலம்பெயர்ந்தவர்களை கடத்தும் கும்பலை பொலிசார் கண்டுபிடிக்க உதவியது.
சர்வதேச கடத்தல் கும்பலை சேர்ந்த 5 பேரை கைது செய்யவும் எனது தகவல்கள் உதவின. ஆனால், தற்போது பிரித்தானிய உள்துறை அமைச்சகத்தை சேர்ந்த அலுவலக அதிகாரிகள் என்னை இலங்கை நாட்டிற்கு திருப்பி அனுப்பும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.
போலி ஆவணங்கள் வைத்திருந்த குற்றத்திற்காக எனக்கு 12 மாதங்கள் சிறை தண்டனையும் தாய்நாட்டிற்கு திருப்பி அனுப்பவும் திட்டமிடப்பட்டுள்ளது.
ஏனெனில், இந்த சமுதாயத்திற்கு நான் ஒரு அச்சுறுத்தலாக இருப்பதாக பொலிசார் நினைக்கின்றனர். ஆனால், இது உண்மையல்ல. நான் வசிக்கும் பகுதியில் உள்ள அனைவருக்கும் நல்ல நண்பராக விளங்கி வருகிறேன். இப்பகுதி மக்களிடையே எனக்கு ஆதரவும் இருக்கிறது.
இதுமட்டுமில்லாமல், British Red Cross, Citizen’s Advice Bureaux மற்றும் Kent Refugee Action Network உள்ளிட்ட தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து மக்களுக்கு சேவை செய்துள்ளேன்.
தாய்நாடான இலங்கைக்கு என்னை திருப்பி அனுப்பினால், அங்குள்ள அதிகாரிகளால் எனக்கு ஆபத்து இருக்கிறது என்பதை உணர்கிறேன்.
அதேபோல், எனக்கு மற்றொரு பெரும் அச்சமும் தற்போது எழுந்துள்ளது. கிரவுன் நீதிமன்றத்தில் சில கடத்தல் கும்பலுக்கு எதிராக நான் ஆதாரங்கள் அளித்தேன்.
சிறையில் அடைக்கப்பட்ட அவர்கள் அனைவரும் இலங்கை குடிமகன்கள் தான். இவர்களின் சிறைக் காலம் முடிவு பெற்ற பிறகு, அவர்களும் இலங்கை நாட்டிற்கு நாடுகடத்தப்படலாம்.
இவர்களாலும் எனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக உணர்கிறேன். எனவே, தன்னை தாய்நாட்டிற்கு திருப்பி அனுப்பும் நடவடிக்கையை உடனடியாக தடுக்க வேண்டும்” என கம்சன் சிவக்குமார் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten