தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 5 januari 2017

யுத்தக்குற்ற விசாரணையில் திருப்பம்...! ஏற்க மறுக்கும் இலங்கை..! ஏமாறப் போகும் தமிழர்கள்..?

இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் யுத்தக்குற்றம் தொடர்பிலான விசாரணைகளுக்கு கலப்பு நீதிமன்றம் அமைக்கப்பட வேண்டும் என பரிந்துரை வழங்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு அரசாங்கத்தினால் ஏற்படுத்தப்பட்ட நல்லிணக்கப் பொறிமுறை தொடர்பான ஆலோசனை செயலணி இலங்கை அரசாங்கத்துக்கு இந்த பரிந்துரைகளை வழங்கியுள்ளது.
மனோரி முத்தெட்டுவேகம தலைமையில் அமைக்கப்பட்டிருந்த இந்த குழுவினர் கடந்த ஒரு வருடமாக வடக்கு மற்றும் கிழக்கு உள்ளிட்ட பகுதிகளில் மக்களின் ஆலோசனைகளை பெற்றுக்கொண்டது.
அந்த வகையில் குறித்த குழுவின் இறுதி பரிந்துரைகள் அடங்கிய அறிக்கை கடந்த செவ்வாய்கிழமை தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்க அலுவலகத்தின் தலைவர் சந்திரிகா பண்டாரநாயக குமாரதுங்கவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையிலேயே மேற்குறித்த விடயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
யுத்தக் குற்றங்கள் மற்றும் மனித குலத்துக்கு எதிரான சர்வதேச குற்றங்கள், குற்றவியல் குற்றங்களாக கருதப்படும் வகையில் இலங்கை சட்டங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவேண்டும்.
மேலும், மக்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆலோசனையின் மூலம் அரசின் மீதும், அரசு இயந்திரங்கள் மீதும் மக்களுக்கு நம்பிக்கையற்ற தன்மை காணப்படுவதாக அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் உள்ள மக்கள் உள்நாட்டு விசாரணை நம்பிக்கைக்குரியதாக இருக்காது என்ற ரீதியில் தீவிரமாக கருத்துக்களை முன்வைத்திருப்பதாக கூறப்பட்டுள்ளது.
எனினும், ஏனையப் பகுதிகளிலும், படையினரிடமும் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது சர்வதேச விசாரணைகளுக்கு கடும் எதிர்ப்பு தெரிவிப்பதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
யுத்தக் குற்றம், மனித குலத்திற்கு எதிரான சர்வதேச சட்டங்களை மீறிய குற்றம், சித்திரவதைகள், நபர்கள் காணாமல் ஆக்கப்பட்டமை, பாலியல் வல்லுறவு போன்ற குற்றங்கள் மிக மோசமான மனித உரிமை மீறல் குற்றங்களாகும்.
எனவே, இவ்வாறான குற்றங்களுக்கு மன்னிப்பளிப்பது சட்டவிரோதமானதாகும் என அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், சர்வதேச மனித உரிமைகள் பேரவையில் இலங்கையின் அனுசரணையுடன் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்திற்கு இலங்கை ஒப்புதல் வழங்கியுள்ளமையும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை, குறித்த விடயம் தொடர்பில் சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்துள்ள, நல்லிணக்கப் பொறிமுறை தொடர்பான ஆலோசனை செயலணி உறுப்பினர் பேராசிரியர் சித்ரலேகா மெளனகுரு இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை அரசாங்கம் தனது வாக்குறுதியில் இருந்து பின்வாங்க கூடாது. அத்துடன், கலப்பு நீதிமன்ற பொறிமுறையையே தாங்கள் பரிந்துரை செய்துள்ளோம்.
எனினும், சர்வதேச நீதிபதிகள் நியமனம் தொடர்பான பரிந்துரைகளை அரச தரப்பு ஏற்க மறுத்துள்ளதாக தெரிவித்துள்ள அவர் இது குறித்து தங்களுக்கு அதிகாரப்பூர்வமாக எந்தத் தகவலும் இல்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten