எனவே இலங்கைத் தீவை சிவபூமி என்று திருமூலர் போற்றியதில் பொருள் உண்டு.சிவபூமி என்பது அன்பின் வடிவமானது. அன்பே சிவம் என்பதே சைவ சமயத்தின் அடிப்படை அன்பு என்பது இன்ப ஊற்று.
தன்னுயிர்போல் மன்னுயிரைப் போற்றும் மகத்துவமே அன்பின் விளைவுதான்.அன்புடையார், தம்முயிர் போல் மற்றைய உயிர்களையும் போற்றுவர், எனவே கொல்லாமை என்ற பேச்சுக்கே இங்கு இடமில்லை எனலாம்.
எனினும் திருமூலர் கண்ட சிவபூமி இன்று தன்னிலை இழந்துள்ளது. சிவசின்னங்களில் ஒன்றாகிய திருநீற்றை தந்தருளும் பசுவை கொல்லும் பாவகாரியம் நம்மண்ணில் தாராளமாக நடக்கிறது.
இதிலிருந்து விடுபடுவதற்காக பசு வதைக்கு எதிரான அமைப்புகளும் ஆர்வலர்களும் கடும் முயற்சி செய்தாலும் இலங்கையில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கக்கூடிய சைவ சமயத்தில் அந்த முயற்சிகள் தோற்றுப்போகின்றன.
ஒரு காலத்தில் பசு வதைக்கு எதிராக நம்மவர்கள் இந்திய தேசம் சென்றதாக அறிகின்றோம். அந்நியர் ஆட்சியில் அவை நடந்தேறின.இலங்கையை ஆண்ட அந்நியர்கள் மாடு தின்பவர்களாக இருந்ததால் பசுவதை என்னும் கொடும் பாவம் நடந்தது.
ஆனால் இலங்கை சுதந்திரம் பெற்ற பின்பும் பசுவதையை முற்றாக தடுக்க முடியவில்லை என்றால், அது எங்கள் பலவீ னம் என்பதைத்தவிர வேறில்லை எனலாம்.
உலக மாதாவாக போற்றப்படும் பசுவை தமிழர்கள் தெய்வமாக போற்றினர். தாய்ப்பாலுக்கு அடுத்த படியாக பாசுப்பாலே எங்கள் ஆகாரமாகிறது. தவிர பசுப்பாலில் இருந்து கிடைக்கும் பஞ்சகெள யம் இறைவழிபாட்டுடனும் சைவ அனுட்டானத்துடனும் தொடர்புபட்டவை.
இவ்வாறாக பசுவை தாயாக, தெய்வமாக போற்றும் எங்கள் பண்பாடு தளர்வுற்று பசுவைக் கொன்று அதன் புலாலை உண்ணத் தலைப்பட்டுள்ளோம். இந்தக் கொடும்பாவம் எங்கள் வாழ்வை அமிழ்த்துகிறது. எங்கள் எழுச்சியை வீழ்த்துகிறது.
உலகு வாழ் உயிரினங்களில் அம்மா என்றழைக்கக்கூடிய பசுக்களும், எருதுகளும் எங்கள் செல்வங்கள்.எமக்கு பால் தந்து எங்களை வாழவைக்கும் கடவுளர்கள். ஆகையால் மாட்டினத்தைக் காப்பாற்றுவது எங்கள் தார்மீக கடமை.
இதற்காக இன, மத, மொழி வேறுபாடின்றி நாம் அனைவரும் பாடுபட வேண்டும்.ஆமையைப் பிடிப்பது தண்டனைக்குரிய குற்றம், மானை வேட்டையாடுவது பெருங்குற்றம், உடும்பை அடித்தால் அபராதத் தண்டம். ஆனால், அம்மா என்றழைத்து எங்களுக்கு பால் தந்து; நெய் தந்து; விவசாயம் செய்ய பசளை தந்து; நிலத்தையும் பண்படுத்த தன் உடல் உழைப்பைத்தரும் பசுவையும் எருதையும் கொன்று அதன் இறைச்சியை உண்பது பாவம் இல்லையா? எனினும் இது பற்றி நாம் சிந்திக்க தலைப்படாதது ஏன்?
ஆகவே, வட மாகாணத்திலேனும் மாடுகளை வெட்டுவதற்கு தடைவிதிப்போம். சிவபூமியாகிய எங்கள் மண்ணில் மாட்டிறச்சிக் கடைகளை முற்றாகத் தடுப்போம். இந்த முயற்சிக்கு சமயம் சார்ந்த சகோதர்களும் நிச்சயம் உதவுவர்.
ஆகையால், இந்த முயற்சியை முனைப்புடன் எடுத்து அதனை அமுலாக்க வேண்டும்.
மாடு என்ற சொல்லுக்கு செல்வம் என்று நம் தமிழ் மொழி பொருள் கொடுத்தது.ஒரு காலத்தில் எம் தமிழினத்தின் பெருஞ் செல்வமாக மாடுகளே இருந்தமையால் அப்படியொரு பொருள் கொடுக்கப்பட்டது எனலாம்.
அன்றல்ல இன்றும் மாடுகள் பெரும் செல்வங்களே! எத்தனையோ குடும்பங்களின் சீவியத்தை போக்குவது பசுக்களாக இருப்பதால் பசு வதையை - மாட்டிறைச்சியை முற்றாகத் தடுத்து பெரும் பாவத்தில் இருந்து விடுபடுவோம்.
மாட்டிறைச்சிக் கடைகளை முற்றாக இல்லாது செய்வோம் என்ற உறுதிமொழியை பட்டிப்பொங்கல் தினமாகிய இந்நன்நாளில் எடுத்துக் கொள்வோமாக.
- Valampuri
Geen opmerkingen:
Een reactie posten