எதிர்வரும் தேர்தலில் தமிழர் விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இணைந்து போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய கூட்டணி தமிழ் மக்கள் பேரவையின் பங்களிப்புடன் தேர்தலில் களமிறங்கும் எனவும் குறிப்பிடப்பட்டது.
எனினும் இந்த தகவலை பேரவையின் இணைத்தலைவர்களான வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் மற்றும் தம்பிப்போடி வசந்தராஜா ஆகியோர் மறுத்துள்ளனர்.
த.வி.மு தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன்!
புதிய முன்னணி ஒன்று தேவை என்பதனை தமிழ் மக்கள் பேரவையின் உறுப்பினர்கள் ஏற்றுக்கொண்டுள்ளதாக தமிழர் விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்திருந்தார்.
இதேவேளை, தமிழ் மக்கள் பேரவையின் பங்களிப்புடன் புதிய கூட்டணி ஒன்று தேர்தலில் போட்டியிட வேண்டும்.
த.தே.ம.மு தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்!
இந்த கூட்டணியில் தமிழ் தேசிய மக்கள் முண்னணி, ஈ.பி.ஆர்.எல்.எப் உட்பட பொது அமைப்புக்களும் இணைந்து தேர்தலில் போட்டியிடவுள்ளன என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் குறித்த விடயம் தொடர்பில் இன்றைய நாடாளுமன்ற விவாதத்தின் போது சிவசக்தி ஆனந்தனும் சில தகவல்களை குறிப்பிட்டிருந்தார்.
தமிழரசுக்கட்சி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் உணர்வுக் கட்சி! தம்பிப்போடி வசந்தராஜா
ஆனால் தமிழரசுக்கட்சி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இவ்விரு கட்சிகளும் தமிழர் வரலாற்றின் ஒவ்வொரு முக்கிய கட்டத்தையும் சுமந்தவையாகும்.
இரண்டு பாரம்பரிய தமிழ் உணர்வுக் கட்சிகளையும் பலமிழக்கச் செய்வது மடமைத்தனமாகும் என தமிழ் மக்கள் பேரவை இணைத் தலைவர்களில் ஒருவரான தம்பிப்போடி வசந்தராஜா தெரிவித்துள்ளார்.
பொது அமைப்புக்களின் கூட்டணி என்ற பெயரில் ஒரு கூட்டணியை அமைப்பது தொடர்பில் இடம்பெறும் முன்னெடுப்புக்கள் தொடர்பாக ஊடகவியலாளர்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
தமிழ் சமூக உணர்வாளர்களான எஸ்.ஜே.வி. செல்வநாயகம், மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஆகியோரால் உருவாக்கப்பட்ட இரண்டு பாரம்பரிய தமிழ் உணர்வுக் கட்சிகளையும் பலமிழக்கச் செய்வது மடமைத்தனமாகும்.
தமிழ் மக்களுக்கான விடிவின் அரசியல் அத்திபாரமாக இருந்து வந்த பாரம்பரிய தமிழரசுக் கட்சி அரை நூற்றாண்டைக் கடந்த வரலாற்றைக் கொண்டது. அது தமிழ் உணர்வாளர் அஹிம்சைவாதி எஸ்.ஜே.வி. செல்வநாயகம் அவர்களால் உருவாக்கப்பட்டது.
அதேவேளை தமிழர் உரிமைக்கான ஆயுதப் போராட்டத்தின் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனால் உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சுமார் 15 வருடங்களைக் கடந்துள்ள பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது.
இவ்விரு கட்சிகளும் தமிழர் வரலாற்றின் ஒவ்வொரு முக்கிய கட்டத்தையும் சுமந்தவையாகும். இந்தப் பாரம்பரிய வரலாற்றுக் கட்சிகளைப் பலமிழக்கச் செய்வது சமகாலத்தில் புத்திசாலித்தனமல்ல.
இக்கட்சிகளில் இருக்கும் அரசியல் தலைமைகள் பொருத்தமற்றதாக அல்லது வேகம், விவேகம், சாணக்கியம் அற்றவையாக இருக்கலாம்.
அதற்காக கட்சியை பலமிழக்கச் செய்வது பொருத்தமானதல்ல. அப்படிச் செய்தால் அது வரலாற்று முன்னெடுப்புக்களின் அடித்தளத்தை அடியோடு சாய்த்து விடும்.
தமிழ் மக்களிடத்தில் பாரம்பரியக் கட்சிகளுக்கென தனியொரு செல்வாக்கும் உண்டு. கிழக்கு மக்களைப் புத்தி ஜீவிகளாகவும், சாதாரண அடிமட்ட மக்களாகவும் இரண்டு வகையாக நான் பார்க்கின்றேன்.
புத்திஜீவிகளைப் பொறுத்தவரையில் தற்போதைய தமிழர் அரசியலில் ஒரு மாற்றம் வேண்டும் என்றே கூடுதலானோர் கருதுகின்றார்கள். அதேநேரம் அடி மட்ட மக்கள் இதுபற்றி அவ்வளவாக சிந்தித்ததாகத் தெரியவில்லை.
ஆகவே, இவ்வாறான சூழ்நிலையில் பாரம்பரியக் கட்சிகளைப் பலமிழக்கச் செய்யும் பிரயத்தனங்கள் தமிழ் சமூகத்துக்கு விடிவைப் பெற்றுத் தராது என தம்பிப்போடி வசந்தராஜா தெரிவித்துள்ளார்.
கட்சி முரண்பாடுகளை ஒதுக்கி வைக்க வேண்டிய அவசியம்! முதலமைச்சர்
இதேவேளை, தமிழ் மக்களின் விடிவுகாலத்தை எதிர்நோக்கிச் செல்லும் போது கட்சிகளாவன தற்காலிகமாகவேனும் கட்சி முரண்பாடுகளை ஒதுக்கி வைக்க வேண்டிய அவசியம் ஏற்படலாம் என முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
பொது நலம் கருதி, எமது சுயநலங்களையும் முரண்பாடுகளையும் ஒதுக்கி வைக்க வேண்டிய ஒரு காலகட்டத்தில் நாங்கள் இருக்கின்றோம்.
இவ்வாறான ஒரு முரண் நிலையை ஆயுதங்கள் ஏந்தியவர்கள் காலத்தில் ஆயுதங்களே தடுத்து நிறுத்தின. இன்று ஆயுதங்கள் மௌனிக்கப்பட்ட நிலையில் நாங்கள் ஒவ்வொருவருமே எம்முடைய கடமை யாது என்று ஆய்ந்து அறிந்து உணர்ந்து செயற்பட வேண்டிய நிலையில் உள்ளோம்.
தமிழ் மக்கட் பேரவை எல்லாக் கட்சிகளிடமும் வலியுறுத்திக் கோருவது யாதெனில் எங்களுடைய தனிப்பட்ட கட்சி பேதங்களும், அதிகாரப் பேராசையும், தனிப்பட்ட விரோதங்களும் ஏகோபித்த தமிழ் மக்களுடைய அரசியல் நல உரித்துக்களைப் பாதிக்க நாம் அனுமதிக்கக் கூடாது என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Geen opmerkingen:
Een reactie posten