[ valampurii.com ]
ஒரு மன்னன்- அரசன்- தலைவன் என்றால் அவன் மன்னுயிரை தன்னுயிர் போல் நேசிக்க வேண்டும். ஆனால் அரக்கர் பூமியில் மன்னுயிர் என்ன? மனித உயிரே இனத்துவத்தின் பெயரால் வதைக்கப்படுகின்றது.
என் பிள்ளையை உன் பிள்ளை கொன்றான். இதற்கு நீ நீதி தா என்று மன்னனின் மனை நோக்கி பசுமாடு செல்கின்றது. அரண்மனையின் வாயிலில் உள்ள ஆராய்ச்சி மணியை தன் கொம்பினால் இழுத்து அடித்து தன் குறை சொல்கின்றது மாடு.
மன்னர்களின் நீதி வழுவா நெறியை நாடாளும் தலைவர்கள் அறிய வேண்டும் ஒரு நாட்டின் தலைவன் கோபம் கொண்டால், பகை கொண்டால் மக்கள் மகிழ்வாக இருக்கவே முடியாது.மன்னன் தன் இனத்திற்காக பிற இனத்தை வெறுத்தால் கண்ணீரும் கம்பலையுமே அந்த நாட்டில் மீதமாகும். இந்த நிலைமைக்குள் இருந்து நீந்திக் கரை சேர்வதென்பது செய்த வினையை இந்த நாடு தின்று தீர்க்கும் போதே சாத்தியமாகும்.
2009-ம் ஆண்டு வன்னிப் போரில் நடந்த நிட்டூரத்திற்காக ஐந்து ஆண்டுகள் கடந்து விசாரணை நடக்கிறது. அந்த விசாரணை இழந்தவரின் உறவுகளுக்கு நீதியைத் தருமா? என்பதை விசாரிப்போர் கூட சொல்லமுடியாத அளவிலேயே நிலைமை உள்ளது.
ஆயினும் ஐந்து ஆண்டுகளின் பின் விசாரணை நடப்பதாயினும் சாட்சி வழங்குவோரின் அழுகண்ணீர் காலம் கடந்த தல்ல. அது இப்போதும் புதிதானதே.
மாரடித்து மண்ணில் வீழ்ந்து புரண்டு ஐயா! என் பிள்ளை எங்கே? என்று கத்திக் கதறும் பெற்ற தாயின் புலம்பலுக்கு காலக் கடப்பு ஏதும் கிடையாது.
ஓ! ஜனாதிபதி ஆணைக்குழுவிலிருந்து விசாரணை செய்யும் உத்தமர்களே!
இந்த அழு கண்ணீர் உங்கள் இதயங்களை நிச்சயம் நெருடியிருக்கும். இனத்தின் பெயரால் நடந்த நாசகாரங்களை இடித்துரைத்திருக்கும். ஆக, தமிழ்த் தாய்மார் விட்ட கண்ணீர் வன்னியில் நடந்த நெட்டூரத்தின் சாட்சியம். இது நிச்சயம் உங்கள் மனச்சாட்சியைத் தொட்டிருக்கும்.
இந்த இடத்தில் சாட்சியங்களுக்காக இந்த நாட்டுத் தலைமை நம் இனத்திற்கு நீதியைத் தரப் போவதில்லை என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.
ஆனால் நீங்கள் உங்கள் மனச்சாட்சியில் தமிழ்த் தாய்மார்களின் அவலத்தை நிச்சயம் பதிவு செய்திருப்பீர்கள். ஆம், நீங்கள் உத்தமர்களானால் இந்த உண்மையை உலகிடம் உரைத்து விடுங்கள். அப்போது தான் உங்களால் ஆறுதல் அடையமுடியும்.
http://news.lankasri.com/show-RUmsyCSbLUjq1.html
Geen opmerkingen:
Een reactie posten