இலங்கையின் 66 வது சுதந்திர தின விழா இன்று செவ்வாய்க்கிழமை கேகாலை நகரில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் தலைமையில் கோலாகலமாக கொண்டாடப்படுகின்றது. இந்த 66வது சுதந்திர தின விழா "உலகம் முழுவதும் தாய் நாட்டை வெற்றி பெறுவதற்கு ஒன்று கூடுவோம்” எனும் தொனிப்பொருளில் இடம்பெறுகின்றது.
இன்று கேகாலையில் நடைபெறுகின்ற சுதந்திர தின நிகழ்வில் வெளிநாட்டு தூதுவர்கள் சர்வமத தலைவர்கள், அழைக்கப்பட்ட பிரதிநிதிகள், அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், அரச அதிகாரிகள், அமைச்சுக்களின் செயலாளர்கள், உள்நாட்டு வெளிநாட்டு விசேட பிரமுகர்கள் மற்றும் பொது மக்கள் என அதிகமானோர் கலந்து கொள்கின்றனர்.
காலை 9.15 க்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நாட்டு மக்களுக்கு சுதந்திர தின உரையை நிகழ்த்தவுள்ளார்.
அந்தவகையில் ஒவ்வொரு வருடமும் நாட்டில் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வருகின்ற நிலையில் தமிழ் மக்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளும் அவலங்களும் எதிர்பார்ப்புக்களும் அவ்வாறே தேங்கி நிற்கின்றன.
தாம் எதிர்நோக்கும் அரசியல் மற்றும் ஏனைய பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்குமா கிடைக்காதா? என்ற கேள்விக்குறியுடனேயே ஒவ்வொரு சுதந்திர தினத்தையும் தமிழ் பேசும் மக்கள் கழித்துவருகின்றனர்.
இந்நிலையில் புதிய சுதந்திர வருடத்திலாவது தமது பிரச்சினைகளுக்கு தீர்வு வராதா என்ற ஏக்கத்துடனேயே மக்கள் உள்ளனர். வழமைபோன்று எதிர்பார்ப்புக்களையும் அதிகரித்துக்கொண்டு வருகின்றனர்.
ஒவ்வொரு சுதந்திர தினத்தின் போது நாட்டின் அரச தலைமையானது தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான முன்மொழிவுகளை வெளியிடப்பட்டு வந்தாலும் இதுவரை எந்தவொரு விடயமும் யதார்த்தகரமான நிலைக்கு செல்லவில்லை என்பதே உண்மையாகும்.
தமிழ் மக்களின் அரசியல் உரிமைப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக ஆரோக்கியமான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அதன் மூலம் தமக்கு அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் மக்கள் இருந்து வந்தாலும் அந்த நம்பிக்கைகள் கானல் நீராவது போன்றே கடந்தகால நிகழ்வுகள் அமைந்துள்ளன.
அரசியலமைப்பின் 13வது திருத்தச் சட்டத்துக்கு அப்பால் சென்று தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என்று 2009 ம் ஆண்டு யுத்தம் முடிந்த பின்னர் கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது இருக்கின்ற 13 வது திருத்தச் சட்டத்தையே தக்க வைத்துக் கொள்வதென்பது தமிழ் பேசும் தரப்பினர் எதிர்நோக்கியுள்ள பாரிய சவாலாக உள்ளது.
யுத்தம் முடிவடைந்து ஐந்து வருடங்கள் பூர்த்தியாகப் போகின்ற நிலையிலும் இதுவரை நாட்டின் சிறுபான்மை மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படவில்லை என்பதுடன் தீர்வை அடையக்கூடியவாறான நம்பிக்கை தரும் நகர்வுகள் கூட இடம்பெறவில்லை என்பதே யதார்த்தம்.
யுத்தம் முடிந்ததும் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இனி நாட்டில் சிறுபான்மை பெரும்பான்மை என எந்த மக்களும் இல்லை என்றும் இலங்கையர் என்ற மக்களே உள்ளனர் என்றும் கூறியிருந்தார்.
ஜனாதிபதியின் இந்தக் கூற்றானது நாட்டு மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்துவதாக இருந்தாலும் அதன் பின்னரான காலப்பகுதியில் நாட்டில் இடம்பெற்ற சில சம்பவங்கள் சிறுபான்மை மக்களை மீண்டும் விரக்தி நிலைக்கே கொண்டு சென்றுள்ளன.
அதாவது தமிழ் பேசும் மக்களுக்காக கொண்டு வரப்பட்ட 13வது திருத்தச் சட்டத்தின் அதிகாரங்களை குறைக்க முயற்சித்தல், சிறுபான்மை மத ஸ்தலங்கள் மீதான கெடுபிடிகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தமிழ் மக்களின் நம்பிக்கையை சீர் குலைப்பதாகவே அமைந்துள்ளன.
குறைந்த பட்சம் புதிதாக உருவாக்கப்பட்ட வட மாகாண சபையை கூட அரசியலமைப்பின் பிரகாரம் இயங்குவதற்கு முட்டுக்கட்டைகள் போடும் துரதிஷ்டவசமான நிலையே இன்று நாட்டில் காணப்படுகின்றது.
அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட கற்றறிந்த பாடங்களும் நல்லிணக்கமும் தொடர்பான ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதில் கூட சீரான செயற்பாட்டை காண முடியாதுள்ளது. நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளில் அரசியலமைப்பு ரீதியான மாற்றங்களை செய்வது தொடர்பான பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படாமலே உள்ளன.
நல்லிணக்க ஆணைக்குழுவின் முக்கியமான பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துமாறு உள்நாட்டிலும் சர்வதேச மட்டத்திலும் வலியுறுத்தப்பட்டு வருகின்றது. ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்றுவதற்கு அரசாங்கத்துக்கு முழுமையான ஆதரவு வழங்கப்படும் என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியும் தெரிவித்துள்ளது.
எனினும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அரசியலமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய பரிந்துரைகளை அமுல்படுத்துவதில் தொடர்ந்து இழுத்தடிப்புக்களையே காண முடிகின்றது. இதுவே தமிழ் மக்கள் மத்தியில் விரக்தி நிலையை தோற்றுவித்துள்ளது.
அத்துடன் சர்வதேச சமூகமும் தொடர்ந்து அழுத்தங்களை வெளியிட்டு வருகின்றது. எனினும் நம்பிக்கை வைக்கும் வகையிலான எந்தவகையான ஆரோக்கியமான செயற்பாடுகளும் இடம்பெறுவதாக தெரியவில்லை.
ஆளும் கட்சியினால் நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு வந்தால் மட்டுமே தீர்வு சாத்தியமாகும் என்று அரசாங்கம் கூறிவருகின்ற நிலையில் கூட்டமைப்போ அரசாங்கத்துடன் பேசி இணக்கப்பாட்டுக்கு வந்த பின்னரே தெரிவுக்குழுவுக்கு வருவது குறித்து சிந்திக்கலாம் என்று தெரிவித்து வருகின்றது. கடந்தகால வரலாற்றை திரும்பிப் பார்க்கையில் கூட்டமைப்பின் நிலைப்பாடு நியாயமானதாகவே தெரிகின்றது.
இந்நிலையிலேயே தற்போது ஜெனிவா விவகாரம் களத்துக்கு வந்துள்ளது. ஐக்கிய நாடுகள் அமைப்பின் மனித உரிமைப் பேரவையின் 25 வது கூட்டத் தொடரில் இலங்கை தொடர்பில் அமெரிக்கா பிரேரணை கொண்டு வருவது உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அதனை முறியடிப்பதற்கான இராஜதந்திர முயற்சிகளில் அரசாங்கம் ஈடுபட்டுவருகின்றது.
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்க செயலாளர் நிஷா பிஷ்வால் இலங்கையின் போருக்குப் பி்ன்னரான நிலைமையில் முன்னேற்றங்கள் போதுமானதாக இல்லை என்றும் இதனால் சர்வதேச சமூகம் பொறுமையிழந்து இருப்பதாகவும் கூறியிருந்தார்.
அத்துடன் எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவையின் கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராக பிரேரணை கொண்டு வரப்படும் என்றும் எனினும் பொருளாதார தடைகள் விதிக்கப்படுவது தொடர்பில் எந்த விடயமும் பேசப்படவில்லை என்றும் அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் குறிப்பிட்டிருந்தார்.
ஆனால் அமெரிக்க உதவி இராஜாங்க செயலரின் குற்றச்சாட்டை நிராகரித்துள்ள வெளிவிவகார அமைச்சு இலங்கையை மிகவும் மோசமான நாடாக நம்ப வைப்பதற்கும் அதன்மூலம் தண்டனை விதிக்கும் செயற்பாட்டை நியாயப்படுத்துவதற்குமான தனது விருப்பத்தை அமெரிக்கா பூர்த்தி செய்துள்ளமை தெளிவாகின்றது என்றும் விசனம் வெளியிட்டுள்ளது.
அதாவது தமிழ் மக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளுக்கும் மனித உரிமை மீறல் பிரச்சினைகளுக்கும் தீர்வு கண்டால் சர்வதேச அழுத்தங்களை தவிர்க்க முடியும் என்று வலியுறுத்தப்பட்டு வருகின்ற நிலையில் அரசாங்கமோ பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுப்பதனை விடுத்து சர்வதேச சமூகம் மீது விமர்சனங்களை முன்வைத்து வருகின்றது.
உதாரணமாக சர்வதேசத்துக்கும் உள்நாட்டுக்கும் அரசாங்கம் வழங்கியுள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றினாலேயே அனைத்து பிரச்சினைகளும் தீர்ந்துவிடும் என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சியும் வலியுறுத்தி வருகின்றது. இவ்வாறான நிலைமையில் எதிர்காலம் குறித்த நம்பிக்கை ஏற்படும் வகையில் எந்த செயற்பாடுகளும் இடம்பெறவில்லை.
எனவே மலர்ந்திருக்கும் 66வது சுதந்திர வருடத்திலாவது தமிழ் மக்கள் எதிர்கொள்கின்ற அரசியல் பிரச்சினைகளுக்கு ஆக்கபூர்வமான தீர்வு கிடைக்க வேண்டும் என்பதே அனைவரதும் எதிர்பார்ப்பாகும். இந்த விடயத்தில் தொடர்ந்து இழுத்தடிப்புக்களை மேற்கொண்டு வருவதானது தமிழ் மக்களை மேலும் விரக்திக்கு கொண்டு செல்லும் என்பதுடன் சர்வதேச ரீதியான அழுத்தங்கள் அதிகரிப்பதற்கும் வழி வகுக்கும்.
அதனால் இது தொடர்பாக அனைத்து தரப்புக்களும் தமது பொறுப்பு குறித்து சிந்திக்க வேண்டும். இவ்வாறு தமிழ் பேசும் மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்யக்கூடிய வகையிலான தீர்வு ஒன்றை பெற அரசாங்கம் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் தமது பங்களிப்பை உரிய முறையில் வழங்கவேண்டும் என்பதே தமிழ் மக்களின் எதிர்பார்ப்பாகவுள்ளது.
http://www.lankawin.com/show-RUmsyCTYMdgq4.html
Geen opmerkingen:
Een reactie posten