விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசாங்கத்துக்குமிடையில் நடந்த சமாதானப் பேச்சுவார்த்தைகள் குறித்து தனது அனுபவங்களை அவர் சர்வதேச ஊடகம் ஒன்றுடன் பகிர்ந்துகொண்டுள்ளார். சமாதான காலத்தின் தொடக்கத்தில் ஸ்ரீலங்காவின் சனாதிபதியாக இருந்த சந்திரிகா மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி சார்ந்த இலங்கை அரசாங்கத்துக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குமிடையில் நடந்த சமாதானப் பேச்சுவார்த்தைகளில் இரு தரப்பு தொடர்பாகவும் தான் சந்தித்த முக்கியமான அனுபவங்களை அவர் பகிர்ந்துள்ளதோடு வெள்ளைக்கொடி விவகாரம் குறித்தும் பேசியுள்ளார்.
இலங்கையில் நடந்த போரின் இறுதிக்கட்டத்தில், 2009ஆம் ஆண்டு மே 17ஆம் நாள், விடுதலைப் புலிகளின் சமாதான செயலக பணிப்பாளர் புலித்தேவனிடம் இருந்து அழைப்பு வந்த போது, தாம் நேரடியாக பேசவில்லை என்றும், வேறொரு நோர்வேஜிய சகாவே அவருடன் பேசியதாகவும் இதன்போது அவர் கூறியுள்ளார்.
”விடுதலைப் புலிகளின் மிகச் சிறந்த உறுப்பினர்களில் புலித்தேவனும் ஒருவர். விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவின் தலைவராக இருந்தார். போரின் இறுதி நாட்களில் சிறிலங்கா இராணுவத்தினரிடம் தாங்கள் சரணடைய விரும்புவதாகவும், அதற்கு எம்மால் உதவ முடியுமா என்றும் அவர் எம்மிடம் கேட்டார்.
ஆனால் நாம் வழங்கிய வாய்ப்புகளை உதறி விட்டு காலம் கடந்து உதவி கோருவதாக, புலித்தேவனுக்குப் பதிலளித்தோம். அன்று மே 17ஆம் நாள் அது நோர்வேயின் தேசிய நாள். அதனால் அந்தச் சந்தர்ப்பத்தை நினைவில் வைத்திருக்கிறேன். ஒஸ்லோவில் அணிவகுப்புக்காக நான் சென்று கொண்டிருந்தேன். புலித்தேவனிடம் இருந்து அழைப்பு வந்தது. நான் அவருடன் நேரடியாகப் பேசவில்லை. ஆனால், போர் குறித்து நாங்கள் தலையீடு செய்வதற்கு மிகவும் தாமதமாகி விட்டது என்று எனது சகா ஒருவர் அவருக்கு கூறினார்.
ஆனாலும் பெரியதொரு வெள்ளைக்கொடியை ஏந்திச் சென்று ஒலிபெருக்கிகள் மூலமோ வேறெந்த வழியிலோ உங்களின் நிலைப்பாட்டை சிறிலங்கா இராணுவத்துக்குத் தெரியப்படுத்துங்கள். எமது பக்கத்தில் இருந்து சிறிலங்கா தலைவர்களுக்கு சரணடைய விரும்பும் உங்களின் விருப்பம் தெரியப்படுத்தப்படும். இதுதான் எம்மால் கூறமுடியும் என்று அவரிடம் நாம் கூறினோம்.
புலித்தேவனுக்கு நாம் கூறியபடியே, அவர்களின் எண்ணத்தினை நாங்கள் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவின் ஆலோசகரான பசில் ராஜபக்சவுக்குத் தெரியப்படுத்தினோம். நாங்கள் மட்டுமல்ல, முக்கியமான சில தமிழர்கள் மூலமும் புலிகள் அதனைச் செய்தனர். சில இந்திய இடைத்தரகர்களும் சிறிலங்கா தலைமைக்கு தகவல் அனுப்பினார்கள் என்று நான் நினைக்கிறேன்.
பின்னர் நடேசனும், புலித்தேவனும் கொல்லப்பட்டு விட்டதாக எங்களுக்குத் தகவல் கிடைத்தது. அவர்களின் மரணம் நடந்த சரியான சூழ்நிலைகள் தொடர்பாக இன்னமும் தெரியவில்லை. அந்த நேரத்தில் அவர்கள் பிரபாகரனுடன் இருந்திருப்பார்கள் என்று நான் நினைக்கவில்லை. ஆனாலும், சரியாக எனக்குத் தெரியவில்லை. பிரபாகரன் எப்படிக் கொல்லப்பட்டார் என்றும் எனக்குத் தெரியவில்லை.
ஆனால், பிரபாகரனின் 12 வயது மகன், இராணுவத்தினரால் பிடிக்கப்பட்டு, பின்னர் அவர்களால் படுகொலை செய்யப்பட்டார் என்றே நாங்கள் மிகவும் வலுவாக சந்தேகிக்கிறோம். இது முற்றிலும், மிக மோசமான, தீய செயல், பொறுப்பற்ற செயல். இந்த விடயத்தில் சிறிலங்கா படையினர் மிகமிக நன்றாகச் செயற்படாதது துரதிஸ்டம்.
இறுதிப் போரில் புலிகளின் சரணடைதலை ஏன் ஏற்றுக் கொள்ளவில்லை? நீதிமன்றத்தில் நிறுத்தாமல், அவர்களை அதற்காகக் கொன்றார்கள்? என்றும் இதன்போது சொல்கெய்ம் கேள்வி எழுப்பியுள்ளார். இந்த விடயம் தற்பொழுது இறுதிப்போர் சார்ந்த கவனத்தினை ஈர்த்துள்ளது.
http://www.canadamirror.com/srilanka/04/136760
Geen opmerkingen:
Een reactie posten