இலங்கையில் நடந்த இனப்பிரச்னையை முடிவுக்குக் கொண்டுவர இந்த ஒப்பந்தம் போடப்பட்டதாகச் சொல்லப்பட்டது. ஆனால், உண்மையில் இந்த ஒப்பந்தம் இந்தியா மற்றும் இலங்கை அரசியல் நலனுக்கானது மட்டுமே.
இப்படி ஒரு ஒப்பந்தம் தயாராகியிருக்கிறது என்பது இலங்கை வாழ் தமிழர்கள் மற்றும் சிங்களவர்களுக்கு மட்டுமல்ல... விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கே கடைசி நிமிடத்தில்தான் தெரியவந்தது.
ராஜீவ் காந்தியிடமிருந்து அவசரமாக வந்த அழைப்பின் பேரில், பிரபாகரன் இந்தியாவுக்கு வந்தார். இங்கே ராஜீவ்காந்தியை சந்தித்த போதுதான், ஏற்கெனவே ராஜீவ்காந்தியும் ஜெயவர்த்தனேவும் கூடிப்பேசி இப்படி ஒரு ஒப்பந்தம் தயாரிக்கப்பட்டு தயாராக இருப்பதே அவருக்குத் தெரியவந்தது.
இந்த ஒப்பந்தம் முடிந்து இலங்கை திரும்பிய புலிகளின் தலைவர் பிரபாகரன் 04-08-1987 -ல் சுதுமலையில் ஒரு பொதுக்கூட்டம் நடத்தினார். இந்தப் பொதுக் கூட்டத்தில் மக்கள் முன்னிலையில் பேசிய பிரபாகரன்...
இந்த ஒப்பந்தத்தை நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. ஏனெனில், இந்த ஒப்பந்தத்தால் என் மக்களுக்கு ஒரு நல்லதும் நடக்காது என்பது எனக்குத் தெரியும். ஆனாலும் சில உறுதிகளை ராஜீவ்காந்தி கொடுத்துள்ளார். அதனடிப்படையில் நான் ஏற்றுக்கொண்டேன்.
ஏனென்றால், ராஜீவ்காந்தி நம்பிக்கைக்கு உரியவர். அவர் இலங்கையில் உள்ள தமிழ் மக்களுக்கு பாதுகாப்பு அளிப்பதாக உறுதி செய்தார். அதனால் அவர் கண்டிப்பாக தமிழ் மக்கள் மகிழ்ச்சியுடன் பாதுகாப்பாக வாழ வழி செய்வார் என்று நம்புகிறேன்.
அதனால் எனது ஆயுதங்களை அவரிடம் ஒப்படைக்க சம்மதம் தெரிவித்துள்ளேன். ஒருவேளை நாம் ஆயுதங்களை கொடுக்காவிட்டால், அது இந்தியாவை அவமதிக்கும் செயலாக இருக்கும். இனி நம் மக்களை பாதுகாக்கும் முழு பொறுப்பும் ராஜீவ் காந்திக்கு உள்ளது என்று கலங்கலான மனதுடன் பேசினார்.
ஆனால், ராஜீவ் காந்தி, பிரபாகரனுக்கு கொடுத்த உறுதியைக் காப்பாற்றவில்லை. அதன்பிறகான தமிழர் இனப்படுகொலை அனைத்து தமிழர்களும் அறிந்ததே. ராஜீவ்காந்தி-ஜெயவர்த்தனே ஒப்பந்தம் போடப்பட்டு 30 வருடங்கள் கடந்துவிட்டன.
ஆனால், தமிழர்கள் நலன் பற்றி ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு கோரிக்கைகூட இன்றுவரை நிறைவேற்றப்படவில்லை. பிரபாகரனும் சுதுமலையில் இதைத்தான் பேசினார்... 'இந்த ஒப்பந்தத்தால் என் மக்களுக்கு ஒரு நல்லதும் நடக்காது' என்று.
புலிகளின் தலைவர் பிரபாகரன், சுதுமலையில் ஆற்றிய அந்த உரை வரலாற்றின் இன்றைய தினத்தில் முக்கியத்துவம் வாய்ந்தது. இதை நினைவுகூரும் வகையில், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் அலுவலகமான தாயகத்தில் பத்திரிகையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
வைகோ நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கு முன்னதாக பிரபாகரன் மற்றும் புலிகளுக்கு மலர் தூவி, மாலையிட்டு வணங்கிய வைகோ பின்னர் பத்திரிகையாளர்களிடம் பேசத்தொடங்கினார். "ஒப்பந்தத்தை ஏற்க மனமில்லை. ஆனாலும் பிரபாகரன் ஏற்றார்.
காரணம்... 'நம் தாய் இந்தியா நம்மைக் காக்கும்' என்று அவர் தீவிரமாக நம்பினார். ஆயுதங்களையும் இந்தியாவிடம் ஒப்படைத்தார். அதனால்தான் இன்றைய தினத்தில், சுதுமலையில் மக்கள் முன்னிலையில் அவர் உரையாற்றினார்.
ஆனால், ராஜீவ்காந்தி செய்தது என்ன? நம்பிக்கையாகப் பேசி பிரபாகரனை அனுப்பிவிட்டு, தமிழர்களை துன்புறுத்தவும், இலங்கைக்கு ஆதரவு தரவும் இந்திய ராணுவத்தை அனுப்பினார். எவ்வளவு பெரிய நம்பிக்கைத் துரோகத்தை ராஜீவ் காந்தி செய்திருக்கிறார் என்பதை வரலாறு ஒருபோதும் மறக்காது.
பிரபாகரன் ஆயுதங்களை ஒப்படைத்த பின், 'இந்தியா நம்மைக் காக்கும்' என்று அமைதியாகவே இருந்தார். ஆனால், லெப்.கேணல் குமரப்பா, லெப்.கேணல் புலேந்திரன் உட்பட 12 புலிகளை சிங்கள கடற்படை சுற்றிவளைத்தபோது, அருகில் இந்தியக் கடற்படை நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது. சயனைட் சாப்பிட்டு அவர்கள் இறப்பதற்கு முக்கியக் காரணமே இந்தியாதான். இந்த செயல்தான் பிரபாகரனை மீண்டும் ஆயுதம் ஏந்த வைத்தது. அதனால் பிரபாகரனை, பயங்கரவாதி என்று அறிவித்தது இந்தியா.
விடுதலைப் புலிகளின் இயக்கத்தையும் தடை செய்யப்பட்ட இயக்கமாக அறிவித்தது. இந்தியா இதோடு நின்றுவிடவில்லை. உலகநாடுகள் அனைத்திலும் 'புலிகளைத் தடை செய்யப்பட்ட இயக்கமாக அறிவிக்க வேண்டும்' என்று கேட்டுக்கொண்டது.
இப்படி அனைத்து துரோகங்களையும் செய்துவிட்டு இன்று நல்லவனாகக் காட்டிக்கொண்டிருக்கிறது இந்தியா. ஆனால், 'விடுதலைப் புலிகள் இயக்கம் தடை செய்யப்பட வேண்டிய இயக்கம் அல்ல' என சமீபத்தில் ஐரோப்பிய யூனியன் தடையை நீக்கியுள்ளது.
இனி உலக நாடுகள் அனைத்தும் புலிகளை ஆதரிக்கும். என்னையும்கூட 'புலிகளில் ஒருவன்' என்று இந்தியா அறிவித்தது. அதனாலேயே இன்றும் என்னால் வெளிநாடுகளுக்குச் செல்ல முடியவில்லை. இதனால் சிறு அளவுகூட எனக்குக் கவலை இல்லை.
ஈழப்போர் முடிந்துவிட்டதாக இந்தியாவும், சிங்களவனும் நினைக்கவேண்டாம். என் தமிழ் மக்கள் சுதந்திரமாக வாழ வேண்டும். அதனால் ஈழப்போர் தொடரும்... இது இந்தியாவுக்கு ஒரு எச்சரிக்கை.!" என்று முழங்கினார்.
ராஜீவ்காந்தியின் மீதிருந்த நம்பிக்கையால் பிரபாகரன் ஆயுதங்களை ஒப்படைத்தார். ஆனால், அந்த நம்பிக்கையை ராஜீவ்காந்தி காப்பாற்றத் தவறிவிட்டார்.
ராஜீவ்காந்தி - ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ள ஒரு கோரிக்கையும் இன்றுவரை நிறைவேற்றப்படவில்லை.
தமிழினம் முழுக்க முழுக்க துரோகங்களால் வீழ்த்தப்பட்டது. அதற்கு மிக முக்கியக் காரணம் ராஜீவ்காந்தி - ஜெயவர்த்தனே ஒப்பந்தம்!
- Vikatan
http://www.tamilwin.com/politics/01/154195
Geen opmerkingen:
Een reactie posten