யாழ்.ஊடக அமையத்தில் நேற்றைய தினம் (03) பிற்பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
உங்கள் சொந்த இடமான துன்னாலைப் பகுதியில் பதற்றமான சூழல் நீடிக்கிறது. கைதுகள் தொடர்ந்த வண்ணமிருக்கிறது.
அங்குள்ள மக்கள் மிகவும் அச்சத்துடன் காணப்படுவதாகச் செய்திகள் வெளிவந்தவண்ணமுள்ளன. துன்னாலையில் இடம்பெற்று வரும் கைது நடவடிக்கைகளை நீங்கள் எவ்வாறு பார்க்கின்றீர்கள்? என ஊடகவியலாளரொருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இதன்போது தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,
துன்னாலைக் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் நாளாந்தம் கூலி வேலை செய்து உழைக்கும் மக்கள். அந்தப் பகுதி இளைஞர்களும் நாளாந்தம் கூலி வேலை செய்து தான் தங்கள் குடும்பங்களுக்கான வாழ்வாதாரத்தை ஈட்டி வருகிறார்கள்.
இந்த வேளையில் சரியானவர்களை இனங்காணாமல் அவர்களுக்காகக் குரல் கொடுப்பதற்கு யாருமே இல்லை எனும் துணிச்சலில் அப்பாவி இளைஞர்களைக் கைது செய்து சிறையில் அடைத்து வைத்திருப்பதும், விசாரணை என்ற பேரில் தடுத்து வைத்திருப்பதும் அவர்களுடைய வாழ்வை அழிப்பதற்கே வழிவகுக்கும் எனவும் செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
சட்ட விரோதமாக இடம்பெறுகின்ற அனைத்துச் செயற்பாடுகளும் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட வேண்டும்.
தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்பதில் எந்தவிதமான மாற்றுக் கருத்துக்களுமில்லை. ஆனால், சட்ட விரோதமான செயற்பாடுகள் இடம்பெறுவதைத் தடுப்பதில் பொலிஸார் எவ்வளவு தூரம் நேர்மையாகச் செயற்படுகின்றார்கள் என்ற கேள்வி எங்கள் மக்கள் மட்டத்தில் இருந்து கொண்டேயிருக்கின்றன.
குற்றவாளிகளைக் கைது செய்தல் என்ற பேரில் அப்பாவி இளைஞர்களைச் சகட்டு மேனிக்காகக் கைது செய்தலும், அவர்கள் மீது தேவையற்ற குற்றச்சாட்டுக்களைச் சுமத்துவதும், அவர்களை நீண்ட நாட்களாகச் சிறையில் அடைத்து வைத்திருப்பதும் அந்தக் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை அழிப்பதற்கே வழிவகுக்கும்.
அண்மையில் கொலன்னாவையில் இடம்பெற்ற போராட்டமொன்றின் போது சட்டத்தை மீறிச் செயற்பட்டார்கள் எனக் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் மிகவும் மனிதாபிமான முறையிலிலேயே நடாத்தப்பட்டிருக்கின்றார்கள்.
கைது செய்யப்பட்டு எச்சரிக்கப்பட்டுள்ளார்கள். கைது செய்யப்பட்டவுடன் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டிருக்கின்றார்கள்.
பின்னர் குறித்த நபர்கள் அனைவரும் நீதீமன்றத்தில் சரணடைய வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ள நிலையில் அவர்கள் சரணடையாத சூழ் நிலையில் கைது செய்யுமாறு உத்தரவிடப்பட்டது.
இதன் பின்னர் அவர்கள் மீண்டும் சரணடைந்த போது அவர்கள் அனைவரும் பிணையில் செல்வதற்கு அனுமதிக்கப்பட்டிருக்கின்றார்கள்.
இந்தவிடயத்தில் தென்னிலங்கையைச் சேர்ந்தவர்களுக்கு ஒரு விதமான நீதியும், வடக்கு கிழக்கில் வாழ்கின்ற தமிழர்களுக்கு இன்னொரு விதமான நீதிமுறையும் கையாளப்படுவது ஏற்றுக் கொள்ளப்பட முடியாதவொரு விடயம்.
இந்த விடயத்தில் அனைத்து அதிகாரங்களும் பொலிஸாரின் கைகளில் காணப்படுவதால் நாங்கள் வெறுமனே கண்டனத்தைத் தெரிவிப்பதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை.
எமது மக்களை நெருக்கடியிலிருந்து பாதுகாப்பதற்கு உதவி செய்ய முடியாத நிலையே தொடர்ந்தும் நீடிக்கின்றது எனவும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராஜா கஜேந்திரன் ஆதங்கம் வெளியிட்டுள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten