மகாலிங்கம் சசிக்குமார் அல்லது சுவிஸ்குமார் 2015.05.08 திகதியில் இருந்து 2015.05.12 ஆம் திகதி வரை என்னுடனேயே கொழும்பில் ஏஞ்சல் லொட்ஜில் தங்கியிருந்தார்.
எங்களுக்கிடையிலான குடும்ப உறவு நன்றாகவே இருந்தது என சுவிஸ்குமாரின் மனைவியான மகாலக்ஷ்மி வித்தியா படுகொலை வழக்கின் ட்ரயல் அட்பார் நீதிமன்ற வழக்கு விசாரணையில் சாட்சியமளித்திருந்தார்.
குறித்த மாணவியின் கூட்டு பாலியல் வல்லுறவு படுகொலை வழக்கானது யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் அமைக்கப்பட்டுள்ள மூன்று தமிழ் மொழி பேசும் மேல் நீதிமன்ற நீதிபதிகளான பாலேந்திரன் சசிமகேந்திரன் தலைமையிலான அன்னலிங்கம் பிரேம்சங்கர், மாணிக்கவாசகர் இளஞ்செழியன் ஆகியோர் அடங்கிய ட்ரயல்அட்பார் நீதாய விளக்க நீதிமன்றில் தொடர் விசாரணையாக இடம்பெற்று வருகின்றது.
இவ்வழக்கில் வழக்குத் தொடுநர்தரப்பு சாட்சிப் பதிவுகள் நிறைவடைந்ததையடுத்து நேற்று செவ்வாய்க்கிழமை தொடர் வழக்கு விசாரணையின் பதினைந்தாவது நாளாக எதிரிகள் தரப்பு சாட்சிப் பதிவிற்காக மன்று கூடியிருந்தது. இதன்படி இவ்வழக்கின் ஒன்பதாவது எதிரியான மகாலிங்கம் சசிக்குமார் சார்பில் அவரது மனைவியான சசிக்குமார் மகாலக்ஷ்மி சாட்சியம் வழங்க அழைக்கப்பட்டிருந்தார்.
இவர் சாட்சிக்கூண்டில் நின்று சத்தியப்பிரமாணம் செய்து தனது சாட்சியத்தை வழங்கியிருந்தார். இவரது சாட்சியத்தை ஒன்பதாவது எதிரி சார்பு சட்டத்தரணியான சின்னையா கேதீஸ்வரன் நெறிப்படுத்தும்போது அவர் அளித்த சாட்சியத்தில்,
நான் சசிக்குமாரை 2012 ஆம் ஆண்டு திருமணம் செய்திருந்தேன். அவர் வருடத்திற்கு ஒரு முறை நாட்டிற்கு வருவார். அந்தவகையில் 2015 ஆம் ஆண்டு நான்காம் மாதம் ஐந்தாம் திகதி இலங்கை வந்திருந்தார். அவ்வாறு வந்தவர் ஐந்தாம்மாதம் ஏழாம் திகதி திரும்பி சுவிட்ஸர்லாந்து போக இருந்தும் ஆனால் போயிருக்கவில்லை.
அவர் 2015.05.08 திகதியில் இருந்து 2015.05.12 ஆம் திகதி வரை என்னுடனேயே வெள்ளவத்தை ஏஞ்சல் லொட்ஜில் தங்கியிருந்தார். அச்சமயத்தில் எங்களுடன் சசிந்திரன் துசாந்தன் சுவிஸ்கரன் ஆகியோரும் இருந்தார்கள் என்றார்.
இதனைத் தொடர்ந்து இவரது சாட்சியத்தை சட்டமா அதிபர் திணைக்கள பிரதிசொலிசிட்டர் ஜென்ரல் குமார்ரட்ணம் குறுக்கு விசாரணை செய்யும்போது,
சசிக்குமார் 2015.05.08 இலிருந்து 2015.05.12 ஆம் திகதிவரை தன்னுடனேயே இருந்தார் என அவரது மனைவி சாட்சியமளித்தார். இதன்போது பிரதிசொலிசிட்டர் ஜெனரல் அதற்கு சாட்சியம் ஏதும் இருக்கின்றதா என வினவியபோது அதற்கு சாட்சியம் எதுவும் இல்லை எனவும் அவர் சாட்சியளித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து குறித்த சாட்சியை 9 ஆவது எதிர்சார்பு சட்டத்தரணி மீள் விசாரணை செய்யும்போது, தனக்கும் தனது கணவருக்கும் இடையில் நல்ல சந்தோசமான உறவே காணப்பட்டிருந்ததாக சசிக்குமாரின் மனைவியான மகாலக்ஷ்மி சாட்சியமளித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
இதேவேளை இவ்வழக்கில் ஐந்தாம் எதிரிசார்பாக சாட்சியமளிப்பதற்கு சட்ட வைத்திய அதிகாரி மயூரதன் அழைக்கப்பட்டிருந்தார்.
அவரிடம் 5 ஆம் எதிரி சார்பு சட்டத்தரணியான ரகுபதி 5 ஆம் எதிரியை பரிசோதனை செய்யும் போது அவரிடம் ஏதாவது உரையாடினீரா எனக் கேட்கப்பட்டது. அதற்கு சாட்சி சாதாரணமாக எம்மிடம் பரிசோதனைக்காக வருபவர்களிடம் உரையாடுவதைபோன்றே அவருடனும் உரையாடியிருந்தேன் என சாட்சியமளித்திருந்தார்.
இதேபோன்று 7ஆம் எதிரி சாட்சியமளிக்கும் போது தான் 2015.05.12 ஆம் திகதி கொழும்பில் காலை 6 மணியில் இருந்து மாலை 6 மணி வரை எங்கெங்கே இருந்தேன் என சாட்சியமளித்திருந்தார். எனினும் அவர் கூறிய அவ்விடயங்கள் குற்றப்புலனாய்வுப்பிரிவின் குறித்த எதிரியின் வாக்குமூலத்தில் காணப்பட்டிருக்கவில்லை.
இது தொடர்பாக குற்றப்புலனாய்வுப் பிரிவின் உதவிப்பொலிஸ் அத்தியட்சகர் திஷேரா வாக்குமூலம் தொடர்பில் மறுதலிப்பு சாட்சியம் வழங்குவதற்காக மன்றிற்கு அழைக்கப்பட்டு அவரது சாட்சியம் பதிவு செய்யப்பட்டது.
இதன் படி அவரது சாட்சியத்தில் 7 ஆம் எதிரி குறிப்பிடுவது போன்று 12 ஆம் திகதி காலை 6 மணியில் இருந்து மாலை 6 மணி வரை அவர் எங்கெங்கு இருந்தார் என்று விசேடமாக குறிப்பிட்டு வாக்குமூலம் பதிவு செய்யப்பட வில்லை என வாக்குமூல பதிவேட்டு புத்தகத்தைப் பார்த்து சாட்சியமளித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
http://www.jvpnews.com/srilanka/04/138442
Geen opmerkingen:
Een reactie posten