1993இன் ஆரம்ப காலகட்டத்தில் இயக்கத்தில் பெரியதொரு அலையாக மாத்தையா மீதான துரோக குற்றச்சாட்டு வெளிக்கிளம்பியது. மூத்த போராளிகளிடையே அந்த விடயம் மிகுந்த அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது. பலர் அழுதார்கள், இன்னும் சிலர் ஆத்திரப்பட்டார்கள். இயக்கத்தின் தலைவர் இந்தியாவில் நீண்டகாலம் தங்கியிருந்த 1980களின் நடுப்பகுதியில், வன்னிப் பிரதேசத்தில் இயக்கத்தைக் கட்டுக் கோப்புடன் வளர்த்ததில் மிக முக்கிய பங்கு வகித்தவர் மாத்தையா என பல மூத்த பெண் போராளிகள் சொல்லக் கேள்விப்பட்டிருக்கேன். அத்துடன், வன்னியில் அதிகமான பெண்களை புலிகள் இயக்கத்தினுள் உள்வாங்கிப் பயிற்சிக்கு அனுப்பியவரும் அவர்தான் எனவும், அப்படி உள்வாங்கப்பட்ட மூத்த பெண் போராளிகள் கூறியிருந்தார்கள். அது மட்டுமல்லாமல் இந்திய இராணுவத்துடனான போரில் புலிகள் ஈடுபடத் தொடங்கிய ஆரம்ப நாட்களில் வன்னிப் பகுதியில் பல தாக்குதலை்களை வழிநடத்தியவரும், அந்த தாக்குதல்களில் ஈடுபட்ட பெண் போராளிகளின் அணிகளை வழி நடத்தியவரும் மாத்தையா தான் என எமது பயிற்சி ஆசிரியரும் பல தடவைகள் கூறியிருக்கிறார். இயக்கத்தில் அனுபவம் குறைந்த ஆரம்ப கட்ட ஆரசியல் போராளியாக இருந்த எனது தனிப்பட்ட உணர்வுகளில் மாத்தையா விவகாரம் ஆழமான தாக்கங்களை ஏற்படுத்தாது விட்டாலும், இயக்கத்தில் பிரதித் தலைவராக இருந்தவொருவர் மீது ஏற்பட்டிருந்த இந்தக் களங்கம் அதிர்ச்சியாக இருந்தது. நான் மாத்தையாவை இரண்டொரு தடவைகள் மாத்திரம் நேரில் சந்தித்திருந்தேன். வடமராட்சியில் அரசியல் போராளிகளுக்கு நடத்தப்பட்ட ஒரு பேச்சுப் பயிற்சி வகுப்பின் போது குலுக்கல் மூலம் தெரிவு செய்யப்படும் தலைப்புகளில் உடனடியாகப் பேச வேண்டும். எனக்கு தரப்பட்ட தலைப்பில் நான் பேசி முடித்த போது சிரித்தப்படி மாத்தையா அண்ணர் தனது கரங்களைத் தட்டி என்னைப் பாராட்டிய நினைவு மாத்திரம் இருந்தது. மானிப்பாயில் அமைந்திருந்த அவரது முகாம், தளபதி சொர்ணத்தின் அணியினரால் சுற்றி வளைக்கப்பட்டு அவர் கைது செய்யப்பட்ட செய்திகளை பொது மக்களும் அறிந்திருந்தனர். அந்தக் காலகட்டத்தில் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்குள் ஏற்பட்டிருந்த இந்தக் குழப்பம் மக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டது. "மாத்தையாவுக்கு என்ன நடந்தது?" என்ற கேள்வி திரும்பும் திசையெல்லாம் எம்மை நோக்கி மக்களால் கேட்கப்பட்டது. எங்களை போன்ற இளநிலை போராளிகளுக்கு எதுவுமே புரியாத குழப்பம் நிலையாகவே இருந்தது. ஆனால் அவர் தலைவருக்கு துரோகம் செய்துவிட்டார். இந்திய "றோ" உளவு நிறுவனத்தின் கையாளாக மாறியதுடன் தலைவரைக் கொலை செய்து விட்டு, இயக்கத்தின் தலைவராக செயற்படுவதற்கு முயற்சித்தார் என எமது போராளிகள் எமக்கு விளக்கம் தந்திருந்தனர். இயக்கத்தின் இரகசியங்களை பற்றிக் கதைப்பதும், எமக்கு தரப்பிட்டிருந்த வேலைகளுக் அப்பாற்பட்ட விடயங்களை ஆராய்வதும் அமைப்புக்குள் போராளிகள் செய்யத் தகாத காரியங்களாக இருந்தன. இயக்கத்தின் இரகசியங்களை வெளியே சொல்வோருக்கு நூறு கசையடிகளும், கேட்பவருக்கு ஐநுறு கசையடிகளும் கொடுக்கப்படும் என்பது பரவலாக இருந்த கருத்தாகும். எனவே, போராளிகள் கூடியிருந்து தேவையற்ற கதைகளை பேசுவதற்கு பயந்தனர். புலிகள் அரசியல் பிரிவை ஒரு கட்சிக்குரிய கட்டமைப்புகளுடன் மாத்தையா ஒழுங்கு படுத்தியிருந்தார். விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணி, மகளிர் முன்னணி, என்ற பெயர்களுடன் மக்கள் மத்தியில் இணக்க சபை போன்ற அமைப்புகளும் இயங்கிக் கொண்டிருந்தன. போராளிகளின் முகாம்களில் தலைவரும், மாத்தையாவும் சேர்ந்து நிற்கும் படங்கள் பெரிதாக தொங்கிக் கொண்டிருந்த காலம் அது. இயக்கத்தில் சில போராளிகளை "மாத்தையாவின் ஆட்கள்" என்று குறிப்பிட்டு பேசும் பழக்கமும் இருந்தது. பெண் போராளிகள் கூட மாத்தையா மீது மிகுந்த மதிப்பும் அளவற்ற விசுவாசமும் கொண்டவர்கள் பலர் இருந்தனர். மாத்தையா கைது நடைபெற்றதன் பின்பு, அவரால் ஏற்படுத்தப்பட்டிருந்த அனைத்து அமைப்புகளிலும் புதிய மாற்றங்கள் ஏற்பட்டன. "மக்கள் முன்னணி" யாக இருந்த புலிகளின் அரசியல் பிரிவு "அரசியல் துறையாக" ஆக்கப்பட்டது. இதன் பொறுப்பாளராக அதுவரை யாழ்ப்பாண மாவட்ட சிறப்பு தளபதியாக செயற்பட்டு வந்த தினேஸ் (தமிழசெல்வன்) நியமிக்கப்பட்டார். மாத்தையாவின் அரசியல் வேலைகள் அனைத்தும் முழுமையாக வேறு வடிவங்களை எடுத்தன. அவரால் உருவாக்கப்பட்டிருந்த "கல்விக்குழு"வைச் சேர்ந்த போராளிகளின் ஐம்பதுக்கும்மேற்பட்டவர்கள் வேறு வேலைகளுக்கு அனுப்பட்டனர். இயக்கத்திற்குள் "மௌனமான குழப்பம்" அனைவரது மனங்களுக்குள்ளும் அலை மோதிக் கொண்டிருந்த காலமாக அது இருந்தது. |
10 Sep 2016 http://lankaroad.net/index.php?subaction=showfull&id=1473497961&archive=&start_from=&ucat=1& |
தொலைக்காட்சி
தொலைக்காட்சி
maandag 12 september 2016
மாத்தையா எங்கே? மக்களின் கேள்வி..... ஒரு கூர்வாளின் நிழலில் பதிவு!
Abonneren op:
Reacties posten (Atom)
Geen opmerkingen:
Een reactie posten