தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 27 september 2016

அவுஸ்திரேலிய பிரஜா உரிமை உள்ளவர்களின் பெற்றோருக்கு அரிய வாய்ப்பு!

அவுஸ்திரேலிய பிரதமர் மல்ஹொம் டேர்ன்பல்லின் கூட்டமைப்பு அரசாங்கமானது தனது தேர்தல் கால வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் பெற்றோருக்கான புதிய தற்காலிக ஏற்பாதரவு விசாவை அறிமுகப்படுத்தவுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த பெற்றோருக்கான தற்காலிக ஏற்பாதரவு விசாவானது அவுஸ்திரேலிய பிரஜாவுரிமை பெற்றவர்கள் தமது பெற்றோருக்கு அவுஸ்திரேலியாவில் 5 வருடங்களுக்கு மேல் தங்கியிருக்க தமது ஏற்பாதரவை வழங்க முடியும்.
இந்நிலையில் அவுஸ்திரேலிய குடிவரவு மற்றும் எல்லைப் பாதுகாப்பு உதவி அமைச்சர் அலெக்ஸ் ஹவ்க், ஒரு தொகை சமூக ஆலோசனைகள் தொடர்பில் அறிவிப்புச் செய்ததுடன் புதிய தற்காலிக விசாவின் இறுதி வடிவமைப்பு மற்றும் அதனை நடைமுறைப்படுத்துவதற்கு கோரப்படும் சட்ட மாற்றங்கள் என்பனவற்றுக்கு அரசாங்கத்திற்கு உதவும் வகையில் பொதுமக்களிடமிருந்தான சமர்ப்பிப்புகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இது தொடர்பில் அலெக்ஸ் ஹவ்க் தெரிவிக்கையில்,
பெற்றோர்களிடமிருந்து பிள்ளைகள் பிரிக்கப்படுவது மற்றும் பாட்டா, பாட்டிகளிடமிருந்து பேரப்பிள்ளைகள் பிரிக்கப்படுவது என்பனவற்றினூடாக அவுஸ்திரேலிய குடியேற்ற சமூகங்களில் பல எதிர்கொண்டுள்ள குறிப்பிடத்தக்க அழுத்தங்களை டேர்ன்பல்லின் அரசாங்கம் இனம்கண்டுள்ளது என்று கூறினார்.
குடும்பங்கள் மீள இணைந்து பொழுதைக் கழிக்கும் அதேசமயம் நாம் முன்னெடுக்கும் வழிமுறை அவுஸ்திரேலிய சுகாதார கவனிப்பு முறைமைக்கு சுமையாக அமையாதிருப்பதையும் உறுதிப்படுத்தவுள்ளோம்.
அவுஸ்திரேலியாவிலுள்ள தமது குடும்பத்தினருடன் பெற்றோர்கள் நேரத்தைச் செலவிடுவதற்கான ஏற்பாடுகளை அபிவிருத்தி செய்யும் அதேசமயம், அவுஸ்திரேலியாவில் வரி செலுத்துபவர்களின் செலவினத்தைக் குறைப்பது அண்மைய தேர்தலில் இரு பிரதான கட்சிகளதும் முக்கிய நோக்கமாக இருந்தது.
இந்நிலையில் பெற்றோர்களுக்கான தற்காலிக ஏற்பாதரவு விசாவின் வடிவமைப்பில் சரியான சமநிலையை நாம் பேணுவது முக்கியமாகவுள்ளது.இத்தகைய விசாவின் அறிமுகமானது தற்போது நடைமுறையிலுள்ள பெற்றோர்களுக்கான விசா தெரிவுகளிலிருந்து குறிப்பிடத்தக்க நகர்வாகவுள்ளது.
இந்த விசாக்களை வடிவமைப்பதற்கு உதவுவதற்கான கருத்துரை வழங்கும் செயற்கிரமத்தில் பங்கேற்கவும் பின்னூட்டலை வழங்கவும் குடியேற்ற சமூகங்களை நான் ஊக்குவிக்கிறேன என அலெக்ஸ் ஹவ்க் தெரிவித்தார்.
இந்த குடியேற்ற குடும்பங்களுக்கான தேர்தல் கால முக்கிய வாக்குறுதியானது டேர்ன்பல்லின் அரசாங்கத்தால் எதிர்வரும் 2017ம் ஆண்டு அமுல்படுத்தப்படவுள்ளது என அவர் மேலும் கூறினார்.
பெற்றோர்களுக்கான தற்காலிக விசாவின் இறுதி வடிவமைப்பைப் பாதிக்கக் கூடிய ஒருதொகை விடயங்கள் தொடர்பில் சமூகத்தினரால் முன்வைக்கப்படும் சமர்ப்பிப்புகளை டேர்ன்பல்லின் அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது என அலெக்ஸ் ஹவ்க் கூறினார்.
மேற்படி விசாவுக்கான வடிவமைப்பு பிரச்சினைகளை கொண்ட கருத்துரை ஆவணம் அவுஸ்திரேலிய அரசாங்கத்தால் கடந்த 23ம் திகதி வெளியிடப்பட்டுள்ளது.
அந்த கலந்துரையாடல் ஆவணத்தை http://www.border.gov.au என்ற இணையத்தள முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.
மேற்படி பொதுமக்கள் தமது கருத்துகளை உள்ளடக்கிய சமர்ப்பிப்புகளை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 31ம் திகதி திங்கட்கிழமை நள்ளிரவு வரை temporary.parent.visa@border.gov.au என்ற மின் அஞ்சல் முகவரியினூடாக மேற்கொள்ள முடியும்.
http://www.tamilwin.com/australia/01/118970

Geen opmerkingen:

Een reactie posten