தமிழ் மக்கள் மீண்டும் ஏமாற்றப்பட்டுள்ளார்கள் என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னனி (ஈ.பி.ஆர்.எல்.எப்) தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
அவர் நேற்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
தமிழ் மக்கள் தமது இனப்பிரச்சினைக்கான தீர்வாக அமையும் என்று எதிர்பார்க்கப்பட்ட புதிய அரசியல் சாசனம் ஒன்றிற்கான இடைக்கால அறிக்கை கடந்த 21.09.2017 அன்று பிரதம மந்திரி அவர்களால் நாடாளுமன்றத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 10ஆம் திகதி வெளியிடப்படும் என்று கூறப்பட்ட இந்த அறிக்கையானது ஏறத்தாழ ஒரு வருடத்திற்குப் பின்னர் இப்பொழுது வெளியிடப்பட்டுள்ளது. இந்த இடைக்கால அறிக்கையானது தமிழ் மக்களின் பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வைக் கொண்டுவரும் என்றும் இதன் மூலம் தமிழ் மக்களின் உரிமைகள் எட்டப்படும் என்றும் இதனை யாரும் குழப்ப வேண்டாம் என்றும் திரு சம்பந்தன் சுமந்திரன் போன்றவர்கள் தொடர்ச்சியாகக் குரல்கொடுத்து வந்தனர்.
இந்த அரசியல் சாசனசபையின் உபகுழுக்கள் தங்களது அறிக்கைகளை ஏற்கனவே வழிகாட்டல் குழுவிடம் சமர்ப்பித்துள்ளன. வழிநடத்தல் குழுவில் 51 பேர் அங்கத்தவர்களாக உள்ளனர். இதில் திரு.சம்பந்தன், சுமந்திரன் மற்றும் டக்ளஸ் தேவானந்தா போன்றோரும் அடங்குவர்.
இந்த வழிநடத்தல் குழுவில் ஐக்கியதேசியக் கட்சி, சிறிலங்கா சுதந்திரக் கட்சி மைத்திரி அணி, பொது எதிரணி என்று சொல்லப்படுகின்ற மகிந்த ராஜபக்ச அணி, (எல்.எஸ்.எஸ்.பி, சிபி, விமல்வீரவன்சவின் தேசிய சுதந்திர முன்னணி, தினேஷ் குணவர்தன தலைமையிலான கட்சி, மகிந்த தலைமையிலான சிறிலங்கா சுதந்திரக் கட்சியினர்) ஜனதா விமுக்தி பெரமுன (மக்கள் விடுதலை முன்னணி), ஹெல உருமய, முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தமிழ் முற்போக்கு முன்னணி, ஈபிடிபி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போன்ற பல கட்சிகள் இந்த வழிநடத்தல் குழுவில் அங்கம் வகிக்கின்றன.
இணக்கப்பாடுகளற்ற இடைக்கால அறிக்கை
வெளியிடப்பட்ட இடைக்கால அறிக்கையானது வழிநடத்தல் குழுவின் முழுமையான ஒப்புதலுடன் வெளியிடப்பட்ட அறிக்கையல்ல. இந்த வழிநடத்தல்குழு 73 தடவைகள் கூடி பேசியும்கூட என்னென்ன விடயங்களில் இணக்கப்பாடு எட்டப்பட்டது என்பது பற்றிய ஒருவிடயமும் குறிப்பிடப்படவில்லை. பொதுவான சில விடயங்கள் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகக் கூறப்பட்டிருந்தாலும்கூட, இந்த கட்சிகள் இடைக்கால அறிக்கையில் ஏற்றுக்கொண்ட பலவிடயங்கள் அவர்களால் சமர்ப்பிக்கப்பட்ட பின்னிணைப்புக்களில் மறுதலிக்கப்பட்டுள்ளது.
அரசியல் சாசன சபையில் அங்கம் வகித்த திருவாளர்கள் சம்பந்தன் சுமந்திரன் போன்றவர்கள்கூட தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் கலந்துரையாடாமல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் கையெழுத்திட்டு ஒரு பின்னிணைப்பைக் கொடுத்திருக்கிறார்கள். அந்த பின்னிணைப்பில் வடக்கு-கிழக்கு இணைக்கப்படவேண்டும் என்றும் சமஷ்டி அரசியல் அமைப்புமுறை உருவாக்கப்படவேண்டும் என்ற தமிழ் மக்களுடைய அடிப்படையான விடயங்களையும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
வழிநடத்தல் குழு 73முறை கூடிப்பேசியும்கூட கூட்டமைப்பின் அடிப்படைக் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டதன் காரணமாகவே சம்பந்தனும் ஒரு பின்னிணைப்பைக் கொடுக்க வேண்டிய நிலை தோன்றியிருக்கிறது என்பதையும் நாங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
ஆகவே இந்த இடைக்கால அறிக்கை என்பது புதிய அரசியல் சாசனம் ஒன்றை உருவாக்குவதற்கான அடிப்படை விடயங்களைக் கொண்டிருக்கின்றதா என்ற கேள்வி எழுகின்றது.
ஏறத்தாழ ஒன்றரை வருடங்களுக்கு மேலாக 73 முறை விவாதிக்கப்பட்டு மக்கள் கருத்துக்களும் கேட்கப்பட்டு உபகுழுக்களின் அறிக்கைகளும் கையளிக்கப்பட்டு அதன் பின்னர் உருவாக்கப்பட்டுள்ள இந்த இடைக்கால அறிக்கையானது எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்படாத பல்வேறுபட்ட பின்னிணைப்புக்களையும் கொண்ட ஒரு அறிக்கையாகவே வெளிவந்திருக்கிறது.
இந்த அறிக்கையில் கட்சிகளுக்கிடையிலான இணக்கப்பாடுகள் என்று எதனையும் பார்க்கமுடியவில்லை.
கருத்துக்கள் ஏற்றுக்கொள்ளப்படவில்லை
இந்த அரசியல் சாசனசபை உருவாவதற்கு முன்பாக அதாவது 2015 பொதுத்தேர்தல் முடிவுற்று புதிய அரசு பதவி ஏற்றவுடன், அரசிற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையில் முக்கியமான விடயங்களான வடக்கு-கிழக்கு இணைப்பு, சமஷ்டி அரசியலமைப்பு முறை, சுயநிர்ணய உரிமை, முழுமையான அதிகாரப் பகிர்வு மற்றும் அன்றாடப் பிரச்சினைகளான அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான விவகாரங்கள், மக்களின் முழுமையான மீள்குடியேற்றம், இராணுவம் அபகரித்த காணிகளை மீள ஒப்படைத்தல் போன்ற விடயங்களில் பேச்சுவார்த்தைகளை நடாத்தி, காத்திரமான தீர்வுகளைப் பெற்றுக்கொண்டதன் பின்னர், அரசியல் சாசன சபையில் அங்கம் வகிப்பதானது காத்திரமான முடிவுகளை எடுக்க உதவியாக இருக்கும் என்பதை ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி வலியுறுத்தியிருந்தது.
ஆனால் அத்தகைய பேச்சுவார்த்தைகள் எதுவும் நடைபெறவில்லை. மாறாக, மிகவும் இரகசியமான முறையில் இங்கிலாந்திலும் சிங்கப்பூரிலும் இலங்கை வெளிவிவகார அமைச்சருடன் ஒரு சில புலம்பெயர் குழுக்களும் தமிழரசுக் கட்சியினரும் இணைந்து பேச்சுவார்த்தைகளை நடாத்தியதாக அறிந்தோம். இதேபோன்று, இந்த அரசியல் வழிநடத்தல் குழுவால் உருவாக்கப்பட்ட இடைக்கால அறிக்கையை சகல கட்சிகளும் விவாதத்திற்கு உட்படுத்தியும்கூட, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அதனை விவாதிப்பதற்கு தமிழரசுக் கட்சி உடன்படவில்லை. அவ்வளவுதூரம் வெளிப்படைத்தன்மையற்ற முறையிலும், இரகசியமான முறையிலும் இந்த விடயங்கள் திருவாளர்கள் சம்பந்தன், சுமந்திரன் போன்றோரால் கையாளப்பட்டது.
புதிய அரசியல் சாசனமானது மூன்று முக்கிய விடயங்களை உள்ளடக்கியதாக இருக்கும் என்று கூறப்பட்டது.
1. நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி முறைமையை ஒழித்தல்
2. விகிதாசார பிரதிநிதித்துவ தேர்தல் முறையை மாற்றி மாற்றுத்தேர்தல் முறை ஒன்றை உருவாக்குதல்.
3. அதிகார பகிர்வு தொடர்பான விடயங்களைக் கையாளுதல்
மேற்கண்ட மூன்று விடயங்களையும் உள்ளடக்கியதாகவே புதிய அரசியல் யாப்பு இருக்கும் என்று பேசப்பட்டது.
ஜனாதிபதிமுறை ஒழிப்பு தொடர்பாக புதிய ஜனாதிபதியான மைத்திரிபால சிறிசேன
அவர்களும் ஜனாதிபதிமுறை ஒழிக்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியைக் கொடுத்திருந்தார். திரு மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாகத் தேர்வுசெய்யப்பட்டு அதிகாரத்திற்கு வந்ததும் நூறுநாள் வேலைத்திட்டத்தின் ஊடாக ஜனாதிபதிக்கு உரித்தான பல அதிகாரங்கள் பாராளுமன்றத்திற்குக் கையளிக்கப்பட்டது. அதன் பின்னர் 19ஆவது திருத்தமும் ஜனாதிபதிக்கான பல்வேறுபட்ட அதிகாரங்களை நாடாளுமன்றத்திற்கு வழங்கியது.
இப்பொழுது சிங்கள கட்சிகள் மத்தியில் ஜனாதிபதியின் அதிகாரங்கள் இதற்கு மேலும் குறைக்கப்பட வேண்டிய அவசியமில்லை என்ற அபிப்பிராயம் பரவலாக நிலவுவதுடன், தற்போதைய ஜனாதிபதி முறைமை தொடரவேண்டும் என்ற கருத்தும் நிலவுகிறது.
விகிதாசார தேர்தல்முறைமையை மாற்றுவது தொடர்பாக 60:40 என்ற வகையில் உள்ளுராட்சி தேர்தல்களை நடாத்துவதற்கும், 50:50 என்ற அடிப்படையில் மாகாணசபை தேர்தலை நடாத்துவதற்கும் சட்டங்கள் இயற்றப்பட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒத்துழைப்புடன் இவை சட்டங்களாக்கப்பட்டுள்ளது. (மாகாணசபை தேர்தல் முறைமை தொடர்பில் நடைபெற்ற வாக்கெடுப்பில் ஈபிஆர்எல்எவ் மற்றும் புளொட் ஆகியவை வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை).
இதேபோன்று நூறுவீதம் விகிதாசார தேர்தலாக இருந்த பாராளுமன்ற தேர்தலும் மாற்றப்பட்டு 60வீதம் தொகுதி அடிப்படையிலும், 40வீதம் விகிதாசார அடிப்படையிலும் நடைபெறும் என்ற முடிவும் எட்டப்பட்டுள்ளது. இதுவும் விரைவில் சட்டமாக்கப்படலாம்.
அதிகாரப்பகிர்வு நிறைவேறுமா?
மூன்றாவதாகக் கூறப்பட்ட அதிகாரப் பகிர்வு தொடர்பாக இன்னும் உறுதியான பேச்சுவார்த்தைகள் நடைபெறவில்லை என்பதுடன், தமிழ் மக்களின் சகல அடிப்படை கோரிக்கைகளும் நிராகிரிக்கப்பட்டுள்ளது. வடக்கு-கிழக்கு இணைப்பு மறுதலிக்கப்பட்டுள்ளது. சமஷ்டி அரசியலமைப்பு முறை மறுதலிக்கப்பட்டுள்ளது.
ஒற்றையாட்சியில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளதாக தமிழரசுக் கட்சியினர் கூறிவந்தாலும்கூட, சிங்களத்தில் ஒற்றையாட்சி என்னும் பதமே இன்னமும் பாவிக்கப்படுகிறது. மதச்சார்பற்ற நாடு என்ற கோரிக்கை மறுதலிக்கப்பட்டு பௌத்தத்திற்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு சுய நிர்ணய உரிமை, சுயாட்சி போன்ற சகல விடயங்களும் மறுதலிக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற தமிழ் தலைமையை மிக இலாவகமாகக் கையாண்டு ஜனாதிபதித் தேர்தலில் வென்ற மைத்திரி ரணில் கூட்டரசானது தங்களது தேவைக்கேற்ப ஜனாதிபதி முறையை மாற்றியமைப்பதிலும், தேர்தல் முறைமையை மாற்றியமைப்பதிலும் சம்பந்தன், சுமந்திரன் போன்றோரின் ஒப்புதலைப் பெற்று அவர்களின் மூலம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வாக்குகளைப் பெற்று தங்களது தேவைகளை நிறைவேற்றிக் கொண்டவர்கள் அதிகாரப் பகிர்வு தொடர்பாக தமிழ் மக்கள் முன்வைத்த கோரிக்கைகளை நிராகரித்துள்ளது மட்டுமன்றி, தமிழரசுக் கட்சி கூறிவரும் அற்ப சொற்ப விடயங்கள்கூட நிறைவேறுமா என்ற கேள்வியையும் எழுப்பியிருக்கின்றது.
ஜனாதிபதி முறைமை ஒழிப்பு, தேர்தல் சீர்திருத்தம் மற்றும் அரசியல் தீர்வு ஆகிய அனைத்தும் இணைந்த ஒருபொதியாக வந்தால் மாத்திரமே புதிய அரசியல் யாப்பிற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு வழங்கும் என்று முன்னர் சம்பந்தன் தெரிவித்திருந்தார். இதற்கேற்ப அரசியல் தீர்வு தொடர்பாக கூட்டமைப்பிற்கும் அரசாங்கத்திற்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று அங்கு எட்டப்படும் தீர்வுகள் வழிநடத்தல் குழுவில் விவாதிக்கப்பட்டிருக்குமானால் அனைத்தையும் உள்ளடக்கிய ஒரு அரசியல் யாப்புப் பொதியாக வழிநடத்தல் குழுவில் வைத்து இடைக்காலஅறிக்கையை உருவாக்கியிருக்க முடியும். ஆனால் அவசர அவசரமாக ஏனைய இரண்டு விடயங்களுக்கும் அரசாங்கத்திற்கு ஒப்புதலளித்ததுடன், அதுதொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர்களையும் பிழையாக வழிநடத்தி, ஒருபொதியாக புதிய அரசியல் யாப்பைக் கொண்டு வரவேண்டும் என்ற நிலையை மாற்றி, தனித்தனியாக ஆதரவு கொடுக்க முற்பட்டமையானது மூன்றாவது விடயத்திற்கான சிங்கள தரப்பின் ஆதரவினைப் பெறமுடியுமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
'முஸ்லிம்கள் ஏற்றுக்கொள்ளவில்லை அதனால் வடகிழக்கு இணைப்பு குறித்துபேசப்படவில்லை'
தமிழ் மக்களின் அடிப்படைக் கோரிக்கைகள் தொடர்பாக அரசாங்கத்துடன் எந்தவிதபேச்சுவார்த்தைகளையும் நடத்தாத திருவாளர்கள் சம்பந்தனும் சுமந்திரனும் அரசியல் சாசன வழிகாட்டுதல்குழுவிலும்கூட இவை தொடர்பான பேச்சுவார்த்தைகளை நடத்தவில்லை என்பதை வழிநடத்தல் குழுவின் தலைவரான பிரதமரே பல தடவைகள் கூறியிருக்கின்றார்.
முக்கியமாக வடக்கு-கிழக்கு இணைப்பு தொடர்பாக வழிகாட்டல் குழுவில் பேசப்படவில்லை. இது தொடர்பாக கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் திரு சம்பந்தன் அவர்களிடம் வினவியபோது முஸ்லிம் மக்கள் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆகவே அது இப்பொழுது சாத்தியப்படாது என்ற கருத்தை அவர் முன்வைத்தார்.
முஸ்லிம் மக்கள் ஏற்றுக்கொள்ளாததால் வழிநடத்தல் குழுவிலும் அதுதொடர்பான பேச்சுவார்த்தைகளை அவர் நடாத்தவில்லை. ஆனால் வழிநடத்தல் குழுவில் அதுதொடர்பில் பேசும்படி நாங்கள் வலியுறுத்தியும்கூட அதனை ஒரு முக்கியமான விடயமாக பேச்சுவார்த்தைக்கு எடுக்கவில்லை என்றே தோன்றுகின்றது.
ஈபிஆர்எல்எவ் கட்சியின் இரண்டு மாற்றுக் கருத்துக்கள்,
முஸ்லிம் கட்சிகளின் நிலைப்பட்டைக் கணக்கிலெடுத்து வடக்கு-கிழக்கு இணைப்பு தொடர்பாக ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி இரண்டு மாற்றுக் கருத்துக்களை ஒருங்கிணைப்புக்குழுவில் முன்வைத்தது.
1. முஸ்லிம் மக்களுக்கான ஒரு மாகாண அலகு தேவைப்பட்டால் கிழக்கு மாகாணத்தில் நிலத்தொடர்பற்ற அவர்களது பிரதேசங்களை உள்ளடக்கி அவர்களுக்கான ஒரு மாகாண அலகை ஏற்படுத்துவதற்கு தமிழ் மக்களின் சம்மதத்தைத் தெரிவிக்கும்படியும், கிழக்கு மாகாணத்தில் எஞ்சியுள்ள சகல தமிழ் பிரதேசங்களும் வடக்குடன் இணைப்பதற்கு அவர்கள் தடையாக இருக்கக்கூடாது என்பதை அவர்களுடன் பேசும்படியும் கூறினோம். ஆனால் அத்தகைய பேச்சுவார்த்தைகள் எதுவும் முஸ்லிம் தரப்புடன் நடைபெறவில்லை.
2. இரண்டாவது யோசனையாக வடக்கு-கிழக்கைச் சேர்ந்த பதினாறு பாராளுமன்ற உறுப்பினர்களும் எதிர்க்கட்சித் தலைவர் திரு. சம்பந்தன் தலைமையில் டெல்லிக்குச் சென்று இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் மூலம் இணைக்கப்பட்ட வடக்கு-கிழக்கு இணைப்பை ஒருதலைப்பட்சமாக இலங்கை அரசாங்கம் நீக்கியிருக்கிறது என்றும் இதன் மூலம் இந்திய இலங்கை ஒப்பந்தமானது சிறுமைப்படுத்தப்பட்டுள்ளது
என்பதை எடுத்துக்கூறும்படியும் வடக்கு-கிழக்கு இணைப்பை நிரந்தரமாகக் கொண்டுவருவதற்கு இந்திய அரசாங்கத்தின் அனுசரணையைப் பெற்றுக்கொள்ளும்படியும் நாங்கள் கூறியபொழுதும்கூட திரு. சம்பந்தன் அவர்கள் அவ்வாறு செய்வதென்பது சிங்கள மக்களைப் பகைத்துக்கொள்ளும் ஒரு நிலைமையாக இருக்கும் என்பதால் தான் அதனை செய்ய விரும்பவில்லை என்று கூறினார்.
ஆகவே, வடக்கு-கிழக்கு இணைப்பு தொடர்பாக புதிய அரசியல் சாசன ஆய்வின்பொழுது இவர்கள் காத்திரமான கருத்துக்கைகளை முன்வைக்கவில்லை என்பது மிகத் தெளிவாகத் தெரிகின்றது.
வடக்கு கிழக்குப் பிரதேங்களில்கூட மதச்சார்பற்ற நிலைமையை நிராகரித்த சம்பந்தன் பௌத்தத்திற்கு முதலிடம் என்ற விடயம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் விவாதத்திற்கு வந்தபொழுது, அதனை இப்பொழுது ஒரு பிரச்சினையாக்க வேண்டாம் என்றும் அதனை அவ்வாறே விட்டுவிடும்படியும் திரு.சம்பந்தன் கூறினார்.
அப்பொழுது ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியானது. வடக்கு-கிழக்கு என்பது இந்துக்கள், இஸ்லாமியர்கள், கிறித்தவர்கள் மற்றும் மிகச் சொற்பமான அளவில் பௌத்தர்களைக் கொண்ட ஒரு பிரதேசமாக இருப்பதால் குறைந்தபட்சம் வடக்கு-கிழக்காவது ஒரு மதச்சார்பற்ற பிரதேசமாக இருக்க வேண்டும் என்று கோரினோம். அத்தகைய கோரிக்கை சிங்கள மக்கள் மத்தியில் தமிழ் மக்கள் தொடர்பான அவநம்பிக்கையை ஏற்படுத்தும் என்ற வகையில் அதுவும் திரு.சம்பந்தன் அவர்களால் நிராகரிக்கப்பட்டது.
ஒற்றையாட்சி என்ற விடயத்தைப் பொறுத்தவரையில், தமிழில் ஒற்றையாட்சி என்ற பதம் மாற்றப்பட்டிருப்பதாகவும் ஒருமித்த நாடு என்ற சொற்பிரயோகம் இப்பொழுது இடம்பெற்றுள்ளதாகவும் கூறினார். ஆனால் சிங்களத்தில் தொடர்ச்சியாக அது ஒற்றையாட்சியாகவே இருக்கும் என்பதும் தெளிவானது.
அடிப்படை கோரிக்கைகள் கைவிடப்பட்டிருக்கின்றன
இடைக்கால அறிக்கையை வெளியிட்டதற்குப் பின்னர், பிரதமர் அவர்கள் இது தொடர்பில் தனது கருத்தை வெளியிடுகையில், தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் ஒற்றையாட்சியையும் பௌத்தத்திற்கு முதலிடம் என்பதையும் ஏற்றுக்கொண்டுள்ளார்கள் என்பதை கூறியதன் மூலம் ஒற்றையாட்சி என்பதில் எவ்வித மாற்றமும் இல்லை என்பது மிகத் தெளிவாகத் தெரிகின்றது.
ஒற்றையாட்சி என்ற சொல்லாடல் மாற்றமடைந்திருக்கிறது என்று திருவாளர்கள் சம்பந்தன் மற்றும் சுமந்திரனால் முன்வைக்கப்படும் வியாக்கியானங்கள் எல்லாம் தமிழர்களை ஏமாற்றுவதற்கும் குழப்புவதற்குமான வியாக்கியானங்களாகவே இருக்கிறது.
மேற்கண்ட விடயங்களை பார்க்கின்றபோது வழிநடத்தல் குழுவில் அங்கம் வகிக்கின்ற திருவாளர்கள் சம்பந்தன் சுமந்திரன் ஆகியோர் தமிழ் மக்களின் அடிப்படைக் கோரிக்கைகளை கைவிட்டுவிட்டார்கள் என்பதும் அங்கே வடக்கு கிழக்கு இணைப்புமில்லை, சமஷ்டியும் இல்லை, அதிகாரப்பகிர்வுமில்லை என்பதுடன் ஒற்றையாட்சிக்குள் ஒரு சில அதிகாரங்களைப் பரவலாக்கிக்கொள்ளுதல் (Decentralization) என்ற அடிப்படையில்தான் விடயங்கள் நகர்ந்து கொண்டிருக்கின்றன. இதனையே வடக்கு மாகாண முதல்வர் அவர்களும் நோயைக் கண்டறியாமல் மருந்து கொடுக்க முயற்சிக்கிறார்கள் என்று மிகத் தெளிவாகக் கூறியிருக்கின்றார்.
இரண்டாவது சபை
இடைக்கால அறிக்கையில் 13ஆவது திருத்தத்திற்கு மேலதிகமாக பாராளுமன்றத்தில் இரண்டாவது சபை ஒன்று ஸ்தாபிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த இரண்டாவது சபையில் ஒன்பது மாகாண சபைகளிலிருந்தும் ஐந்து உறுப்பினர்கள்வீதம் தெரிவு செய்யப்பட்டு 45 உறுப்பினர்களையும் நாடாளுமன்றம் தெரிவு செய்யும் 10 உறுப்பினர்களையும் உள்ளடக்கி 55 அங்கத்தவர்களைக் கொண்டதாக இந்த சபை இருக்கும் என்று கூறப்படுகிறது
இந்த இரண்டாவதுசபை தொடர்பான கருத்தினை மகிந்த ராஜபக்சவிற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின்போது மகிந்த ராஜபக்ச அவர்களால் முன்வைக்கப்பட்டது. ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் அந்த விடயம் நிராகரிக்கப்பட்டு இரண்டாவது சபை தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வாகாது என்பதும் தெளிவுபடுத்தப்பட்டது. அதே வடிவத்தில்தான் இப்பொழுது இரண்டாவது சபை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த இரண்டாவது சபையில் அதிகபட்சமாக பத்து தமிழ் உறுப்பினர்களே இருக்க முடியும். இதில் ஆளும் கட்சியின் ஆதரவாளர்களாகவும் இருப்பார்கள். இத்தகைய சூழலில், இந்த இரண்டாவது சபையானது தமிழ் மக்களின் தேசிய இனப் பிரச்சினைக்கு தீர்வாக அமையாது என்பது கண்கூடாகத் தெரிகிறது.
தமிழ் மக்கள் மீண்டும் ஒருமுறை தமிழ்த் தரப்பினாலும் ஏமாற்றப்பட்டுள்ளனர் இந்த இடைக்கால அறிக்கை என்பது இறுதியானதல்ல. அது ஒரு அரசியல் சாசன வரைபுமல்ல இது அரசியல் நிர்ணய சபையில் விவாதிக்கப்படும். பின்னர் வரைபாக ஆக்கப்பட்டு மீண்டும் விவாதத்துக்கு உட்படுத்தப்படும்.
பின்னர் மூன்றில் இரண்டு பெரும்பான்மையினால் நிறைவேற்றப்பட்டு சர்வஜன வாக்கெடுப்பிற்கு விடப்பட்டு அதில் வெற்றிபெற்றால் மாத்திரமே புதிய அரசியல் சாசனமாக ஏற்கப்படும் என்ற சூழல் உள்ளது. ஆனால் இலங்கையின் அரசியல் வரலாற்றைக் காணும்போது இது எந்த விதத்திலும் தமிழ் மக்களின் அபிலாசைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்து ஒரு சுயாட்சியுடன் கூடிய அரசியல் சாசனமாக வருமா என்பதில் எமக்கு நிறையவே ஐயங்கள் உள்ளது.
தமிழ் மக்களின் அரசியல் தீர்வு தொடர்பாக 38 அங்கத்தவர்களைக் கொண்ட வடக்கு மாகாணசபையில் இரண்டு அங்கத்தவர்கள் தவிர்ந்த ஏனைய அனைவரும் ஒன்றிணைந்து ஒரு தீர்வுத்திட்டத்தைத் தயாரித்தது. அதனை மாகாணசபையும் ஏற்றிருந்தது. அந்தத் திட்டம்; ஜனாதிபதி, பிரதமர், அரசியல் நிர்ணய சபை மற்றும் எதிர்க்கட்சி தலைவர் ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதேபோன்று தமிழ் மக்கள் பேரவை ஒரு நிபுணர் குழுவை அமைத்து பல மாதங்கள் கூடிப்பேசி ஒரு தீர்வுத்திட்டத்தைத் தயாரித்து அதனை மக்களின் கருத்தறிதலுக்கும் விடுத்து திருத்தங்களுடன் அதனை செழுமைப்படுத்தி அத்தீர்வுத்திட்டத்தை அரசியல் சாசன சபைக்கும் எதிர்க்கட்சித் தலைவர் திரு.சம்பந்தனுக்கும் அனுப்பிவைத்தது மட்டுமன்றி பல ஊடகங்களிலும் வெளியிடப்பட்டது.
ஆனால் இத்தீர்வுத்திட்டங்களை அரசியல் சாசன சபையோ, குறைந்த பட்சம் திரு சம்பந்தன் அவர்களோ கருத்தில் எடுத்துக்கொண்டார்களா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
சர்வதேச ஆதரவு எமக்கு இருப்பதாகவும், சிறிலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஆகியவை ஒன்றிணைந்து ஒரு அரசை உருவாக்கியிருப்பதாகவும், இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி தமிழ் மக்களது உரிமைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் பேசிவந்த சம்பந்தன் அவர்கள் தனது பிழையான அணுகுமுறையால் எமக்குக் கிட்டிய மற்றொரு வாய்ப்பை நழுவவிட்டுள்ளார் என்றே கருதுகின்றோம்.
சம்பந்தன் போன்றோரின் தவறான அணுகுமுறையால் தமிழ் மக்கள் மீண்டும் ஒருமுறை ஏமாற்றப்பட்டுள்ளனர் என்றே ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி கருதுகின்றது. அதிகாரப் பகிர்வு என்ற விடயம் இந்திய-இலங்கை ஒப்பந்தத்தினூடு தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினைக்கு ஒரு தீர்வாக முன்வைக்கப்பட்டது. ஆனால், அந்த அதிகாரப் பகிர்வானது ஒற்றையாட்சி முறைக்குள் மிக இறுக்கமான கட்டுப்பாடுகளைக் கொண்ட முறைமையாகவே இருந்தது.
13ஆவது திருத்தத்தைப் பார்ப்பவர்கள் இதனைப் புரிந்துகொள்ளலாம். எனவேதான் ஒரு முழுமையான தீர்விற்காக தொடர்ச்சியான போராட்டமும் நடைபெற்றது. ஆனால் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு என்பது மாறி, மாகாணசபைகளுக்கு அதிகாரங்களை வழங்குவது என்ற நிலையிலிருந்துதான் இப்பொழுது அதிகாரப்பகிர்வு என்ற விடயம் பார்க்கப்படுவதாகவும் தோன்றுகிறது.
இரண்டு பங்காளிகளுக்கிடையில் பிணக்குகள் ஏற்பட்டு அது ஒரு சமரசத்திற்கு வரவேண்டுமாக இருந்தால் பாதிக்கப்பட்ட தரப்பு ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் பிணக்குகள் தீர்க்கப்படவேண்டும். அப்பொழுதுதான் இருதரப்புக்குமிடையில் பரஸ்பரம் நம்பிக்கை கட்டியெழுப்பப்படும். எதிர்காலத்தில் சச்சரவுகளோ பிணக்குகளோ இல்லாமல் அனைத்து இனங்களும் சமாதானமாகவும் நல்லிணக்கத்துடனும் வாழமுடியும்.
ஆனால், இடைக்கால அறிக்கையானது அவ்வாறு பிணக்குகளைத் தீர்க்கக்கூடிய வகையில் தயாரிக்கப்பட்டதாகத் தோன்றவில்லை. மாறாக, சிங்கள பௌத்த மேலாதிக்கத்தை நிலைநிறுத்துவதை நோக்கமாகக்கொண்டும் குறுகிய கட்சி அரசியல் இலாபங்களை நோக்கமாகக் கொண்டும் வரையப்பட்டுள்ளதாகவே தோன்றுகின்றது.
ஐ.நா மனித உரிமைகள் ஆணையகத்தில் சிறிலங்கா அரசாங்கம் இணை அனுசரணை வழங்கிய 34/1 தீர்மானத்தின் பிரகாரம் பல்வேறுபட்ட விடயங்களை நிறைவேற்ற வேண்டிய கடமை இலங்கை அரசாங்கத்திற்கு ஏற்பட்டிருந்தது. அதன் ஒரு அங்கமாக தமிழ் மக்கள் எதிர்நோக்கும் தேசிய இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு ஒன்றும் காணப்பட வேண்டியுள்ளது. ஆகவே ஐ.நா. சபையையும் சர்வதேச நாடுகளையும் ஏமாற்றும் முகமாகவே இந்த இடைக்கால அறிக்கை வெளிவந்துள்ளது.
இந்த இடைக்கால அறிக்கையானது வெறும் கண்துடைப்பாகவும் பாதிக்கப்பட்ட தரப்புக்கு எத்தகைய தீர்வுகளையும் முன்வைக்காததுடன் சர்வதேச சமூகத்தை ஏமாற்றுவதையும் நோக்கமாகக் கொண்டு தயாரிக்கப்பட்டதாகவே தோன்றுகிறது.
இதனடிப்படையில் உருவாக்கப்படும் ஒரு அரசியல் சாசனம் என்பது 1972 மற்றும் 1978 ஆம் ஆண்டுகளில் உருவான அரசியல் சாசனங்கள் எவ்வாறு தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட்டதோ அதனைப் போன்றே புதிய அரசியல் சாசனமும் தமிழ்த் தேசிய இனத்தால் நிராகரிக்கப்படும் என்பதை ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி அறுதியிட்டுக்கூறுகிறது.
Geen opmerkingen:
Een reactie posten