நாட்டில் தொடரும் தமிழர்களுக்கு எதிரான இவ்வாறன செயற்பாடுகளை தடுப்பதற்கு புதிய அரசாங்கமும் தவறியுள்ளதாக உண்மை மற்றும் நீதிக்கான சர்வதேச செயற்றிட்டம் வலியுறுத்தியுள்ளது.
நாட்டில் அமைந்துள்ள இராணுவ முகாம்களில் உள்ள சித்திரவதை கூடங்களில் குடிவரவு மோசடிகள், மனிதக்கடத்தல்கள், அரசு சார்ந்த அமைப்புகள் அச்சுறுத்தி பணம் பறித்தல் உள்ளிட்ட செயற்பாடுகள் தொடர்வதாகவும் அந்த அமைப்பு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்காவில் வெள்ளை வானில் ஆட்களை கடத்துவது ஆச்சரியப்பட வேண்டிய விடயமல்ல எனவும், கடந்த காலங்களில் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டவர்கள் ஊக்குவிக்கப்பட்டதோடு, அவர்களுக்கு வெகுமதிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுபவர்கள் பொறுப்புக்கூற செய்யப்படமாட்டார்கள் என்ற உத்தரவாதம் இருப்பதோடு, தமிழர்களைன சித்திரவதை செய்வது பெருமளவு இலாபகரமானதாக இருப்பதாக அந்த அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் யஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார்.
ரணில் – மைத்திரி அரசாங்கம் பதவியேற்றதன் பின்னர் சித்திரவதைக்குள்ளான 57 தமிழர்களின் விபரங்கள் தம்மிடம் காணப்படுவதாகவும் அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டக்காட்பட்பட்டுள்ளது.
அவர்களில் 24 பேர் கடந்த 2016 மற்றும் இந்த வருடத்தில் சித்திரவதைக்கு உள்ளானவர்கள் எனவும் இந்த சம்பவங்கள் தொடர்பில் எந்தவொரு அலுவலரோ அல்லது சந்தேகநபரோ விசாரணைக்கு உட்படுத்தப்படவில்லை எனவும் அந்த அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
தொடர்ந்து கொண்டிருக்கும் சித்திரவதைகளை பாதுகாப்பு படையில் உள்ள விசமிகளே மேற்கொள்வதாக தட்டிக்கழித்துவிட முடியாது எனவும், இந்த சித்திரவதைகளுடன் சிரேஷ்ட அதிகாரிகளும் தொடர்புபட்டுள்ளதால், இந்த சம்பவங்கள் அங்கீகரிக்கப்பட்டதாகவே கருத வேண்டியுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கடந்த வருடமும், இந்த வருடமு சித்திரவதை நடைபெற்ற கூடங்களுக்குள் அதிகாரிகள் பிரவேசித்தமைக்கான ஆதாரங்கள் இருப்பதோடு, சித்திரவதை நடைபெற்றதை கட்டளையிடும் அதிகாரிகள் அறிந்திருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
தனியாக தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்கள் வேறு கூடங்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்கள் அலறும் சத்தம் கேட்டதாக தெரிவித்ததாகவும், இதனூடாக சித்திரவதைக்கு உள்ளானமை உறுதிப்படுத்தப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.
தம்மை சித்திரவதைக்கு உள்ளாக்கியவர்கள் இராணுவ சீருடையில் இருந்ததாகவும், ஜோசப் முகாம் எனப்படும் பாதுகாப்புப் படையின் வன்னித் தலைமையகமே அதுவெனவும் பாதிக்கப்பட்டவர்களில் எட்டு பேர் குறிப்பிட்டுள்ளதாகவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஆட்களை கடத்துவதும், விடுவிப்பதும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க ஆட்சிக்காலத்தில் சாதாரணமாக நடைபெற்ற விடயமெனவும், பாதிக்கப்பட்டவர் தப்பிச் சென்றதன் பின்னர் அவர்களின் குடும்பத்தினர் துன்புறுத்தல்களுக்கு ஆளானதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்காவில் சித்திரவதைகள், சிகரெட்டால் எரித்தல், கிரிக்கெட் விக்கெட் பொல்லுகளால் தாக்குதல், நெருப்பில் காய்ச்சிய கம்பிகளால் சூடு வைத்தல், மூச்சுத்திணறச் செய்தல், தலைகீழாக தொங்கவிடுதல் உள்ளிட்ட செயற்பாடுகள் மூலம் மேற்கொள்ளப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஸ்ரீலங்காவின் பாதுகாப்புப் படையை மறுசீரமைப்பதன் ஊடாக இவ்வாறான கொடூரங்கள் நடைபெறுவதை தடுப்பதோடு, அதற்கு காரணமான அலுவர்களை குற்றவியல் ரீதியில் பொறுப்புக்கூற வைக்கமுடியுமென உண்மை மற்றும் நீதிக்கான சர்வதேச செயற்றிட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் யஸ்மின் சூக்கா வலியுறுத்தியுள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten