தமிழகத்தின் ஒட்டுமொத்தக் குரல் காரணமாக, இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமைக் குழுவில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை இந்தியா ஆதரித்தது. இந்தத் தீர்மானம் நிறைவேறிய விதம் குறித்தும், இந்தத் தீர்மானம் காரணமாக அடுத்து என்ன நடக்கும் என்பது குறித்தும் டெல்லியில் உள்ள மனித உரிமை ஆர்வலர்கள் இருவரிடம் கேட்டோம்.
உஷா ராமநாதன், (மனித உரிமையியல் ஆர்வலர் மற்றும் சட்டவியல் ஆய்வாளர்):
'தங்கள் நாட்டு மக்களை, ஒவ்வொரு நாடும் எப்படிப் பாதுகாக்கிறது என்பதை ஐ.நா. மனித உரிமைக் குழு கண்காணிக்கிறது. இதற்காகத்தான் 47 நாடுகள் கொண்ட ஐ.நா-வின் மனித உரிமை குழு ஏற்படுத்தப்பட்டது. எங்கு உரிமை மீறல்கள் நடந்தாலும், அது குறித்த விவரங்களை இந்த அமைப்பு கேட்கும். இதன்படியே, சர்வதேச சமுதாயம் இலங்கை மீது புகார்களை வைத்த காரணத்தாலே, இப்போது தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.
2009 மே மாதம் போர் முடிந்தவுடன் ராஜபக்ச, 'இலங்கையில் பயங்கரவாதம் முற்றிலும் அழிக்கப்பட்டு விட்டது’ என்று கூறினார். முழுமையான தகவல்களை அறியாத ஐ.நா. மனித உரிமைக் குழு, ஒரு நல்லெண்ணத்தின் அடிப்படையில் இலங்கையைப் பாராட்டி உடனே ஒரு தீர்மானத்தை அப்போது நிறைவேற்றியது. அப்போது, இந்தியாவும் ஆதரவாக வாக்களித்தது.
ஐ.நா. மனித உரிமைக் குழு நம்பிக்கையோடு, 'இனி நல்லிணக்கதை ஏற்படுத்தி, உரிமைகளை வழங்கி பழைய நிலைக்கு இலங்கையைக் கொண்டு வாருங்கள், சர்வதேச சமுதாயம் உங்களுக்கு ஒத்துழைப்பு தரும்’ என்று சொன்னது.
அதன் பின்னர் இலங்கை அரசு, 'கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக் குழு’ (எல்.எல்.ஆர்.சி.) என்ற அமைப்பை அமைத்தது. இந்தக் குழு 2011 டிசம்பரில் இறுதி அறிக்கை கொடுத்தது. ஆனால், 2012 வரை அந்த அறிக்கையின் பரிந்துரைகள் எதுவுமே அமுல்படுத்தப்படவில்லை. இலங்கை அரசு, தானே அமைத்த எல்.எல்.ஆர்.சி. பரிந்துரைகளைக்கூட சிறிதளவும் நிறைவேற்றாமல் போனதுதான் சிக்கலுக்கு ஆரம்பம்.
தமிழர்கள் வசிக்கும் பகுதியில் இராணுவமயமாக்கல்தான் நடந்தது. இதனால், பொதுமக்கள் தங்கள் வாழ்வாதாரங்களைத் தேடிக்கொள்ள முடியவில்லை. இலங்கையின் பிரஜைகள் என்று கருதப்பட வேண்டிய தமிழர்கள், ஒரு தோற்கடிக்கப்பட்ட சமுதாயமாகவே கருதப்பட்டார்கள். தாங்கள் விரும்பும் பகுதிக்குப் போக தமிழர்களுக்கு அனுமதி கிடைக்கவில்லை. அதேநேரம் இருக்கிற இடத்தில் வாழ்க்கையைத் தொடங்க நினைப்பவர்களுக்கும் உதவி இல்லை. இராணுவக் கட்டுப்பாட்டிலேயே அனைவரும் இருந்த காரணத்தால், உயிருக்குப் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையில்தான் வாழ்கிறார்கள்.
போரில் பாதிக்கப்பட்டு புலம் பெயர்ந்த மக்களை, ஓர் அரசு தங்களுடைய குடிமக்களாக நடத்தவேண்டுமே தவிர சிறைக்கைதிகளைப் போன்று நடத்தக் கூடாது. இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவர 8,000 சிவிலியன்கள் கொல்லப்பட்டார்கள்’ என்று அரசு அமைத்த எல்.எல்.ஆர்.சி-யே சொல்லுகிறது.
மேலும், அந்த அறிக்கை தமிழர்களின் நிலங்கள் பறிபோனதையும் சொல்லி இருக்கிறது. சிலரிடம் மிரட்டிப் பறிக்கின்றனர், சிலரிடம் விருப்பத்துக்கு மாறாக நிலங்களைக் குறைந்த விலைக்கு வாங்கி உள்ளனர். சிலர், விவரம் தெரியாமல் விற்றுள்ளனர். இராணுவம், நிலங்களை வாங்கி குவித்து வருகிறது.
ஏராளமான தமிழர்கள் காணாமல்போனதையும் அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. தாங்களாகவே தலை மறைவாகப் போனவர்கள், இராணுவம் பிடித்துச் சென்றவர்கள், கடத்திச் செல்லப்பட்டவர்கள், சந்தேகத்தின் காரணமாக நீண்ட காலமாக சிறையில் அடைக்கப்பட்டவர்கள், விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகள் என்று கருதி அடைக்கப்பட்டவர்கள் என்று பல்வேறு வகையிலும் ஆண்கள் தலைமறைவாகி உள்ளனர்.
ஆண்கள் இல்லாத நிலையில் அவர்களது உடமைகளைக் காப்பாற்றும் உரிமை, பெண்களுக்கு இல்லை. ஆண்கள் பெயரில் இருக்கும் எந்தச் சான்றிதழையும் வைத்து, அவரது குடும்பத்துப் பெண்கள் உரிமை கொண்டாட முடியாது. அதனால், இராணுவத்தின் உதவியைத் தேடிச்செல்லும் நிலைமை உண்டாகிறது. இப்படிப் போகும் பெண்கள், பாலியல் தொல்லைக்கு ஆளாகிறார்கள். இதனால்தான், எல்.எல்.ஆர்.சி., இந்தப் பகுதிகளில் இராணுவத்தை விலக்கி, சிவில் நிர்வாகத்தை மீண்டும் ஏற்படுத்தக் கோரியது.
அடுத்தது, பத்திரிகைக்குச் சுதந்திரம் இல்லை. பத்திரிகையாளர்கள் சுதந்திரமாக அந்த நாட்டுக்குப் போக முடியாது. அங்கு என்ன நடந்தாலும், யார் எதைச் செய்தாலும் யாருக்கும் தெரியாது. பத்திரிகையாளர்கள் கொல்லப்படுவதும் மிரட்டப்படுவதுமாக இருந்ததால், அங்கு நடந்த செய்திகள் வெளியே வரவே இல்லை. இதை எல்லாம் சொல்லிய அறிக்கை, போர்க் குற்றங்கள் குறித்து அதிகமாகச் சொல்லவில்லை, சொல்லவும் முடியாது. அரசு நியமித்துள்ள கமிஷனால் குறிப்பிட்ட அளவுக்குத்தான் செயல்பட முடியும்.
இலங்கையில் போர்க் குற்றங்களே நடக்கவில்லை என்கிறது இலங்கை. இதைத்தான், இந்தத் தீர்மானத்தில் கண்டித்த ஐ.நா. மனித உரிமைக் குழு, 'இந்த விவகாரங்களில் இலங்கை அரசு செயல்படவில்லை’ என்கிறது.
அடுத்து, சனல் 4 மூலம் வீடியோக்கள் வெளியே வந்து, இலங்கையின் போர்க் குற்றங்களை அம்பலப்படுத்தியது. ஆகவே, கடந்த 22-ம் தேதி ஐ.நா. மனித உரிமைக் குழு தீர்மானத்தின் மூலம் இலங்கையிடம் பதில் கேட்கப்பட்டது. 'புகார்கள் குறித்து இலங்கை விசாரணை நடத்தி அறிக்கை கொடுத்தாக வேண்டும்’ என்ற நிர்ப்பந்தத்தை ஐ.நா. ஏற்படுத்தி உள்ளது.
அங்கு, அனைத்துத் தமிழர்களும் தீவிரவாதத்தில் ஈடுபடவில்லை. சம உரிமை கேட்பதைத் தீவிரவாதம் என்று சொல்ல முடியாது. நல்லிணக்கத்துக்கு முயற்சிக்கப்பட்டது என்றால், நடைபெற்ற குற்றங்களுக்கான காரணங்களைச் சொல்ல வேண்டும். 'எங்களுக்குத் தெரியாது... அப்படி எதுவும் நடக்கவில்லை’ என்று சொல்லி இலங்கை இனியும் தப்பிக்க முடியாது.
அப்படிச் செய்தால் அந்த அரசுக்கு, நடவடிக்கை எடுப்பதில் விருப்பம் இல்லை அல்லது நடவடிக்கை எடுக்க முடியாத இயலாமையில் இருக்கிறது என்ற குற்றச்சாட்டு எழும். அதனால், ஆக்கபூர்வமான காரியங்களை செயல்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இலங்கை இருக்கிறது.''
விருந்தா க்ரோவர், (தெற்காசிய மனித உரிமைக் கழகத்தின் டெல்லி பீரோ உறுப்பினர் மற்றும் வழக்கறிஞர்):
'யூகோஸ்லோவியா, ருவாண்டா போன்ற நாடுகளுக்கு எதிராகத் தீர்மானம் கொண்டுவரப்பட்ட நேரங்களில் எல்லாம் இந்தியா நழுவியது. மற்றவர்களைச் சுட்டிக்காட்டினால் நம்மை மற்றவர்கள் கேள்வி கேட்பார்கள் என்ற பயம் காரணமாகத்தான் நழுவியது. ஏனென்றால், நக்ஸலைட்டுகளைக் கட்டுப்படுத்தும் விவகாரத்தில் கிட்டத்தட்ட 60 மாவட்டங்களில் ஆதிவாசிகள் மற்றும் பழங்குடியினர்களின் உரிமைகள் பாதிக்கப்பட்டு இருப்பதாக புகார்கள் உள்ளன.
இதுகுறித்து, தேசிய மனித உரிமை ஆணையம் அறிக்கை கொடுத்து உள்ளது. இந்த விவகாரங்களுக்கும், காஷ்மீரில் இருந்து வரும் புகார்களுக்கும் ஐ.நா. மனித உரிமைக் குழுவில் இந்தியா பதில் கொடுக்க வேண்டும். அதனால்தான் இதுபோன்ற தீர்மானத்தைத் தவிர்க்க இந்தியா கடைசி வரை முயற்சி செய்தது.
இந்தியாவில் மாநிலக் கட்சிகளின் வளர்ச்சி மற்றும் செல்வாக்கு அதிகரித்து உள்ளதன் காரணமாகத்தான், மத்திய அரசு இந்த விவகாரத்தில் தனது நிலையை மாற்றிக்கொண்டது. உண்மையில், ஓட்டு அடிப்படையில் செயல்படாமல், மனித உரிமைகள் விஷயத்தில் இந்தியா இன்னும் பொறுப்புடன் செயல்பட்டு இருக்க வேண்டும்.
பாதுகாப்பு சபையின் நிரந்தர உறுப்பினராக வேண்டும் என்றால், உலகில் அமைதி மற்றும் நீதியை நிலைநாட்டப் பாடுபடவேண்டும். மனித உரிமைக் குழுவில் உறுப்பினராக இருந்துகொண்டு, இது போன்ற அநியாயங்களில் இந்தியா தலையிடாமல் இருந்தால், பாதுகாப்புச் சபை ஆசை என்றைக்குமே பூர்த்தி ஆகாது.
பொறுப்பை எடுத்துக்கொண்டு செயல்பட்டால்தான், இந்தியாவின் மதிப்பு உயரும். அதுவும், இந்தியாவை உறுப்பினராக ஆக்குவதாக அமெரிக்கா ஆதரவு கொடுத்திருக்கும் நிலையில், அந்த நாட்டின் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்காமல் இருப்பதில் அர்த்தம் இல்லை.
இந்த தீர்மானத்தின் மூலம் இலங்கையில் நடந்த பயங்கரங்களுக்கு சர்வதேச சமுதாயம் எச்சரிக்கை செய்து உள்ளது என்றே எடுத்துக்கொள்ள வேண்டும். இதில், இந்தியாவும் தனது கடமையைப் பொறுப்புடன் நிறைவேற்றி இருக்கிறது. இதைச் செய்ய வைத்த பெருமை எங்களைப் போன்ற மனித உரிமை அமைப்புகளுக்கும் உண்டு.
பல்வேறு நாடுகளில் உள்ள மனித உரிமை அமைப்புகள் மூலமாகவும் இந்தியாவுக்குத் தொடர்ந்து நெருக்கடி கொடுத்தோம். இதுபோன்ற செயல்பாடுகள் இருந்தால்தான், அண்டை நாடுகளின் மீது இந்தியா நல்ல விதத்தில் ஆதிக்கம் செய்ய முடியும்.
குறிப்பாக, இலங்கையில் கட்டுமானப் பணிகளுக்கும் இந்தியா உதவி வருவதால், ஈழத் தமிழர்களுக்கு உரிமைகள் கிடைக்கிறதா என்பதைக் கண்காணிக்கவும் முடியும்.
தூரத்திலாவது வெளிச்சம் தெரிகிறதா?
Geen opmerkingen:
Een reactie posten