முல்லைத்தீவு ஒலுமடு பிரதேசத்தில், பாடசாலை மாணவியொருவரை இராணுவச் சிப்பாய் ஒருவர் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இன்று நண்பகல் 12.30 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
பாலமோட்டை பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த பாடசாலை மாணவி (வயது16), கடந்தாண்டு க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றியுள்ளார். இந்நிலையில் வீட்டிலிருந்து ஒலுமடுவுக்குச் இன்று காலை புறப்பட்டுச் சென்றுள்ளார்.
இதன்போதே பட்டடை பிரிந்தகுளம் அ.மி.த.க பாடசாலைக்கு அண்மித்ததாக பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த படைச்சிப்பாய் ஒருவர், குறித்த மாணவியை அச்சுறுத்தி வாயைப் பொத்தி பாடசாலை கட்டிடத்திற்கு அப்பாலுள்ள காட்டுப் பகுதிக்கு கொண்டு சென்றுள்ளார்.
தரம் 5 வரையான வகுப்புக்களைக் கொண்ட இந்தப் பாடசாலை தவணைப் பரீட்சைகளின் நிமித்தம் மூடியிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இதனை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட சிப்பாய் எந்த இடையூறுமின்றி மாணவியை துஸ்பிரயோகத்திற்குட்படுத்த முயன்றுள்ளார்.
எனினும், மாணவி கூச்சலிட்டதைத் தொடர்ந்து, அங்கு கூடிய பிரதேச மக்கள் சிப்பாயை மடக்கிப் பிடித்துள்ளனர்.
இதனையடுத்து, அங்கு வந்த படையினர் குறித்த சிப்பாயை தாம் கைது செய்வதாக கூறி அழைத்துச் சென்றுள்ளனர். இதன் பின்னர் அங்கு வந்த மாங்குளம் பொலிஸார் சம்பவத்தை மூடி மறைத்துவிட்டு அங்கிருந்து சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
Geen opmerkingen:
Een reactie posten