இந்தியா - கரூர், இராயனூர் இலங்கை அகதிகள் முகாமில் உள்ள இளைஞனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி அப்பகுதி மக்கள் போராட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர்.
இராயனூர் இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த டைசன் ஜெயக்கொடி என்பவரது மரணத்திலேயே சந்தேகம் எழுந்துள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
குறித்த இளைஞன் அதே முகாமை சேர்ந்த, இந்து நேசன் என்பவருடன் வெளியே சென்று பின்னர் மாலை வரை வீடு திரும்பவில்லை.
இதனிடையே வெள்ளியனை, முனியப்பன் கோயில் அருகே அடிப்பட்ட நிலையில் இளைஞன் ஒருவரின் சடலம் காணப்பட்டுள்ளது.
குறித்த இடத்திற்கு வந்த பொலிஸார் சடலத்தை உடனடியாக கைப்பற்றி கரூர் அரசு மருத்துவக்கல்லூரி வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
பின்னர் இறந்த வாலிபரின் படத்தை இணையத்தின் மூலம் அனுப்பியுள்ளனர். குறித்த படத்தை பார்த்த அகதிகள் முகாம் மக்கள் இறந்தது டைசன் ஜெயக்குமார் என உறுதிப்படுத்தியுள்ளனர்.
இவர் எப்படி இறந்தார்? என்ன நடந்தது? என்பதை விசாரிக்க இவருடன் வந்த இந்து நேசனை மக்கள் தேடி உள்ளனர்.
அவர் தாந்தோன்றி மலையில் உள்ள எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் இருப்பதாகவும், அங்கு இந்து நேசன் தாக்கப்பட்டதாகவும் தகவல் வெளிவந்துள்ளது. இதையடுத்து முகாம் மக்கள் அந்த இடத்திற்கு சென்றுள்ளனர்.
இதன்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் எரிபொருள் நிரப்பும் நிலைய ஊழியர்களுக்கும் முகாம் மக்களுக்கும் கைகலப்பு எற்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த சண்டையின் போது சீருடை அணியாத பொலிஸார் முகாம் மக்களை தாக்கியதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
இந்த நிலையில் இலங்கை இளைஞன் டைசன் ஜெயக்கொடியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், முகாம் மக்களை தாக்கியதை கண்டித்தும் இராயனூர் இலங்கை அகதிகள் முகாம் முன் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இது குறித்த தகவல் அறிந்து அங்கு விரைந்து வந்த காவல் துணை கண்காணிப்பாளர் கும்மராஜா அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.
எனினும், குறித்த இளைஞர் வெள்ளியணை அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், காயமடைந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
ஆனால் பொலிஸார் அடித்ததால்தான் அவர் உயிரிழந்ததாக அகதிகள் குற்றம் சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/india/01/171744?ref=home-imp-parsely
Geen opmerkingen:
Een reactie posten