தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 22 januari 2018

காவாலிகளை கடைத்தெருவுக்கு இழுப்பதா பொறுப்புகூறல்?


தேர்தல்கள் ஆணைக்குழுவின் கழுகுப் பார்வைக்கு மத்தியில் தமிழ் மக்கள் பேரவையின் கருத்தமர்வும் கலந்துரையாடலும் கடந்த 16ம் திகதி யாழ்ப்பாணத்தில் நடைபெற்றிருந்து.
யாழ். பல்கலைக்கழகத்தில் நடத்த தடை விதிக்கப்பட்டு, பின்னர் யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நடத்தப்பட்ட இந்தக் கருத்தமர்வில், சர்வதேச சட்டங்களைக் கேடயமாகப் பயன்படுத்தி தமிழ்மக்கள் உரிமைகளைப் பெற்றுக் கொள்வதற்கான வழிமுறைகள் பற்றி சிங்கப்பூர் பல்கலைக்கழக பேராசிரியர் சொர்ணராஜாவும், இடைக்கால அறிக்கை மாயைகளை கட்டுடைத்தல் என்ற தொனிப்பொருளில் கலாநிதி கு.குருபரனும் உரைகளை நிகழ்த்தினர்.
சுருங்கச் சொல்லின், தமிழ் மக்களின் இன்றைய இரண்டு பிரதான அரசியல் பிரச்சினைகளான போர்க்குற்றங்களுக்கு நியாயமான அதிகாரங்களையும், உரிமைகளையும் பெற்றுக் கொள்ளல் ஆகியனவே இந்த விரிவுரைகளின் உட்பொருள்.
கலாநிதி குருபரன், இடைக்கால அறிக்கை தமிழ் மக்களின் அரசியல் அவாக்களை அடையக் கூடிய வகையில் உள்ளதா என்று கேள்வி எழுப்பும் வகையில் உரையாற்றியிருந்தார்.
எனினும் போர்க்குற்றங்கள் மற்றும் அதற்கு நியாயம் தேடுவதற்கான நடவடிக்கைகளை உள்ளடக்கிய விவகாரங்களே இந்தப் பத்தியின் நோக்கு.
பேராசிரியர் போர்க்குற்றங்களுக்கு எவ்வாறு தண்டனை பெற்றுக்கொடுக்கலாம். அதற்கான வழிமுறைகள் என்ன என்று குறிப்பிட்டிருந்தார்.
உடனடியாக சாத்தியமில்லாவிடினும், போர்க்குற்றங்களுக்குப் பொறுப்பானவர்களை அடையாளப்படுத்துவதற்காக சர்வதேச சட்டங்களில் உள்ள வாய்ப்புக்களை அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.
அதில் முதலாவது போர்க்குற்றங்களும் மனித உரிமை மீறல்களும் 2009 ஆம் ஆண்டு மாத்திரம் நடக்கவில்லை. அது 1958ஆம் ஆண்டில் இருந்தே நடந்து வருகிறது என்பதை நடுநிலையான நீதிமன்றம் ஒன்றை அமைத்து நிரூபித்தல். இரண்டாவது சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை ஏற்றுக்கொள்ளும் ரோம் உடன்பாட்டில் இலங்கையைக் கையெழுத்திட வைக்க அழுத்தம் கொடுப்பதன் ஊடாக, போர்க்குற்றங்களை விசாரிக்கும் குற்றவியல் நீதிமன்றங்களை அமைக்க முடியும் என்பது.
இப்படி அவர் இரண்டு தெரிவுகளை முன் வைத்திருக்கிறார். ஆனால் இந்த இரண்டு வாய்ப்புகளுமே உடனடியாக செயற்படுத்தக் கூடியவையல்ல. நீண்ட கால அவகாசம் அதற்குத் தேவைப்படலாம் என்பதையும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.
அதுமாத்திரமன்றி இந்த இரண்டு முறைகளிலும் தமிழ் மக்கள் நீதியைப் பெற்றுக் கொள்வது ஒன்றும் சுலபமான காரியமாக இருக்காது, ஏனென்றால் நடுநிலையான சுயாதீன நீதிமன்றங்களை அமைப்பதும், அதனூடாக விசாரணைகளை அமைப்பதும் அதனூடாக விசாரணைகளை முன்னெடுப்பதும் அதற்கான அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்வதும் கடினமானது.
அதைவிட, போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் 1958 ஆம் ஆண்டில் இருந்தே நிகழ்ந்து வந்திருக்கின்றன என்று நிரூபிப்பதற்கான ஆவணங்களையும் ஆதாரங்களையும் முன்வைக்க வேண்டும். அவ்வாறான ஆவணப்படுத்தல் முயற்சிகள் ஏதும், இதுவரை உட்கட்டமைப்பு ரீதியாக உருவாக்கப்படவில்லை.
தமிழ் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட மீறல்களை ஆவணப்படுத்தும் வேலைகளை நிறுவன ரீதியான முன்னெடுப்பது முக்கியம். அது உண்மையான, நேர்மையான முறையிலும் ஏற்றுக்கொள்ளப்படத்தக்க வகையிலும் இடம்பெற வேண்டும். வடக்கு மாகாணசபை உருவாக்கப்பட்ட பின்னர் அதனைச் செய்வதற்கான வாய்ப்புக்கள் உள்ளனவா என்று ஆராய்ந்து பார்த்து அதற்குரிய முன்னகர்வுகளை மேற்கொண்டிருக்கலாம்.
ஆனால் வடக்கு மாகாண சபையிடமோ அல்லது, வேறெந்த தரப்பிடமோ, போரில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை, காணாமல் போனவர்களின் எண்ணிக்கை என்பன போன்ற உறுதியான விபரங்கள் கூட இல்லை.
போர்க்காலத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் காணாமல் போனதாக கணக்கு காட்டுகின்ற போதிலும், வடக்கு மாகாண சபையினால் அத்தகைய சுமார் 3 ஆயிரம் பேரின் விபரங்களைத் தான் ஆவண ரீதியாகத் திரட்ட முடிந்திருக்கிறது.
போர்க்குற்றங்களுக்கு நீதி கோரி போராட்டம் நடத்த முனைந்தவர்கள், முதலில் அத்தகைய நீதியைப் பெற்றுக் கொள்வதற்குத் தேவையான ஆவணப்படுத்தல்களை முன்னெடுக்க வேண்டும்.
அதனை எந்தவொரு தரப்பும் முறையாகவோ, முழுமையாகவோ செய்யவில்லை. இந்நிலையில் தான் பேராசிரியர் சொர்ணராஜா மீறல்களை ஆவணப்படுத்தும் பணிகளை தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தியிருக்கிறார்.
இந்த ஆவணப்படுத்தல் சரியாக முன்னெடுக்கப்பட்டால் தான் நடுநிலையான நீதிமன்றம் ஒன்றை அமைக்கும் வாய்ப்பு கிடைத்தாலும், அதில் சரியான தீர்ப்பை பெற்றுக்கொள்ள முடியும். அடுத்து, இலங்கை அரசாங்கத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை ஏற்றுக்கொள்வதற்கு அழுத்தம் கொடுத்தல், இது எந்தளவுக்கு சாத்தியமானது என்பது முக்கியமான கேள்வி.
இந்த உடன்பாட்டில் இலங்கை அரசாங்கம் கையெழுத்திட்டால் தான் குற்றவியல் நீதிமன்றங்களை அமைக்க முடியும். ஆனால் ரோம் பிரகடனம், 2002ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட போது, அப்போது ஆட்சியில் இருந்த ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் அதில் கையெழுத்திட மறுத்து விட்டது.
அப்போது ரணில் விக்ரமசிங்க அந்த உடன்பாட்டில் கையெழுத்திட்டிருந்தால் பல போர்க்குற்ற வழக்குகள் இப்போது தாக்கல் செய்யப்பட்டிருக்கும்.
இந்த உடன்பாட்டில் அரசாங்கம் இப்போதைக்கு கையெழுத்திடாது. ஏனென்றால் அதிக கையெழுத்திட்டால் அது தமக்கும் புதைகுழி வெட்டியதாக அமையும் என்று ஆட்சியாளர்கள் கருதுவார்கள். சிங்கள மக்களும் அவர்களை துரோகிகளாக கணிப்பார்கள்.
ரோம் உடன்பாட்டில் கையெழுத்திடுமாறு இலங்கைக்கு பல்வேறு நாடுகள் அழுத்தம் கொடுத்திருப்பினும், அதனை ஒரு பரிசீலனைக்குரிய விடயமாகவே அரசாங்கம் எடுத்துக் கொண்டதில்லை.
இத்தகைய நிலையில், இந்த உடன்பாட்டில் கையெழுத்திடுவதற்கு அரசாங்கத்துக்கு அழுத்தங்களை தமிழர்கள் எவ்வாறு கொடுப்பது என்ற கேள்வி உள்ளது.?
இது ஒருபுறமிருக்க, பேராசிரியர் சொர்ணராஜாவின் உரையை அடுத்து தொகுப்புரை நிகழ்த்திய வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சில விடயங்களை சுட்டிக்காட்டியிருந்தார். அது போர்க்குற்றங்களுக்கு நியாயமான தீர்ப்பைப் பொற்றும்கொள்ளும், பொறுப்புக் கூறல் சார்ந்த நிலைப்பாடுகளின் மீது கேள்விகளை எழுப்பியிருக்கிறது. “நிலையற்ற நீதிமுறைமைகளின் கீழ் சர்வதேச நீதிபதிகளையும் உள்ளடக்கிய போர்க்குற்ற விசாரணைகள் குற்றவாளிகளை அடையாளங் காண வேண்டும். நாங்கள் இராணுவத்தை ஒட்டுமொத்தமாகக் குறை கூறவில்லை. அதில் கடமையாற்றிய காவாலிகள் சிலரை அடையாளப்படுத்த வேண்டும் என்றே கேட்கின்றோம்” என்று முதலமைச்சர் விக்னேஸ்வரன் குறிப்பிட்டிருந்தார்.
பேராசிரியர் சொர்ணராஜா குறிப்பிட்ட 1958ஆம் ஆண்டு தொடக்கம் நடந்த மீறல்களை ஆவணப்படுத்தி, போர்க்குற்றங்களை நிறுவும் முயற்சிகளில் இருந்து முதலமைச்சர் விக்னேஸ்வரன் முன்மொழிந்த இந்த முறை வேறுபட்டதாக உள்ளது. அதாவது, முதலமைச்சரின் கருத்து, 2009ஆம் ஆண்டு நடந்த போர்க்குற்றங்களை மட்டும் மையப்படுத்தியதாகவே தெரிகிறது.
அதைவிட, ஒட்டுமொத்த இராணுவத்தையும் குறை கூறவில்லை. அதில் பணியாற்றிய சில காவாலிகளையே அடையாளப்படுத்த வேண்டும் என்றும் முதலமைச்சர் கூறியிருக்கிறார்.
முள்ளிவாய்க்காலிலும், அதற்கு முன்னரும், தமிழ் மக்கள் மீது திட்டமிட்ட இனப்படுகொலையே கட்டவிழ்த்து விடப்பட்டது. இதனைத் தான் தமிழர் தரப்பு தொடர்ச்சியாக சர்வதேச அரங்கில் கூறிவந்திருக்கிறது.
முள்ளிவாய்க்காலில் நடந்தது திட்டமிட்ட இனஅழிப்பு என்பதே தமிழர் தரப்பின் நிலைப்பாடு. ஆனால் முதலமைச்சர் விக்னேஸ்வரனின் இப்போதைய வாதம், அதனுடன் முரண்படுவதாக உள்ளது.
ஏதோ இராணுவத்தில் உள்ள சில காவாலிகளின் படுகொலைகளாக மாத்திரம் அதனை அவர் அடையாளப்படுத்த முனைகிறார் போலத் தெரிகிறது. ஒட்டுமொத்த இராணுவத்தின் மீதும் உள்ள குற்றச்சாட்டை சிலர் மீதான குற்றச்சாட்டாக சுருக்கிக் கொள்வதாக உள்ளது.
அரசாங்கத்தில் உள்ள மங்கள சமரவீர போன்ற அமைச்சர்கள் கூட, இராணுவத்தில் சில கறுப்பு ஆடுகள் உள்ளன, தவறுகள் இழைத்தவர்களைத் தண்டிப்போம் என்று கூறி வருகின்றனர். முதலமைச்சரின் கருத்தும் அதனை ஒத்ததாகவே இருக்கிறது.
அவ்வாறாயின், திட்டமிட்ட இனஅழிப்புக்கு நீதி கோருவதில் இருந்து வெறுமனே இராணுவத்தில் உள்ள சிலரைத் தண்டிப்பது என்ற நிலைக்கு கீழ் இறங்கி விட்டமோ என்ற கேள்வி எழுகிறது.
இன அழிப்பும், இனப்படுகொலையும், இராணுவத்தில் இருக்கும் சிலரால் திட்டமிடப்பட்டதோ, வழி நடத்தப்பட்டதோ அல்ல. அது சிங்கள, பௌத்த பேரினவாத அரசியல் அதிகாரத்தில் இருந்து வழிநடத்தப்பட்டது. அத்தகைய அரசியல் அதிகாரத்தில் இருந்தவர்களைப் பொறுப்புக்கூறலில் உள்ளடக்க வேண்டியது முக்கியம்.
அதேவேளை போர்க்குற்றங்களுக்கும், தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கும் நியாயம் தேடும் முயற்சிகள், தேய்ந்து கொண்டிருக்கின்றன என்றே கருத வேண்டியுள்ளது.
தமிழ் இனஅழிப்பு, திட்டமிட்ட இனப்படுகொலை என்ற விடயம், இப்போது இராணுவத்தில் உள்ள சில காவாலிகளை அடையாளப்படுத்துவதில் வந்து நிற்கிறது.
போர் முடிந்து ஒன்பது ஆண்டுகளாகின்ற நிலையில், பொறுப்புக்கூறலுக்கான அழுத்தங்கள் மாத்திரம் குறையவில்லை. பொறுப்புக்கூறல் கோரிக்கையின் கனதியும் குறைகிறது.
அரச தரப்பு அல்லது சர்வதேச தரப்புகள் இத்தகையதொரு நிலைக்குக் கீழ் இறக்குவது என்பது வேறு, ஆனால் தமிழர் தரப்பே போரின் போது தமிழர்கள் மீது இழைக்கப்பட்டது வெறும் இராணுவ ஒழுக்கத்தை மீறிய படையினரின் குற்றங்கள் தான் என்று அடையாளப்படுத்தும் நிலைக்கு கீழ் இறங்கியுள்ளது அபத்தமானது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பொறுப்புக்கூறல் விவகாரத்தில் எத்தகைய நிலைப்பாட்டை எடுத்ததோ, அதே நிலைப்பாட்டுக்குள் தான் முதலமைச்சர் விக்கேஸ்வரனும் அவரது தமிழ் மக்கள் பேரவைப் பங்காளிகளும் வந்திருக்கிறார்கள்.

http://www.tamilwin.com/politics/01/171646?ref=rightsidebar-article

Geen opmerkingen:

Een reactie posten