தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 11 oktober 2013

காமன்வெல்த்துக்கான நிதியை பிரிட்டன் குறைத்ததா? [

 வியாழக்கிழமை, 10 ஒக்ரோபர் 2013, 09:15.38 PM GMT ] [ பி.பி.சி ]
இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் உச்சி மாநாடு குறித்த சர்ச்சை பரவலாக நடைபெற்றுக்கொண்டிருக்கும் வேளையில், பிரிட்டனும் காமன்வெல்த் அமைப்புக்கு தரும் நிதி உதவியை குறைத்திருப்பதாக, லண்டனிலிருந்து வெளியாகும் டெய்லி டெலகிராப் பத்திரிகை கூறியிருக்கிறது.
இந்த செய்திகள் குறித்து காமன்வெல்த் செயலகத்துக்காகப் பேசவல்ல ரிச்சர்ட் உக்குவிடம் பிபிசி கேட்டபோது, "பிரிட்டிஷ் அரசு ஏதோ காமன்வெல்த் அமைப்புக்கு தந்து வரும் நிதிஉதவியை வெட்டி விட்டது என்று சொல்ல முடியாது. இது காமன்வெல்த் செயலகத்தின் திட்டங்களுக்கு வழங்கப்படும் நிதி உதவி பற்றியது.
காமன்வெல்த் செயலகம் ஒரு புதிய செயல் திட்டத்தை வைத்திருக்கிறது. அந்த திட்டத்தின்படி, காமன்வெல்த் இந்த நிதியாண்டிற்கான தனது திட்டங்களை மீள் வடிவமைத்திருக்கிறது. புதிய முன்னுரிமைகளுக்கு ஏற்ப எந்த திட்டங்களை செயல்படுத்துவது என்பது பற்றி நாம் இப்போது பேசிக்கொண்டிருக்கிறோம். எனவே இதை நிதி ஒதுக்கீடு வெட்டப்பட்டது என்று சொல்ல முடியாது," என்று அவர் தெரிவித்தார்.
இதே நேரம், பிரிட்டன் காமன்வெல் செயலகத்துக்கு நிதி வழங்குவதை குறைத்ததற்கான காரணங்களைப் பற்றி கருத்து தெரிவிக்க முடியாது என்று பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சகத்துக்காகப் பேசவல்ல ஒரு அதிகாரி பிபிசியிடம் கூறியிருக்கிறார்.
இந்த நிதி வெட்டுகள் மற்றொரு அமைச்சகத்தால், அதாவது பிரிட்டிஷ் அரசின் வெளிநாட்டு மேம்பாட்டு அமைச்சகத்தால் செய்யப்பட்டது என்பதால் தன்னால் இது குறித்து கருத்து தெரிவிக்க முடியாது என்று அவர் கூறினார். ஆனால் காமல்வெல்த் செயலகம் சிக்கனமாக செயல்பட்டு நிதியை சேமிக்கவேண்டும் என்று பிரிட்டிஷ் வெளியுறவுத்துறை தொடர்ந்து கூறிவருவதாகவும், மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அழுத்தம் தருவதாகவும் அவர் கூறினார்.
இன்றுவரை பிரிட்டன்தான் காமன்வெல்த் செயலகத்துக்கு மிக அதிக நிதி தரும் நாடாக இருந்து வருகிறது.
இலங்கைக்கு ஆதரவா ?
காமன்வெல்த் செயலர் கமலேஷ்வர் சர்மா இலங்கைக்கு ஆதரவாகச் செயல்படுகிறார், இலங்கையின் கைப்பாவையாக இருக்கிறார் என்றெல்லாம் கனடிய அரசு சார்பிலும் சில ஊடகங்களிலும் கருத்துகள் வைக்கப்பட்டுள்ளன. கமலேஷ்வர் ஷர்மா இந்த விமர்சனங்களைத் தாங்கிக்கொண்டு, முடிவுகளை, இலக்குகளை எட்டும் வேலையில் தனது கவனத்தைச் செலுத்துகிறார் என்று காமன்வெல்த் செயலகத்துக்காகப் பேசவல்ல ரிச்சர்ட் உக்கு பிபிசிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில் "இலங்கை விஷயம் தொடர்பாக இலங்கை அரசுடன் பல்வேறு விஷயங்களில் அவர் இணைந்து வேலை செய்துகொண்டிருக்கிறார். இந்த வேலை வெறும் பாராட்டுதல்களை மட்டும் பெறும் போட்டி அல்ல. சிலர் அவர் நல்ல முறையில் சிறப்பாக செயல்படுகிறார் என்று கூறுகிறார்கள். வேறு சிலர் அவர் அவ்வாறு செயல்படவில்லை என்று கூறலாம். அவர் இந்த விமர்சனங்களைத் தாங்கிக்கொள்கிறார்," என்றார்.
இலங்கையின் தலைமை நீதிபதி பதவியிலிருந்து ஷிரானி பண்டாரநாயக்க இறக்கப்பட்ட விஷயம் குறித்து ஆராய நியமித்த விசாரணைக் கமிட்டி அளித்த அதன் முடிவுகளை மற்ற காமன்வெல்த் நாடுகளின் பார்வைக்கு வைக்கவில்லை என்ற விமர்சனமும் கமலேஷ்வர் சர்மாவுக்கு எதிராக வைக்கப்படுகிறது.
பல இடங்களில் இருந்து காமன்வெல்த் தலைமையச் செயலகத்துக்கு தகவல்கள் கிடைப்பதாகவும், இவையனைத்தையும் வெளியிடவேண்டுமென்ற கடப்பாடு தமக்கு இல்லை என்றும் உக்கு கூறினார்.

Geen opmerkingen:

Een reactie posten