தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 10 oktober 2013

முள்ளிவாய்க்கால் படுகொலையும் ஐ. நா. சாசனத்தின் 99வது சாரமும்!

[ வியாழக்கிழமை, 10 ஒக்ரோபர் 2013, 11:09.20 AM GMT ]
இரண்டாவது உலக மகா யுத்தம் முடிவடைந்ததும், 1945ம் ஆண்டு யூன் மாதம், அமெரிக்காவில் சன் பிரான்ஸ்ஸிக்கோ நகரில் கூடிய நாடுகள், முன்பு இருந்த “லீக் ஓப் நேசன்” என்ற அமைப்பிற்கு பதிலாக ஐக்கிய நாடுகள் சபையை உருவாக்கினார்கள்.
அவ்வேளையில், ஐக்கிய நாடுகள் சபையின் செயற்பாடுகளில் முக்கிய பங்கை வகிக்கும் செயலாளர் நாயகத்திற்கு, சில விசேட உரிமைகள் கொடுக்கப்பட வேண்டுமென ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.
இதன் பிரகாரம், ஐ. நா. சாசனத்தில் 15வது அத்தியாயத்தில் சில சாரங்களில் செயலாளர் நாயகத்திற்குரிய கடமை, அதிகாரம் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. உலக சமதானத்திற்கும் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தல் ஏற்படும் வேளைகளில், முன்னெச்சரிக்கையாக ஐ. நா. செயலாளர் நாயகத்தினால் அவசர, அவசிய நிலைமைகளின் அடிப்படையிலேயே 99வது சாரம் பாவிக்கப்படும்.
இதன் அடிப்படையில், செயலாளர் நாயகம் ஐ. நா. பாதுகாப்பு சபைக்கு முதலில் தனது கரிசனையை அறிவிப்பது வழமை. ஐ. நா. செயலாளர் நாயகத்தின் கருத்தை, ஐ. நா. பாதுகாப்பு சபை ஏற்றுக் கொள்ளும் கட்டத்தில், அவ் விடயத்திற்காக பாதுகாப்பு சபை கூட்டப்படும் வேளையில், ஐ. நா. செயலாளர் நாயகம் அவர்கள் முதலாவதாக உரையாற்றுவது வழமை. செயலாளர் நாயகத்தினால் ஐ. நா. பாதுகாப்பு சபைக்கு மட்டுமல்லாது, பொதுச் சபை, ஐ. நா.வின் மற்றைய பிரிவுகளுக்கும், அங்கத்துவ நாடுகளுக்கும் அறிவிப்பது வழமை.
உலக சமதானத்திற்கும் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தல் ஏற்படும் வேளைகளில், செயலாளர் நாயகத்தினால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் அரசியல் கலப்பு கொண்டவை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
இவ் 99வது சாரத்தின் அடிப்படையில், பாதுகாப்பின் அடிப்படையில் அங்கத்துவ நாடுகளுகளின் உண்மை நிலைகளை அறிந்து கொள்வதற்காக செயலாளர் நாயகம் சுதந்திரமாக உண்மைகளை அறியும் குழுக்களை நியமிக்கவும் அதிகாரம் கொண்டுள்ளார்.
இவ் அடிப்படையில் உலக நாடுகளில் நிலைமையை பொறுத்து வேறுபட்ட ஐ. நா. செயலாளர் நாயகங்கள் இவ் 99வது சாரத்தை பாவித்துள்ளனர். இவ் 99வது சாரத்தை ஆராயுமிடத்து, செயலாளர் நாயகங்களினால் சில சந்தர்ப்பங்களில் காலம் தாழ்த்தியும், வேறு சில சந்தர்ப்பங்களில் இச்சாரம் அறவே பாவிக்கப்படவில்லை என்பது கவலைக்குரிய விடயம்.
99வது சாரம் அறவே இல்லை
1960ம் ஆண்டு கொங்கோ நாட்டிலும், 1989ம் ஆண்டு லெபனானிலும் 99வது சாரம் காலம் தாழ்த்தி, பாவிக்கப்பட்ட நிகழ்வுகளாகும். இதேபோல் மூன்று முக்கிய சந்தர்ப்பங்களில் இச் சாரம் அறவே பாவிக்கப்படாத காரணங்களினால், ஆயிரக்கணக்கான மனித உயிர்கள் அநியாயமாக பறிக்கப்பட்டன.
இதில் முதலாவதாக, 1971ம் ஆண்டு மார்ச் மாதம், அன்றைய கிழக்கு பாகிஸ்தானாகிய இன்றை பங்காளதேஷாகும். அங்கு முஜீபூர் ராகுமானும் அவரது ஆவாமிய லீக்கும் 1971ம் ஆண்டு மே மாதம் 7ம் திகதி ஒரு தலைப்பட்சமான சுதந்திரத்தை (Unilaterial Declaration of Independentant - UDI) அறிவித்த வேளையில், அன்றைய பாகிஸ்தானின் ஜனதிபதியான ஜாகியாக் கான் தமது இராணுவம் மூலம் இச்சுதந்திரப் பிரகடனத்தை அடக்க முயன்ற வேளையில்,
கிழக்கு பாகிஸ்தானிலிருந்து இலட்சக்கணக்கான அகதிகள் இந்தியாவிற்கு சென்றனர். அவ்வேளையில் பர்மா நாட்டை சேர்ந்த திரு யூ தான்ட் என்பரே ஐ. நா. செயலாளர் நாயமாக கடமையாற்றினார். பாகிஸ்தானும் இந்தியாவும் அவ்வேளையில் இப் பிரச்சினையை உள்நாட்டு பிரச்சினையென கருதிய காரணத்தினால், யூ தான்ட்; 99வது சாரத்தை பாவிப்பதற்கு முன்வரவில்லை.
இதே போல் 1994ம் ஆண்டு செயலாளர் நாயகமாக கடமையாற்றிய எகிப்திய நாட்டை சேர்ந்த திரு பூட்டஸ் பூட்டஸ்- காலி, ரூவான்டாவில் 99வது சாரத்தை பாவிப்பதற்கு காலம் தாழ்த்திய காரணத்தினால், லட்சக்கணக்கான ரூட்சி இன மக்கள் படுகொலை செய்யபடுவதற்கு காரணமாகியிருந்தார்.
அடுத்து 70,000 முதல் 100,000க்கு மேற்பட்ட தமிழீழ மக்கள், முள்ளிவாய்க்கலில் படுகொலை செய்யப்படுவதற்கு முக்கிய காரணம், வட கொரியாவை சேர்ந்த தற்போதை செயலாளர் நாயகம் பன் கீ மூன் அவர்கள், 99வது சாரத்தை பாவிக்காது காலம் தாழ்த்தியமையே.
எனது பார்வையில்!
எனது பார்வையோ எனது கருத்தைதோ நிச்சயமாக மற்றவர்கள் கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை.
உலகில் அரசியல் போராட்டங்கள் சில நடந்து முடிந்துள்ளன. பல நடந்து கொண்டிருக்கின்றன. சிலர் தொடர்ந்து தமது சுயநிர்ணய உரிமைக்காக போராடிக் கொண்டிருக்கிறார்கள். இவற்றில் இலங்கை தீவில் வாழும் தமிழீழ மக்கள் போல் அதிஷ்டமற்று சோகம் நிறைந்தவர்கள் வேறு யாரும் இருக்க முடியாது.
தமிழீழ மக்களது சரித்திரம், அரசியல் விடுதலை போராட்டம், உடன்படிக்கைகள், அழிவுகள் பற்றிய ஓர் ஆய்வுக் கட்டுரையை தமிழர் மனிதர் உரிமை மையத்தின், சர்வதேச நிகழ்ச்சி நிரலின் இயக்குனரினால், கேம்பிறிச் பல்கலைக்கழகத்தின் சஞ்சிகை ஒன்றில் விபரிக்கப்பட்டுள்ளது.
இம்மாநாட்டில் பலர் தமிழீழ மக்களது சரித்திரம், அரசியல் விடுதலை போராட்டம், உடன்படிக்கைகள், அழிவுகள் பற்றி ஏற்கனவே உரையாற்றியுள்ள காரணத்தில் அவற்றை தவிர்ந்து கொள்கிறேன்.
சாத்வீகப் போராட்டத்தை தொடர்ந்து ஆயுதப் போராட்டம் பல பின்னடைவுகள் முன்னேற்றங்களின் மத்தியில் அங்கு ஓர் நடப்பின்படி மெய்யான (De-facto) சகல கட்டமைப்புக்களை கொண்ட அரசு தமிழீழ விடுதலை புலிகளின் தலைமையில் உருவாகி, ஏறக்குறைய இரு தசாப்தங்களாக நிலைத்திருந்தது.
சிறிலங்கா அரசு யதார்த்தத்திற்கு முரணான பல பொய் தகவல்களை, சர்வதேச அளவில் பறைசாற்ற ஆரம்பித்தார்கள். உதரணத்திற்கு, இலங்கை தீவு விடுதலை அடைந்த 1948ம் ஆண்டிலிருந்து வந்த சுயநிர்ணய உரிமைக்கான தமிழீழ மக்களின் போராட்டத்தை, கொஞ்சைபடுத்தி, இப் போராட்டத்தை தமிழீழ விடுதலை புலிகளினாலேயே ஆரம்பிக்கப்பட்டதாக சர்வதேச மட்டத்தில் பொய் பிரசாரம் செய்தார்கள்.
தமிழீழ விடுதலை புலிகளுடனான யுத்தத்தில், தமது இராணுவம், கடல், ஆகாயம் ஆகிய முப்படைகளினாலும் வெல்ல முடியாதென நன்கு தெரிந்திருந்த சிறிலங்காவின் அரசுகள், யுத்தத்தை நடத்திக்கொண்டிருந்த அதேவேளை, புத்திஜீவிகள், கல்விமான்களினால் பொய்கள் அடங்கிய ஒர் மாபெரும் சர்வதேசப் பரப்புரைகளில் ஈடுபட்டனர். இதுவே தமிழீழ மக்களது அரசியல் போராட்டத்தின் வீழ்ச்சியின் ஆரம்பமாகும்.
பொய் பிரசாரத்திற்கும், வஞ்சகப் போரின் விளைவாக, 70,000 முதல் 100,000க்கு மேற்பட்ட தமிழீழ மக்கள் படுகொலை செய்யப்பட்டதற்கும், இன்றைய மிகவும் மோசமான வாழ்க்கை முறைக்கும் ஆளாக்கப்பட்டுள்ள ஒவ்வொரு தமிழீழ மக்களும், இன்றைய எமது நிலைக்கான காரணத்தை ஆராய கடமைப்பட்டுள்ளார்கள்.
99வது சாரம் எதற்காக செயலிழந்தது?
அன்று ஐ. நா. செயலாளர் நாயமாகத்தினால் 99வது சாரத்தை பாவிக்காமல் அலட்சியம் செய்யப்பட்டதற்கான சில காரணங்களை ஊகிக்க முடிகிறது.
முதலாவதாக, சிறிலங்கா அரசினால் மேற்கொள்ளப்பட்ட சர்வதேச பரப்பரை. விபரமாக கூறுவதானால், புலம்பெயர்வாழ் அமைப்புகளினாலும், தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவினால் மேற்கொள்ளப்பட்ட உண்மைகள் அடங்கிய பரப்புரைகள், உலகில் எந்தவோரு அரசாங்கத்தினுடையதோ, அல்லது நாட்டுடையதோ ஆதரவை திரட்ட முடியவில்லை.
இரண்டவதாக, யுத்தத்தில் ஈடுபட்டிருந்த தமிழீழ விடுதலை புலிகள், 36 நாடுகளில் - அமெரிக்கா, பிரித்தானியா, இந்தியா, ஐரோப்பிய யூனியன் உடபட பல முக்கிய நாடுகளில் தடை செய்யப்பட்டிருந்தனர்.
இவ் தடைகளை எதிர்த்து தமிழீழ விடுதலை புலிகள் வழக்கு தாக்கல் செய்வார்களென சர்வதேச சமூதாயம் எதிர்பார்த்திருந்தது. ஆனால் அப்படி எந்த வழக்குகளையும் தமிழீழ விடுதலை புலிகள் தாக்கல் செய்யவில்லை.
சர்வதேச சட்டத்திற்கு அமைய, மக்களின் அழிவுகளை மேற்காட்டி ஐ. நா. செயலாளர் நாயகம் அவர்கள் நடவடிக்கை எடுக்க முன்வரலாம் என்பது உண்மை. ஆனால் முன் கூறியது போல், ஐ.நா. செயலாளர் நாயகத்தின் நடவடிக்கைகள், அரசியல் அடிப்படையிலேயே மேற்கொள்ளப்படுகின்றன என்பதை நாம் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும்.
மிகவும் கொடூரமான போர் நடந்தவேளையில், ஐ.நா. பாதுகாப்புச் சபையில் சில உத்தியோகப்பற்றற்ற கூட்டங்கள் இடம்பெற்றது என்பது உண்மை. ஆனால் இக் கூட்டங்கள் யாவும் சில அங்கத்துவ நாடுகளின் முன்னெடுப்பிலேயே நடைபெற்றன. அவை ஐ. நா. செயலாளரின் வேண்டுகோளுக்கு அமைய நடைபெறவில்லை.
மூன்றாவது விடயம், ஐ. நா. செயலாளர் நாயகம் அவர்களது காரியலாயத்தில் வேலை செய்த சிலர், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரானவர்களாக காணப்பட்டனர். இதேவேளை அங்கு வேலை செய்த ஓர் உத்தியோகத்தரின் உறவினர் சிறிலங்காவின் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்திற்கு, சிறிலங்காவிற்கு ஆலோசனை வழங்குபவராக காணப்பட்டார்.
நான்காவது, தமிழீழ விடுதலை புலிகள் ஏறக்குறைய இரு தசாப்தங்களாக மேலாக ஒர் நடப்பின்படி மெய்யான சகல கட்டமைப்புக்களையும் கொண்ட ஓர் தமிழீழ அரசை தமது தலைமையில் உருவாக்கி நிலைத்திருந்த பொழுதிலும், அதற்கான ஒரு தலைப்பட்சமான சுதந்திர பிரகடனத்தை, தமிழீழ விடுதலைப் புலிகள் செய்ய தவறிவிட்டார்கள்.
2008ம் ஆண்டு மே, யூன் மாதங்களில் என்னால் ஓர் கட்டுரை தமிழ், ஆங்கிலத்தில் எழுதப்பட்டது. இக் கட்டுரை தமிழில், “ஐ. நா. அங்கீகாரமும், சுதந்திர தன்னாட்சி கொண்ட அரசுகளும்” (UN meber states recognise de-facto and independent states) என்ற தலையங்கத்துடன் எழுதப்பட்டது.
அதன் முடிவுரையில் - தமிழீழ சுதந்திர பிரகடனம், சொந்த நாணயம், அத்துடன் அதற்கான சர்வதேச அங்கீகாரம் போன்றவை இல்லாதது குறைகளாக கணப்படுவதாக எழுதியிருந்தேன்.
இக்கட்டுரை கொழும்பில் தமிழ் ஆங்கிலப் பத்திரிகைகள் (வீரகேசரி 28 மே 2008, The Nation 1 June 2008) உட்பட பல இணைய தளங்களில் அன்று பிரசுரமாகியிருந்தது.
தமிழீழ விடுதலை புலிகள் நிர்வகித்து கொண்டிருந்த தமிழீழ அரசை, அன்று ஒரு தலைப்பட்சமாக சுதந்திர பிரகடனம் செய்திருந்தால், இன்றைய புலம்பெயர் வாழ் மக்கள் சங்கங்களின் பரப்புரைகள் யாவும், நிலைந்திருந்த ஒர் நடப்பின்படி மெய்யான தமிழீழ அரசை மீண்டும் பெறுவதற்கான முயற்சியகவே இருந்திருக்கும்.
2009ம் ஆண்டு மே மாதத்தின் பின்னர் ஐ. நா. செயலாளர் நாயகத்தினால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுக்கள் சில உண்மைகளை ஆணித்தரமாக கூறியுள்ளனர்.
என்னை பொறுத்தரையில், ஐ. நா. செயலாளர் நாயகத்தினால் 99வது சாரத்தை, எமது விடயத்தில் பாவிப்பதற்கு காலம் தாழ்த்தப்பட்டு விட்டது. ஆனால் ஐ. நா. சாசனத்தில் வேறு சில வழிமுறைகள் மூலம் சில பாரிகாரம் காண்பதற்கு வழிகள் உண்டு.
உண்மையை கூறுவதனால், 99வது சாரத்தின் பலத்தை சிறிலங்கா அரசுகள் முன் கூட்டியே நன்றாக அறிந்துள்ளது. இதன் காரணமாகவே, 2005ம் ஆண்டு சிறிலங்காவிற்கு விஜயம் செய்த செயலாளார் நாயகம் கோபி அனான், ஐ. நா. சாசனத்தின் 100வது சாரத்தின் அடிப்படையில், தமிழீழ விடுதலை புலிகளின் நிர்வாகப் பிரதேசமான வன்னிக்கு செல்ல முயன்ற வேளையில், அதை சிறிலங்கா அரசு முற்று முழதாக தடுத்து நிறுத்தியிருந்தது. கோபி அணான் திட்டமி;ட்டது போல் தமிழீழ விடுதலை புலிகளின் நிர்வாகப் பிரதேசமான வன்னிக்கு அன்று சென்றிருந்தால், அவர் அநேகமாக 99வது சாரத்தை அன்று பாவித்திருப்பார். இன்று தமிழீழ மக்கள் யாவரும் சுதந்திரக் காற்றை சுவசித்திருப்பார்கள்.
எப்படியாக முன் செல்வது?
இவை யாவும் இன்று பழைய விடயஙகளாகியுள்ளன. இறந்த காலத்து தவறுகளை நாம் எமது எதிர்காலத்தின் பாடங்களாக கொள்ள வேண்டும். ஆகையால் இறந்த காலத்து நிகழ்வுகளை நாம் ஒரு பொழுதும் அலட்சியம் செய்ய முடியாது. நாம் மேலும் தவறுகளை செய்வோமானால், தற்போதைய எமது ராஜதந்திரப் போரிலும் நிச்சயம் நாம் தோல்விளை தழுவ நேரிடும்.
ஐக்கிய நாடுகளின் உடன்படிக்கைகளும், சர்வதேச சட்டங்களும் பாவனையில் உள்ளது என்பதை யாரும் மறுக்கவில்லை. ஆனால் உலகில் எந்த நாட்டுடைய வெளிவாரியான சுயநிர்ணய உரிமையும், அயல் நாடுகளுடைய ஆதரவு உதவி இல்லாது வெற்றி பெற்றதாக சரித்திரம் கிடையாது. இவற்றிற்கு எரித்திரியா, கிழக்கு திமோர், கோசவா, தென் சூடான் ஆகியவை நல்ல உதாரணங்களாக உள்ளன.
தமிழீழ மக்களது சுதந்திர விடுதலை போராட்டத்தில் இந்தியாவின் பங்கு அளப்பரியது. நாம் விரும்பினோமோ இல்லையோ, எமது கடந்த கால அனுபவங்கள், இந்தியாவின் ஆதரவு உதவிகள் இல்லாது, நாம் எதையும் இலங்கை தீவில் சாதிக்க முடியாது என்பதை உணர்த்தியுள்ளது.
இந்தியாவின் ஆதரவு உதவி என்பவற்றை, தமிழ் நாட்டு மக்களுடைய ஆதரவுடன் மட்டும் நாம் அடைய முடியாது. இந்தியாவில் 28 மாநில அரசுகள் உண்டு. இவ் உண்மையை நன்கு அறிந்த சிறிலங்கா அரசு, இன்று தமிழ் நாடு தவிர்ந்த மற்றைய 27 மாநில அரசுகளுக்கு தமது பிரச்சார வேலைகளை, அவர்களது மொழியில் பத்திரிகைகள் பிரசுரித்து பரப்புரை செய்து வருகின்றது. இவ் யதார்த்தமான உண்மைகளை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.
எமது இராஜதந்திரப் போர் நடவடிக்கை என்பதை சரியாக ஒருங்கிணைத்து, திட்டமிட்டு, இலக்கு வைத்து, யாவரும் ஐக்கியப்பட்டு செய்யப்பட வேண்டும். இதன் மூலமே நாம் எமது இலக்கை அடைய முடியும். எமக்கு இந்தியா, அமெரிக்கா, பிரித்தானிய, ஐரோப்பிய யூனியன் போன்ற பலம் பொருந்திய நாடுகளின் ஆதரவு மிக அவசியம்.
செயலாளர் நாயகத்தினால் 99வது சாரம் மூலம் அடையக் கூடிய பல விடயங்களை தவறவிட்டுள்ளோம். ஆகையால் தொடர்ந்து தவறுகளை செய்யாது, சர்வதேச நாடுகளின் ஆதரவுடன், படிப் படியான வழிமுறைகள் மூலம், எமது மக்களையும் நிலங்களையும் காப்பாற்றும் அதேவேளை எமது இலக்கை அடைவதற்கான வழிமுறைகளை நாம் கையாள வேண்டும்.
இதேவேளை ஐ. நா.வும் சர்வதேச சமுதாயமும், இலங்கை தீவில் தமிழீழ மக்களது அரசியல் பிரச்சினைகளின் மூல காரணங்களை ஆராய்ந்து அறிந்து, பாதுகாப்பான ஓர் நிரந்தர தீர்வை அடைவதற்கான வழிகளை தேட வேண்டும்.
எனது உரையை இங்கு முடிப்பதற்கு முன்னர், தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் கூறிய இரு முக்கிய விடயங்களை இங்கு நினைவு படுத்த விரும்புகிறேன்.
பிரபாகரன் கூறியதாவது, “எமது லட்சியம் ஒரு பொழுதும் மாறாது. ஆனால் எமது லட்சியத்தை அடைவதற்கான பதைகள் மாறலாம்.”.
அடுத்து தனது 2008ம் ஆண்டு மாவீரர் தினத்தில் “நாம் இந்தியாவுடனான முறிந்த உறவுகளை புதுப்பிப்தற்கு விரும்புகிறோம்” என அவர் கூறியதை யாவரும் மனதில் கொள்ள வேண்டும்.
இவற்றை நாம் செய்ய தவறும் பட்சத்தில், நாட்டில் எமது மக்களை எமது நிலங்களை நாம் தொடர்ந்து இழப்பதுடன், நாமும் தொடர்ந்து புலம் பெயர் வாழ் மக்களாகவே வாழ நேரிடும்.
ச. வி. கிருபாகரன்
tchrfrance@hotmail.com
பிரான்ஸ்
- See more at: http://news.lankawin.com/show-RUmrzASUMYnxy.html#sthash.zW0teoxM.dpuf

Geen opmerkingen:

Een reactie posten