ஈழத்தமிழ் மக்கள் தமது விடுதலைப் போராட்ட வரலாற்றில் இரண்டு இடப்பெயர்வுகளை அனுபவித்திருந்தனர். இவை சாதாரணமானவை அல்ல. அவை பயங்கரமானவை. கொடூரமானவை. காலத்தால் மறக்க முடியாதவை. தங்களது உரிமைப் போர் காரணமாக விடுதலைப் புலி களின் ஆயுதப் போராட்டம் 1983இல் ஆரம்பமானது முதல் முள்ளிவாய்க்காலில் முடிவடைந்ததுவரை தமிழ் மக்கள் இழந்தவைகள் ஏராளம்.
அம்மையாரின் ஆட்சியிலேயே இடம்பெற்றது இடப்பெயர்வு
சமாதானப் புறாவாக தன்னை இனங்காட்டிக் கொண்ட சந்திரிகா அம்மையாரின் ஆட்சியின்போது இடம்பெற்றதே வைக்கப்பட்டதே யாழ்ப்பாண மாவட்ட இடப்பெயர்வு. யாழ். மாவட்டத்தை விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்து கைப்பற்றிவிட வேண்டுமென்ற நோக்கில் 1995ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் போரை ஆரம்பித்தது சந்திரிகா அரசு. இதனால் யாழ். குடாவிலிருந்து சுமார் ஐந்து லட்சம் தமிழ் மக்கள் ஓர் இரவுப் பொழுதுக்குள் தமது இருப்பிடங்களை விட்டு வெளியேறினர்.
யாழ்ப்பாணத்தை 1985ஆம் ஆண்டிலிருந்து விடுதலைப் புலிகள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருந்தனர். அவ்வேளையில் ஐக்கிய தேசியக் கட்சி அரசு யாழ். குடாநாட்டைப் புலிகளிடமிருந்து விடுவிக்க மேற்கொண்ட முயற்சிகள் பயனளிக்கவில்லை. 1987ஆம் ஆண்டு மே மாதம் அப்போதைய ஐ.தே. கட்சி அரசில் பாதுகாப்பு அமைச்சராக இருந்த லலித் அத்துலத் முதலி வடமராட்சி மீது பெரிய இராணுவ நடவடிக்கையொன்றை மேற்கொண்டு பல பகுதிகளை அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருந்தார்.
இந்திய அமைதிப் படையினரின் வருகையுடன் வடமராட்சிப் பிரதேசம் மீண்டும் புலிகளின் கைகளுக்கு மாறியிருந்தது. யாழ்ப்பாணத்தை புலிகளிடம் இருந்து முழுமையாகக் கைப்பற்றுகின்ற திட்டத்தை ஐக்கிய தேசியக் கட்சி அரசினால் நிறைவேற்றிக் கொள்ள முடியில்லை. வலிகாமம் வடக்குப் பகுதிகளில் சில பிரதேசங்கள், தீவகம் ஆகியவற்றையே ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சியின் போது படைகளால் விடுதலைப் புலிகளிடமிருந்து மீட்க முடிந்தது.
1995ஆம் ஆண்டு ஜூன் மாதத்திலிருந்து யாழ். குடா உட்பட வடக்கு, கிழக்கு மாகாணங்களில் விடுதலைப் புலிகள் அரசுப் படைகளுடனான தாக்குதல்களைத் தொடுத்து படையினருக்கு இழப்புக்களையும் அளப்பெரிய சேதங்களையும் ஏற்படுத்தி வந்திருந்தனர். 1995ஆம் ஆண்டு ஜூலை மாதம் 09ஆம் திகதியன்று அரசுப் படைகள் வலி.வடக்கைக் கைப்பற்றுவதற்காக இரவு பகலாக தாக்குதல்களை நடத்திக் கொண்டிருக்கையில் பொதுமக்கள் சொந்த வதிவிடங்களிலிருந்து பாதுகாப்புத் தேடி அகப்பட்ட பொருள்களைக் கையில் எடுத்துக் கொண்டு வெளியேறிக் கொண்டிருந்தனர்.
மக்கள் கூட்டம் கூட்டமாக வலி.வடக் கிலிருந்து வெளியேறக் கொண்டிருக்கையில் வானூர்திக் குண்டு வீச்சுத் தாக்குதல்கள் அகோரமாக மேற்கொள்ளப்பட்டமையில் மக்கள் கொல்லப்பட்டும் படுகாயங்களுக்கு உள்ளாகிக் கொண்டுமிருந்தனர்.
1995ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் இண்டாம் திகதியன்று வடமராட்சி கடற்பரப்பிலிருந்து முப்படையின ரின் தாக்குதல்கள் ஆரம்பமாகின.
படையினர் சமகாலத்தில் யாழ். நகர் நோக்கி முன்னேறுகின்ற முயற்சியைக் கைவிடாது தாக்குதல்களை நடத்திக் கொண்டிருக்க மக்களின் இடப்பெயர்வுகளும் தொடர்ந்தவாறு இருந்தது. படையினரது தாக்குதலில் காயமடைந்து யாழ். போதனா மருத்துவமனையில் சேர்க்கப்படுவோர் தொகை தினமும் அதிகரித்துக் கொண்டிருந்தது. சிகிச்சைக்கான மருந்துகளுக்குத் தட்டுப்பாடு நிலவியது. மக்கள் தினமும் பேரவலங்களுக்குள்ளாகிக் கொண்டிருந்தனர்.
உணவுத் தட்டுப்பாடு, குடிதண்ணீர், சுகாதார வசதிகள் போன்ற அத்தியாவசியத் தேவைகள் நெருக்கடிகளுக்கு உள்ளாகின. 1995 செப்ரெம்பர் 22ஆம் திகதியன்று வடமராட்சி நாகர் கோயிலுள்ள பாடசாலை மீது நடத்தப்பட்ட வான் தாக்குதலில் 25 மாணவர்கள் வரையில் கொல்லப்பட்டிருந்தனர். வலி.தெற்குப் பகுதியிலும் படையினரின் முன்னேற்ற நடவடிக்கையானது பெரும் இழப்புக்கள் மத்தியில் அவர்களுக்குச் சாதகமாகின.
வெளியேறும்படி வந்தது கட்டளை
1995 ஒக்ரோபர் மாதம் 23 ஆம் திகதியன்று வலி.வடக்குப் பகுதிகளை இராணுவம் தனது முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. வலிகாமத்தின் நுழைவாச லான யாழ். நகரை நோக்கி படையினரின் முன்னேற்றம் பல முனைகளிலிருந்து ஆரம்பமாக மக்கள் இடம்பெயர ஆரம்பித்தனர். யாழ். நகரைவிட்டு உடன் வெளியேறுமாறு புலிகளிடம் இருந்து மக்களுக்குக் கட்டளை வந்தது. இதையடுத்து 1995ஆம் ஆண்டு ஒக்ரோபர் 30ஆம் திகதி இரவுக்குள் 5 லட்சம் மக்கள் கூண்டோடு வெளியேறினர்.
தத்தமது உடமைகளை சுமந்தவாறு இறுகிய மனங்களுடன் குழந்தைகள், சிறுவர்கள், பெண்கள், வயோதிபர்கள் என செம்மணி வீதியூடாக இடப்பெயர்வுப் பயணம் காலையிலிருந்து ஆரம்பமாகின்றது. துவிச்சக்கர வண்டிகள் மற்றும் சிறுசிறு வண்டிகள் உட்பட மற்றும் பெரு வாகனங்கள் யாவும் செம்மணி வீதியூடாக வயற்பரப்பினையும் கண்டி வீதியையும் ஆக்கிர மித்துக் கொண்டன.
தண்ணீர்த் தாகம், பசி உணர்வு, களைப்பு, முதியவர்களால் தொடர்ந்து நடக்க முடியாதநிலை. நோய்களோடு போராட் டம், அழுதுதுடித்த குழந்தைகளைக் கட்டுப்படுத்த முடியாத நிலை, கர்ப்பிணிகள்பட்ட துயரம் யாவற்றுக்கும் மத்தியில் உச்சக்கட்ட அவலங்கள், நெருக்கடிகள் அனைத்தும் தங்களுக்கே சொந்தமாகிவிட்ட நிலையில் தவித்தனர் தமிழ் மக்கள்.
இடப்பெயர்வின்போது ஏற்பட்ட துயரங்களையும் வலிகளையும் தாங்கவே முடியாது, அவை சொல்லிமாளாதவை. மக்களற்ற வலிகாமம் பிரதேசங்களைப் படையினர் தம் வசப்படுத்திக் கொண்டனர். தென்மராட்சி மட்டுமே தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கக் கூடிய நிலையில் விடுதலைப் புலிகள் இருந்தனர்.
ஏதிலிகளாக ஆகினர் யாழ்ப்பாண மக்கள்
யாழ்ப்பாணத்தின் முதலாவது இடப்பெயர்வானது தமிழர்களின் பொருளாதாரச் சரிவுக்கும் வாழ்வாதார வீழ்ச்சிக்கும் காரணமாகியது. தமிழ் மக்களது பொருளாதார இருப்பின் அடி அத்திபாரத்தையே அசைத்திருந்தது. 5 லட்சம் மக்களின் வாழ்வானது தெரு வாழ்க்கையானது. ஏதிலிகளாக தமிழர்கள் வாழ்வு அமைய வேண்டுமென்பதில் சந்திரிகா அம்மையாரும் படையினரும் அப்படியொரு கணக்கைப் போட்டு வைத்திருந்தனர். சோகங்களிலெல்லாம் பெரும் சோகம் சொந்த ஊரை விட்டுப் பிரிகின்ற சோகம்.
அடுத்தது வாழ்வாதாரத்தை இழத்தல். இவ்விரண்டையும் யாழ்ப்பாண மக்கள் மீது அப்போதைய சந்திரிகா அம்மையாரின் ஆட்சி திட்டமிட்டு வலிந்து திணித்திருந்தது. மக்களின் இடப்பெயர்வுகளுக்கு மத்தியில் ஆகாயப் பரப்பில் வேவு வானூர்திகள் உட்பட புக்காரா, சுப்பர் சொனிக் வானூர்திகள் தொடர்ச்சியான குண்டு வீச்சுக்களை நடத்திக் கொண்டிருந்தன. இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் செத்துமடிந்தனர்.
அடைக்கலம் தந்தது வன்னி
தென்மராட்சியையும் வன்னியையும் நோக்கி இடம்பெயர்ந்த மக்கள் செய்வதறியாது தவித்துக் கொண்டிருந்தபோது செல்லும் இடங்களில் கண்ணுற்ற இடங்களான தேவாலயங்கள், சனசமூக நிலையங்கள் இந்துமத ஆலயங்கள், வெறுமையாகக் காணப்பட்ட கட்டடங்கள் மக்களுக்கு தஞ்சமளித்தன. மீண்டும் சொந்த இடங்களுக்கு திரும்பிச் செல்வோமா அல்லது இதுவே தஞ்சம்தானா? எங்கே மீண்டும் மீண்டும் செல்வது? உறவுகளை எங்கே காண்பது? என்ற ஏக்கங்கள் அவர்களின் மனதில் ஆழப்பதிந்திருந் தன.
இடப்பெயர்வுகளோடு இளைஞர்கள், யுவதிகள் ஆயிரக்கணக்கில் புலிகள் இடயக்கத்தில் இணைந்து கொண்டனர். இதனால் புலிகளின் பலம் பலமடங்காகியது. அரசியல் நகர்வுகளும் வெற்றியளித்தன. யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய சந்திரிக்கா அரசு கொழும்பில் பெரும் கொண்டாடங்களை முன்னெடுத்த போதிலும் அவை நீண்டு நிலைபெறவில்லை. யாழ்ப்பாணத்தை மீட்டெடுத்த அரசின் வெற்றிக்கு வன்னியில் அரசுக்குப் பல தோல்விகள் பதிலாக வழங்கப்பட்டன.
ஓடிமறைந்தன 22 ஆண்டுகள்
ஈழத்தமிழ் மக்களின் பல இடப் பெயர்வுகளில் மிக முக்கியமானது யாழ்ப்பாணத்தில் 1995ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 30ஆம் திகதி திங்கட்கிழமை நடந்தேறிய இடப் பெயர்வே. இந்தத் துயரம் நடந்தேறி இன்றுடன் 22 ஆண்டுகள் கடக்கின்றன. முன்னைய நாள் அரச தலைவர் சந்திரிகா சமாதான தேவதை என்ற மதிப்பையும் அடையாளத்தையும் இழந்தவராகவே இன்றும் யாழ்ப்பாண மக்களைச் சந்தித்து விட்டுச் செல்கின்றார். ஜே.ஆர்.ஜெயவர்த்தன, ஆர்.பிரேமதாச, மகிந்த ராஜபக்ச வரிசையில் சந்திரிகா குமாரதுங்கவும் தமிழர்களின் படுகொலைகளுக்கும் நிம்மதியற்ற வாழ்வுக்கும் இடப்பெயர்வுகளுக்கும் பொருளாதார இழப்புகளுக்கும் என்றுமே முக்கிய பொறுப்பாளி என்பதை எவரும் மறுத்திட இயலாது மறக்கவும் இயலாது.
http://www.jvpnews.com/srilanka/04/147404
Geen opmerkingen:
Een reactie posten