சீனாவில் இருந்து நபர் ஒருவர் ஜேர்மனிக்கு சுற்றுலா சென்றுள்ளார். சென்றவருக்கு சில நாட்களிலேயே எதிர்பாராதவகையில் அவரது பணப்பை திருடு போயுள்ளது.
இதனையடுத்து இச்சம்பவத்தை புகார் தெரிவிக்கும் நோக்கில் அவர் அரசு அலுவலகம் ஒன்றை நாடியுள்ளார். ஆனால் ஆங்கிலம், ஜேர்மனி என எந்த மொழியும் வசப்படாத அந்த நபருக்கு மருத்துவ சோதனைக்கு பின்னர் கைவிரல் அடையாளத்தையும் பெற்றுக்கொண்ட அந்த அலுவலகம் அவரது கடவுச்சீட்டு மற்றும் விசா ஆவணங்களை வாங்கி வைத்துள்ளது.
இதனையடுத்து அவருடன் மேலும் சில நபர்களையும் சேர்த்து வேறொரு பகுதிக்கு அனுப்பி வைத்துள்ளது.
சீனா மொழி மட்டுமே அறிந்திருந்த அந்த நபர் Dortmund பகுதியில் அமைந்துள்ள அகதிகள் முகாமிற்கு கொண்டுவரப்பட்டு அங்கு எஞ்சிய அகதிகளுடன் தங்க வைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் அந்த அகதிகள் முகாமிற்கு அருகே செயல்பட்டு வரும் உணவு விடுதி அருகே முற்றிலும் வேறுபட்ட நபர் ஒருவர் நின்றிருப்பதைக் கண்ட செஞ்சிலுவை அமைப்பினை சேர்ந்த நபர், இந்த சீனா சுற்றுலாப்பயணியிடம் விசாரித்துள்ளார்.
சீனா மொழி அறிந்த அந்த செஞ்சிலுவை அமைப்பு உறுப்பினரிடம் அந்த நபர் நடந்த சம்பவத்தை விவரித்துள்ளார். தமது பணப்பை திருடு போனதாகவும், அது குறித்து புகார் தெரிவிக்க வந்த நிலையில் மொழி பிரச்னை காரணமாக அகதியாக பதிவு செய்யப்பட்டு, கடந்த 2 வார காலமாக முகாமில் தங்கி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து அந்த செஞ்சிலுவை அமைப்பு உறுப்பினர் மேற்கொண்ட நடவடிக்கையின் காரணமாக சீனா சுற்றுலாப்பயணியின் பேரில் பதிவு செய்யப்பட்டிருந்த அகதிகளுக்கான விண்ணப்பத்தை தடுத்து நிறுத்தியுள்ளனர்.
பின்னர் அவரது கடவுச்சீட்டு மற்றும் விசா உள்ளிட்டவைகளை திரும்ப வழங்கவும் ஏற்பாடு செய்துள்ளனர்.
ஜேர்மனி சுற்றுப்பயணம் முடித்துக்கொண்டு பிரான்ஸ் மற்றும் இத்தாலி செல்ல திட்டமிட்டுருந்த அந்த நபருக்கு, 2 வார காலம் அகதிகள் முகாமில் தங்க நேர்ந்த சம்பவம் ஒரு புது அனுபவம் என தெரிவித்துள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten