வலிகாமப் பிரதேசங்களான அன்டனிபுரம், காங்கேசன்துறை பகுதிகளில் இராணுவத்தினரால் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனூடாக பலாலி உயர்பாதுகாப்பு வலயத்துக்கு பயணிக்கும் வாகனங்கள் மற்றும் உந்துருளிகள் என்பன பதிவு செய்யப்பட்ட பின்னரே செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டு வருகின்றன.
இந் நிலையில் நெல்லியடி, அச்சுவேலி, பருத்தித்துறை மற்றும் வல்வெட்டித்துறை போன்ற காவல் நிலையங்களில் கடமையாற்றும் காவல்துறையினர், காங்கேசன்துறை காவல்துறை நிலையத்துக்கும் ஏனைய காவல்துறை நிலையங்களான இளவாலை, தெல்லிப்பழைக்குச் செல்வதற்கு உயர்பாதுகாப்பு வலயம் ஊடாகவே இதுவரை பயணித்து வந்தனர்.
ஆரம்பத்தில் சிவில் உடையில் காவல்துறையினர் பயணிக்கும் போது இராணுவ சோதனை சாவடியில் காவல்துறை அடையாள அட்டையினை காண்பித்து பதிவுகளை மேற்கொண்ட பின்னர் பயணத்தினை மேற்கொள்ள இராணுவம் அனுமதி வழங்கியிருந்தது.
தற்போது, பணியில் தமிழ் காவல்துறையினர் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளதால் காவல்துறை சீருடை அணிந்தால் மட்டுமே உயர்பாதுகாப்பு வலயம் ஊடாக பயணிக்க முடியும். சிவில் உடையில் பயணிக்கும் காவல்துறையினருக்கு அனுமதி மறுக்கப்படுவதுடன் மாற்று வழியூடாக செல்லுமாறு கூறப்படுகிறது.
Geen opmerkingen:
Een reactie posten