தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 5 oktober 2012

அதிகாரப் பகிர்வு என்ற பேச்சிற்கே இடமில்லை; மஹிந்தவின் ஒப்பந்தம் அம்பலம்!


அதிகாரப் பகிர்வுக்கு எந்தச் சந்தர்ப்பத்திலும் தமது அரசு இணங்காது என உறுதிபடத் தெரிவித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பங்காளிக் கட்சிகளுக்கிடையில் 2005 ஆம் ஆண்டு ஒப்பந்தமொன்றை ஏற்படுத்திக் கொண்டுள்ளார் என்று ஐக்கிய தேசியக் கட்சி அதிர்ச்சித் தகவலொன்றை நேற்றுப் பகிரங்கமாக வெளியிட்டது.
வடமாகாண மக்களுக்காகவே மாகாணசபை முறைமை கொண்டுவரப்பட்டது.
எவருக்காக இந்த மாகாணசபை கொண்டு வரப்பட்டதோ, அவர்களுக்கே அரசு இன்று வஞ்சகம் இழைக்கின்றது மிகவும் கீழ்த்தரமான வகையில் செயற்படுகின்றது அரசின் செயற்பாடுகள் நாட்டுக்குத் தொடர்ந்தும் அபகீர்த்தியை ஏற்படுத்துகின்றது என்று ஐ.தே.கவின் சிரேஷ்ட உபதலைவரும் எம்.பியுமான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:  இந்த அரசு அதிகாரப்பகிர்வை எதிர்க்கின்றது.
எச்சந்தர்ப்பத்திலும் அதிகாரப்பகிர்வுக்கு இணங்கமாட்டோம் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசின் பங்காளிக் கட்சிகளான ஜாதிக ஹெல உறுமய மற்றும் தேசிய சுதந்திர முன்னணி ஆகியவற்றுடன் ஒப்பந்தமொன்றில் 2005 ஆம் ஆண்டு கைச்சாத்திட்டுள்ளார்.
தமிழ் பேசும் மக்களுக்கு அதிகாரப் பரவலாக்கலை வழங்கும் எண்ணம் இந்த அரசிற்கு இல்லை என்பது இதனூடாக நன்றாகத் தெரிகின்றது.
இனப் பிரச்சினைத் தீர்வு விவகாரத்திற்கு 2005ஆம் ஆண்டுமுதல் இழுத்தடிப்புகளையே இந்த அரசு மேற்கொண்டு வருகின்றது.
ஒவ்வொரு மாகாணசபையிலும் அரசு “திவிநெகும” சட்டமூலத்தை முன்வைத்து அதனை நிறைவேற்றி வருகின்றது.
வடக்கில் மாகாணசபை இல்லை. ஆனால், வடக்கு மாகாண ஆளுநரின் அனுமதியைப் பெற்று “திவிநெகும’ சட்டமூலத்தை அங்கு நிறைவேற்றிக்கொள்ள அரசு திட்டமிடுகிறது. ஆளுநர் இந்தச் சட்டமூலத்திற்கு அனுமதி வழங்க முடியாது.
இருப்பினும், ஜனநாயக விதிமுறைகளை மீறி வடமாகாணத்தில் “திவிநெகும” சட்டமூலத்தை நிறைவேற்ற அரசு முயற்சிக்கிறது.  .  “திவிநெகும” சட்டமூலம் தொடர்பில் வடமாகாண சபையின் கருத்து என்ன என்பதை வடமாகாண ஆளுநர் பிரதிபலிக்க முடியாது.
மாகாண ஆளுநர் எனப்படுபவர் அரசின் பிரதிநிதி. அவர் அரசால் வழங்கப்படும் சிறப்புரிமைகளையும், கொடுப்பனவுகளையும் பெறுபவர். எனவே, வடமாகாணசபையின் கருத்து என்ன என்பதை மாகாண ஆளுநர் பிரதிபலிக்க முடியாது.
வடமாகாண மக்களுக்காகவே மாகாணசபை முறைமை நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், அந்த மக்களுக்கே அரசு வஞ்சகம் இழைக்கின்றது. இது மிகவும் கீழத்தரமான வகையில் செயற்படுகின்றது.
தேசியம், ஜனநாயகம் எனப் பேசும் அரசு வடக்கில் மாகாணசபைத் தேர்தலை நடத்தி அந்த மக்களின் எண்ணங்களை அறிந்துகொள்ளவேண்டும்.
சர்வதேசத்தின் எதிர்ப்புகள் இலங்கைக்கு அல்ல. இலங்கை அரசுக்கே. உலக மக்களைப் பாதுகாப்பதற்காகவே சர்வதேச மனித உரிமைச்சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இந்தச் சட்டம் தொடர்பான ஒப்பந்தத்தில் நாமும் கைச்சாத்திட்டுள்ளோம். எனவே, அதனடிப்படையில்தான் நாம் செயற்படவேண்டும் என்றார்.

Geen opmerkingen:

Een reactie posten