தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 11 augustus 2011

சிறிலங்கா: கொலைக்களங்களில் இருந்து மீண்டவர்களின் அதிர்ச்சி தரும் வாக்குமூலங்கள்

போரில் பாதிக்கப்பட்ட றோசி என்ற 45 வயதான பெண் தான் உயிர் வாழ விரும்பவில்லை என்கிறார். இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னரும், போர் என்ற சொல்லைக் கேட்டாலே இந்த தமிழ்ப்பெண்ணுக்கு கண்ணீர் வருகிறது.

வன்னியில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பான உண்மைநிலையை அறிந்து கொள்ள இரகசியமாக அங்கு சென்ற ‘ஹெட்லைன்ஸ் ருடே‘ செய்தியாளர் பிரியம்வதா, ‘இந்தியா ருடே‘ இணையத்தில் இவ்வாறு எழுதியுள்ளார். இந்தக் கட்டுரையின் தமிழாக்கம் இது.

சிறிலங்காவில் உள்நாட்டுப் போரின் இறுதிக்கட்டத்தில் பொதுமக்களுக்கு எதிராக இராணுவத்தினர் மிகவும் மிருகத்தனமாக நடந்து கொண்டதாக ஒரு கதை உள்ளது.

நாட்டின் வடக்கு,கிழக்கில் உள்ள தமிழர்கள் மீது இழைக்கப்பட்ட கொடுமைகள் தொடர்பாக பரவலான ஆவணங்கள் இருந்த போதிலும், கொழும்பு அதனை நிராகரித்து வருகிறது.

போரில் தப்பியவர்கள் தமக்கு நீதி கிடைக்கும் என்ற எந்த நம்பிக்கையும் இன்றி, உலகின் மிக அடர்த்தியான இராணுவ வலயங்களில் ஒன்றில் இன்னமும் அச்சத்துடன் வாழ்கிறார்கள்.

உலகில் மிகமோசமான போர்க்குற்றங்கள் இடம்பெற்ற இடத்தில் இருந்து வெளியாகும் தகவல்கள் மற்றும் அதை மறுக்கும் செய்திகளைப் பகுப்பாய்வு செய்து உண்மைகளை அறிந்து கொள்வதற்காக ஹெட்லைன்ஸ் ருடே செய்தியாளர் பிரியம்வதா விடுதலைப் புலிகளின் முன்னைய கோட்டையான வன்னிக்கு இரகசியமாகப் பயணம் செய்தார்.

வன்னிப் பிராந்தியத்தை அடைந்தபோது, பெரும்பாலும் சிங்களவர்களைக் கொண்ட சிறிலங்கா இராணுவத்தின் படையினரால் அது மொய்க்கப்பட்டிருந்தது.

ஒவ்வொரு சில மீற்றருக்கும் ஒரு படைச்சிப்பாய் ரோந்து சென்று கொண்டிருந்தார். ஒவ்வொரு 100 மீற்றருக்கும் இடையில் ஒரு சோதனைச்சாவடி இருந்தது.

வன்னிப் பகுதி எங்கும் பெரும்பாலும் உள்ளூர் தமிழ் மக்களிடம் இருந்து கட்டாயமாக பறிக்கப்பட்ட நிலங்களில் சிறிலங்கா இராணுவம் பிரதான படைத்தளங்களை அமைத்துள்ளது.

அச்சம், பாதுகாப்பற்ற உணர்வுடன் காணப்படும் உள்ளூர் தமிழ்மக்களில் மிகச் சிலரே ஒளிப்படக்கருவி முன்பேச இணங்கினர்.

இரகசியமான இடங்களில் செவ்வி காணப்பட்ட மக்கள், அந்த ஒளிப்பதிவுகள் சிறிலங்கா படையினரின் கைகளில் கிடைத்தால், தமக்கு மரணம் ஏற்படும் என்று அஞ்சுகின்றனர்.

போரில் பாதிக்கப்பட்ட றோசி என்ற 45 வயதான பெண் தான் உயிர் வாழ விரும்பவில்லை என்கிறார். இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னரும், போர் என்ற சொல்லைக் கேட்டாலே இந்த தமிழ்ப்பெண்ணுக்கு கண்ணீர் வருகிறது.

சிறிலங்கா அரசாங்கத்தினால் பாதுகாப்பு வலயமாக பிரகடனம் செய்யப்பட்ட பிரதேசத்தில் சிறிலங்கா விமானப்படை விமானங்கள் குண்டுகளை வீசியதற்கு சாட்சியாக இருக்கிறார் றோசி.

கிளிநொச்சியில் இருந்து தனது கணவன், ஒரு மகன், நான்கு மகள்கள், ஒரு மருமகன், 10 மாதப் பேரக்குழந்தையுடன் வட்டுவாகல் பாதுகாப்பு வலயத்துக்குள் நகர்ந்த மறுநாள்- 2009 மே 14ம் நாள் அந்தப் பாதுகாப்பு வலயம் தாக்குதலுக்குள்ளானது.

“நாங்கள் இருந்த இடத்தில் குண்டு வீழ்ந்தது. அப்போது அமைதியாகவே இருந்தது. குண்டுகள் வீசப்பட்டதும் தான் நாம் புரிந்து கொண்டோம்.

அந்தப் பகுதியெங்கும் புகைமண்டலம் சூழ்ந்திருந்தது. எனக்கு எதுவும் தெரியவில்லை.எனது கை துண்டிக்கப்பட்டது. எனது மார்பை சிதறல்கள் சிராய்த்திருந்தன.

எனது மகன் என்னை மேலே தூக்கினார். நான் மறைத்தேன். எனது மகள்களை பார்க்கும்படி அவரிடம் கேட்டேன். அவர்கள் எல்லோரும் நன்றாக இருப்பதாக அவர் என்னிடம் கூறினார்.

ஆனால் அவர்கள் அனைவரும் இறந்து விட்டார்கள் என்பது அவர் அறிந்திருந்தார். எனது எல்லாப் பிள்ளைகளும் இறந்து விட்டார்கள். ஒருவருமே இல்லை“ என்றார் றொசி.

“அந்தநாளில் மட்டும் 3000 மக்கள் எனது கண்முன்னே இறந்தனர்.“ என்றார் அவர்.

போரில் பாதிக்கப்பட்ட இன்னொருவரான ரதி, அந்தக் கொடிய நாளில் தனது கணவரையும் மகனையும் பறிகொடுத்த துயரமான நிகழ்வில் இருந்து அவர் இன்னமும் மீளவில்லை.

“நான் அப்போது பதுங்குகுழியில் இருந்தேன். எனது மகனும் கணவரும் வெளியில் இருந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். வானத்தில் இருந்த வீழ்ந்த குண்டு ஒன்று வெடித்து சிதறியது.

அதன் குண்டுச் சிதறல்கள் தாக்கி கணவரும் மகனும் இறந்தனர். எமக்கு சத்தம் கேட்டது“ என்று கூறி நிறுத்தினார் ரதி.

ரதியின் மகன் லாவண்யா சொல்கிறார் “ வள்ளிபுனத்தில் இராணுவத்தினர் எம்மீது குண்டு வீசினர். அவரகள் இரசாயன குண்டுகளை வீசினர்.
வானத்தில் இருந்து தரையில் விழுந்த குண்டுகள் துண்டுகளாக சிதறின. ஆனால் சத்தத்தைக் கேட்க முடியவில்லை“

“ஒரு மதகுரு ஊடாக நான் எனது குடும்பத்தினருடன் சரணடையச் சென்ற போது, எனது இரண்டாவது குழந்தை இரசாயனக் குண்டினால் பாதிக்கப்பட்டது. அது பொஸ்பரஸ் குண்டு. அவன் முற்றாகவே பாதிக்கப்பட்டான்.“ என்கிறார் பாதிக்கப்பட்ட மற்றொருவரான தேவி.

“சிறுவர்கள் வயதானவர்கள் என்று எல்லோருமே மருத்துவமனையில் உதவியின்றிக் கிடந்தனர். இந்தத் தாக்குதலில் இரு சிறுவர்கள், ஒரு முதிய பெண்ணுடன் எனது கணவரும் மகனும் கொல்லப்பட்டனர்“ என்றார் ரதி.

தம்பி என்ற 8 வயது சிறுவன் தனது தாயைத் தவிர மொத்தக் குடும்பத்தையும் இழந்து பாதிக்கப்பட்டவர். சிறுவர்கள் கூட விட்டு வைக்கப்படவில்லை என்பதை அவர் விபரிக்கிறார். அவர் போரில் காயமடைந்தவர்.

“எப்போதும் ஷெல் தாக்குதல்கள் நடந்து கொண்டிருந்தன. எல்லா இடங்களிலும் குண்டுகள் விழுந்தன. இந்தக் காயத்தைப் பாருங்கள். இதனுடன் தான் எனது வாழ்க்கையை ஒட்ட வேண்டியுள்ளது“ என்கிறார் தம்பி.

காயமடைந்த பொதுமக்களுக்கு மருத்துவமனைகள் கூடப் பாதுகாப்பானவையாக இருக்கவில்லை. காவ்யாவின் தந்தை போரில் காயமடைந்து பின்னர் இறந்து விட்டார்.

“தந்தையை நாம் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றோம். அப்போது அங்கு நடந்த குண்டுத் தாக்குதலில் ஒரு இளம்பெண்ணும், இரு ஆண்களும் தலையில் இருந்து மூளை வெளியேறிய படி இறந்தனர்.“ என்றார் காவ்யா.

பாதிக்கப்பட்டவர்களின் அழுகை எல்லாவற்றையும் கூறுகின்றன.

சிறிலங்கா இராணுவத்தின் போர்க்குற்றங்களின் பட்டியலில் முகாம்களில் இருந்த பெண்கள் மீதான துன்புறுத்தலும் அடங்கியுள்ளது.

சிறிலங்கா அரசாங்கத்தினால் உலகிற்கு வெளிப்படுத்தப்பட்டாத இரகசிய முகாம் ஒன்றில் ஒரு பெண் ஒரு ஆண்டைக் கழித்துள்ளார். “அது ஒரு சித்திரவதை முகாம். அடிப்படை வசதிகள் எமக்கு கிடைக்கவில்லை. அரசசார்பற்ற நிறுவனங்களும் அனுமதிக்கப்படவில்லை.“ என்கிறார் சுந்தரி.

“அது ஒரு இராணுவ முகாம். என்ன பிரச்சினையென்றாலும் இராணுவத்தினரையே அணுக வேண்டும். அவர்கள் சில பெண்களிடம் தவறாக நடந்து கொண்டனர்.“ என்றார் சுந்தரி.

“அங்கே பாலியல் வன்புணர்வுகள் நடந்தன. இளம்பெண்கள் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டனர். ஆனால் எப்படி அதை வெளியே சொல்ல முடியும்? அவர்கள் சங்கடப்படுவார்கள்.“ என்று சொல்கிறார் சுந்தரி.

செய்தியாளர்- பெண்கள் ஆடைகளின்றி அறைகளில் அடைக்கப்பட்டிருந்ததாக செய்திகள் கூறினவே?

சுந்தரி- ஆம், நாங்கள் விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்ததால், அவர்கள் எம்மை துன்புறுத்தினர். எம்மைத் தடுத்து வைத்துத் துன்புறுத்தினர்.

திவ்யா என்ற பாதிக்கப்பட்ட இன்னொரு இளம்பெண் சொல்கிறார், “இரண்டு அல்லது மூன்று பெண்கள் கடத்திச் செல்லப்பட்டனர். அவர்கள் குளிக்கும் போது அவர்கள் படம் எடுத்துள்ளனர்.“

முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிகள் இயக்கப் போராளிகளுக்கும் இந்த நிலைமையில் வேறுபாடு இல்லை. இளம் ஆண்கள், படித்தவர்கள் கூட அவமானத்தை சந்திக்க வேண்டியிருந்தது.

முருகன் என்ற புலிகள் இயக்கத்தின் புலனாய்வுப்பிரிவில் இருந்த முன்னாள் போராளி, ஒரு ஆண்டுக்கு மேலாக முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். தற்போது அவர், சமூகத்தில் இணைக்கப்பட்டுள்ளார்.

“முன்னாள் போராளிகளான எம்மை சீர்திருத்தவதற்காக புனர்வாழ்வு முகாமில் தடுத்து வைத்தனர். ஆனால் நாங்கள் சீர்திருத்தும் நடவடிக்கைகளை விட அதிகளவில் வன்முறைகளை சந்தித்தோம். அது சித்திரவதைக்கு அப்பாலும் இருந்தது.

கால்நடைகள் போன்றே எம்மை வைத்திருந்தனர். ஒருமுறை ஒரு மேஜரும், லெப்.கேணலும் எம்மை வந்து சந்தித்தனர். அப்போது நாம் 800 பேர் இருந்தோம்.

அவர்கள் தமது முகத்தை மறைத்திருந்தனர். அவர்கள் பேய்களைப் போன்று இருந்தனர்.“ என்றார் முருகன்.

றோசி மேலும் கூறுகிறார் “இறந்தவர்களின் சடலங்கள் வீசப்பட்டுக் கிடந்த கழிவுநீரை எடுத்துக் குடித்தோம். பசியால் ஒரு தாயும் குழந்தையும் கிணற்றில் பாய்ந்து உயிரை மாய்த்துக் கொண்டது எனக்குத் தெரியும். எனது கண்களால் அதைப் பார்த்தேன்.“

“சிறிலங்கா இராணுவம் திடீரென எமது நிலத்தைப் பிடித்தனர். அவர்கள் எமக்கு எதிராக எமது மக்களுக்கு எதிராக ஆயுதங்களைப் பிரயோகித்தனர்.

நான் போரின் இறுதிக்கட்டத்தில் புலிகளுடன் இணைந்து கொண்டேன். அவர்கள் அழைத்தார்கள், ஆனால், எமது மக்களின் உரிமைக்காகப் போராடச் சென்றேன். அது ஒரு தேவையாக இருந்தது“ என்றார் சிவா.

30 ஆண்டுகளாகத் தொடர்ந்து, கடந்த 2009 மே மாதத்துடன், சிறிலங்கா இராணுவத்தினர் பெற்ற முழுமையான வெற்றியுடன் முடிவடைந்த போரின் இறுதிக்கட்டத்தில் 40,000 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக ஐ.நா கூறுகிறது.

அரசசார்பற்ற நிறுவன வட்டாரங்களின் புள்ளிவிபரங்கள் இது ஒன்றரை இலட்சத்துக்கும் மேல் இருக்கும் என்று கூறுகின்றன.

மரணதண்டனைப் பாணியிலான கொலைகள், மருத்துவமனைகள், பாதுகாப்பு வலயங்களாக அறிவிக்கப்பட்ட பகுதிகள் மீதான விமானக் குண்டுவீச்சுகள், பொதுமக்கள் மற்றும் பெண்போராளிகள் மீதான பாலியல் தாக்குதல்கள், இரசாயன ஆயுதங்கள், கொத்தணிக்குண்டுகளைப் பயன்படுத்தியது, காயமடைந்த பொதுமக்களுக்கு மருத்துவ உதவி கிடைக்காமல் தடுத்தது, குற்றச்சாட்டுகளின்றி தடுத்து வைத்தது- இவை சிறிலங்கா இராணுவத்தின் மீது சுமத்தப்படும் போர்க்குற்றச்சாட்டுகள் பலவற்றில் சிலவாகும்.

புலிகளின் கரங்களும் இரத்தம் தோய்ந்தவை தான். தீபன் என்பவரின் 16 வயது மகன் ராஜன் பாடசாலையில் இருந்து புலிகளால் கடத்தப்பட்டார்.“ எனது மகனுக்கு 16 வயது. புலிகள் அவரை பிடித்துக் கொண்டு போய் தமது படையில் சேர்த்தனர். நாங்கள் அவனை அனுப்பவில்லை. அவன் பெரிய கனவுகளுடன் பாடசாலையில் படித்துக் கொண்டிருந்தான்“ என்கிறார் தீபன்.

puthinappalakai.com
11 Aug 2011

Geen opmerkingen:

Een reactie posten