தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 26 januari 2019

உலக அகதிகள் பெரும் அவல நிலையில்...! தீர்வு தருமா ஐ.நா உடன்படிக்கை?


உலகை உலுக்கி சிரிய சிறுவன் அயிலன் குர்டியின் உயிரற்ற உடல் 2015-ல் துருக்கிக் கடற்கரையில் ஒதுங்கிய காட்சி நினைவு இருக்கிறதா?
இன்றைய வரை அகதிகள் வாழ்வில் எந்த மாற்றமும் இல்லை. இந்தச் சூழலில்தான், மொரோக்கோ நாட்டில் சமீபத்தில் நடந்த ஐ.நா-வின் பன்னாட்டுக் குடியேற்ற மாநாட்டில், அகதிகளின் பிரச்னைக்குத் தீர்வுகாணும் வகையில் ‘பாதுகாப்பான, முறைப்படுத்தப்பட்ட குடியேற்றத்துக்கான உலகளாவிய வரைவு உடன்படிக்கை’ உருவாக்கப்பட்டுள்ளது.
வருங்காலத்தில், உலகம் முழுவதும் இருக்கும் சுமார் 258 மில்லியன் அகதிகளின் பாதுகாப்பை இது உறுதி செய்யும் என்று நம்பப்படுகிறது.
இரண்டாம் உலகப் போர் காலத்திலிருந்தே அகதிகள் வருகை, உலக நாடுகளின் தீர்க்க முடியாத பிரச்னையாக இருக்கிறது.

சமீபகாலமாக அமெரிக்க மற்றும் மேற்கு நாடுகளின் இரக்கமற்ற தடுப்பு நடவடிக்கைகளால் இந்தப் பிரச்னை தீவிரமடைந்துள்ளது.
பருவநிலை மாற்றங்களால் உருவாகியுள்ள பஞ்சம், பட்டினி, வறட்சி, உணவுப் பற்றாக்குறை, போர் சூழலால் வாழ்விடங்கள் அழிப்பு, வாழ்வாதார வாய்ப்புகள் பறிப்பு என அகதிகளை உருவாக்கும் காரணிகள் ஏராளம்.
இந்தப் பிரச்னைகளுக்குத்தான், மேற்கண்ட உடன்படிக்கை தீர்வுகளை முன்வைக்கிறது.
மனித உயிர்கள் காப்பாற்றப்படுவது, வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவது, சமூகங்களை ஒருங்கிணைப்பது இவையே உடன்படிக்கையின் முக்கிய அம்சங்களாகும்.

அழிவுக்கு வழிவகுக்கும் எல்லைப் பாதுகாப்பு முறைகளைத் தவிர்க்கவும், லட்சக்கணக்கான புலம்பெயர்ந்தோரின் மனித உரிமைகள் மீறப்படுவதைத் தடுக்கவும், இதில் வழி செய்யப்பட்டுள்ளது.
குடியேற்றப் பிரச்சினைகளை எந்த ஒரு நாடும் தனியாகச் சமாளிக்க முடியாது என்று 2016-ல், முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்த கருத்தைத் தொடர்ந்தே, ஐ.நா உறுப்பு நாடுகள் இந்த வரைவுத் திட்டத்தைத் தயாரிக்க முன்வந்தன.
ஆனால், இன்றைக்கு இந்த வரைவு அறிக்கை ட்ரம்ப்பால் நிராகரிக்கப்பட்டுள்ளது. ஆனால், அமெரிக்காவின் எதிர்ப்பைப் புறக்கணித்துவிட்டுப் பெரும்பாலான நாடுகள், இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளது.
இதேவேளை, குடியேறிகளின் வருகையால் அதிகம் பாதித்த இத்தாலி, போலந்து, ஹங்கேரி ஆகிய நாடுகளில் இந்த உடன்படிக்கைக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
ஏழ்மை, குற்றச் செயல்கள், வேலைவாய்ப்பு இழப்பு அதிகரிக்கும் என்று அவர்கள் கூறுகிறார்கள். ஐரோப்பா கண்டம் முழுவதும் அதிகரித்துவரும் குடியேற்றத்துக்கு எதிரான உணர்வால், சில நாடுகள் முடிவெடுக்க முடியாமல் தடுமாறுகின்றன.
ஐ.நா-வின் மொத்த 193 உறுப்பு நாடுகளில், 164 நாடுகள் இந்த உடன்படிக்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. அமெரிக்கா உட்பட ஆறு நாடுகள் எதிர்க்கின்றன.
பெல்ஜியம், பல்கேரியா, இஸ்ரேல், இத்தாலி, சுவிட்சர்லாந்து, ஸ்லொவேனியா ஆகிய நாடுகள் இதை நாடாளுமன்ற விவாதத்துக்கு எடுத்துக்கொண்டுள்ளன.
பாரீஸ் பருவ நிலை ஒப்பந்தத்திலிருந்து கடந்த ஆண்டு அமெரிக்கா வெளியேறியது. இப்போது இந்த உடன்படிக்கையையும் அந்த நாடு புறக்கணித்ததால், உலக நாடுகள் அதிருப்தியில் உள்ளன.
இடம்பெயர்தல் உலகத்தின் மிகப் பெரிய சவால், மக்களின் நகர்வுகள் அதிகரித்துவரும் வேளையில், ‘சுவர் எழுப்புவது’ என்பது ஒரு மாயை என பிரான்ஸ், அமெரிக்காவை நக்கலடித்துள்ளது.
கடந்த 18 ஆண்டுகளில் 60,000 அகதிகள் இடம்பெயரும்போது இறந்துள்ளனர். பொருளாதார முன்னேற்றத்துக்கும் மனிதவளப் பற்றாக்குறையைப் போக்கவும் ஜப்பான் உட்பட பல நாடுகள் தங்கள் குடியேற்றக் கொள்கைகளில் தேவையான மாறுதல்கள் செய்துள்ளன.
அதேசமயம் ‘இந்த உடன்படிக்கைச் சட்ட ரீதியாக எந்த நாட்டையும் கட்டுப்படுத்தாது’ என்றும் உறுதி அளித்துள்ளார் ஐ.நா தூதர் லூயி ஆர்பர். ‘‘குடியேறுபவர்களுக்கு எதிரான பாகுபாடுகளும், இனவெறியும் அதிகரித்து வருகின்றன.
நடைமுறையில் உள்ள முறைகேடான, குழப்பமான அணுகுமுறைகள் அவர்களைக் காப்பாற்றவில்லை. அதனால், இந்தப் புதிய முயற்சி அவசியம்’’ என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்த உடன்படிக்கைத் தேவையில்லை என்றால், அகதிகள் தங்கள் சொந்த நாடுகளில் பாதுகாப்பான எதிர்காலத்தை உருவாக்க, வளர்ந்த நாடுகள் உதவ வேண்டும் என்ற கருத்தும் வலுப்பெற்றுவருகிறது. டிசம்பர் 19ஆம் திகதி நடைபெறவுள்ள ஐ.நா சபை பொதுக்கூட்டத்தில் இந்த உடன்படிக்கை முறையாக நிறைவேற்றப்படும்.
ஆழிசூழ் உலகு, அகதி சூழ் உலகாக மாறுவதைத் தடுக்க வேண்டிய பொறுப்பு அனைத்து நாடுகளுக்குமே இருக்கிறது.
- Vikatan

Geen opmerkingen:

Een reactie posten