தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 28 november 2018

விடுதலைப் புலிகள் வெளியிட்டுள்ள விசேட அறிக்கை!

தேசிய மாவீரர் நாளான இன்றைய தினம் தாயகமெங்கும் நினைவேந்தல் நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக அனுட்டிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலகம் என்ற பெயரில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையினை இங்கு இணைக்கின்றோம்.
தலைமைச் செயலகம்,
தமிழீழ விடுதலைப் புலிகள்,
தமிழீழம்.
27.11.2018.
எமது அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய தமிழீழ மக்களே!
இன்று மாவீரர் நாள். எமது தாயக விடிவிற்காகத் தமது இன்னுயிர்களை ஈந்தளித்த உத்தமர்களை நினைவுகொள்ளும் மகத்தான நாள்.
புறக்கணிப்புக்கும் ஒடுக்குமுறைக்கும் உள்ளான எமதினத்தின் மீட்சிக்காய் அயராதுழைத்து ஆகுதியாகிய மானமறவர்களைப் பூசிக்கும் புனிதநாள்.
இனத்தின் வாழ்வுக்காய் தமது வசந்தங்களைத் துறந்து வாழ்ந்து மறைந்த எமது மாவீரர்களை ஈன்றெடுத்த பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் என்றும் போற்றுதற்குரியவர்கள்.
பெயருக்காகவோ புகழுக்காகவோ அல்லது போர்மீது கொண்ட பற்றுதலாலோ எமது மாவீரர்கள் போராடப் புறப்படவில்லை. போரை ஒரு தொழிலாக வரித்துக்கொண்டோ கூலிப்படைகளாகவோ எமது மாவீரர்கள் களமாடவில்லை.
எமது மொழியின், இனத்தின், பண்பாட்டு விழுமியங்களின் மீதான அடக்குமுறைகளுக்கெதிராகவே இவர்கள் போராடப் புறப்பட்டார்கள்.
எமது இனத்தின்மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைக்கு எதிராகவே ஆயுதமேந்திக் களமாடினார்கள்.
நீதியின் அடிப்படையில் தொடங்கப்பட்டு வளர்ச்சிபெற்ற எமது போராட்டம் ஆயுதவழியில் பரிணமித்தது காலத்தின் கட்டாயத்தாலாகும்.
வேறு தெரிவுகளற்ற நிலையிலேயே இறுதி வழிமுறையாக ஆயுதவழியை எமது மக்கள் தேர்ந்தெடுத்தார்கள்.
உலகில் நடைபெற்ற, நடைபெற்றுக்கொண்டிருக்கும் அனைத்து ஆயுதவழி விடுதலைப் போராட்டங்களுக்குமுள்ள நியாயத்தன்மை எமது போராட்டத்துக்குமுண்டு.
தர்மத்தின் துணையோடும் எமது மக்களின் பேராதரவோடும் மாவீரர்களின் அதியுட்ச அர்ப்பணிப்போடும் வீறுநடைபோட்டு வளர்ச்சியடைந்து வந்த எமது விடுதலைப் போராட்டம் உலக அரங்கில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
எமது மக்களின் அரசியல் வேட்கை உலகமட்டத்தில் பேசுபொருளாயிற்று. எமது படைபல மேலாண்மையின் உச்சநிலையிலே உலக ஒழுங்கு மாற்றங்களுக்கேற்ப நாம் பன்னாட்டு நடுநிலைமையோடு பேச்சுமேசைக்குச் சென்றோம்.
இழுத்தடிப்புக்கள், ஏமாற்றங்கள், எம்மைப் பலவீனப்படுத்த விரிக்கப்பட்ட வலைகள் என்று தொடர்ந்துவந்த தடைகளைத்தாண்டி நாம் சமாதானத்துக்கான அவாவுடன் தொடர்ந்து பயணித்தோம். ஈற்றில் ஒருதலைப்பட்சமான போரை சிறிலங்கா அரசு தொடுத்து கொடூரமான ஆக்கிரமிப்புப் போரை நடாத்தியது.
'சமாதானத்துக்கான போர்' என்ற ஆர்ப்பரிப்போடு வல்லாதிக்க சக்திகளின் துணையுடன் எமது மண்ணை வல்வளைத்து, மக்களைத் துரத்தியடித்துத் தொடுக்கப்பட்ட போரில் நூற்றுக்கணக்கில், ஆயிரக்கணக்கிலென்று எமது மக்கள் கோரமாகப் பலிகொள்ளப்பட்டார்கள்.
புலம்பெயர்ந்து வாழும் எமது தமிழ்மக்கள் ஒட்டுமொத்தமாக உலகின் முற்றத்திலிறங்கி எமது மக்களைக் காக்க வேண்டி அர்ப்பணிப்பான போராட்டங்களை நடாத்தினார்கள்.
ஆனாலும் பல்வேறுபட்ட சக்திகளின் உறுதுணையுடன் முன்னெடுக்கப்பட்ட எமது மக்கள் மீதான கொடியபோர் முள்ளிவாய்க்கால் பேரழிவையே எமது மக்களுக்குத் தந்தது.
உலகமே பார்த்திருக்க மிகப்பெரிய மானுட அழிவை எமது மக்கள் சந்தித்தனர்.
போர் முடிவடைந்துவிட்டதாகச் சொல்லப்படும் இந்த ஒன்பதரை ஆண்டுகளில் தமிழ் மக்களின் நிலை மிகமிகப் பாரதூரமானளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
தமிழரின் தாயகக் கோட்பாட்டைச் சிதைக்கும்வகையில் பல்வேறு காய்நகர்த்தல்களைச் சிங்கள தேசம் செய்துகொண்டிருக்கின்றது.
தமிழர்களைப் பல்வேறு வழிகளில் அவர்களின் பூர்வீக வதிவிடங்களிலிருந்து வெளியேற்றி வரும் அதேவேளை திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களை அவ்விடங்களில் நிறுவி வருகின்றது.
பொருளாதாரத்தை மையமாகக் கொண்ட சிங்கள ஆக்கிரமிப்புக்கள் எமது நிலங்களில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
தமிழரின் வளங்கள் சுரண்டப்படுகின்றன. இன்னமும் படைநிலைகள் வலுவாகவே எமதுமக்கள் மத்தியில் காணப்படுகின்றன. சிவில் நடவடிக்கைகளில் படையினரின் தலையீடுகள் நிறைந்திருக்கின்றன.
இன்னொருபுறம், சிறிலங்கா அரசுமீதான பன்னாட்டு அழுத்தங்கள், தமிழருக்கான நீதி, பொறுப்புக்கூறல், போர்க்குற்ற விசாரணை என்பன கழுதை தேய்ந்து கட்டெறும்பான நிலையிலேயே வந்து நிற்கின்றன.
ஐ.நா. மனிதவுரிமை கூட்டத்தொடரில் வல்லரசுகள் தீர்மானங்கள் கொண்டுவருவதும், அவற்றை எதிர்ப்பது - ஆதரிப்பது என்பதில் விவாதங்களும், தீர்மான மாற்றங்களும் என ஒவ்வோராண்டும் குறுகிக்குறுகி, கால இழுத்தடிப்புக்களோடு நிகழ்ந்த மாயவித்தைகள் இறுதியில் சிறிலங்காவில் நிகழ்ந்த ஆட்சிமாற்றம் என்ற நாடகத்தோடு தடம்புரண்டன.
தமக்கான நீதிவேண்டி பன்னாட்டுச்சமூகத்தின்பால் எமது மக்கள் கொண்டிருந்த நம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமாகத் தகர்க்கப்படத் தொடங்கியிருக்கின்றது.
உலக அரசுகள் தமது பிராந்திய, பொருளாதார நலன்களுக்காக எமது விடுதலைப் போராட்டத்தையும், எமது மக்களின் அவலங்களையும் பயன்படுத்திக்கொண்டு எமது மக்களை நிர்க்கதியாக விட்டுவிட முயல்வதை எமது மக்கள் உணரத்தொடங்கி விட்டார்கள்.
தமிழர் மீதான இனவழிப்பைத் தமது அரசியல் நலன்களுக்காகப் பயன்படுத்திய நாடுகள் பல இன்று தமது வழிமுறை தோல்வி கண்டுள்ளதை உணரத்தொடங்கியுள்ளார்கள்.
சிறிலங்காவில் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் அரசியலானது பன்னாட்டுச் சமூகத்துக்குக் காத்திரமான செய்தியைச் சொல்லி நிற்கின்றது.
எவ்வாறு தமிழ்மக்கள் தொடர்பில் தான்தோன்றித்தனமாகவும் அடாவடித்தனமாகவும் சிறிலங்கா அரச கட்டமைப்பு செயற்பட்டு வந்ததோ அதே முகத்தைத்தான் இன்று பன்னாட்டுச்சமூகம் நோக்கியும் காட்டியுள்ளது.
தாங்கள் கொண்டுவந்த நல்லாட்சி இன்று தெருச்சண்டியராக மாறி தனது கோரமுகத்தைக் காட்டியுள்ளது உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
தனது பிணத்தின்மீதே வடக்கு - கிழக்கு இணைப்பு நடக்கும் என திமிரோடு சூளுரைக்கும் சிங்களத் தலைவரின் பேரினவாத ஆணவம் இதற்கு மிகச்சிறந்த ஓர் எடுத்துக்காட்டு.
இந்தப் பேரினவாத ஆட்சியின்கீழ் தமிழ்மக்கள் நிம்மதியாகவும் உரிமையுடனும் வாழமுடியுமென்பதை உலகம் எவ்வாறு அறிவுறுத்துகின்றது?
தமிழ்மக்கள் முழுமையாக உடன்படாத போர்க்குற்ற விசாரணைப் பொறிமுறைகளைக்கூட சிங்கள அரசு ஏற்றுச் செயற்பட முன்வரவில்லை.
100 நாட்களில் அரசியற்கைதிகள் விடுதலை, காணி விடுவிப்பு என அலங்காரமாகச் சொல்லப்பட்ட ஆட்சிமாற்ற வாக்குறுதிகள் எவையும் நிறைவேற்றப்படவில்லை.
சிறிலங்கா அரசுமீது இருந்த கொஞ்சநஞ்ச பன்னாட்டு அழுத்தத்தையும் நீர்த்துப்போகச் செய்யும் ஒரு கருவியாகவே ஆட்சிமாற்றம் நிகழ்ந்து முடிந்தது.
இன்னொருபுறம், தமிழ்மக்களின் வாக்குகளைப் பெற்று தமிழ்மக்களின் பிரதிநிதிகளாக நாடாளுமன்றம் சென்றோர் இனியும் தங்களது செல்வழியைப் பரிசீலிக்காமல் இருக்க முடியாது.
சிங்களப் பேரினவாத பூதத்தின் உண்மை முகத்தை வெளிக்கொணர வேண்டிய இத்தருணத்திற்கூட சிறிலங்காவின் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதும் குறிப்பிட்ட அரசியல் தலைமையைப் பாதுகாப்பதும் தான் தமது தலையாய கடமையென்று தமிழ்த்தலைமைகள் செயற்படுகிறார்கள்.
இதுவரை நிகழ்ந்த சிறிலங்கா அரசியல் யாப்பு உருவாக்கங்கள் எவற்றிலும் தமிழ்த்தரப்பு பங்கேற்றதில்லை, உடன்பட்டதுமில்லை என்ற வரலாற்றை மாற்றி யாப்பு மாற்றமூடாக இனப்பிரச்சனைக்கான தீர்வு என்ற மாயவலையைத் தமிழ்மக்கள் மீது போர்த்தி உரிமைப் போராட்டத்தைத் திசை திருப்பியதில் எமது தமிழ்த் தலைமைகளுக்கும் பாரிய பங்குண்டு.
இன்றிருக்கும் சிங்கள தேசத்தின் அரசியற் கொதிநிலைக்குள்ளும் தமிழ்மக்களின் நலன்பேணாது தமது நலன் மட்டுமே முதன்மையென்று அறம்பிறழ்ந்து பயணிக்கும் தமிழ்த்தலைமைகளுக்கு எமது மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.
இவ்வாறு தாம் நம்பிய தமிழ்த்தலைமைகள் மட்டுமன்றி பன்னாட்டுச் சமூகம், ஐ.நா. சபை போன்றவையும் ஏமாற்றி தம்மைப் பந்தாட நினைப்பதை உணர்ந்துகொண்ட மக்கள் யாரை நம்புவது என்ற சங்கடத்துள் ஆழ்ந்துள்ளார்கள்.
இவ்விடத்தில் இந்தியாவும் பன்னாட்டுச் சமூகமும் ஐ.நா சபையும் எமது மக்களின் அரசியல் வேட்கையையுணர்ந்து செயற்பட வேண்டும். தமிழீழ மக்கள் எப்போதும் இந்தியாவின் எதிரியாக இருந்ததில்லை.
காலங்காலமாக நாம் சொல்லிவருவது போன்று தொடர்ந்தும் நல்லுறவைப் பேணவே நாம் விழைகின்றோம்.
அதேபோல் உலகநாடுகள் எமது விடுதலைப் போராட்டத்தைப் பயங்கரவாதமாக உருவகித்ததன் விளைவானது மிகப்பாரதூரமான முறையில் எம்மைப் பாதித்துள்ளதுடன் சிங்களப் பேரினவாத அரசுக்குப் பலத்தையும் அளித்துள்ளது.
எமது அமைப்பு தமிழ்மக்களுக்கான அரசியற்பணியை சுதந்திரமாக ஆற்றுவதற்கு இடையூறாக இருக்கும் எமது அமைப்பு மீதான தடையை இந்தியா உட்பட உலகநாடுகள் நீக்க வேண்டுமென்றும் எமது மக்களின் விடுதலைப் போராட்டத்தின் நியாயத் தன்மையை அங்கீகரிக்க வேண்டுமென்றும் இந்நாளில் கேட்டுக் கொள்கின்றோம்.
அன்பார்ந்த மக்களே,நீண்ட நெடிய எமது விடுதலைப் பயணத்தில் இன்றுவரை சிங்களப் பேரினவாத அரசு செய்துவந்தவை அனைத்தும் ஏமாற்று வழிமுறைகளே.
தமிழ்மக்களின் ஆயுதபலம் முடக்கப்பட்டதன்பின்னர் அது தனது கோரமுகத்தை திமிர்த்தனத்தோடு வெளிப்படுத்தி நிற்கின்றது.
மண்பறிப்பு, படைப்பெருக்கம், தமிழ்மக்களின் நிர்வாக முடக்கம், தான்தோன்றித்தனமாக சிவில் நிர்வாகங்களில் தலையிடுவது என்று பல்வேறு தளங்களில் ஆணவமாகவே சிங்களப் பேரினவாத அரசு நடந்துவருகின்றது.
நீண்ட போரில் அதிகம் பாதிக்கப்பட்டு அல்லற்படும் எமது தாயக உறவுகளின் துன்பங்கள் சொல்லில் அடங்காதவை. பெற்றோரைப் போரில் இழந்த பிள்ளைகள், உடலுறுப்புக்களைப் போரில் இழந்த மக்கள், கணவனை இழந்த ஆயிரக்கணக்கான கைம்பெண்கள், வாழ்வாதாரத்துக்காக அன்றாடம் அல்லாடும் பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் என அனைவரினதும் துயரங்களுக்கும் தீர்வு காணப்பட வேண்டும்.
மனிதநேயப்பணிகளோ, முறையான அபிவிருத்திகளோ மக்கள் நலன்சார்ந்து நடைமுறைப்படுத்தக்கூடிய இயல்புநிலை எமது தாயகத்தில் திட்டமிட்டுச் சீர்குலைக்கப்பட்டுள்ளது.மறுபுறத்தில் பன்னாட்டு விசாரணை, மனிதவுரிமைக் கூட்டத்தொடர் தீர்மானங்கள், பன்னாட்டு அழுத்தம் என்பன போன்ற விளையாட்டுக்களில் எமது மக்களின் பிரச்சனைகள் பகடையாகவே பயன்படுத்தப்படுகின்றன.
பன்னாட்டு அழுத்தமென்பது வல்லரசுகள் தங்கள் வசதிக்குப் பயன்படுத்தும் ஒரு கருவியாக இருந்து வந்துள்ளதோடு, அதுவும் நீர்த்துப்போய்விட்ட நிலைக்கே வந்துள்ளது.
சிங்களப் பேரினவாத அரசின்கீழ் தமிழ்மக்கள் சேர்ந்துவாழ முடியாது என்பதை உரத்துச்சொல்லும் நிலைமை முன்னெப்போதையும்விட இப்போது துலாம்பரமாக உள்ளது.
எமது மக்கள் நீதியோடும், உரிமையோடும் வாழ வகைசெய்யும் இறைமையுள்ள தமிழீழம் என்ற தீர்வுதான் நிரந்தரமானது என்பதை உரத்துச் சொல்வோம்.
அதற்காக உழைப்போம். அன்பான புலம்பெயர் உறவுகளே, ஒப்பீட்டளவில் தாயக மக்களைவிட பாதுகாப்பான சூழலும் அதிகரித்த வளங்களும் கொண்டிருப்பவர்கள் நீங்கள். பன்னாட்டுச் சமூகத்தை எளிதில் அடையக்கூடிய வாயப்புக்களைப் பெற்றிருப்பவர்களும் நீங்களே. அவ்வகையில் எமது விடுதலைப் போராட்டத்தின் நியாயங்களையும் தாயகத்தில் எமதுமக்கள் எதிர்கொண்டுவரும் இன்னல்களையும் உலகமுற்றத்தில் கொண்டுசேர்க்க வேண்டிய கடமை பெருமளவு உங்களையே சாரும்.
எத்தனையோ இடர்களுக்கிடையிலும், அடக்குமுறைகளுக்கிடையிலும் எமது மக்கள் தாயகத்தில் தமது உரிமைகளுக்காகக் குரல்கொடுத்து வருகிறார்கள்.
காணி அபகரிப்பு, அரசியற் கைதிகள் விடுதலை, காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பிலான போராட்டங்கள் உட்பட பல தளங்களில் போராடி வருகிறார்கள்.
இவர்களின் போராட்டங்களையும் தமிழின அழிப்புக்கு நீதிவேண்டி அனைத்துலக விசாரணைக் கோரிக்கையையும் உலகமட்டத்தில் எடுத்துச்செல்லவேண்டிய பொறுப்பும் சர்வதேச ஆதரவைத் திரட்டும் கடமையும் புலம்பெயர்ந்த தமிழ்ச்சமூகத்தையே சாரும்.
குறிப்பாக, தமிழ் இளையோரின் அர்ப்பணிப்புடன்கூடிய பங்களிப்பு மிகமிக அவசியமாகும்.
அன்பான தமிழக உறவுகளே!எமது விடுதலைப் போராட்டத்தின் தொடக்க காலத்திலிருந்து இன்றுவரை எமக்கு உந்துசக்தியாக இருந்து வந்திருக்கிறீர்கள்.
தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கான இந்தியத் துணைக்கண்ட ஆதரவுத்தளத்தின் திறவுகோல் நீங்கள்தாம். எமக்கான ஆன்ம பலமும் நீங்கள்தாம் என்ற அடிப்படையில் தொடர்ந்தும் உங்களது அயராத உழைப்பும் ஆதரவும் எமக்கு வேண்டுமென்பதை உரிமையுடன் பதிவு செய்ய விளைகின்றோம்.
அன்பான தமிழ்பேசும் மக்களே, உலக வரலாற்றில் இன்றைய மனிதகுல செழுமையென்பது போராட்டங்களால் செப்பனிடப்பட்டுத்தான் வந்துள்ளது.
சமவுரிமைக்கான வேட்கையும் அதை நோக்கிய போராட்டங்களும் வரலாறு முழுவதும் பரவியிருக்கின்றன.
தமது எழுச்சிக்கானதும், மீட்சிக்கானதுமான போராட்டத்தைத் தொடர்ந்து தக்கவைத்திருந்த இனங்களும் சமூகங்களும் வெற்றியடைந்திருக்கின்றன.
இந்த வரலாற்று நியதிக்கமைய எங்கள் போராட்டமும் வெற்றிபெறும் நாளொன்று கனிந்துவரும். அதுவரை நாம் தொடர்ந்து போராடுவோம்.
எங்கள் மாவீரர்களின் உயர்ந்த தியாகம் எமது போராட்டத்தின் தேவையையும் எமது வரலாற்றுக்கடமையையும் என்றும் பறைசாற்றிய வண்ணமே இருக்கும்.
விடுதலை வேள்வியில் ஆகுதியாகிய இந்த உத்தமர்களை நினைவுகொள்ளும் இந்நாளில், விடுதலை பெறும்வரை நாம் தொடர்ந்து போராடுவோம் என உறுதியெடுத்துக் கொள்வோமாக.
"புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்"
தலைமைச் செயலகம்,
தமிழீழ விடுதலைப் புலிகள்,
தமிழீழம்.

https://www.ibctamil.com/srilanka/80/109909?ref=recommended1

Geen opmerkingen:

Een reactie posten