சமஷ்டி ஆட்சி முறைமையை அடிப்படையாகக் கொண்ட அரசியல் யாப்பு மாற்றத்திற்கு ஒருபோதும் அனுமதி வழங்கப்போவதில்லை என்று ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி அறிவித்திருக்கின்றது.
சமஷ்டி ஆட்சிக் கட்டமைப்பை உள்ளடக்கிய புதிய அரசியல் சாசனத்தை உருவாக்கும் முயற்சியில் ரணில் – மைத்ரி தலைமையிலான நல்லாட்சி அரசாங்கம் ஈடுபடவில்லை என்று ஐக்கிய தேசிய முன்னணியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ஜாதிக ஹெல உருமயவின் தலைவர் பாட்டலி சம்பிக்க ரணவக்க அடித்துக் கூறியுள்ளார்.
அதேவேளை என்றாவது சமஷ்டி ஆட்சிக் கட்டமைப்பை அடிப்படையாகக் கொண்ட அரசியல் யாப்புத் திருத்தமொன்று நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டால் அதற்கு எதிராக நிச்சயம் வாக்களிப்போம் என்றும் அவர் சூளுரைத்திருக்கின்றார்.
சிறிலங்கா நாடாளுமன்றில் மஹிந்தவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்பட்டமை ஹன்சாட்டின் ஊடாக உறுதிசெய்யப்பட்டுள்ளமை குறித்து விளக்கமளித்து ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க காணொளி பதிவொன்றை வெளியிட்டிருக்கின்றார்.
அதில் மஹிந்த ராஜபக்சவும் அவரது சகாக்களும் பொய்யான தேசாபிமானத்தை முன்னிலைப்படுத்தி நாட்டு மக்களை தவறான முறையில் வழிநடத்தி வருவதாக குற்றம்சாட்டினார்.
“பொய்யான தேசாபிமானத்தை காட்டி நாட்டு மக்களை தவறான முறையில் வழிநடத்த இடமளிக்கப் போவதில்லை. இந்த நாட்டில் சமஷ்டி அரசியல் யாப்பினை கொண்டுவரப் போவதாக பொய் பிரசாரம் செய்கின்றனர். சமஸ்டி அரசமைப்பை கொண்டு வந்தது நாங்கள் அல்ல. சமஷ்டி அரசமைப்பை சரத் என் சில்வா மற்றும் ஜி.எல்.பீரிஷ் ஆகியோரே தயாரித்திருந்தனர். அவர்கள் இருவருமே தற்போது மஹிந்த ராஜபக்சவின் கோட்டையின் முக்கிய தளபதிகளாக உள்ளனர். ராஸபக்ச கோட்டையில் உள்ளவர்களால் வாக்களிக்க முடியுமாக இருந்தால் மாத்திரம் 150க்கும் அதிகமான வாக்குகளை சமஷ்டிக்கு ஆதரவாக நாடாளுமன்றத்தில் பெற்றுக்கொள்ள முடியும்.
அதனைத் தவிர சமஸ்டி முறையிலான அரசியலமைப்பை நிறைவேற்றுவதற்கு சர்வஜன வாக்கெடுப்பினை நடத்த வேண்டும். எனவே யாரும் சமஷ்டி அரசியலமைப்பு யோசனையை கொண்டுவரவில்லை.
புதிய அரசியலமைப்பினை உருவாக்கவே குழு அமைக்கப்பட்டது. அதில் மஹிந்த ராஜபக்சவை தினேஷ் குணவர்தன, பிரசன்ன ரணதுங்க ஆகியோர் பிரதிநிதித்துவப்படுத்தினர். ஜனாதிபதியை நிமால் சிறிபால, டிலான் பெரோ மற்றும் சுசில் பிரேமஜயந்த ஆகியோர் பிரதிநிதித்துவப்படுத்தியிருந்தனர்.
அப்படியென்றால் இவர்களது சம்மதத்துடனா சமஷ்டி அரசியல் சாசனம் கொண்டு வர முயற்சிக்கப்படுகின்றது என்ற கேள்வி எழுகின்றது. எனினும் தவிர்க்க முடியாத நிலையில் சமஷ்டி அரசியல் முறை நாடாளுமன்றில் வாக்கெடுப்புக்கு கொண்டுவரப்படுமாக இருந்தால் அதற்கு எதிராக வாக்களிப்பதுடன் எந்தவொரு நிலையிலும் அது நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படுவதற்கு இடமளிக்கமாட்டோம்”
வெளிநாடுகளில் பிரஜாவுரிமைகளை பெற்றுள்ள ராஜபக்ச சகோதரர்கள் உட்பட அவர்களது விசுவாசிகள் தமது சுகபோகங்களுக்காக நாட்டின் ஆட்சியை கைப்பற்றவே தேசப்பற்று இல்லாதவர்களைப் போல் ஐக்கிய தேசிய முன்னணி மீது பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் சம்பிக்க ரணவக்க குற்றம்சாட்டினார்.
மஹிந்த ராஜபக்சவின் சகோதரர்களான கோட்டாபய ராஜபக்ச மற்றும் பெசில் ராஜபக்ச ஆகியோர் அமெரிக்க பிரஜைகள் என்பது இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.
இந்த நிலையில் வெளிநாடடுப் பிரஜைகளுக்கு நாட்டின் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை என்று சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
“வெளிநாட்டு பிரஜைகளுக்கும் ஐக்கிய அமெரிக்காவின் பிரஜாவுரிமையை பெற்றுள்ளவர்களிடம் இந்த நாட்டின் ஆட்சியை ஒப்படைப்பதற்கு நாங்கள் இடமளிக்கப் போவதில்லை. அவுஸ்திரேலியாவிலும், இத்தாலியிலும் தம்முடைய மனைவி பிள்ளைகளையும் சொத்துகளையும் ஒளித்து வைத்துகொண்டு, போலியான தேசாபிமானத்தை காட்டி நாட்டு மக்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ள முயற்சிக்கும் இழிவான அரசியல்வாதிகளுக்கும் நாங்கள் இடமளிக்க போவதில்லை”.
ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி தேர்தலுக்கு அஞ்சியே, பொதுத் தேர்தலை நடத்தவிடாது தடுத்து வருவதாக மஹிந்தவாதிகள் தொடர்ச்சியாக குற்றம்சாட்டி வருகின்றனர்.
இந்த குற்றச்சாட்டுக்களை நிராகரிக்கும் சம்பிக்க ரணவக்க, சட்டப்படி தேர்தலை நடத்த முன்வந்தால் எந்தவொரு தேர்தலுக்கும் முகம்கொடுக்க தாம் தயார் என்று சூளுரைததார். அதேவேளை முடிந்தால் பொதுத்
தேர்தலுக்கு முன்னதாக ஜனாதிபதி தேர்தலை நடத்த முடியுமா என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு பாட்டலி சம்பிக்க ரணவக்க சவால் விடுத்துள்ளார்.
“நாங்கள் தேர்தலுக்கு அஞ்சியுள்ளதாக மைத்ரி – மஹிந்த அணியினர் பிரசாரம் செய்து வருகின்றனர். நாங்கள் மிளகாய்தூள் ஜனநாயகத்துக்கும், கதிரைகளின் கால்களை உடைத்து சபாநாயகரை தாக்கும் ஜனநாயகத்துக்கும், பொலிஸ் அதிகாரிகளின் கன்னத்தில் அறைந்து மக்களின் வாக்குகளை கொள்ளையடிக்கும் ஜனநாயகத்துக்கும்
தான் பயப்படுகின்றோம். எனினும் நீதியான முறையில் நடத்தப்படும் எந்தவொரு ஜனநாயக ரீதியிலான தேர்தலுக்கும் நாம் பயமில்லை.
இன்று ஜனாதிபதி தேர்தலே முதலில் நடத்தப்படவேண்டும். ஜனாதிபதி தனக்கு மக்கள் வழங்கிய வாக்குகளில் கைவைத்து, தனக்கு எதிராக செயற்பட்ட குழுவினருடன் இணைந்து சட்டவிரோதமாக அரசாங்கத்தை
தன்வசப்படுத்தியுள்ளார். எனவே எதிர்வரும் ஜனவரி மாதம் 8 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தலை நடத்த முடியுமென்றால் மக்களிடம் சென்று மீண்டும் வாக்குகளை கேளுங்கள் என்று ஜனாதிபதியிடம் கேட்டுக்கொள்கின்றோம்.
சட்டரீதியான அரசாங்கத்தை அமைக்க நாடாளுமன்றத்துக்கு இடம் கொடுங்கள் அதன் ஊடாக நாங்கள் ஜனநாயக தேர்தலை நடத்துகின்றோம்”.
தானே பிரதமர் என்று கூறிவரும் மஹிந்த ராஜபக்சவிற்கும், அவரது அமைச்சரவை என்று கூறிக்கொள்ளும் நபர்களுக்குமான நிதிகளை முடக்க ஐக்கிய தேசிய முன்னணி உள்ளிட்ட எதிர் கட்சிகள் மேற்கொண்டுள்ள
நடவடிக்கையால் அரச பணியாளர்களுக்கான சம்பளம் தடைப்படும் என்று மஹிந்தவாதியான விமல் வீரவன்ச எச்சரிக்கை விடுத்து வருகின்றார்.
எனினும் இந்த குற்றச்சாட்டுக்களில் எந்தவித உண்மையும் இல்லை என்று தெரிவிக்கும் பாட்டலி சம்பிக்க ரணவக்க, பிரதமர் மற்றும் அமைச்சரவை இல்லாத நிலையில் அவற்றுக்கான நிதி ஒதுக்கீடுகளையே தாம் முடக்க நடவடிக்கை எடுத்திரு்பதாகவும் கூறியுள்ளார்.
“கலைக்கப்பட்ட பின்னும் சட்டவிரோதமான அரசாங்கமாக செயற்படும் மஹிந்த ராஜபக்ச உள்ளிட்ட அமைச்சரவை அமைச்சர்களின் சம்பளத்தை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம். இதனால் அரச ஊழியர்களின் ஊதியங்கள் நிறுத்தப்படமாட்டாது. எனினும் சட்டவிரோத அமைச்சரவை அரச பணத்தில் சம்பளம் பெற முடியாது. அத்துடன் அரச சொத்துக்களை சட்டவிரோதமான பயன்படுத்தி வருகின்றமை தொடர்பில் அவர்களுக்கு எதிராக நீதிமன்றத்துக்கு செல்லவுள்ளோம். அரச சொத்துகள் சட்டத்தின் கீழ் இவர்கள் கைதுசெய்யப்பட்டால் பிணை வழங்கப்படமாட்டாது”. என்றார்.
https://www.ibctamil.com/srilanka/80/109611?ref=recommended3
Geen opmerkingen:
Een reactie posten