தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 21 november 2018

ஏன் ஐயா அலைகிறீர்கள்? சம்பந்தர் ஐயாவிற்கு கனடாவில் இருந்து ஒரு பகிரங்க மடல்


சிங்கள அரசியல் தான் தலையைச் சுத்துகிறதென்றால் தமிழ் அரசியல் அதைவிட சுத்துகிறது. அதனால் உங்களிடம் இருந்தே தெளிவைப் பெறவிளைகின்றேன் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு கனடாவில் இருந்து அரசியல் ஆய்வாளர் நேரு குணரத்தினம் ஒரு பகிரங்க மடல் வரைந்துள்ளார்.
குறித்த மடலில்,
வணக்கம் ஐயா
சிங்கள அரசியல் தான் தலையைச் சுத்துகிறதென்றால் தமிழ் அரசியல் அதைவிட சுத்துகிறது. அதனால் உங்களிடம் இருந்தே தெளிவைப் பெறவிளைகின்றேன்.
நான் இங்கு முன்வைக்கும் கருத்தியல் பலர் மனதில் இருப்பது தான் என்னிடமும் பலர் கேட்டனர்.
உங்களிடமே பதிலுக்காக விட்டுவிடுகின்றேன். தற்போதைய சிங்களத்தின் சனநாயக மறுப்பு உங்களுக்கு பெரும் மன உளைச்சல் தருவது போல் தெரிகிறது.
1956இல் தமிழரசுக்கட்சியில் இணைந்து தமிழ் அரசியலுக்கு வந்தீர்கள். 62 வருடங்களாக தமிழினத்திற்கான சனநாயக மறுப்பை தொடர்ச்சியாக கண்ணால் கண்டசாட்சி நீங்கள். ஆகவே இன்றைய சிங்களத்தின் மீதான சனநாயக மறுப்பு உங்களுக்கு ஒன்றும் புதிதல்ல என்று நினைகிறேன்.
ஆனால் ஐயா 70களில் சிறீமாவோ மேற்கொண்ட சர்வாதிகார சனநாயக மறுப்பு 2004இல் சந்திரிகா சமாதான முயற்சியைக் குழப்ப மேற்கொண்ட அதிகாரவெறிச் செயற்பாடு என பல தடவைகளில் சிங்களத்தால் தமழர் மட்டுமல்ல சிங்களமும் பாதிக்கப்பட்ட நிலைமைகள் முன்னரும் உண்டு.
இவ்வாறான காலங்களில் எல்லாம் அரசியலமைப்பு முறைகேடாகவே பயன்படுத்தப்பட்டது என்பதுவும் உங்களுக்குத் தெரியும். தமிழர் சார்ந்து சிங்களத்தின் அரசியலமைப்பு என்றும் எதனையும் சாதித்துவிடவில்லை என்பதே உங்கள் ஆசான் தந்தை செல்வா முதல் தமிழ்த் தலைமைகள் அனைவரின் ஏகோபித்த கருத்து.
அதனை ஆதரித்தே 83இல் இருந்து ஏனையவர்களுடன் சேர்ந்து நாடாளுமன்றத்தையே புறக்கணித்தீர்கள். சிங்களத்தின் அரசியலமைப்பு சிங்களத்திற்குக் கூட வினையாகிவிடும் என்பதே இன்றைய நிகழ்வும் சொல்லும் ஆணித்தரமான செய்தி.
இந்நிலையில் எந்த நம்பிக்கையில் இப்போதும் சிறீலங்கா அரசிலமைப்பிற்குள் தீர்வு என முயல்கின்றீர்கள்? பார்த்தீர்களா?
அரசியலமைப்பின் நிலைமையை என உங்களின் பின்னால் அணிவகுத்து நிற்கும் சர்வதேசம் என அடிக்கடி சொல்லும் சர்வதேசத்தைப் பார்த்துக்கேட்க ஏன் இன்று தயங்குகின்றீர்கள்? இப்படிக் கேட்கும் வாய்ப்பு இனிமேல் எப்போது உங்களுக்கு மீண்டும் கிடைக்கும்?
கடந்த 4 வருடங்களாக மைத்திரியை ஆட்சிக்குக் கொண்டு வந்து தீர்வு வந்துவிடும் என முயன்றீர்கள். கடந்த இரண்டு தீபாவளிகளுக்கு அந்த வருட முடிவிற்குள் நல்லவொளி தென்படும் என நம்பிக்கையூட்டினீர்கள்.
ஐயா மூன்றாவது தீபாவளியும் இந்த ஆண்டு வந்து சென்றுவிட்டது. ஆனால் காரிருள் மட்டும் சூழ்ந்துள்ளதே. இன்றைய நிலையில் தமிழ் மக்களுக்கு என்னதான உங்கள் செய்தி?
இன்று மோதிக் கொள்ளும் ரணிலிடமும் மகிந்தாவிடமும் சென்று பேசினீர்கள். அவர்கள் எதைத் தருவார்கள் என்ற விடயத்தை எழுத்தில் தந்தால் அது ஏற்புடையதாக இருந்தால் அதன் அடிப்படையில் ஆதரவு தரலாம் என்றீர்கள். ஐயா மிகவும் குழப்புகின்றீர்கள்.
இனிமேல் அரசியலைப்பைப் பற்றிப் பேசி எவ்வித பலனுமில்லை என்பதை முதலில் ஏற்றுக் கொள்கிறீர்களா? ஒரு புதிய அரசியலமைப்பு கொண்டுவரப்படுவதானால் அதற்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையும் ஒரு மக்கள் கருத்துக்கணிப்பும் நடந்தாக வேண்டும்.
இரண்டு பிரதான சிங்களக் கட்சிகளும் சேர்ந்தாலே அது சாத்தியமாகும் என்பதுவும் உங்களுக்கு நன்றாகவே தெரியும். ஆனால் இன்றோ அவ்வாறு இணைந்த தம்பதி விவாகரத்துப் பெற்று சேர்ந்து வாழ்ந்த வீட்டையும் எரித்துவிட்டுப் பிரிந்து விட்டனர்.
இந்த சூழலில் இனிமேலும் ஒரு புதிய அரசியலமைப்பு எவ்வாறு சாத்தியம் என விளக்குவீர்களா? அதுசரி 2015 சனவரியில் மைத்திரி கையொப்பம் இட்டுத் தந்த கடதாசிக்கும் 2015 பாராளுமன்றத் தேர்தலின் போது ரணில் போட்டுத் தந்த கடதாசிக்கும் இந்த ஆண்டு பெப்பிரவரியில் நம்பிக்கையில்லா பிரேரணையின் போது ரணில் மீண்டும் தந்த கடதாசியிலும் உறுதியளித்த விடயங்களுக்கு இதுவரை என்ன நடந்தது என தமிழ் மக்களுக்கு விளக்குவீர்களா ஐயா?
ஐயா போடப்பட்ட ஒப்பந்தங்களே கிழித்தெறியப்பட்ட நிலையிலேயே தந்தை செல்வா பிரிவினை என்றார். நீங்கள் வாங்கும் கடதாசிகள் எம்மாத்திரம் என்பதே இந்த 4 வருடங்கள் மீண்டும் நிரூபிக்கும் வரலாறு! இந்நிலையில் மீண்டும் கடதாசியுடன் ஏன் ஐயா அலைகின்றீர்கள்?
ராதிகா குமாரசாமி இன்றைய சனநாயக மறுப்பு விடயத்தில் சிங்கள கல்வியாளர்கள் அமைதி காப்பது குறித்து விசனம் தெரிவித்துவிட்டு இரண்டும் கள்ளர்கள் என்பதால் இருவர் மீதும் விசனத்தில் அவர்கள் அமைதியாக இருப்பதாக சொல்லுகிறார்...
சிங்கள சிவில் சமூகம் 110 விடயங்களை பட்டியலிட்டு அதற்காக உத்திரவாதக் கையொப்பத்தையும் பெற்றுவிட்டு தான் நல்லாட்சி அரசு ஒன்று அமைவதற்கு ஆதரவு வழங்கினர்.
ஆனால் தாம் ஏமாற்றப்பட்டுவிட்டோம் என்பதால் கடும் கோபத்தின் மத்தியிலும் அவர்கள் அமைதி காக்கின்றனர். நீங்கள் ரணிலை நம்பியதை விட மைத்திரியையே அதிகம் நம்பினீர்கள். அதை நீஙகளும் சுமந்திரனும் பல தடவைகள் வெளிப்படையாகவே சொன்னீர்கள்.
2014இல் அமெரிக்க ராஜாங்க திணைக்களத்தில் ரணிலை சனாதிபதி வேட்பாளராக முன்னிறுத்திய போது நீங்கள் அதை ஏற்றுக் கொள்ளவில்லை.
அதன் பின்னரே சந்திரிகாவூடாக மைத்திரி களம் இறக்கப்பட்டபோது நம்பிக்கையுடன் அணிவகுத்தீர்கள். இந்த ஆண்டு சனவரியில் கனடா வந்த போதும் ரமணனுக்கு வழங்கிய ஒரு செவ்வியிலும் மைத்திரி அதிகாரப்பகிர்விலை மிகமிக நம்பிக்கை உள்ள ஒருவர் என்றார் சுமந்திரன்.
நீங்கள் அதிகம் நம்பிக்கை வைத்த மைத்திரி இப்போது என்ன சொன்னார் வடக்கு கிழக்கு இணைப்போ அதிகாரப்பகிர்வோ எனது சடலத்தின் மேல் தான் நடக்கலாம் என்றார்.
ரணில் சிங்களத் தொலைக்காட்சிக்கு வழங்கிய செவ்வியில் 52 முதல் தான் தமிழர்களும் கேட்கிறார்கள் ஆனால் எதனையும் பெற்றார்களா? ஆனால் மகிந்தா தான் மோடியிடம் உறுதியளித்தார் என்கிறார்.
ஆகமொத்தத்தில் சிங்கள இனவாத வேதாளம் அவஅவப்போது தன் வேசத்தை கலைத்துவிட்டு மீண்டும் மீண்டும் ஏறுகிறது.
சிங்கள மிதவாதிகளே நம்பிக்கையை தொலைத்துவிட்ட இந்த வேதாளங்களின் மீதான நம்பிக்கையை இவ்வளவு வரலாறுகளின் பின்னரும் நீங்கள் எப்போது தொலைப்பீர்கள் ஐயா?
அது சரி சனநாயகத்தை நிலைநாட்டுவதற்கு மட்டும் தான் எனது ஆதரவு அதைக்கடந்தல்ல என்றீர்கள்... ஆனால் என்னிடம் பீ பிளான் இருக்கிறது கூட்டமைப்புடன் சேர்ந்து ஆட்சி என்கிறாரே ரணில்... அதற்கும் கையொப்பம் இடுங்கள் என அழுத்தம் என்கிறார்களே உங்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள்...
பாராளுமன்றத்தில் அது சமர்ப்பிக்கப்பட்டாலும் ஆச்சரியமில்லை... நீங்களே அதை முன்கூட்டியே சொல்வீர்களா? 122 பேர் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு இட்ட கையொப்பங்களில் 6 ஜேவிபியினுடையது.
14 உங்களுடையது. ரணிலிடம் 102 உள்ளது. 103 மைத்திரி மகிந்தா தரப்பிடம் உள்ளது. ரணில் ஆட்சியமைக்க தமது ஆதரவு இல்லை என்றுவிட்டது ஜேவிபி. உங்களிடம் இருந்து குறைந்தபட்சம் 11 ரணிலுக்கு வேண்டும்.
அதை வழங்க வேண்டும் என்பதில் சுமந்திரன் விடாப்பிடியாக இருக்கிறார். சித்தார்த்தன் அடைக்கலநாதன் சிறீதரன் இன்னும் இசையவில்லை என்கிறது ஒரு செய்தி.
கோடிஸ்வரனும் இல்லை என்றால் 10 தான் உண்டு. சேர்ந்தால் குறைந்தது அபிவிருத்தியாவது செய்யலாம் என்றீர்களாம். அது சரி இதுவரை அபிவிருத்தி முக்கியமில்லை.
அரசியலமைப்புத் தான் முக்கியம் என இருந்துவிட்டு இப்போது என்ன புதிய ஞானோதயம்? அப்ப நாலு வருடங்கள் வெறும் வேஸ்ட் தானா? இப்படித் தான் வியாழேந்தினும் சொன்னார் அபிவிருத்தி தான் முக்கியம் அதனால் தான் அமைச்சரவையில் இணைந்தேன்.
அரசியலமைப்பைப் பின்னர் பார்த்துக் கொள்வோம் என்றார். அப்படியானால் அவருக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்? சரி ரணில் ஆட்சியில் இணைந்து கொள்வதானால் இந்த நான்கு ஆண்டுகளில் எதை தமிழர்களுக்கு செய்துவிட்டார் என்ற நம்பிக்கையில் இணைந்து கொள்ளப் போகின்றீர்கள்?
சனவரி ரமணனுடனான கனடிய செவ்வியில் சுமந்தின் இன்னொரு விடயத்தையும் சொன்னார் 100 நாட்களில் உறுதியளித்த விடயங்கள் இன்னும் மூன்று வருடங்களாகியும் முழுமையாக செய்யவில்லைத் தான். இப்போது காணாமல் போனோர் அலுவலகம் ஈற்றில் அமைத்தாகிவிட்டது. வெளிநாட்டு நிபுணர்களை அது இணைத்துக்கொண்டே ஆகவேண்டும்.
அதைத் தான் அதன் சட்டம் சொல்லுகிறது. 1400 கோடிகளை அதற்காக கடந்த ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் ஒதுக்கியாகிவிட்டது என்றார்.
ஐயா அதன் பின்னர் ஒரு வருடம் முடிகிறது. எந்த வெளிநாட்டு நிபுணர் அதில் இதுவரை இணைக்கப்பட்டுள்ளார்? அது 1400 கொடிக்கு இதுவரை ஆக்கபூர்வமாக செய்த விடயம் என்ன? குறைந்தது ஒரு கோடியை ஒருவரை கண்டுபிடிக்க செலவிட்டிருந்தாலும் 1400 பேரையாவது இதுவரை கண்டுபிடித்திருக்கலாம்.
அதில் ஒருவர் பெயரை தருவீர்களா ஐயா? இவையனைத்திற்கும் ரணிலும் அவரின் அமைச்சருமே பொறுப்பு மைத்திரி கிடையாது... மகிந்தா மோசமாவனன் தான் மறுக்கவில்லை...
ஆனால் உங்களை நம்பவைத்து கழுத்தறுக்கும் ரணிலும் மைத்திரியும் மட்டும் எந்தவிதத்தில் சிறப்பு விளக்குவீர்களா? பொது எதிரி இன்றும் சிங்கள அதிகார வர்க்கம் தான் தமிழர்களைப் பொறுத்தவரை...
ஆனால் எங்களைப் பிரித்து பலவீனப்படுத்தி செல்லாக்காசாக்க... அவர்கள் ராஜதந்திரம் உங்களுக்குள் உள்ள சிலரையும் வைத்து இலகுவாக வெல்ல ஏன் ஐயா வழிவகுக்கின்றீர்கள்? கேட்க ஆயிரம் கேள்விகள் உண்டு ஆனால் வேண்டாம்...
அந்த மானமாவீரர்களின் புனித நாட்களில் அவர்களின் பெயரால் கெஞ்சிக் கேட்கிறோம்... இந்த மாயைத் தூக்கிப் போட்டுவிட்டு வாருங்கள் ஒன்றுபட்ட இனமாக தீர்க்கமாக பயணிப்போம்.
இல்லையானால் தமிழினம் ஏமாற்றப்பட்டு துண்டாடப்பட்டு அழிக்கப்பட்டதிற்கு துணைபோன தமிழினத் தலைமையாகவோ வரலாற்றில் இடம் பெறுவீர்கள்... என குறிப்பிடப்பட்டுள்ளது.

https://www.tamilwin.com/politics/01/199250?ref=ls_d_tamilwin

Geen opmerkingen:

Een reactie posten