இதேவேளை, கேர்ணல் நகுலன் என்றழைக்கப்படும் கணபதிப்பிள்ளை சிவமூர்த்தி 2007 ஆம் ஆண்டு கொல்லப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ள நகுலன் என்ற முன்னாள் போராளி, ஏற்கனவே கொல்லப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ள கேர்ணல் நகுலனா என அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் இன்று கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு இராணுவ ஊடகப் பேச்சாளர், பிரிகேடியர் ருவன் குணசேகர கூறியதாவது,
இவரா அவர் என தெரியவில்லை. நகுலன் என்ற பெயரில் பலர் இருக்கின்றனர். இவர் யார் என்பதை அடையாளம் காணாமல் கருத்துக்களைக் கூறுவது கடினமாகும். இவர் யார் என்பது தொடர்பில் ஆராய வேண்டும். எல்.ரீ.ரீ.ஈ இயக்கத்தில் ஒரே பேரில் பலர் இருந்தனர்.
புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளியான நகுலன் என்றழைக்கப்படுகின்ற கணபதிப்பிள்ளை சிவமூர்த்தி பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.
பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளத்திற்கு அமைய கேர்ணல் நகுலன் 2007 ஆம் ஆண்டு உயிரிழந்திருந்தாலும், கைது செய்யப்பட்ட நகுலனின் நிழற்படம் அடையாள அட்டையில் காணப்படுகின்ற நிழற்படத்துடன் பெரும்பாலும் ஒத்துப்போகிறது.
இதேவேளை, கணபதிப்பிள்ளை சிவமூர்த்தி என்ற இந்த முன்னாள் போராளிக்கு முறையாக புனர்வாழ்வளிக்கப்பட்டமைக்கான ஆவணத்தை புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் வழங்கியுள்ளார்.
இந்த ஆவணத்திற்கு அமைய இவர் கடந்த 2013 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14 ஆம் திகதி சமூகமயப்படுத்தப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
சில தினங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்ட புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் அம்பாறை மாவட்ட தளபதி கேர்ணல் ராமின் இரண்டாம் நிலை தலைவராக கைது செய்யப்பட்ட நகுலன் செயற்பட்டிருந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
எனினும், நகுலனின் கைதுக்கான காரணத்தைத் தம்மால் கூற முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, கணபதிப்பிள்ளை சிவமூர்த்தி கைது செய்யப்பட்டமை தொடர்பில் யாழ். மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த முறைப்பாட்டினை அவரது மனைவி ஆணைக்குழுவிடம் முன்வைத்துள்ளார்.
இதேவேளை, தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் திருகோணமலை மாவட்ட புலனாய்வுப் பிரிவு பொறுப்பாளர் கலையரசன் என்றழைக்கப்படும் அறிவழகன் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
திருகோணமலை அரசடி பகுதியில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை, இலங்கை தமிழரசுக் கட்சியின் வட மாகாண இளைஞர் அணி செயலாளர் எஸ். சிவகரன் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சாவகச்சேரி பகுதியில் தற்கொலை அங்கி மீட்கப்பட்டமை தொடர்பிலேயே சிவகரன் கைது செய்யப்பட்டதாக பயங்கரவாத விசாரணைப் பிரிவு அறிவித்துள்ளது.
இவர் அச்சகமொன்றை நடத்திச் சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Geen opmerkingen:
Een reactie posten