தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 10 oktober 2018

ஐரோப்பாவில் கலவரபூமியாக மாறியிருக்கும் இந்துக் கோவில்கள்!

தமிழர்கள் எந்த நாட்டிற்கு சென்றாலும் முதலில் தேடுகின்ற இடம் ஆலயம். புலம்பெயர்ந்த மக்களுக்கு உறவுகள் தேசங்களை பிரிந்த மனச்சுமைகளை போக்கி கொள்வதற்காக ஆலயங்கள் அவசியம் தேவைப்பட்டது என மூத்த ஊடகவியலாளர் இரா.துரைரத்தினம் எழுதிய கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.
அமைதியையும் ஆத்மபலத்தையும் தரக் கூடிய இடங்களாக கருதப்பட்ட ஆலயங்கள் இன்று கலவரங்களும், குழப்பங்களும் நிறைந்ததாக மாறிவிட்டன.
லண்டன், சுவிஸ், பிரான்ஸ் என ஐரோப்பிய நாடுகளில் உள்ள சைவ ஆலயங்கள் பலவற்றில் நிர்வாகங்களை கைப்பற்றுவதற்கான போட்டிகள் மேலோங்கி உள்ளன.
ஐரோப்பிய நாடுகளில் ஈழத்தமிழர்கள் முதலில் குடியேறிய நாடு பிரித்தானியா ஆகும். அங்கு 1980களிற்கு முன்னரே சைவ ஆலயங்கள் அங்கு குடியேறிய இந்துக்களால் ஆரம்பிக்கப்பட்டது. இந்தியா மற்றும் இலங்கையில் இருந்து சென்றவர்கள் இந்த ஆலயங்களை அமைத்தனர்.
ஏனைய ஐரோப்பிய நாடுகளான சுவிட்சர்லாந்து, பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, டென்மார்க், நோர்வே, சுவீடன் ஆகிய நாடுகளில் 1980களின் பின்பே சைவ ஆலயங்கள் அமைக்கப்பட்டன. பெரும்பாலான ஆலயங்கள் 1990களின் பின்னர் தான் உருவாக்கப்பட்டன.
தாங்கள் குடியேறிய இடங்களில் வழிபாட்டிற்கென சிறுகுழுக்களாக சேர்ந்து அறைகளில் மற்றும் களஞ்சிய அறைகளில் ஆரம்பிக்கப்பட்ட ஆலயங்கள் பிற்காலத்தில் சொந்த நிலங்களை வாங்கி கட்டடங்களை கட்டி பெரிய ஆலயங்கள் அமைத்த வரலாறும் உண்டு.
ஐரோப்பாவிற்கு அகதிகளாக வருகை தந்த பொதுமக்கள், பூசகர்கள், பிராமணர்கள் முதலானோர் தங்கள் வழிபாட்டிற்கு என ஆலயங்களை அமைத்த அதேவேளை விடுதலைப்புலிகள் அமைப்பை சேர்ந்தவர்களும் ஆலயங்களை அமைத்தனர்.
ஐரோப்பிய நாடுகளில் ஆலயங்கள் அமைக்கப்பட்டதற்கு பிரதான காரணம் அகதிகளாக வந்த மக்கள் வழிபாடுகளையும் விரதங்களையும் அனுஷ்டிப்பதற்காகத்தான் என கூறப்பட்ட போதிலும் வியாபார நோக்கமும் அங்கு காணப்பட்டது.
ஐரோப்பாவில் சைவ ஆலயங்கள் அமைக்கப்படாதிருந்தால் பெருந்தொகையான தமிழர்கள் மதமாற்றம் செய்யப்பட்டிருப்பார்கள்.
ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஆகக்குறைந்தது ஒரு ஆலயம் அமைக்கப்பட்டதால் இந்த மதமாற்றத்தை ஓரளவு தடுக்க முடிந்திருக்கிறது என்பதை மறுக்க முடியாது.
ஐரோப்பாவில் இலாபம் வரும் வியாபாரமாக இந்த ஆலயங்கள் திகழ்ந்து வருகின்றன. விடுதலைப்புலிகளும் சில குழுக்களும் ஆலயங்களை அமைத்ததற்கு இதுவும் ஒரு காரணமாகும்.
பிரித்தானியாவில் லண்டனுக்கு உள்ளேயும் வெளியிலுமாக ஈழத்தமிழர்களின் நிர்வாகத்தில் 46 கோவில்கள் உள்ளன. இதில் சுமார் 15கோவில்கள் நிலங்கள் சொந்தமாக வாங்கி அதில் கோவில்கள் கட்டப்பட்டுள்ளன.
லண்டனில் ஈழத்தமிழர்களால் முதல் முதலில் அமைக்கப்பட்ட கோவில் உயர்வாசல் குன்று என அழைக்கப்படும் ஆச்சே முருகன் கோவிலாகும்.
1966ஆம் ஆண்டு லண்டனில் இருந்து இலங்கை, இந்தியா மலேசியா சிங்கப்பூர் போன்ற நாடுகளை சேர்ந்த சைவ மக்கள் பிரித்தானிய இந்து சங்கம் என்ற அமைப்பை உருவாக்கியிருந்தனர்.
இந்த அமைப்பே பிற்காலத்தில் முருகன் கோவில் ஒன்றை அமைத்தனர். 1982ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட இந்த ஆலயத்திற்கான காணி பிரித்தானிய மகாராணியால் அன்பளிப்பாக வழங்கப்பட்டதாகும். எஸ்.சபாபதிப்பிள்ளை என்பவரே பிரித்தானிய இந்து சங்கத்தின் ஸ்தாபகராகும்.
இதன் பின்னர் 1980களின் பின்னர் லண்டனுக்கும் ஏனைய ஐரோப்பிய நாடுகளுக்கும் பெருந்தொகையான ஈழத்தமிழர்கள் இடம்பெயர்ந்தனர். ஊருக்கு ஒரு கோவில் என்பது போல கோவில்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது. லண்டனில் மட்டும் 46 கோவில்கள் உள்ளன.
இவற்றில் உயர்வாசல் குன்று முருகன் கோவில், விம்பிளி கணபதி கோவில்,ஈலிங் கனகதுர்க்கை அம்மன் கோவில்,ஈஸ்டாம் முருகன் கோவில், மகாலட்சுமி கோவில், லுசியம் சிவன் கோவில்,ஈல்பேர்ட் பிள்ளையார் கோவில், எம்பில்டன் நாகபூசணி அம்மன் கோவில், உட்பட 15க்கு மேற்பட்ட கோவில்கள் சொந்த நிலங்கள் வாங்கி அமைக்கப்பட்ட கோவில்களாகும்.
இது தவிர 30க்கு மேற்பட்ட கோவில்கள் குத்தகைக்கு நிலங்கள் கட்டடங்களை வாங்கி கோவில்களை அமைத்துள்ளனர்.
இந்த ஆலயங்களின் நிர்வாகத்தை கைப்பற்றுவதற்கு நடக்கும் போட்டிகள் பல. இதற்கு உதாரணமாக லண்டன் ஈழபதீஸ்வரர் ஆலயத்தின் நிர்வாகத்தை கைப்பற்றுவதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை குறிப்பிடலாம்.
ஆர்.ஜெயதேவன் என்பவருடன் சிலரும் இணைந்து லண்டன் ஈழபதீஸ்வரர் ஆலயத்தை ஸ்தாபித்தனர்.
பின்னர் விடுதலைப் புலிகளுக்கு மிக நெருக்கமான சீவரத்தினம் அக்கோவிலை கைப்பற்றுவதற்காக விடுதலைப்புலிகளை நாடினார்.
அந்த கோவிலை சீவரத்தினத்திடம் ஒப்படைக்குமாறு விடுதலைப் புலிகளின் வெளிநாட்டு பிரிவு உத்தரவிட்டது. ஜெயதேவன் இதற்கு இணங்க மறுத்தார்.
2004 டிசம்பர் 27 ஆர் ஜெயதேவன் தனக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே இருந்த முறுகல் நிலையைத் தணிக்கும் நோக்குடன் புலிகளைச் சந்திக்க இலங்கைக்குப் பயணமானார். வன்னியில் ஜெயதேவன் விடுதலைப் புலிகளால் தடுத்து வைக்கப்படடார்.
அதன் பின்னர் 2005 ஜனவரி 05 ஆர் ஜெயதேவனது நண்பரும் ஈழபதீஸ்வரர் ஆலய நிர்வாக உறுப்பினருமான ஏ.கெ விவேகானந்தன் லண்டனிலிருந்து வன்னிக்கு சென்றார்.
கிளிநொச்சியில் ஆர் ஜெயதேவனும் ஏ கெ விவேகானந்தனும் தமிழீழ விடுதலைப் புலிகளால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு தடுத்து வைக்கப்பட்டனர்.
2005 மார்ச் 02 ஈழபதீஸ்வரர் ஆலயத்தை லண்டன் சிவயோகம் அறக்கட்டனையின் தலைவரான சீவரத்தினம் பொறுப்பேற்றதாக விடுதலைப்புலிகள் அறிவித்தனர்.
அதன் பின்னர் விவேகானந்தனும் ஜெயதேவனும் விடுவிக்கப்பட்டனர். பின்னர் லண்டன் வந்தடைந்த ஜெயதேவன் லண்டன் உயர் நீதிமன்றில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.
2005 ஏப்ரல் 07 ஈழபதீஸ்வரர் ஆலயத்தில் இருந்து சிவயோகம் அறக்கட்டளையின் தலைவர் சீவரத்தினத்தை வெளியேறுமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதுடன் வழக்குக்கான செலவு 25ஆயிரம் பவுண்களைச் செலுத்தவும் சீவரத்தினத்திற்கு உத்தரவிடப்பட்டது.
இதன் பின்னர் 2005ஆம் ஆண்டு சீவரத்தினம் லண்டனில் நிதி சேகரித்து ஈழபதீஸ்வரர் ஆலயத்திற்கு எதிராக இன்னொரு ஆலயத்தையும் அமைத்து கொண்டார்.
இவ்வாறு ஒரு ஆலயத்திற்கு போட்டியாக இன்னொரு ஆலயம் அமைப்பதும், இருக்கின்ற நிர்வாகத்தை கைப்பற்ற சதி செய்வதுமாக ஆலயங்கள் கலவர பூமிகளாக மாறி வருகின்றன.
அண்மையில் பிரான்ஸ் பரிஸில் உள்ள சிவன் கோவிலும் அதன் உரிமையாளர் என சொல்லப்படும் குடும்பி என அழைக்கப்படும் வெற்றிவேல் ஜெயந்திரன் என்பவரால் பூட்டப்பட்டுள்ளது.
அண்மையில் யாழ்ப்பாணம் ஊடக மையத்தில் செய்தியாளர் மகாநாட்டை நடத்திய குடும்பி என அழைக்கப்படும் ஜெயந்திரன் பிரான்ஸில் உள்ள தனது கோவிலிருந்து பூசகரை வெளியேற்றி விட்டு கோவிலை பூட்டப்போவதாக அறிவித்தார்.
1999ஆம் ஆண்டு காணி ஒன்றை வாங்கி கோவிலை அமைத்த ஜெயந்திரன் என்பவர் சில குற்றச் செயல்களுக்காக பிரான்ஸ் பொலிஸாரால் தேடப்பட்ட போது 2005ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டிலிருந்து தப்பி இலங்கைக்கு சென்றிருந்தார்.
இவரின் சொத்துக்களை பிரான்ஸ் அரசாங்கம் பறிமுதல் செய்திருந்தது. இந்த ஆலயம் அமைக்கப்பட்ட நிலம் சிவகுருநாதன் மற்றும் கருணாகரன் ஆகியோரின் பெயரிலும் பங்காக இருந்ததால் பிரான்ஸ் அரசாங்கம் அதனை பறிமுதல் செய்யவில்லை.
சிலைகளை பாதுகாக்கும் இடமாகவே அரசாங்கத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
கணேசராசா குருக்கள் சிவசுதசர்மா என்பவரே இந்த ஆலயத்தில் 27வருடங்களாக பூசை செய்து வந்தார்.
மாதாந்தம் இலங்கையில் தற்போது இருக்கும் ஜெயந்திரன் என்பவருக்கு மாதாந்தம் சராசரியாக 5ஆயிரம் ஈரோக்களை (இலங்கை பணத்தில் சுமார் 10 இலட்சம் ரூபா ) அனுப்பி வந்ததாகவும், அப்பணம் கடந்த சில மாதங்களாக அனுப்பாததால் இலங்கையில் இருக்கும் ஜெயந்திரன் கோவிலை மூடுவதாக அறிவித்திருக்கிறார் என கோவில் பூசகர் சிவசுதசர்மா தெரிவிக்கின்றார்.
வாள்களுடன் வந்த ஒரு குழு தன்னை அச்சுறுத்தியதால் அவர்களிடம் ஆலய திறப்பை கொடுத்து விட்டு தான் வெளியேறிவிட்டதாக சிவசுதசர்மா என்ற ஆலய பூசகர் கூறியிருக்கிறார்.
பிரான்ஸில் பெருந்தொகையான மக்கள் செல்லும் ஆலயம் தற்போது மூடப்பட்ட நிலையில் உள்ளது. பிரான்ஸில் அதிக வருமானம் வரும் சைவ ஆலயமாக இது திகழ்ந்து வந்தது.
ஐரோப்பாவில் அமைதியான நாடு என அழைக்கப்படும் சுவிட்சர்லாந்திலும் இன்று ஆலயங்களில் அமைதி இல்லை என்றாகிவிட்டது. கலவரங்களும் குழப்பங்களும் நிறைந்த இடங்களாக இப்போது சைவ ஆலயங்கள் மாறிவிட்டன.
சுவிட்சர்லாந்தில் தற்போது சுமார் 23 ஆலயங்கள் உள்ளன. இவற்றில் பெரும்பாலான ஆலயங்களில் குழப்பங்களும் பிரச்சினைகளும் மேலோங்கி உள்ளன.
பேர்ண் முருகன் கோவிலை கைப்பற்றுவதற்கு ஒரு தரப்பினர் முற்பட்டனர். இந்த பிரச்சினை நீதிமன்றம் வரை சென்றுள்ளது.
சூரிச் டூட்டன் ஸ்ரீகனகதுர்க்கை அம்மன் ஆலயத்திலும் சில மாதங்களுக்கு முன்னர் ஏற்பட்ட பிரச்சினையால் அந்த கோவிலிருந்து ஒரு தரப்பினர் பிரிந்து சென்றுள்ளனர்.
சுவிட்சர்லாந்திலேயே மிகச்சிறப்பாக செயற்பட்டு வந்த செங்காலன் செம்மாக்கிறேத்தன் ஸ்ரீகதிர்வேலாயுத சுவாமி ஆலயத்தின் நிர்வாகத்தை கைப்பற்றுவதற்கு ஒரு குழு முற்பட்டிருப்பதாகவும் கடந்த வாரத்தில் ஆலய நிர்வாகத்தினருக்கும் இக்குழுவுக்கும் இடையில் வாய்த்தர்க்கம் பெரிய அளவில் இடம்பெற்றதாகவும் கலவரமாக மாறும் அளவிற்கு இது மோசமடைந்திருந்ததாகவும் கூறப்படுகிறது.
சுவிட்சர்லாந்தில் அதிக மக்கள் செல்லும் ஆலயமாக இது திகழ்ந்து வந்தது. சுவிட்சர்லாந்தில் விடுதலைப்புலிகளால் ஸ்தாபிக்கப்பட்ட ஆலயங்களில் செம்மாக்கிறேத்தன் ஸ்ரீகதிர்வேலாயுதசுவாமி ஆலயமும் ஒன்றாகும்.
2005ஆம் ஆண்டு அப்போது விடுதலைப்புலிகளின் சுவிஸ் கிளைப்பொறுப்பாளராக இருந்த குலம் அவர்களால் இந்த ஆலயத்திற்கான வேலைகள் ஆரம்பித்து வைக்கப்பட்டது. 2007ஆம் ஆண்டு மார்ச் மாதம் கும்பாபிசேஷகம் நடைபெற்றதை தொடர்ந்து அப்போது தெரிவு செய்யப்பட்டிருந்த நிர்வாகத்தால் தொடர்ந்து ஆலயத்தை நடத்த முடியாது என்ற நிலை ஏற்பட்டிருந்தது.
ஆலயத்தின் பெயரில் ஒரு இலட்சத்து 26ஆயிரம் பிறாங் கடனும் காணப்பட்டது. இந்நிலையில் விடுதலைப்புலிகளின் சுவிஸ் கிளைப்பொறுப்பாளர் குலம் தற்போது தலைவராக இருக்கும் வே.கணேசகுமார் அவர்களிடம் இந்த ஆலயத்தை நடத்துமாறு ஒப்படைத்தார்.
இதன் பின்னர் பல்வேறு முயற்சிகளை எடுத்து ஆலயத்தின் பெயரில் இருந்த ஒரு இலட்சத்து 26ஆயிரம் ரூபா கடனையும் தீர்த்து ஐரோப்பாவில் புகழ் பெற்ற ஆலயம் என்ற பெயரை நிலைநாட்டிய பெருமை தற்போதைய நிர்வாகத்தையே சாரும் என்பதை யாரும் மறுக்க முடியாது.
ஆலயத்திற்கு இருந்த கடனை தீர்த்தது மட்டுமன்றி ஆலயத்திற்கு சொந்தமாக கட்டிடத்தை வாங்கும் அளவிற்கு நிதி வளத்தை சேர்த்து ஆலயத்தை சுவிஸ் அரசாங்கத்தில் பதிவு செய்த வேளையில் அதனை கைப்பற்றுவதற்கு ஒரு தரப்பு முற்பட்டிருக்கிறது.
இலாபத்தில் இயங்கும் இந்த ஆலயத்தை கைப்பற்றுவதற்கு கடந்த ஒரு வருடத்திற்கு முதலும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் ஆலய நிர்வாகமும் பொதுமக்களும் இதனை முறியடித்திருந்தனர் என ஆலய நிர்வாகத்தினர் தெரிவிக்கின்றனர்.
ஆலயத்தில் அண்மையில் நடைபெற்ற திருவிழா கால பூசையின் போது தேவாரம் பாடுவதில் ஆலய பூசகருக்கும் ஆலய நிர்வாகத்தில் உள்ள ஒருவருக்கும் இடையில் ஏற்பட்ட பிரச்சினையை ஆலய நிர்வாகத்தை எப்போது கைப்பற்றுவோம் என காத்திருந்த குழு சாதகமாக பயன்படுத்தி கொண்டது.
ஆலயத்திலிருந்து விலகுவதாக ஆலய குருக்கள் நிர்வாகத்திற்கு கடிதம் சமர்ப்பித்ததை நிர்வாகம் ஏற்றுக்கொண்டு புதிய பூசகரை நியமித்திருக்கிறது.
இந்நிலையில் ஆலயத்திற்கு வந்த குழு ஒன்று தம்மிடம் நிர்வாகத்தை ஒப்படைக்குமாறும் ஆலயத்திறப்பை தருமாறும் கலவரங்களில் ஈடுபட்டிருக்கிறது.
கடந்த 10வருடங்களுக்கு மேலாக ஆலய நிர்வாகத்துடன் இணைந்து சிறப்பாக பூசைகளை நடத்தி வந்த ஆலய பூசகர் ஆலய நிர்வாகத்தையும் ஆலயத்தையும் கைப்பற்ற முனைந்திருக்கும் குழுவின் வலையில் சிக்கி விட்டாரா என்ற சந்தேகம் எழுவதாக அந்த ஆலயத்தின் வளர்ச்சி மற்றும் நலனில் அக்கறை கொண்ட பலரும் தெரிவிக்கின்றனர்.
ஜனநாயக பண்புகளை கொண்ட சுவிட்சர்லாந்து போன்ற நாடுகளில் வாய்த்தர்க்கங்களாலோ அல்லது அடிதடி சண்டைகளாலோ எதையும் சாதித்து விடலாம் என எண்ணுவது தவறாகும். சட்டரீதியாக எதனையும் அணுகி நீதியை பெற்றுக்கொள்ளவதே சரியான வழிமுறையாகும்.
செங்கலான் செம்மாக்கிறேத்தன் ஸ்ரீகதிர்வேலாயுத சுவாமி ஆலய நிர்வாகத்தை கைப்பற்ற முற்பட்டிருக்கும் குழுவும் சட்ட ரீதியாக அணுக வேண்டுமே ஒழிய சர்வாதிகாரத்தை பயன்படுத்தியோ அல்லது அடிதடி சண்டைகளின் மூலமோ அதிகாரத்தை கைப்பற்ற நினைப்பது தவறாகும்.
சைவ மக்களின் வழிபாட்டிற்கும் சமய அனுஷ்டானங்களுக்கும் என அமைக்கப்பட்ட ஆலயங்களில் வாய்த்தர்க்கங்களும் சண்டைகளும் தவிர்க்கப்பட வேண்டும். ஆனால் அமைதி நிலவ வேண்டிய இடங்கள் இன்று போர்க்களமாக மாறிவருகின்றன.
thurair@hotmail.com

Geen opmerkingen:

Een reactie posten