[ விகடன் ]
'இந்த நிலம் ராணுவத்துக்கு சொந்தமானது' This Land Belongs to Army) என்ற தமிழக பத்திரிகையாளர் மகா. தமிழ்ப் பிரபாகரனனது ஆவணப்படம், இங்கிலாந்து நாடாளுமன்ற வளாகத்தில் வெளியிடப்பட்டது.
ராணுவமயமாக்கப்பட்ட பகுதிகளில் இன்றைய நிலையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நில அபகரிப்பு பற்றியும் போரின் போது இலங்கை ராணுவம் எப்படி நடந்து கொண்டது என்பதை மையப்படுத்திய இந்த ஆவணப்படம், கடந்த ஜனவரி 30 - பிப்ரவரி 1 அன்று பிரிட்டன் தமிழர் பேரவை மற்றும் தமிழர்களுக்கான அனைத்து கட்சி நாடாளுமன்ற குழு ஏற்பாட்டில் நடைபெற்ற 'இலங்கையில் நடைபெறும் நில அபகரிப்பை பற்றிய சர்வதேச மாநாட்டில்' வெளியிடப்பட்டது.
முதல் நாள் ஜனவரி 30 அன்று லண்டன் நாடாளுமன்ற வளாகத்தில் நடைப்பெற்ற நிகழ்வில் மூன்று நிமிடமும் , அடுத்த நாள் பிப்ரவரி 1 அன்று யூனிவர்சிட்டி கல்லூரியில் நடைபெற்ற நிகழ்வில் முழு ஆவணப்படமும் திரையிடப்பட்டது.
இந்த மாநாட்டில் இந்தியாவின் சமூக செயற்பாட்டாளர் மேதா பட்கர், நிரந்தர மக்கள் தீர்ப்பாயத்தின் டெனிஸ் ஹலிடேயும்,ஓக்லாந்த் நிறுவனத்தின் அனுராதா மிட்டல் இன்னும் பல்வேறு நாடுகளை சேர்ந்த மனித உரிமையாளர்களும்,பேராசிரியர்களும்,செயற்பாட்டாளர்களும் கலந்து கொண்டனர்.
சேனல் 4 வெளியிட்ட நோ ஃபயர் சோன் ஆவணப்படத்தின் இயக்குனர் கெல்லம் மெக்கரேவும் இதில் பங்கேற்றார்.
"ஒரு கிலோ மீட்டர் சுற்றளவை அழிக்கும் ஆயுதங்களை நாங்கள் பயன்படுத்தினோம்" என போரில் பங்கேற்ற இலங்கை ராணுவ சிப்பாய் ஒருவர் ஒப்புக்கொள்ளும் பேட்டி, இந்த ஆவணப்படத்தில் இடம்பெற்றுள்ள நிலையில், இலங்கை அரசு தரப்பில் வழக்கம்போல் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படத்தில் கூறப்படும் போரில் பயன்படுத்தப்படும் ரசாயன ஆயுதங்களை மையமாக வைத்துக்கொண்டு, இலங்கை ராணுவத்தை குற்றம் சுமத்த,இங்கிலாந்து நாடாளுமன்றத்தை இந்த ஆவணப்படத்தை உருவாக்கிய தமிழ் பிரபாகரன் பயன்படுத்திக்கொண்டதாக இலங்கை அரசு குற்றம் சாட்டியுள்ளது.
ஆனால் போருக்கு பின்னரான தமிழர் பகுதியில் காணப்படும் மனித அவலங்கள், தமிழர் பகுதிகளில் குவிக்கப்பட்டுள்ள இலங்கை ராணுவத்தினரின் அத்துமீறல்கள், அவர்களது கண்காணிப்புகள், தமிழ் பெண்களை உற்றுநோக்கும் வக்கிரபார்வை போன்றவற்றையும், போரின்போது நிகழ்ந்த கொடூரங்கள் மற்றும் நடந்த பேரழிவுகளுக்கு சாட்சியாய் நிற்கும் இடங்களை நேரில் சென்று பார்த்து, அவற்றை ஏற்கனவே பத்திரிகையில் தொடராக பதிவு செய்த தமிழ்ப்பிரபாகரன், இலங்கை அரசின் குற்றச்சாட்டை மறுக்கிறார்.
வடகிழக்கில் சுதந்திரத்தின் காற்று வீசுகிறது என்றால், அங்கு இன்னும் ஏன் சர்வதேச மனித உரிமையாளர்கள்- பத்திரிகையாளர்கள் அனுமதிக்கப்படுவதில்லை என்று கேள்வி எழுப்பும் அவர், " விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் என்று சொல்லி எண்ணிலடங்கா அப்பாவி பொது மக்களை கண்மூடித்தனமாக இலங்கை ராணுவம் கொன்று குவித்ததை இலங்கையின் உள்நாட்டு போர் சம்பந்தமாக வெளியான பல்வேறு மனித உரிமை அறிக்கைகளும் ஆதாரங்களும் குறிப்பிடுகின்றன. போர் முடிந்து இன்றும் இலங்கையின் வடகிழக்கு பிரதேசம் ராணுவமயமாக்கப்பட்ட பகுதிகளாக உள்ளது என்பதையும் இவ்வறிக்கைகள் எடுத்துக் காட்டுகின்றன.
ரசாயன ஆயுதங்கள் விசயத்தையோ, ஒரு கிலோ மீட்டர் சுற்றளவை அழிக்கும் கிபீர் தாக்குதல் பற்றியோ நானாக குற்றம் சாட்டவில்லை, போரில் பங்குப்பெற்ற இலங்கை ராணுவத்தைச் சேர்ந்த சிப்பாய் ஒருவர் தான் இதை இப்படத்தில் வெளியாகியுள்ள பிரத்யேக பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். அதுமட்டுமின்றி போருக்கு பிறகு இன்று நிலங்களை திருப்பி தமிழ் மக்களுக்கே கொடுப்பதாகவும் இந்த மாநாட்டில் வைக்கப்பட்ட நில அபகரிப்பு குற்றச்சாட்டுகளுக்கு எந்தவித அடிப்படை ஆதாரங்களும் இல்லை எனவும் இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் குறிப்பிடுகிறது.
ஆனால் நில அபகரிப்பின் அடிப்படை தொடங்கி, இன்று ராணுவமயமாக்கப்பட்ட வடகிழக்கு பிரதேசத்தில் எப்படி திட்டமிட்ட வகையில் தமிழ் மக்களின் நிலங்கள் பறிக்கப்படுகிறது என்பதையும், ராணுவம் நிலத்தை மக்களுக்கு திருப்பிக்கொடுப்பதில் உள்ள உண்மைநிலை என்ன என்பதையும், இப்படி இன்னும் இன்னும் வடகிழக்கில் அரங்கேறி வரும் ராணுவ அத்துமீறல்களையும் இந்த ஆவணப்படத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. ராணுவ நில அபகரிப்பு தொடர்பாக இப்படத்தில் எடுத்து கையாளப்பட்ட முக்கியமான ஆதாரங்கள் யாவும் இலங்கை அரசு நியமித்த எல்.எல்.ஆர்.சி. குழுவின் அறிக்கையிலிருந்துதான் எடுக்கப்பட்டது.
இலங்கை அரசின் கருத்துப்படி ராணுவம் பெரும்பான்மையாக நிலைக் கொண்டுள்ள
வடகிழக்கில் சுதந்திரத்தின் காற்று வீசுகிறது என்றால், அங்கு இன்னும் ஏன் சர்வதேச மனித உரிமையாளர்கள்-பத்திரிகையாளர்கள் அனுமதிக்கப்படுவதில்லை ? அங்கு பயணித்தபோது ராணுவ முகாம்களை படமெடுத்ததாக ஏன் நான் கைது செய்யப்பட்டு, மூன்று நாட்கள் தீவிரவாத புலனாய்வு விசாரணைப் பிரிவின் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டேன் ?
ராணுவம் வடகிழக்கில் செய்வது நியாயம் என்றால், பாதுகாப்புகாகத்தான் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது என்றால் கேமிராவின் கண்களுக்கு இன்னும் இலங்கை ராணுவம் அஞ்சுவது ஏன் ?
தவறுகள் உள்ள இடத்தில்தான் தடைகளும் கட்டுப்பாடுகளும் அஞ்சுதலும் பெருகி இருக்கும். அந்த தடைகளுக்கு அப்பால் உள்ள காட்சிகளையும், இன்றைய வடகிழக்கு நிலத்தின் எதார்த்தையும், போரின் போது இசைப்பிரியாவை போன்று இன்னும் பிற தமிழ் பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு படுகொலைச் செய்யப்பட்ட காட்சிகளையும் 'இந்த நிலம் ராணுவத்துக்கு சொந்தமானது' என்ற ஆவணப்படத்தின் மூலம் மனிதத்தை நேசிக்கும் மக்கள் முன் வைத்துள்ளேன்" என்கிறார்.
விளக்கம் அளிக்க வேண்டியது இலங்கை அரசுதான்!
Geen opmerkingen:
Een reactie posten