தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 7 juli 2016

சிங்கள அரசுக்காக இறால் போட்டு சுறா... இளஞ்செழியன் தீர்ப்பிற்கு ஹுசைனின் அறிக்கையில் முக்கிய இடம்!

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், நடந்து முடிந்துள்ள 32வது கூட்டத்தொடரில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செய்யித் அல் ஹுசைன் வெளியிட்ட வாய்மொழி மூல அறிக்கையில் யாழ் மேல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு ஒன்றிற்கு முக்கிய இடமளிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2010ம் ஆண்டு, ஒக்டோபர் மாதம் 10ம் திகதி கிளிநொச்சி மாவட்டம் விசுவமடு மீள் குடியேற்றப் பிரதேசத்தில் இரண்டு தமிழ்ப் பெண்கள் மீது நடத்தப்பட்ட பாலியல் வல்லுறவு மற்றும் பாலியல் துஸ்பிரயோக வழக்கில் குற்றவாளிகளாகக் காணப்பட்ட 4 இராணுவத்தினருக்கு எதிராக யாழ் மேல் நீதிமன்றத்தில் நடத்தப்பட்ட வழக்கு விசாரணையில் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் தண்டனைத் தீர்ப்பு வழங்கியிருந்தார்.
குறித்த வழக்கு ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையில் கவனத்தில் எடுத்து கொள்ளப்பட்டு சுட்டிக்காட்டியுள்ளது.
2010 ஒக்டோபர் மாதம் 10ம் திகதி விசுவமடுவில் 2 தமிழ்ப் பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக 4 இராணுவ வீரர்களுக்கு எதிராக தீர்ப்பளிக்கப்பட்டது.
இப்படி குற்றம் தீர்க்கப்படுவது மிக அரிது என அந்த அறிக்கையின் 19ம் பந்தியில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், 'இந்த அரசு பதவிக்கு வந்த முதல் 5 மாதங்களில் மிக பிரபலமான பல வழக்குகள் வெளிவந்தன.
உதாரணமாக பிரகீத் எக்னெலிகொட, பத்திரிகை ஆசிரியராகிய லசந்த விக்கிரமதுங்க, தமிழ் பாராளுமன்ற அங்கத்தவர்களான ஜோசப் பரராஜசிங்கம், நடராஜா ரவிராஜ் மற்றும் ரக்பி விளையாட்டு வீரர் வசின் தாஜுதீன் போன்றவர்களின் கொலைகள் தொடர்பான தகவல்கள் வெளிவந்தன.
ஆனால், அவை பின்பு மெல்ல மெல்ல வலுவிழந்தன. திருகோணமலை ஐவர் கொலை வழக்கு மற்றம் அக்சன் பாம் வழக்கு என்பன பல நிலைகளில் தொடர்ந்து நடைபெறாமல் இருக்கின்றன.
வழக்குகளில் சாட்சிகளைக் கெண்டு வர அரசு புதிய முயற்சிகளை ஏற்படுத்தி வசதி செய்தும், அவை பலனளிக்கவில்லை என்றும் அந்த அறிக்கையின் 18வது பந்தியில் ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
அந்த அறிக்கையில் விசுவமடு பாலியல் வல்லுறவு வழக்கின் தீர்ப்பு மட்டுமே முக்கியமாக விசாரணை முடிக்கப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்ட வழக்கென்ற வகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விசுவமடுவில் பாதுகாப்பற்ற நிலையில் வசித்து வந்த 2 தமிழ்ப் பெண்கள் மீது மேற்கொள்ளப்பட்ட பாலியல் வல்லுறவு மற்றும் பாலியல் துஸ்பிரயோக வழக்கில் 4 இராணுவத்தினருக்கு 20 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனையும் நட்டயீடும் தண்டப்பணமும் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தினால் கடந்த 2015ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தீர்ப்பளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
மனித உரிமைகள் தொடர்பில் குறிப்பாக பாலியல் வல்லுறவு குற்றச் செயலுக்காக அளிக்கப்பட்ட இந்தத் தண்டனைத் தீர்ப்பானது, யாழ் மேல் நீதிமன்றத்தின் சுதந்திரமான செயற்பாட்டை வெளிப்படுத்துவதாக அமைந்திருக்கின்றது என சட்டத்துறை நிபுணர்களும் மனித உரிமைச் செயற்பாட்டாளர்களும் குறிப்பிட்டுள்ளனர்.

Geen opmerkingen:

Een reactie posten