நன்றே நமது யாழ்ப்பாணம் ( அன்றும்)
இப்போது இருப்பாளாகின் எனது மூத்த மகள் சாகித்தியாவுக்கு இன்று இருபத்தைந்து நிறைவு.
எதனைச் சொல்வது? எதனை விடுவது?
யாழ்ப்பாணத்தில் போர்க்காலச் சூழல், வைத்திய வசதிகள் மிகக் குறைவு,
கவனிப்பாரற்றுக் கிடந்தவைகளில் பட்டியலில் முன்னின்றது ’மனிதம்’ தான்.
வாழ்க்கைத் தரம் என்பது என்ன என்று இப்போது தான் சற்றே புரிய ஆரம்பிக்கிறது.
ஒரு தந்தையாக என் முழு முயற்சியையும் எடுக்கவில்லையே என்று குற்ற உணர்வு என்னும் இன்னமும் நெஞ்சில் குமைந்துகொண்டு இருக்கிறது.
‘கொழும்பில் சென்று வைத்தியம் பாருங்கள்’ என்று நண்பர்களும் உறவினர்களும் சொன்னபோது , யாழ்ப்பாணத்தை விட்டு குடும்பத்துடன் வெளியே செல்வதற்கு அப்போதிருந்த கெடுபிடிகள் ஒரு புறம், இங்கேயே வாழும் மக்களுக்கும் அதே வசதிகள் கிடைக்கா நிலையில் எனக்கு மட்டும் ஏன் என்ற அப்போதய என் வறட்டுப் பிடிவாதம், எல்லாம் விதிப்படி என்ற ஞானம் எல்லாம் சேர்ந்து கொழும்பு செல்லும் எண்ணத்தை நிறுத்தியது.
அதுவே என் செல்ல மகளை எம்மிடம் இருந்து பிரித்ததோ என இப்போது எண்ணுகிறேன்.
மகளின் கடைசி நிமிடங்கள் நினைக்கும் தோறும் துயர் தருவது!
இணுவில் வீட்டிலிருந்து அன்று காலை 10 மணி வாக்கில் சற்று தாமதமாக யாழ். மருத்துவமனை வருகிறேன். கையில் குழந்தையுடன் மனைவி கட்டிடவாயிலில் காத்திருக்கிறார்.
‘இரத்தம் ஏத்த வேண்டுமாம்’
ஓ, அதுக்கென்ன ஏத்தட்டன்’
‘ முதலில் இரத்தம் கொடுக்க வேண்டுமாம். ஓடிப்போய் குடுங்கோ’
கொண்டுவந்த பொருட்களை மகளின் கட்டில் அருகில் வைத்துவிட்டு இரண்டு வார்த்தை ஆறுதல் சொல்கிறேன்.
அந்த இடைவெளியில் அங்கிருந்த தாதி ஒருவர் ஏசுகிறார்.
’கண்டபடி உள்ளுக்க வரக்கூடாது. கெதியா வெளிய போங்கோ, டொக்டரிட்டை நல்ல பேச்சு வாங்குவியள்’
நோயாளர் நிலை தெரிந்தபின்னும் அந்தத் தாதி ஏன் அப்படி நடக்கிறார். மனதுக்குள் கறுவிய படி இரத்த வங்கி நோக்கி ஓடுகிறேன்.
அதே வளாகத்திலுள்ள இரண்டாவது கட்டிடத்தில் வைரவர் கோயில் நேர் எதிரே சற்று பின்னாக இரத்த வங்கியைத் தேடிப்பிடித்து செல்கிறேன்.
அங்கு சிறிது காத்திருப்புக்குப் பின் வைத்தியர் அழைக்கிறார்.
ஒரு பெண் வைத்தியர். அறிமுகமான முகம். யாழ்ப்பாணத்தில் ஒரு பிரபல சட்டத்தரணியின் மனைவி.
’வாங்கோ. இருங்கோ, முதலில் சாப்பிட்டீங்களா எண்டு சொல்லுங்கோ’
’இல்லை’
’ஓடிப்போய் ஒரு பணிஸும் ரீயும் சாபிட்டு வாங்கோ’
’இரத்தம் அவசரமாகத் தேவையாம்’
’நீங்கள் உடனே சாப்பிட்டு வாங்கோ’
உணவுச் சாலை நோக்கி ஒரு வேக நடை.
’அண்ணை ஒரு ரீயும் பணிஸும் தாங்கோ’
சிறிது நேரத்தில் வருகிறது.
நின்ற நிலையில் பணிஸைத் பிய்த்து தேனீரில் தோய்த்து வாய்க்குள் திணிக்கிறேன். சாகித்தியாவுக்கு இரத்தம் இப்போது அனுப்பியிருப்பார்களோ என்று எண்ணம் மனதில் எழுகிறது.
கடைசித் துண்டு வாயில் இருக்க மீண்டும் இரத்த வங்கி நோக்கி ஓடுகிறேன்.
ஆச்சரியம், வைத்தியர் எனக்காகவே காத்திருக்கிறார்.
’சாபிட்டீங்களா’
’ஓம்’
’சாப்பிடாமல் இரத்தம் கொடுக்கக்கூடாது’
சொல்லிக்கொண்டே என்னை கட்டிலில் படுக்கச் சொல்கிறார். கதைத்தபடியே ஊசி ஏற்றுகிறார்.
’பிள்ளைக்கு இரத்தம் அனுப்பிட்டீங்களா? அவசரமாகத் தேவையாம்’
என் தவிப்பைப் புரிந்துகொண்டு தலையாட்டுகிறார்.
’நாங்கள் அதைப் பார்க்கிறோம். நீங்கள் ரிலாக்ஸாக இருக்கவேண்டும்.’
இரத்தம் கொடுத்து முடிந்ததும் கையில் ஒரு பிளாஸ்திரி போட்டு அனுப்பி வைக்கிறார்.
‘உங்களைப் போல குழந்தைகள் அனுமதிக்கப்பட்டிருக்கும் இடத்தில் வைத்தியரோ, தாதியரோ அன்பாகப் பேசிவதில்லையே! ஏன்?’
’அவையளுக்கு வேலை கனக்கவோ தெரியாது’ வைத்தியரின் நியாயப்படுத்தல் உள்வாங்கமலேயே மீண்டும் என் மகள் இருக்குமிடம் வருகிறேன்.
அங்கே மனைவி மட்டும் பதைபதைத்தபடி என்னப்பா? எனப் புலம்புகிறார்.
’இரத்தம் ஏத்தவில்லையா?’
’இன்னும் இல்லை’
’கொடுத்துவிட்டேனே’
எனக்கு ஏ+, மகளுக்கு ஏபி பிரிவு
இரத்தம் ஏற்றத் தாமதம் ஏன்? எனக்குப் புரியவில்லை.
கம்பன் கழக நண்பர் வைத்தியர் இரத்தினகுமார் அருகில் உள்ள கட்டிடத்தில் வைத்திய நிபுணர் சிவகுமாரின் வைத்திய ஆலோசனை வழங்கும் குழுவில் இருந்து நோயாளரைப் பார்த்தபடி இருப்பது நினைவுக்கு வர அவரை நோக்கி ஓடுகிறேன்.
நிலைமையைப் புரிந்து கொண்டு அவரும் உடனே என்னோடு வருகிறார்.
குழந்தைகள் சேர்க்கப்பட்டிருக்கும் கீழ்த்தளத்தில் இடதுபக்கம் உள்ள நுழைவாயிலினூடு உள்ளே செல்கிறோம்.
அங்கு…..
உள்ளே தாதியர் இருவரும் வைத்தியர் ஒரு வரும் பரபரப்புடன் கட்டில் அருகில் என்னவோ செய்கிறார்கள்.. சாகித்தியாவுக்கு மூச்சுத் திணறல் போலும். தாய் உரத்து சத்தமிட்டு அழுகிறார். என்னால் கட்டிலை நெருங்க முடியவில்லை. அக்குழுவில் நண்பன் இரத்தினகுமாரும் இணைந்து கொள்கிறார். எல்லாம் ஒரிரு நிமிடங்கள் தான்.
என் தோளில் வலது கையை வைத்து இடது கையால் முதுகைத் தட்டுகிறான் இரத்தினகுமார். எனக்கு செய்தி புரிந்து விட்டது.
வெளியே நான் வருகிறேன். தாதியின் அறையில் அதே தாதி தொலைபேசியில் உரத்து பேசுவது கேட்கிறது.
’இரத்தம் அனுப்பவேண்டாம். பேசண்ட் டெட்’
அந்தத் தாதி சமூகத்தில் நிலவிய ஒருவித வக்கிர உணர்வின் அடையாளம்.
அடப்பாவிகளா, பண்டமாற்றா செய்கிறீர்கள்? இரத்தம் தேவையெனில் கொடுப்பது தானே. என்னிடம் இரத்தம் பெற்ற பின்னும் கூட தேவைப்பட்ட குறித்த வகை இரத்தம் குழந்தைகள் பிரிவிக்கே வரவில்லை.
இந்த அநியாயத்தைக் கேட்பதற்கு ஆளில்லை. போர்க்காலத்தில் அவர்கள் செய்வதே மேல். அதற்கு மேல் எதனையும் எதிர்பார்க்கவேண்டாம் என்று சமூகத்தில் உபதேசம்.
அங்கு ஊழியர் பற்றாக்குறையாம் அன்று அங்கிருக்கும் வைரவர் கோயிலில் சங்காபிசேகம். இரத்த வங்கி ஊழியர் இருவர் அபிசேகத்தில்!
போர்க்காலத்தில் யாருக்கும், அவசியமான எதையும் செய்யாதிருப்பதற்கு அனுமதி உண்டு என்று சொல்கிறார்கள்.
இது அக்காலத்து யாழ்ப்பாணத்தின் சுகாதர வைத்திய வசதிகள் எப்படியிருந்தது என்பதற்கான ஒரு சிறிய சான்று.
என் செல்ல மகள் மீண்டும் வருவாள் என திசை பார்த்துக் காத்திருந்தேன். அடுத்த மகள் பிறந்தவுடன் சற்றே நிம்மதி.
எனினும் சாகித்தியாவின் நினைவு என்றும் மாறாமல் இருக்கிறது.
அவள் என்றும் என்நெஞ்சில்.
அவள் வாழ்க்கைப் பயணம் அவ்வளவு தான் என்று ஒரு ஆறுதல். கொடிய நோயில் சிக்கி துன்பம் அனுபவிக்காமல் அவள் சென்றது அவளுக்கு நிம்மதி என்று ஆறுதல் கொள்கிறோம்.
இறுதிப்போரின் பின் போரின் வடுக்களை உடலிலும் மனத்திலும் சுமந்தபடி இருக்கின்ற ஆயிரக்கணக்கான இளைஞர்கள், பெண்கள், குழந்தைகள் நிலை எப்படி இருக்கிறது?
வைத்திய வசதிகள் பெருகியிருக்கின்றன. நவீன தொழில் நுட்பம் எட்டிப்பார்க்கிறது. தனியார் மருத்துவ மனைகள், விசேட வைத்திய ஆலோசனை நிலையங்கள் என ஏராளமான வசதிகள்.
அடிப்படையில் நோயாளர் கவனிப்பு எப்படி இருக்கிறது?
மனிதனை மனிதன் மதிக்கும் நிலை இருக்கிறதா?
நன்றே நமது யாழ்ப்பாணம் (அன்றும் இன்றும்)
படங்கள்: 1992 சூலை , 1993 சூலை
Thiru Thirunanthakumar
Geen opmerkingen:
Een reactie posten