தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 8 november 2011

இலங்கை இராணுவத்தினர் தமிழ் இளைஞர்களைக் கட்டிவைத்து வயராலும் மற்றும் கம்புகளாலும் முதுகில் பலமாக அடித்துள்ளனர் - சனல் 4


போர் முடிவடைந்து 2 வருடங்கள் பூர்த்தியாகியுள்ள நிலையில் இலங்கையில் உள்ள இரகசியச் சிறைச்சாலைகளில் தமிழ் கைதிகள் இன்னும் சித்திரவதைக்கு உள்ளாக்கப்படுவதாக சனல் 4 தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. அதற்கான ஆதாரக் காணொளியையும் அது வெளியிட்டுள்ளது.
சமீபத்தில் இலங்கைச் சிறையில் இருந்து தப்பி பின்னர் பிரித்தானியா வந்து அகதிகள் அந்தஸ்த்து கோரிய இருவரது காணொளிகளை அது தற்போது வெளியிட்டுள்ளது.
தமிழ் இளைஞர்களைக் கட்டிவைத்து வயராலும் மற்றும் கம்புகளாலும் முதுகில் பலமாக அடித்துள்ளனர் இலங்கை இராணுவத்தினர்.
அதுமட்டும் அல்லாது கழுத்தில் கம்பியைப் போட்டு சுருக்கிட்டு பின்னர் தண்ணீர் தொட்டி ஒன்றில் தன் தலையை மூழ்க்கவிட்டதாகவும் அப்போது தான் மூச்சுத் திணறி கிட்டத்தட்ட தான் இறக்கும் நிலைக்குச் சென்றதாகவும் ஒரு தமிழ் இளைஞர் தெரிவித்துள்ளார்.
மற்றுமொரு தமிழ் இளைஞர் தெரிவிக்கையில் தன்னைக் கட்டி வைத்து அடித்ததாகவும் பல நாட்களாக தான் சிறையில் வாடிய நிலையில் தாகத்துக்கு தண்ணீர் கேட்டவேளை சிறு நீரை இராணுவத்தினர் தந்து குடிக்கச் சொன்னதாகவும் கூறியுள்ளார்.
இதனை விட தான் போரில் அகப்பட்டு இறந்திருக்கலாமே எனத் தான் எண்ணியதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இலங்கையானது ஐ.நாவின் உறுப்பு நாடாக இருக்கின்ற போதும் அது ஐ.நா சாசனங்களை மீறி பாரிய சித்திரவதைகளை மனித குலத்துக்கு எதிராகச் செய்துவருகிறது என்ற குற்றச்சாட்டு தற்போது எழுந்துள்ளது.
போர் குற்றம் மற்றும் இன அழிப்பு என்பன ஒரு புறம் இருக்க தற்போது தமிழ் இளைஞர்களை சித்திரவதை செய்யும் மேலதிக குற்றச்செயல்களில் இலங்கை ஈடுபட்டும் வருகிறது என சனல் 4 தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.
இதுவரை பிரித்தானியாவில் உள்ள சுமார் 35 தமிழ் இளைஞர்களை சனல் 4 தொலைக்காட்சி தொடர்புகொண்டு அவர்களிடம் இருந்து வாக்குமூலங்களைப் பெற்றுள்ளதாக தெரியவருகிறது.
இவர்களில் பலர் ஒரே வகையான சித்திரவதை தமக்கு இழைக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளனர். சித்திரவதைக்கு எதிரான மனித உரிமை அமைப்புகள் சில ஐ.நா விடம் இது குறித்து முறைப்பாடு ஒன்றை மேற்கொண்டுள்ளதாகவும் மேலும் அறியப்படுகிறது.
இதன் அடிப்படையில் சித்திரவதைக்கு எதிரான ஐ.நா வின் அதிகாரிகள் இது குறித்து ஆராய உள்ளனர். இதனால் இலங்கை மேலும் சிக்கலுக்குள் தள்ளப்படும் அபாயம் தோன்றியுள்ளது.
போர்குற்றச்சாட்டு இன அழிப்பு என்று இலங்கை மீது இரு முனைத் தாக்குதல் தொடுக்கப்பட்டுள்ள நிலையில் சித்திரவதை என்னும் ஒரு களமும் புதிதாகத் திறக்கப்பட்டு இலங்கை அரசு மீது மும்முனைத் தாக்குதல் நடைபெற ஆரம்பமாகியுள்ளது.

Geen opmerkingen:

Een reactie posten