தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 29 maart 2011

சோகம் தாங்காமல் ஆயிரக்கணக்கான மக்கள் கதறியழ நல்லடக்கம் செய்யப்பட்ட சக்திதரனின் பூதவுடல்!

தங்களது மைந்தன் சக்திதரனை இழந்த சோகம் தாங்காது குப்பிளான் கிராமமே இருள் சூழ்ந்து கடும் சோகத்தில் ஆழ்ந்திருந்தது.


கவிஞராக, மிகச் சிறந்த பேச்சாளராக, எழுத்தாளராக, தீவிர சமயப் பற்றுக் கொண்ட பல்வேறு பரிமாணங்களைப் பெற்ற மிகச் சிறந்த ஆளுமையாகக் காணப்பட்ட சக்திதரனின் மரணத்தை ஜீரணிக்க முடியாத நிலை குப்பிளான் எங்கும் காணப்பட்டது.

கிராமம் எங்கும் தோரணங்கள், கறுப்புக் கொடிகள், மதில்கள் தோறும் கண்ணீர் அஞ்சலிச் சுவரொட்டிகளுடன் எங்கும் ஒரு வித மயான அமைதி.. குப்பிளான் கிராமமே திரண்டு வந்து எம் தவப் புதல்வனுக்கு தமது இறுதிஅஞ்சலியைச் செலுத்தியது.

குடும்பத்தினரைக் கண்கொண்டு பார்க்கவே முடியவில்லை. அவர் ஆசிரியராகப் பணியாற்றிய சாவகச்சேரி இந்துக்கல்லூரியின் அதிபர், ஆசிரியர்கள் , மாணவர்கள் எனப் பெருந்திரளானோர் கலந்து கொண்டனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா அவர்களும் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டார்.
சக்திதரனின் வீட்டில் இறுதிக் கிரியைகள் இடம்பெற்று பின்னர் கண்ணீர் அஞ்சலிக்கூட்டம் இடம்பெற்றது.

அதில் சாவகச்சேரி இந்துக் கல்லூரியின் அதிபர் பேசுகையில்,

மிகச் சிறந்த ஆசானை தமது பாடசாலை இழந்து விட்டதாகக் கூறினார். அவர் கல்வி கற்பித்த மாணவர்கள் தங்கள் பாடசாலையில் என்றுமில்லாதவாறு சிறந்த பெறுபேற்றைப் பெற்றதாகக் கூறினார். பாடசாலையில் இடம்பெறும் சமய நிகழ்வுகளிளிலும் சரி ஏனைய விழாக்கள் குறிப்பாக பட்டிமன்றம் போன்றவற்றிலும் சிறப்பாக மாணவர்களை வழிநடாத்தும் பண்பைக் கொண்டவர் என்றும் எப்போதும் குறித்த நேரத்துக்கு பாடசாலைக்கு வந்துவிடும் அவரது நேரம் தவறாமை தன்னை வெகுவாக ஈர்த்ததாகவும் குறிப்பிட்டார். (குப்பிளானுக்கும் சாவகச்சேரிக்கும் இடையிலான தூரம் யாவரும் அறிந்ததே).

அதிபருடைய இரங்கலுரையை அடுத்து பலரும் இரங்கல் உரையாற்ற முன் வந்தனர். அடுத்து வந்த ஆசிரியர் ஒருவர் உரையாற்ற வந்தார் ஆனால் அவரால் பேச முடியவில்லை. கண்ணீரையே உரையாகத் தந்து விட்டுப் போய்விட்டார். இதே நிலை அவரைத் தொடர்ந்து பேச வந்த நிறையப் பேருக்குக் காணப்பட்டது.

பின்னர் அவர் கற்பித்த தரம் 7 C மாணவர்களின் இரங்கலுரையும் இறங்கற்பாடலும் இடம்பெற்றன.

குப்பிளான் கிராமமே கண்டிராத அளவுக்கு ஏராளமான மக்களால் வீடு நிரம்பி வழிந்தது. அங்கு வந்த எல்லோருமே துக்கம் தாங்காமல் கண்ணீர் விட்டு கதறி அழுத வண்ணமிருந்த்தனர்.

பின்னர் மதியம் 1.40 மணியளவில் எம்மைந்தனின் பூதவுடல் குப்பிளான் இளைஞர்களால் காடகடம்பை மயானத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அவரது வீட்டிலிருந்து பூதவுடல் கொண்டு சென்ற வழி நெடுகிலும் தெருவெங்கும் வெள்ளைத்துணி விரிக்கப்பட்டு அதன் மேலேயே கொண்டு செல்லப்பட்டது.

போகும் வழியெங்கும் இளைஞர்கள் கண்ணீர் விட்டுக் கதறியழுதது பார்ப்போரின் நெஞ்சை உருகச் செய்தது. மயானத்துக்கு கொண்டு செல்லப்பட்டு இளைஞர்களின் ஓலத்துக்கு நடுவே எம் மைந்தனின் பூதவுடல் கனத்த மனதுடன் புதைக்கப்பட்டது.

எப்போதும் சிரித்த அந்த அப்பாவித்தனமான முகத்தையும் யதார்த்தமான சொல்லாடல்களையும் நாம் இனி எங்கு காண்போம்?

சில கேள்விகளும் விடை தெரியாத வினாக்களும்?

* இன்று ஊடகங்களில் வந்த செய்தியை யாவரும் அறிந்திருப்பீர்கள்... தோற்கடிக்கப்பட்ட ஒரு சமூகத்தின் துப்பாக்கிகளால் சூழப்பட்டு இருக்கும் ஒரு பிரதேசத்தின் தனி மனிதனின் பாதுக்காப்பும் எதிர்க் கேள்வி கேட்க முடியாத ஒரு சர்வாதிகாரப் போக்கும் கொண்ட இராணுவ ஆட்சியில் உயிர் வாழ்தலென்பது கஷ்டமான காரியம் தான்... வேறு எதுவும் பேசாமல் உணவு உட்கொள்ள மட்டும் வாயைத் திறந்தால் அதிககாலத்துக்கு உயிர் வாழலாம்.

* இன்று ஊர் மக்களோ அல்லது குடும்பத்தினரோ சக்திதரனுக்கு என்ன நடந்தது என்பது குறித்து பேசுவதற்கு கூட ஒரு வித பய உணர்வு காணப்படுகின்றது... உண்மைதான் நடந்து கொண்டிருக்கும் மிகச் சிறந்த ஜனநாயக ஆட்சியில் நாளைக்கு அவர்களின் பாதுகாப்பை யார் உறுதிப்படுத்துவது...?

* சம்பவம் நடந்து கிட்டத்தட்ட இரு வாரங்களின் பின்னர் யாழ் மாவட்ட பொலிஸ் பொறுப்பதிகாரி சக பொலிஸார்கள் சகிதம் இன்றைய தினம் சக்திதரனின் வீட்டுக்குச் சென்று விசாரணை நடத்தியுள்ளார். இன்று ஊடகங்களில் செய்தி வெளியாகும் மட்டும் குறிப்பாக இவ்வளவு நாளும் இந்தப் பொலிஸார் உரிய விசாரணை நடத்தாமல் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் செயற்பட்டது நிதர்சனமாகியுள்ளது.

* இன்றைய தினம் அச்செழு இராணுவ முகாமைச் சேர்ந்த இராணுவத்தினர் சக்திதரனின் வீட்டுக்குச் சென்று மலர் வளையம் வைத்து அனுதாபம் தெரிவித்தார்களாம்... (ஆடு நனையுதே என்று ஓநாய் அழுத கதை ஞாபகத்துக்கு வருகிறது)

* இவரின் விடை தெரியாத அந்த மரணத்தை நீதிமன்றில் கூட முறையிட முடியாத நிலை காணப்படுகின்றது. இதைத் தான் பாரதி அழகாகச் சொன்னான்... பேய் அரசு ஆட்சி செய்தால் பிணம் தின்னும் சாஸ்திரங்கள் என்று...

* வேறு எங்கும் நீதி கிடைக்காது... இனி என்ன செய்வது? கடவுள் என்ற ஒருவர் இருந்தால் அவரிடம் பிரார்த்தியுங்கள்.. எங்கள் அன்பு மைந்தனின் ஆத்மா சாந்தியடைய....

-துருவன்
28 Mar 2011

இராணுவத்தினருடன் முரண்பட்ட ஆசிரியர் அடித்துக் கொலை! யாழில் சம்பவம்!
[ திங்கட்கிழமை, 28 மார்ச் 2011, 01:26.17 AM GMT ]
யாழ். சாவகச்சேரி இந்துக்கல்லூரி ஆசிரியர் ஒருவர் இராணுவத்தினரால் அடித்துப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று கடந்த வாரம் இடம்பெற்றுள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
யாழ்ப்பாணம் குப்பிளான் தெற்கைச் சேர்ந்த சம்பந்தன் சக்திதரன் (வயது – 28) என்ற ஆசிரியர் கடந்த வாரம் இரவு 7.30 மணியளவில் திருநெல்வேலி சந்திப்பகுதியில் இராணுவத்தினர் அவரை கடுமையாகத் தாக்கியதாக அந்தப் பகுதியில் நின்றிருந்த வர்த்தகர்கள் கண்ணுற்றிருக்கின்றனர்.
இதேவேளை மறுநாள் காலை யாழ். ஆரியகுளம் சந்திப் பகுதியில் வீசப்பட்ட நிலையில் காணப்பட்ட அவர் பொலிஸாரால் மீட்கப்பட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்ததாகவும் அதன் பின்னர் சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிரிழந்துள்ளதாகவும் யாழ்ப்பாணத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவம் நடைபெற்ற நாளன்று மாலை 5.30 மணியளவில் வீட்டில் இருந்து புறப்பட்ட ஆசிரியர் சம்பந்தன் சக்திதரன் காங்கேசன்துறை வீதியில் நாச்சிமார் கோவிலுக்கு அண்மித்த மதுபான விற்பனை நிலையத்தில் மது அருந்தியிருக்கின்றார்.
அதே மதுபான விற்பனை நிலையத்திற்கு வருமாறு தனது நண்பருக்கு எஸ்.எம்.எஸ் தகவல் அனுப்பியிருந்ததாக குறித்த நண்பர் தெரிவித்திருக்கின்றார். ஆனாலும் குறித்த நண்பர் அங்கு சென்றிருக்கவில்லை.
அதன் பின்னர் யாழ்.பல்கலைக்கழகத்திற்குச் சென்ற ஆசிரியர் சக்திதரனை பல்கலைக்கழகத்தின் பாதுகாப்பு ஊழியராகக் கடமையாற்றும் குப்பிளானைச் சேர்ந்த நபர் போதை அதிகம் என்பதால் தொடர்ந்து பயணிக்க வேண்டாம் என்று மறித்திருக்கின்றனர்.
அங்கிருந்து 7.30 மணியளவில் வெளியேறிய சக்திதரன் திருநெல்வேலி சந்திப்பகுதியில் தடுமாறியதாகவும், அவரை இடைமறித்த இராணுவத்தினர் இருவரும் சிவில் உடையில் இருந்த இருவரும் உரையாடியிருக்கின்றனர். அதன் பின்னர் இராணுவத்தினர் அவரைத் தாக்கியதை தாம் கண்ணுற்றதாக திருநெல்வேலி சந்திப் பகுதி வர்த்தகர்கள் தெரிவித்திருக்கின்றனர்.
இதேவேளை தமிழீழம் கிடைத்தால் நீங்கள் யாழ்ப்பாணத்தில் நிற்க முடியாது என்று இராணுவத்தினரைப் பார்த்து அவர் தெரிவித்ததை அடுத்தே இராணுவத்தினர் அவரைத் தாக்கியதாகவும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
யாழ்.போதனா வைத்தியசாலையில் நேற்று மேற்கொள்ளப்பட்ட பிரதே பரிசோதனையில் உயிரிழந்தமைக்கான காரணம் கொலையே என்று சட்டவைத்திய அதிகாரி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இரண்டாம் இணைப்பு - இந்தச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது.
ஆசிரியரான சத்திதரன் கடந்த 15ஆம் திகதி செவ்வாய்க்கிழமை குப்பிளானிலுள்ள தமது வீட்டிலிருந்து தாயாருக்கு மருந்து வாங்குவதற்காக மாலை 5.30 மணியளவில் புறப்பட்டு யாழ்ப்பாணம் வந்துள்ளார். அங்கு நண்பருடன் இணைந்து சில மணிநேரத்தைக் கழித்துள்ளார்.
பின்னர் பலாலி வீதி வழியாக மோட்டார் சைக்கிளில் தனியாகப் பயணித்துள்ளார். திருநெல்வேலியில் பழைய பிரதேச செயலகத்திற்கு அருகில் இவரை இராணுவத்தினர் மறித்து விசாரணை செய்துள்ளனர். அவ்வேளை அங்கு ஒரு முறுகல் நிலைமை ஏற்பட்டதாகத் தெரியவந்தது.
அதைத்தொடர்ந்து அங்கு மக்கள் கூடியுள்ளனர். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் அருகிலுள்ள மஞ்சமுன்னா தடியை முறித்து மிரட்டியதைத் தொடர்ந்து மக்கள் கலைந்துசென்றுள்ளனர். மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் யார் என்பது குறித்துத் தெரியவில்லை.
அன்றைய தினம் இரவு 8.30 மணியளவில் பிரஸ்தாப ஆசிரியர் சுயநினைவு இல்லாத நிலையில் 119 அவசர அம்புலன்ஸ் மூலம் யாழ். ஆஸ்பத்திரிக்கு எடுத்துவரப்பட்டார். அங்கு அவர் விபத்தில் சிக்கிக் காயமடைந்ததாகத் தெரிவித்தே அனுமதிக்கப்பட்டார். உடனடியாக ஆசிரியர் அவசர சிகிச்சைப்பிரிவில் சேர்க்கப்பட்டார்.
அவரது உடலில் உள்ளாடையைத் தவிர வேறெந்த ஆடைகளும் இல்லாத நிலையிலேயே ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார் எனக் கூறப்பட்டது. தொடர்ந்து சுயநினைவில்லாமல் இருந்த பிரஸ்தாப ஆசிரியர் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை இரவு 7.30 மணியளவில் சிகிச்சை பயனின்றி மரணமானார்.
இவரது முதுகுப்புறத்தில் வயரினால் தாக்கியமைக்கான காயங்கள் காணப்படுவதுடன் தலையில் பலமாகத் தாக்கப்பட்டமைக்கான அடையாளங்கள் (காயங்கள்) உள்ளன என்று வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. விபத்தில் காயமடைந்தமைக்கான எந்தவித அடையாளங்களும் இல்லை என்றும் அந்த வட்டாரங்கள் குறிப்பிட்டன.
யாழ்.நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா யாழ்.ஆஸ்பத்திரியில் மரண விசாரணைகளை நடத்தினார். சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

Geen opmerkingen:

Een reactie posten