தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 16 maart 2011

வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலயங்களில் சித்திரவதைக் கூடங்கள்

[ புதன்கிழமை, 16 மார்ச் 2011, 01:05.20 AM GMT ]
வலிகாமம் வடக்கில் மக்கள் மீளக் குடியமர அனுமதிக்கப்பட்ட பாடசாலைச் சூழலில் பாரிய மனித புதைகுழிகள் இருக்கலாம் என்ற அச்சம் பலரிடையேயும் ஏற்பட்டுள்ளதாக ஜீரீஎன்னின் புலனாய்வுச் செய்தியாளர் தெரிவிக்கிறார். இந்தப் பகுதிகளில் பாரிய சித்திரவதை முகாம்கள் இருந்திருக்கலாம் எனவும் அவர்கள் நம்புகின்றனர்.
உயர்பாதுகாப்பு வலயப் பகுதிகளில் மீளக்குடியமர்வு தாமதமாவதற்கு இந்தப் பின்னணியும் காரணமாக இருக்கலாம் எனவும் ஊகிக்கப்படுகின்றது.
மேலும் பல தடுப்பு முகாம்கள் அல்லது சித்திரவதை முகாம்கள் உள்ளே இருப்பதாகவே பொதுமக்கள் பலரும் சந்தேகம் கொண்டுள்ளனர்.
அண்மையில் மீள இயங்க அனுமதிக்கப்பட்ட வசாவிளான் மத்திய மகாவித்தியாலய சூழலில் சர்ச்சைக்குரிய வகையில் சித்திரவதைக் கூடங்களை அப்பகுதிப் பொதுமக்கள் கண்டுள்ளனர். எனினும் அடுத்த சில தினங்களில் படையினர் அவசர அவசரமாக அவற்றினை உருக்குலைத்து விட்டனர் எனவும் ஜீரீஎன்னின் புலனாய்வுச் செய்தியாளர் கூறுகிறார்.
முற்றுமுழுதாக கதவுகள் மூடி அடைக்கப்பட்ட நிலையில் இருண்ட அறைகளையும் அங்கு பெருமளவில் இரத்தம் சிந்தப்பட்ட நிலையில் தடயங்களையும் கண்டுள்ளனர்.
அத்துடன் பலகைகள் கொண்ட கட்டில்கள் பல சித்திரவதை செய்வதற்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டும் குறிப்பாக முட்கம்பிகளால் கைகள் கட்டப்பட்ட நிலையில் சித்திரவதை செய்யப்பட்டதான முட்கம்பித் தடயங்களையும் அப்பகுதி மக்கள் கண்டுள்ளனர்.
எனினும் இது தொடர்பாக படை அதிகாரிகளின் கவனத்திற்கு சென்றதை அடுத்து அவசர அவசரமாக அங்கு சென்ற அதிகாரிகள் அங்கு பிரசன்னமாகியிருந்த அனைவரையும் திருப்பி அனுப்பியுள்ளனர். பின்னர் படையினர் மீண்டும் ஓரிரு வாரங்கள் அங்கிருந்து அனைத்தையும் சுத்திகரித்த பின்பே பாடசாலையை மீண்டும் வழங்கியதாக தெரியவந்துள்ளது.
வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயப் பகுதிகளில் இவ்வாறு விடுவிக்கப்பட்ட பல பகுதிகளிலும் இவ்வாறு தடயங்கள் காணப்படுகின்றன.
யாழ்குடாநாட்டில் படையினரால் கடத்தப்பட்டு அல்லது காணாமல் போன ஆயிரக்கணக்கான இளைஞர்கள் எங்கே என்ற தகவல்கள் இன்றுவரை இல்லாமல் போயுள்ளது. இவர்கள் அச்செழு ஊரெழு முகாம்கள் ஊடாக பலாலி உயர்பாதுகாப்பு வலயப் பகுதிகளில் கனரக வாகனங்களில் உள்ளே கொண்டு சென்றமைக்கான பல தடயங்கள் வெளிவந்திருக்கின்றன.
எனினும் பின்னர் அவர்கள் எவருமே வெளியே வந்திருக்கவில்லை. இந்நிலையில் அவர்கள் சித்திரவதையின் பின் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகங்கள் எழுப்பப்படுகின்றது. அந்த வகையிலேயே இந்த சித்திரவதைக் கூடங்களும் அமைந்திருக்கலாம் என நம்பப்படுகின்றது.
வன்னி யுத்தத்தில் கைது செய்யப்பட்ட போராளிகளில் ஒரு பகுதியினர் பலாலியில் உள்ள தடுப்பு முகாம்களில்:-
இதனிடையே வன்னி யுத்தத்தில் கைது செய்யப்பட்ட போராளிகளில் ஒரு பகுதியினர் பலாலியில் உள்ள தடுப்பு முகாம்களில் இரகசியமாக உள்ளதனையும் ஜீரீஎன் புலனாய்வுச் செய்தியாளர் உறுதிப்படுத்தி இருக்கிறார்.
ஏற்கனவே தெல்லிப்பளையில் விசேட தடுப்பு முகாம் ஒன்று இயங்கிய போதிலும் அது திடீரென மூடப்பட்டது. அங்கிருந்தவர்கள் எங்கு கொண்டு செல்லப்பட்டார்கள் என்பது பற்றித் தகவல்கள் வெளியாகவில்லை.
இந்நிலையிலேயே வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயப் பகுதிகளில் இராணுவ சித்திரவதை கூடங்களும் மனிதப் புதைகுழிகளும் இருக்கலாம் என்ற ஊகங்களும் தகவல்களும் வெளியாகியிருக்கின்றன.

Geen opmerkingen:

Een reactie posten