தமிழர்களின் உரிமைப் போராட்டத்தின் முதல் மனிதவுரிமைப் போராளி செல்லையா கோடீஸ்வரன் (85) நேற்று முன்தினம் (15) காலமானார்.
வத்தேகமவை பிறப்பிடமாக கொண்ட கோடீஸ்வரன் திருகோணமலையில் நீண்டகாலம் வசித்து வந்தார். இறுதியாக கொழும்பில் வசித்து வந்தார். வயது மூப்பால் உடல்நலம் குன்றி காலமானார். அவரது இறுதி நிகழ்வுகள், அவரது சொந்த இடமான திருகோணமலையில் இடம்பெறும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
ஈழத் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தில் அவரின் பங்கு கனதியானது. தன்னால எதிரப்பினை வெளிப்படுத்தி தமிழ் மக்களின் உரிமை எது என்பதை சிங்களத்திற்கு அன்றே திடமாக வெளிப்படுத்தினார்.
இதனால் தனிச்சிங்கள சட்டத்தின் பின்னர், சிங்கள மொழியில் தேர்ச்சி பெற மறுத்து, தமிழ் மக்களின் மொழி உரிமைக்காக நீண்ட சட்டப் போராட்டம் நடத்தி ஈழத்தமிழர் வரலாற்றில் கோடீஸ்வரன் இடம்பிடித்துள்ளார்.
தனிச்சிங்கள சட்டத்தின் அடிப்படையில், சிங்கள மொழியில் தேர்ச்சி பெறாத அரச உத்தியோகத்தர்களின் ஊதிய உயர்வை அரசாங்கம் தடுத்தமைக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார்.
தனிச்சிங்கள சட்டமூலத்திற்கு எதிராக இங்கிலாந்தின் ப்ரிவி கவுன்ஸிலில் வழக்கு தொடர்ந்தார். அவருக்கு சார்பாக அதன் தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தபோதும், ஸ்ரீமாவே அரசு இரும்புக்கரம் கொண்டு அவரது ஏழு வருட சட்டப்போராட்டத்தை அடக்கியது.
சிங்கள மொழியில் தேர்ச்சி பெறாவிட்டால் வருடாந்த ஊதிய உயர்வைத் தர மறுக்கும் ஸ்ரீமாவோ அரசாங்கத்தின் 1961ஆம் ஆண்டு டிசெம்பர் திறைசேரி சுற்றுநிருபத்தின் விளைவாக சிங்கள மொழியில் தேர்ச்சி பெறாதவர்களிற்கு ஊதிய உயர்வு மறுக்கப்பட்டது.
அரசாங்க எழுதுவினைஞர் சங்கத்தின் தலைவரும், அரசாங்க எழுதுவினைஞருமான செல்லையா கோடீஸ்வரன், சிங்கள மொழியில் தேர்ச்சி பெற மறுத்தார். அவருக்கு கிடைக்க வேண்டிய ஊதிய அதிகரிப்ம்பு கிடைக்கவில்லை. தனக்கு கிடைக்க வேண்டிய ஊதிய உயர்வைக் கேட்டும், அது கிடைக்காமைக்கான காரணமாக இருந்த 1961 டிசம்பர் திறைசேரி சுற்றுநிருபம் மற்றும் 1956ஆம் ஆண்டு உத்தியோகபூர்வ மொழிச் சட்டம் (தனிச்சிங்களச் சட்டம்) ஆகியன அன்று நடைமுறையிலிருந்த சோல்பரி அரசியலமைப்புக்கு முரணானது என்றும் கொழும்பு மாவட்ட நீதிமன்றில் வழக்குத்தாக்கல் செய்யதார்.
இந்த வழக்கில் முன்னாள் மன்றாடியார் நாயகம் எம்.திருச்செல்வம் க்யூ.ஸீ, சீ. ரங்கநாதன் க்யூ.ஸீ, சீ. நவரட்ணம் க்யூ.ஸீ ஆகிய முன்னணி சட்டத்தரணிகள் ஆஜராகினர்.
தனிச்சிங்களச் சட்டம் அரசியல் யாப்பின் 29(2) சரத்துக்கு முரணானது ஆகவே அச்சட்டம் செல்லுபடியற்றது, அந்த சட்டத்தை நடைமுறைப்படுத்தும் 1961 டிசம்பர் திறைசேரி சுற்றுநிருபமும் செல்லுபடியற்றது என கோடீஸ்வரன் தரப்பு சட்டத்தரணிகள் வாதிட்டனர்.
அரச தரப்பு வாதத்தில்- ஒரு அரச உத்தியோகத்தர், முடியின் விருப்பின் பேரில் சேவையாற்றுவதால், அவர் தன் சம்பளத்துக்காக முடியை எதிர்த்து வழக்குத்தாக்கல் செய்ய முடியாது என்ற சட்டக்கோட்பாட்டை முன்னிறுத்தி ஆட்சேபித்தனர்.
வழக்கை விசாரித்த மாவட்ட நீதிபதி ஓ.எல்.டி க்றெஸ்டர், வழக்கினை கோடீஸ்வரனுக்குச் சாதகமாகத் தீர்த்ததுடன், 1956ஆம் ஆண்டு உத்தியோகபூர்வ மொழிச் சட்டமும், 1961 டிசெம்பர் திறைசேரி சுற்றுநிருபமும், அரசியல் யாப்பின் 29(2) சரத்துக்கு முரணானது என 1964ஆம் ஆண்டு ஏப்ரல் 24ஆம் திகதி தீர்ப்பு வழங்கினார்.
கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தின் தீர்ப்பினை எதிர்த்து, அரசாங்கம், உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்தது.
ஓர் அரச சேவையாளன் தன்னுடைய சம்பளத்துக்காக முடிக்கெதிராக நீதிமன்றமொன்றில் வழக்குத் தாக்கல் செய்ய முடியாது என்ற அடிப்படையில், மாவட்ட நீதிமன்றத்தின் தீர்ப்பை உயர் நீதிமன்றம் இரத்து செய்தது. இந்த முதற் புள்ளியிலேயே வழக்கு தீர்ந்து விட்ட காரணத்தால், அரசியலமைப்பு சார்ந்த விடயங்கள் பற்றி ஆராய்வதை உயர்நீதிமன்றம் தேவையற்றதெனக் கருதியது. இந்தத் தீர்ப்பு 1967இல் வழங்கப்பட்டது.
Geen opmerkingen:
Een reactie posten