வடக்கு - கிழக்கில் திட்டமிடப்பட்டு 463 பெளத்த விகாரைகள் நிறுவப்பட்டிருப்பதாக தமிழ்த் தேசியக கூட்டமைப்பு எம்.பி. சீனித்தம்பி யோகேஸ்வரன் நேற்று பாராளுமன்றத்தில் அதிருப்தி வெளியிட்டார்.
பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற 2015ம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தின் தெரிவுக்குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டுள்ள அமைச்சுக்கள் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்;
இலங்கையில் கடைப்பிடிக்கப்பட்டுவருகின்ற இந்து - கிறிஸ்தவம், இஸ்லாம் மற்றும் பெளத்தம் ஆகிய நான்கு மதங்களுக்கும் பொதுவானதாக பெளத்த விவகார அமைச்சு என்று உருவாக்கப்பட்டுள்ளது.
பெளத்த விவகார அமைச்சானது பெளத்த சமயத்துக்கே முன்னுரிமை கொடுக்கின்றதே தவிர ஏனைய மதங்களைப் பற்றி சிந்திப்பதாக இல்லை.
மத விவகாரங்களுக்கென ஒதுக்கப்படுகின்ற நிதியானது 99 வீதம் பெளத்த மதத்துக்கான விவகாரங்களுக்கும் எஞ்சியிருக்கும் ஒருவீத நிதியே இந்து - கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய மத விவகாரங்களுக்கும் என ஒதுக்கப்படுகிறது.
புத்தபெருமான் பிறப்பால் ஒரு இந்து. ஆகவே இந்து சமயத்துக்கும் பெளத்தத்திற்கும் நெருங்கிய தொடர்புகள் இருக்கின்றன என்பதை இங்கு கூறிவைக்க விரும்புகிறேன்.
2012ம் ஆண்டு நாடு முழுவதும் 10,349 விகாரைகள் இருந்தன. அது 2013இல் 10.812ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த அதிகரிப்பானது வடக்கு கிழக்கிலேயே இடம்பெற்றுள்ளது. அந்த வகையில் வடக்கில் கடந்த வருடத்தில் 463 விகாரைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.
யுத்தம் நிறைவுக்கு வந்த 2009ம் ஆண்டின் பின்னர் இந்துக்களும் அச்சுறுத்தப்பட்டு வருகின்றனர். அதுமாத்திரமின்றி பூர்வீகக் குடிகளின் மதத்தை அழிப்பதற்கு திட்டமிட்ட செயற்பாடுகள் இடம்பெற்றுவருகின்றன.
மட்டக்களப்பில் பெளத்த பிக்கு ஒருவர் அச்சுறுத்தலாக இருந்து வருகிறார். பொலிஸார்கூட அவர் மீது நடவடிக்கை மேற்கொள்ள முடியாதவர்களாக இருக்கின்றனர்.
பொதுபலசேனா என்ற அமைப்பொன்று இங்கு இயங்கி வருகிறது. இந்த அமைப்புடன் தற்போது சில இந்து சமயத்தைச் சேர்ந்த அமைப்புக்களும் இணைந்து கொண்டுள்ளன.
இது இந்து மற்றும் இஸ்லாமிய மக்களிடையே பிளவுகளை ஏற்படுத்துவதற்கு ஏதுவாக இருந்து வருகிறது.
மேலும், இந்து ஆலயங்களில் மிருக பலிகளை ஏற்றுக்கொள்ள முடியாது. இது தடுக்கப்பட வேண்டும். ஆலயங்களில் மிருக பலிகளை தடுப்பதற்கு பெளத்த விவகார அமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
http://www.tamilwin.com/show-RUmszBRUKYiv0.html
Geen opmerkingen:
Een reactie posten