zaterdag 20 december 2014

மகிந்தவின் பிரசாரக் கூட்டங்களில் ரிசாத் பங்கேற்காதது குறித்து அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு!

26 இலங்கையர்களை நாடு கடத்தியுள்ளது ஜப்பான்
[ சனிக்கிழமை, 20 டிசெம்பர் 2014, 02:06.05 AM GMT ]
ஜப்பானின் விசேட விமானம் மூலம் இவர்கள் இலங்கைக்கு கடந்த வியாழக்கிழமை நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
இவர்கள் 26 வயதுக்கும் 60 வயதுக்கும் உட்பட்டவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீசா முடிவடைந்தபோதும் அதிக காலம் நாட்டில் தங்கியிருந்த குற்றச்சாட்டின் பேரிலேயே இவர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
2013ஆம் ஆண்டு ஜூலை மாதத்தின் பின்னர் ஜப்பானினால் மேற்கொள்ளப்பட்ட பாரிய நாடு கடத்தல் நடவடிக்கை இதுவாகும்.
http://www.tamilwin.com/show-RUmszCRUKakr7.html
யாழ்.சிறையில் உள்ள இந்திய மீனவர்கள் விடுவிக்கப்படுவர்: இந்திய அதிகாரி
[ சனிக்கிழமை, 20 டிசெம்பர் 2014, 02:09.35 AM GMT ]
இலங்கையில் சிறைவைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களை விடுவிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரக அதிகாரி எஸ்.டி.மூர்த்தி இதனை அறிவித்துள்ளார்.
யாழ்ப்பாண சிறையில் இந்திய மீனவர்கள் 81பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மீது கடல்எல்லையை தாண்டிய குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்தநிலையில் தமிழகத்தில் உள்ள இலங்கை மீனவர்கள் 30பேரை விடுதலை செய்வதாக தமிழக முதல்வர் பன்னீர்செல்வம் அறிவித்துள்ள நிலையிலேயே யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய மீனவர்களை விடுவிக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
http://www.tamilwin.com/show-RUmszCRUKaksy.html


ஊர்காவற்றுறை - தம்பாட்டி மக்களை சி.சிறீதரன் எம்.பி சந்திப்பு
[ சனிக்கிழமை, 20 டிசெம்பர் 2014, 02:30.07 AM GMT ]
மிகவும் நெருக்கடியான நிலையில் அரச ஆதரவுக் குழுக்களின் சர்வாதிகாரப்பிடியில் சிக்குண்டு தனிமனித சுதந்திரத்தை இழந்து நிற்கின்ற ஊர்காவற்றுறை தம்பாட்டி வாழ்மக்களை பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இதன்போது தமது உள்ளக்குமுறல்களை மிகுந்த வேதனையுடன் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனிடம் அம்மக்கள் தெரிவித்துள்ளனர்.
ஜனநாயகம் மறுக்கப்பட்டு பேச்சுரிமைகள் இல்லாத நிலையில் 16 கி.மீற்றர்கள் தொலைவிலுள்ள யாழ்ப்பாண நகரின் சுதந்திரம் கூட எமக்கு இல்லாத நிலையில் வேற்று நாட்டவரைப் போல் நாங்கள் நடத்தப்படுகின்றோம்.
சமுர்த்தி பயனாளிகள் தெரிவில் இருந்து சாதாரண கோழிக்குஞ்சுகள் வழங்குதல் வரை அரச சார்பு அரசியல் கட்சியின் உறுதிப்படுத்தல் இல்லாமல் விட்டால் எதுவும் பெறமுடியாது என்ற நிலையில் உள்ளோம்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஆதரவு வழங்கியதால் வீதிகளும் இல்லை, வீடுகளும் இல்லை, என்ற நிலை உருவாக்கப்பட்டுள்ளது.
ஊர்காவற்றுறை நகரப் பகுதியில் குறிப்பாக பாடசாலைக்கு அருகாமையில் 2 மதுபானசாலைகள் அமைத்து சட்டத்தை மீறிய வகையில் இளைய சமுதாயத்தை வேறு திசைக்கு கொண்டு செல்வதோடு பெண்களுக்கும் போதிய பாதுகாப்புக்கள் வழங்கப்படவில்லை.
கடந்த 25 வருடங்களுக்கு மேலாக இவ்வாறான அடிமை வாழ்க்கையினையே வாழ்ந்து வருகிறோம். இதற்கு மாற்றம் வராத என்ற ஏக்கத்துடன் உங்களிடமும் எங்கள் வேதனைகளை முன் வைக்கிறோம் என அப்பிரதேச மக்கள் மேலும் தெரிவித்தனர்.
இதற்குப் பதிலளித்த பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன்,
மாற்றம் என்ற சொல்லைத்தவிர மற்றவையெல்லாம் மாறிக்கொண்டேதான் இருக்கும்.
எம்மக்களின் தியாகங்கள், அர்ப்பணிப்புக்கள், நாங்கள் சிந்திய கண்ணீர் என்பன ஆக்கிரமிப்பாளர்களினதும் அடிவருடிகளினதும் துரோகத்தனத்தை நிச்சயம் தகர்க்கும்.
இதற்கான காலம் கனிந்து வருகிறது. எனவும் தெரிவித்தார். இக்கலந்துரையாடலில் தம்பாட்டி காந்திஜி விளையாட்டுக் கழகத் தலைவர் கனகையா,கிராம அபிவிருத்தி சங்கத்தலைவர் சிவனேசன்பிள்ளை எனப்பலரும் கலந்து கொண்டனர்.
http://www.tamilwin.com/show-RUmszCRUKaksz.html

மகிந்தவின் பிரசாரக் கூட்டங்களில் ரிசாத் பங்கேற்காதது குறித்து அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு!
[ சனிக்கிழமை, 20 டிசெம்பர் 2014, 02:52.04 AM GMT ]
வன்னியிலும், மட்டக்களப்பிலும் நடைபெற்ற இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் தேர்தல் பிரசாரக் கூட்டங்களில், ரிசாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் பங்கேற்காமல் ஒதுங்கியுள்ளது.
ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும், அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் இன்னமும், தமது ஆதரவு யாருக்கு என்று அறிவிக்கவில்லை.
முன்னதாக, ஜனாதிபதிக்கு ஆதரவு அளித்துள்ளதாகவும்,  ஆதரவு அளிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியான போதிலும், அண்மையில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகளையடுத்து, எந்த முடிவையும் எடுக்காமல் இழுத்தடித்து வருகிறது அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் முல்லைத்தீவு, முள்ளியவளையில் நடந்த பிரசாரக் கூட்டத்திலும், நேற்று காத்தான்குடி, மட்டக்களப்பு ஆகிய இடங்களில் நடந்த பிரசாரக் கூட்டங்களிலும், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பங்கேற்றிருந்தார்.
எனினும், இந்த பிரசாரக் கூட்டங்களில் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரசின் பிரதிநிதிகள் எவரும் பங்கேற்கவில்லை.
அமைச்சர் ரிசாத் பதியுதீன், இந்தக் கூட்டங்களில் பங்கேற்காதது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையே, இந்த தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது என்ற விடயத்தில், அகில இலங்கை முஸ்லிம் காங்கிரசுக்குள் பிளவு ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
http://www.tamilwin.com/show-RUmszCRUKaks0.html
தமிழ், முஸ்லிம் மக்கள் காலை 7 மணிக்கும் 10 மணிக்கும் இடையில் வாக்களித்துவிட வேண்டும்!- மனோ கணேசன்
[ சனிக்கிழமை, 20 டிசெம்பர் 2014, 02:53.21 AM GMT ]
நாடு முழுக்க வாழும் தமிழ் பேசும் மக்கள், ஜனவரி 8ம் திகதி காலை 7.00 மணிக்கும், 10.00 மணிக்கும் இடையில் தமது வாக்களித்துவிட வேண்டும்.  தாமதம் வேண்டாம். மாலை  4.00 மணிவரை வாக்களிப்புக்கான வாய்ப்பு இருந்தாலும், நாம் நேரகாலத்துடன் வாக்களிப்பது நமது வீட்டுக்கும், நமது நாட்டுக்கும் நல்லது என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
மாத்தளை நகரில் நேற்று மாலை நடைபெற்ற பொது எதிரணி பிரச்சார கூட்டத்தில் உரையாற்றிய மனோ கணேசன் மேலும் கூறியதாவது,
இந்த ஆட்சிக் கொடுமையில் இருந்து கொஞ்சமாவது மீண்டு தலை தூக்க வேண்டும். இன்றைய இறுக்கமான சூழலில் இருந்து கொஞ்சமாவது மீள வேண்டும். துன்பப்படும் தமிழ் பேசும் மக்களின் கோணத்தில் இருந்து பார்த்தால் தான் இந்த உண்மைகள் புரியும்.
இதற்கு இன்று எம்முன் இருக்கும் ஒரே வழி, அன்னப்பறவை சின்னத்துக்கு வாக்களித்து, இன்றைய ஆளும் கூட்டணியை தோற்கடிப்பதுதான். அதனாலேயே பல்வேறு விட்டுக்கொடுப்புகளுடன் இந்த கூட்டணியில் இன்று நாம் இருக்கின்றோம்.
எங்கள் அரசியல் சமூக வாழ்வில் ஆரம்பித்து, எம் சமூக பொருளாதார வாழ்விலும் கைவைக்க இவர்கள் ஆரம்பித்து விட்டார்கள். எமது நேர்மையான நியாயமான அரசியல் அபிலாஷகளை பிடுங்கினார்கள். நாம் என்ன தொழில் செய்ய வேண்டும், எப்படி செய்ய வேண்டும் என்று கட்டளையிட்டு எம் பொருளாதாரத்தில் கைவைத்தார்கள். இப்படியே போனால் நாம், நாளை நாம் வழிபடுவதற்கும், தொழுவதற்கும், பிரார்த்திப்பதற்கும் இவர்களிடம் அனுமதி வாங்க வேண்டி வரும்.
எனவே தமிழ் பேசும் மக்கள் மத்தியில் இன்று வாதப்பிரதிவாதங்கள் தேவையில்லை. தயக்கங்களுக்கு அவசியம் இல்லை. எமது வாக்கு முக்கியமானது. அதை பாதுகாப்பாக உரிய இடத்துக்கு கொண்டு சென்று சேர்ப்பது அதைவிட முக்கியமானது. இந்த காட்டாட்சியை விரட்ட அதை பயன்படுத்த வேண்டும்.
எனவேதான் ஜனவரி எட்டாம் திகதி காலை ஏழு மணிக்கும், பத்து மணிக்கும் இடையில் தமது வாக்களிப்பை நடத்தி முடித்துவிட வேண்டும் என தமிழ், முஸ்லிம் மக்களை நான் கோருகிறேன்.
தாமதிக்காதீர்கள். எங்கள் தாமதம், தோல்வியில் துவண்டு கொண்டிருக்கும் இவர்களுக்கு சட்ட விரோத வாய்ப்புகளை தந்து விடலாம். அதற்கு இடம் கொடுக்க வேண்டாம். என தெரிவித்தார் மனோ கணேசன்.
http://www.tamilwin.com/show-RUmszCRUKaks1.html

Geen opmerkingen:

Een reactie posten