zondag 23 november 2014

சீன ஆதிக்கத்தை உடைப்பாரா டோவல்?



ஜனாதிபதிக்கு கொடுத்த ஆதரவு பற்றி மீண்டும் சிந்திக்கவேண்டியுள்ளது: ம.ம.மு பொதுச் செயலாளர்- ஜனாதிபதிக்கே ஆதரவு: பழனி திகாம்பரம்
[ ஞாயிற்றுக்கிழமை, 23 நவம்பர் 2014, 08:11.20 AM GMT ]
ஜனாதிபதிக்கு கொடுத்த ஆதரவை பற்றி மீண்டும் சிந்திக்க வேண்டியுள்ளதாக மலையக மக்கள் முன்னணியின் பொது செயலாளர் ஏ.லோரண்ஸ் தெரிவித்தார்.
இன்று ஹற்றனில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
மலையக மக்கள் முன்னணியின் தலைவர் சந்திரசேகரன் இருந்த காலத்திலும் சரி, இன்றும் சரி முக்கியமான தேர்தல் காலங்களில் நாங்கள் பாரிய பங்களிப்பை செய்திருக்கின்றோம்.
நாங்கள் மக்களின் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து சிந்தித்து பார்த்து தான் ஆதரவு கொடுப்போம்.
மலையக மக்கள் 200 வருடகாலமாக லயன் குடியிருப்புகளிலேயே இருக்கின்றார்கள்.
மலையக மக்களின் லயன் முறையை மாற்றி, காணி உரிமையோடு, தனி தனி வீடுகள் அமைப்பது தான் தலைவர் சந்திரசேகரனின் கனவு. அதை தான் நாங்கள் இன்றும் வழியுறுத்தி வருகின்றோம்.
நாட்டில் உள்ள இன பிரச்சினை இன்னும் தீர்க்கப்படவில்லை. இந்த இன பிரச்சினைக்கு அரசியல் ரீதியான தீர்வும் வழங்கப்படவேண்டும்.
தற்போது அரசியல் ரீதியில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. இதனால் நாங்கள் அரசுக்கு கூறிய ஆதரவு பற்றி மீண்டும் சிந்திக்க வேண்டியுள்ளது.
இருக்கின்ற அரசாங்கத்திற்கு ஆதரவு கொடுப்பதா? அல்லது வேறு தீர்மானத்தை எடுப்பதா என்று இன்னும் தீர்மானிக்கவில்லை.
எனினும் இங்கு ஏற்பட்டுள்ள அரசாங்க மாற்றத்தினாலேயே நாம் சிந்திக்க வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.
சில கட்சிகள் நிபந்தனையற்ற ஆதரவு தெரிவித்திருந்தாலும் நாங்கள் ஜனாதிபதியிடம் சில கோரிக்கைகளை முன்வைத்தே ஜனாதிபதிக்கு ஆதரவு தெரிவித்திருந்தோம் என அவர் மேலும் தெரிவித்தார்.
ஜனாதிபதிக்கே ஆதரவு: பழனி திகாம்பரம்
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கே ஆதரவு தெரிவிப்பதாக தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பிரதி அமைச்சருமான பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.
இன்று அட்டனில் நடைபெற்ற கூட்டத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், வெற்றி பெறுபவர்களுக்கு தான் வாக்களிக்க வேண்டும். தோழ்வியடைபவர்களுக்கு வாக்களித்துவிட்டு மீண்டும் வெற்றி பெற்றவர்களிடம் மண்டியிட முடியாது.
ஆகவே வெற்றி பெறுபவர்களுக்கே நாம் வாக்களிக்க வேண்டும்.
மீண்டும் ஜனாதிபதி ராஜபக்ஷவே மூன்றாவது முறையாகவும் ஜனாதிபதியாகுவார். அதனால் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கே ஆதரவு வழங்கப்போவதாக கட்சி ஆதரவாளர்களிடம் தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmszBRXKYgw3.html
சீன ஆதிக்கத்தை உடைப்பாரா டோவல்?
[ ஞாயிற்றுக்கிழமை, 23 நவம்பர் 2014, 08:46.34 AM GMT ]
ஐந்தரை ஆண்டுகளுக்கு முன்னர் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் முடிவுக்கு வந்ததையடுத்து பாதுகாப்பு கருத்தரங்குகளை ஒழுங்கு செய்வதில் பாதுகாப்பு அமைச்சு அக்கறை காண்பித்து வருகிறது.
முதலில் தீவிரவாதத்தை தோற்கடித்த இலங்கையின் அனுபவங்கள் என்ற பெயரில் இராணுவமே பாதுகாப்பு கருத்தரங்கை ஒழுங்கு செய்தது.
ஆரம்பத்தில் அது இலங்கை இராணுவம் தனது போர் அனுபவங்களை பிறநாடுகளுடன் பகிர்ந்து கொள்வதற்கான ஒரு ஏற்பாடாகவே இருந்தது.
அது போரின் போது இடம்பெற்ற மீறல்களை மறைக்கும் முயற்சி என்று பரவலாக மனித உரிமை அமைப்புகளால் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகவும் நேரிட்டது.
இலங்கை இராணுவம் இப்போது ஆண்டுதோறும் அந்தப் பாதுகாப்பு கருத்தரங்கை தவறாமல் நடத்தி வருகிறது.
போர் முடிந்து ஐந்து ஆண்டுகளுக்கு மேலாகி விட்டதால் அதன் தொனிப்பொருள் காலத்துக்கு ஏற்றவாறு மாற்றியமைக்கப்பட்டு வருகிறது.
அதுபோலவே இலங்கைக் கடற்படையும் காலி கலந்துரையாடல் என்ற பெயரில் ஒரு பாதுகாப்பு மாநாட்டை நடத்தி வருகிறது.
இதில் இலங்கையின் பாதுகாப்பு மற்றும் பிராந்திய பாதுகாப்பு உலகளாவிய பாதுகாப்புச் சவால்கள் என்பனவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
இப்போது கடல் பாதுகாப்பு என்பது முக்கியமானதொரு பாதுகாப்பு அம்சமாக உலகளாவிய ரீதியில் நோக்கப்படுவதாலும், சர்வதேச கடல் போக்குவரத்து மார்க்கத்தின் முக்கியமானதொரு புள்ளியில் இலங்கை அமைந்திருப்பதாலும், காலி கலந்துரையாடலுக்கு அமெரிக்கா, ரஷ்யா, சீனா, இந்தியா உள்ளிட்ட வல்லமை பொருந்திய நாடுகள் எல்லாம் முக்கியத்துவம் அளிக்கின்றன.
இந்த இரண்டு பாதுகாப்பு மாநாடுகளை நடத்தி வந்த இலங்கை புதியதொரு முயற்சியாக தெற்கு, தென்கிழக்காசிய நாடுகளின் பாதுகாப்பு தலைமை அதிகாரிகள் பங்கேற்கும் SASEAN Defence Chiefs Dialoque என்ற கருத்தரங்கு ஒன்றை கொழும்பில் நடத்தப் போகிறது.
இது இலங்கையின் பாதுகாப்பு அமைச்சு நடத்துகின்ற ஏனைய பாதுகாப்பு கருத்தரங்குளைப் போலல்லாது ஏனைய நாடுகளிலும் சுழற்சி முறையில் நடைபெறப் போகிறது.
முதலில் மாநாடு இலங்கையில் எதிர்வரும் 27ம் திகதி முதல் இரண்டு நாட்கள் கொழும்பில் நடைபெறவுள்ளது.
இந்த மாநாட்டில் எட்டு சார்க் நாடுகள் மற்றும் பத்து ஆசியான் நாடுகளின் பாதுகாப்பு தலைமை அதிகாரிகள் இணைந்து SASEAN Secruity Community (SSC)  என்ற புதிய அமைப்பை உருவாக்க உள்ளனர்.
கலந்துரையாடலின் மூலம் பிராந்தியப் பாதுகாப்பு மற்றும் உறுதிப்பாட்டை ஊக்குவித்தல் பாதுகாப்பின் ஒத்துழைப்பு பாதுகாப்பு சவால்களைப் புரிந்து கொள்வதன் ஊடாக பரஸ்பர நம்பிக்கையை கட்டியெழுப்புதல் போன்ற நோக்கங்களை அடிப்படையாக வைத்து இந்த அமைப்பு உருவாக்கப்படவுள்ளது.
இந்தப் பாதுகாப்பு கலந்துரையாடலில் ரஷ்யாவின் பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் அனடோலி அன்ரனோவ்வும் கலந்துகொள்ளவுள்ளார்.
ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கு பார்வையாளர்களாக பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து வரும் டிசம்பர் 1ம், 2ம் திகதிகளில் காலி கலந்துரையாடல் என்ற கடy; பாதுகாப்பு மாநாடு காலியில் நடைபெறவுள்ளது.
இந்த மாநாடுகளின் மூலமாக இலங்கை அரசாங்கம் சர்வதேச பாதுகாப்பு விவகாரங்களில் தனக்குள்ள கரிசனைகளை வெளிப்படுத்தவும்> தாம் தொழில் முறைசார் இராணுவம் ஒன்றைக் கொண்டிருப்பதை வெளிப்படுத்தவும் முனைகிறது.
விடுதலைப் புலிகளைத் தோற்கடித்ததன் மூலம் உலகின் குறிப்பிடத்தக்க இராணுவமாக இலங்கை இராணுவம் உள்ளது என்பதை காட்டவும் முற்படுகிறது.
இன்னொரு பக்கத்தில் இது இலங்கை இராணுவம் மீதான குற்றச்சாட்டுகளுக்கு வெள்ளையடிக்கின்ற முயற்சி என்ற கருத்துகளும் சர்வதேச அளவில் உள்ளன.
இப்போது இலங்கை அரசாங்கம் பாதுகாப்பு கருத்தரங்குகளின் மூலம் தனது அழுத்தங்களையும் குறைத்துக் கொள்ள முயற்சிக்கிறது. அதாவது சீன, இந்திய ஆதிக்கப் போட்டியில் தெரிந்தோ தெரியாமலோ இலங்கையும் ஒரு பங்காளி நாடாக மாறிவிட்டது.
இரு நாடுகளுடனும் இலங்கை கொண்டுள்ள பிரிக்க முடியாத உறவுக்கு அந்த இரண்டு நாடுகளுக்கும் இடையில் போட்டி பல சமயங்களில் சவால்களையும் சிக்கல்களையும் எதிர்கொள்ள வேண்டிய நிலையை ஏற்படுத்துகிறது.
அணிசேராக் கொள்கைக்கு அப்பால் சீனாவுடன் இலங்கை கொண்டுள்ள உறவும் சீனாவின் பாதுகாப்பு நலனுக்கு இலங்கை இடமளித்து வருவதும் இந்தியாவுக்கு பிரச்சினைகளை ஏற்படுத்தி வருகிறது.
இந்தியாவின் பாதுகாப்புக்கு குந்தகமான எதையும் செய்யமாட்டோம் என்று இலங்கை அரசாங்கம் அவ்வப்போது உறுதியளித்தாலும் இந்தியா திருப்திப்படுகின்ற அளவுக்கு இலங்கை அரசின் செயற்பாடுகள் இல்லை என்பதே உண்மையான நிலைவரம்.
அண்மைக்காலத்தில் சீன நீர்மூழ்கிகளின் வருகை, சீனாவுடன் அதிகரித்துள்ள நெருக்கம் போன்றவற்றினால், இந்தியா கவலை கொண்டுள்ள நிலையில் தான் ,புதிய இந்திய அரசாங்கம் இலங்கையுடன் பாதுகாப்பு உறவுகளை இறுக்கிப் பிடிக்கத் தொடங்கியுள்ளது.
அண்மையில் இந்தியப் பாதுகாப்புச் செயலர் ஆர்.கே.மாந்தூர் கொழும்பு வந்திருந்தார். அதனையடுத்து, பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவும், கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ஜெயந்த பெரேராவும் புதுடில்லி சென்றனர்.
இப்போது, இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் இந்திய விமானப்படைத்தளபதி எயர் சீவ் மார்ஷல் அரூப் ராஹா, இந்தியக்க டற்படைத்துணைத் தலைமை அதிகாரி வைஸ் அட்மிரல் சுனில் லன்பா ஆகியோர் இந்த வாரமும் அடுத்த வாரமும் கொழும்பு வரவுள்ளனர்.
அதுமட்டுமன்றி, அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் தல்பீர்சிங் சுஹக்கும் கொழும்பு வரும் திட்டத்தைக் கொண்டிருக்கிறார்.
வரும் 27ஆம் திகதி கொழும்பில் நடக்கவுள்ள தெற்கு, தென்கிழக்காசிய பாதுகாப்பு அதிகாரிகளின் மாநாட்டில், இந்திய விமானப்படை தளபதி எயர் சீவ் மார்ஷல் அரூப் ராஹா தலைமையிலான உயர்மட்ட படை அதிகாரிகள் குழு பங்கேற்கவுள்ளது.
எயர் சீவ் மார்ஷல் அரூப் ராஹா .வரும் 28ம் திகதி நடக்கவுள்ள இரண்டாம் நாள் அமர்வில் கடல்சார் பாதுகாப்பு என்ற தலைப்பில் இடம்பெறவுள்ள கருத்தரங்கில் உரையாற்றவுள்ளார்.
அதேவேளை,அடுத்த மாதம் 1ம், 2ம் திகதிகளில் காலியில் நடக்கவுள்ள கடற்படை ஒழுங்கு செய்துள்ள காலி கலந்துரையாடல் எனப்படும் கடல் பாதுகாப்புக் கருத்தரங்கிலேயே இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் பங்கேற்கிறார்.
அவர் டிசம்பர் 1ம் திகதி மாநாட்டின் ஆரம்ப நாளன்று முக்கிய உரை நிகழ்த்தவள்ளார். ஒன்று, இந்தியக் கடற்படையின் துணைத்தளபதி வைஸ் அட்மிரல் சுனில் லன்பா, ஆய்வுக்கட்டுரை ஒன்றை சமர்ப்பித்து உரையாற்றவுள்ளார்.
இந்திய பாதுகாப்பு உயர்மட்டங்களின் அடுத்தடுத்த கொழும்பு வருகைகளை சாதாரணமாக கருதிவிடக்கூடாது.
ஒரு பக்கத்தில் இலங்கையில் சீனாவின் தலையீடுகள் குறித்த கவலைகள் இந்தியாவுக்கு இருந்தாலும் அதைப் பெரிதாக வெளிக்காட்டிக் கொள்ளாத போக்கு ஒன்றை இந்திய அதிகார மட்டம் கடைப்பிடித்து வருகிறது.
சீனாவின் தலையீடுகள் குறித்து தாம் கவலை கொள்ளவில்லை என்றே இந்தியா எப்போதும் கூறி வந்திருக்கிறது. அதேவேளை அண்மையில் சீன நீர்மூழ்கிகளின் கொழும்பு வருகை குறித்து இந்தியா கவலை கொண்டுள்ள போதிலும் அதுகுறித்து பாதுகாப்பு செயலர் கோத்தபாய ராஜபக்சவை அழைத்து விசனத்தை வெளிப்படுத்திய போதும் அதை வெளிப்படையாக கூற இந்தியா தயங்குகிறது.
இலங்கையை மேலும் அந்நியப்படுத்தி விடக்கூடாது என்பதில் இந்தியா கொண்டுள்ள கவனத்தையே அது காட்டுகிறது.
கடந்த வாரம் இந்தியக் கடற்படைத் தளபதி ஆர்.கே.டோவல் கூட ஒரு முரண்பாடான கருத்தை தெரிவித்திருந்தார்.
சீன நீர்மூழ்கிகளின் கொழும்பு வருகை குறித்து இந்தியா கவலைப்படவில்லை என்று கூறிய அவர், எனினும் அவற்றை உன்னிப்பாக கண்காணித்து வருவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
சீன நீர்மூழ்கிகளின் கொழும்பு வருகைக்கு இந்தியத் தரப்பில் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்ட போதும் அதனை இலங்கை அரசாங்கம் அலட்சியம் செய்வதாகவும் முன் கூட்டியே தகவல் தரத் தவறுவதாகவும் இந்தியா விசனம் கொண்டுள்ளது.
இத்தகைய சூழலில் தான் இந்தியாவின் உயர் மட்டப் பாதுகாப்புக் குழுக்கள் கொழும்பு வரப்போகின்றன.
குறிப்பாக இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவலின் வருகை முக்கியத்துவம் மிக்கதாக பார்க்கப்படுகின்றது.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை இயக்குகின்ற முக்கியமான நபராக இவர் கருதப்படுகின்றார்.
அஜித் டோவல் இலங்கை வரும் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவையும் சந்திக்கவுள்ளார். இதன்போது நிச்சயமாக சீன விவகாரங்களும் பேசப்படும் என்று எதிர்பார்க்கலாம்.
இந்தியாவைப் பொறுத்தவரையில் அதன் பாதுகாப்புக்கு இலங்கை முக்கியமானது. அதேவேளை இலங்கையைப் பொறுத்தவரையில் அதன் பொருளாதாரத்துக்கு சீனா முக்கியமானது.
இந்தச் சூழலில் இரண்டு தரப்புகளும் ஒன்றையொன்று விட்டுக் கொடுக்கத் தயாராக இல்லாத நிலையில் இந்தியத் தரப்பு இலங்கையைத் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதற்கான வியூகங்களை வகுக்க எத்தனிக்கிறது.
அஜித் டோவலின் பயணத்தின் போது இதற்கான வழிகளை அவர் தேடக் கூடும்.
இந்தியா – சீனா என்ற இரண்டு முரண்பட்ட சக்திகளுக்கு நடுவே தான் இலங்கையின் எதிர்காலம் சிக்கியுள்ளது.
இந்தநிலையில் சீனாவின் நலன்களுக்கு எவ்வளவு முக்கியத்துவம் அளிக்கிறதோ அதுபோலவே இந்தியாவின் பாதுகாப்புக்கும் விருப்பங்களுக்கும் கவலைகளுக்கும் இலங்கை மதிப்பளித்தேயாக வேண்டும் என்பதை அஜித் டோவல் வலியுறுத்துவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கு இலங்கை எவ்வாறு பதிலளிக்கப் போகிறது என்பதைப் பொறுத்து இந்தியாவின் அடுத்தக்கட்ட நகர்வுகள் தீர்மானிக்கப்படும்.
சுபத்ரா
http://www.tamilwin.com/show-RUmszBRXKYgw4.html

Geen opmerkingen:

Een reactie posten